மருத்துவமனைச் சீருடையைக் களைந்து விட்டு வீட்டிலிருந்து அம்மா கொண்டு வந்திருந்த வெளிர்நீல நிறப்பின்னணியில் மஞ்சள் பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டாள் வைதேகி. முன்பெல்லாம் உடலை இறுக்கிப் பிடித்தபடி இருக்கும் கவுன் இப்போது தொளதொளவென்றிருந்தது. நிமிர்ந்ததும் அவள் பார்வையை சட்டெனத் தவிர்த்து சன்னல் பக்கமாக வேப்பமரங்களைப் பார்ப்பதுபோல யாருக்கும் தெரியாதபடி விழியோரம் தேங்கத் தொடங்கிய கண்ணீர்த் துளிகளை விரல்களால் துடைத்துக் கொண்டாள் அம்மா. வைதேகியின் அருகில் நெருங்கிச் சென்ற அப்பா முதுகுப்பக்கமிருந்த கொக்கிகளைப் பொருத்தினார். பிறகு அவரே தலைமுடியை சீப்பால் வாரி க்ளிப் போட்டுவிட்டார். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு பக்கமாக நின்று தயார்ப்படுத்தி பள்ளிக்கு அவசரம் அவசரமாக அனுப்பிய நாள்களை நினைத்துக் கொண்டாள் வைதேகி.

‘வைதேகி செல்லம் என்ன படம் போட்டிருக்காங்க இன்னிக்கு?’ என்று புன்னகையோடு கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தார் பெரிய டாக்டர். ‘குட்மார்னிங் டாக்டர்‘ என்று தெத்துப்பல் தெரிய சிரித்தபடி கட்டிலோரமாக வந்து அமர்ந்தாள் வைதேகி. அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் ஒருகணம் புன்னகையோடு நிமிர்ந்து ஒதுங்கி நின்றார்கள். திறந்து வக்கப்பட்ட ஜன்னல் கதவின் வழியே வேப்பம்பூ மணம் மிதந்து வந்தது. தலையணைக்கு அருகில் வைத்திருந்த ஓவியச் சுவடியை எடுத்து டாக்டரிடம் நீட்டினாள் வைதேகி. சுவடியை நிதானமாக புரட்டி அவள் நேற்று வரைந்த படத்தை ஆவலோடு பார்த்தார் டாக்டர். மூன்று கருப்புப் பூனைகள் உட்கார்ந்திருக்கும் ஒரு கட்டிலின் படம். நீலா, மாலா, கலா என்று ஒவ்வொரு பூனைக்குக் கீழும் பெயர் எழுதப்பட்டிருந்தது. ‘வெரி நைஸ்.. வெரி நைஸ்’ என்றபடி வெவ்வேறு கோணங்களில் அந்தப் படத்தைத் திருப்பி மீண்டும் மீண்டும் பார்த்தார் டாக்டர். ‘ரொம்ப அழகா இருக்குது வைதேகி. மீசையும் கண்ணயும் பார்த்தா முன்னாலயே உக்கார்ந்திருக்கறதாட்டம் இருக்குது. ஓவியத்துல போட்டின்னு ஒன்னு வச்சா உனக்குத் தான் முதல்பரிசு தரணும்‘ என்றபடி தட்டிக் கொடுத்தார். பிறகு, ‘மூணு பூனைங்கள்ள எந்தப் பூனைய வைதேகிக்குப் புடிக்கும்?’ என்று புன்னகைத்தபடி கேட்டார். ‘எனக்கு மூணும் புடிக்கும்’ என்றாள் வைதேகி. அப்படிச் சொன்னபோது அவள் கண்கள் சுடருடன் அழகாக விரிந்தன.

நெருங்கி உட்கார்ந்து நாக்கை நீட்டச் சொல்லியும் இமைகளை கீழே அழுத்தி விழிகளை அகலமாக்கியும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தலையசைத்தபடி ‘செல்லத்துக்கு ஒரு கொறச்சலும் கெடையாது. தாராளமா வீட்டுக்குக் கௌம்பலாம்...’ என்றார். பிறகு அப்பா பக்கமாகத் திரும்பி ‘பிரமாதமான முன்னேற்றம் சார். எட்டு வயசுல இவ்வளவு மனஉறுதியான்னு ஆச்சரியமா இருக்குது. மருந்துங்கள கண்டாவே ஓடற புள்ளைங்கள பாத்திருக்கேன். இவ்வளவு பொறுமையா மருந்து குடிச்ச குழந்தைங்க ரொம்ப கொறவு. வைதேகி ஈஸ் எ க்ரேட் சைல்ட்..’ என்றபடி தோளைத் தட்டிக் கொடுத்தார். அம்மா மட்டும் ஏதோ தயங்கித் தயங்கி இழுத்தாள். ‘ஒரு பிரச்சனயும் இனிமேல வராதும்மா. தைரியமா போய்வாங்க. ஒருவேள தப்பித்தவறி ரொம்ப நெருக்கடியான கட்டம்னு ஒன்னு வந்தா நான் சொன்ன மாதிரி செய்ங்க போதும்..’ என்று அமைதிப்படுத்தினார். மீண்டும் வைதேகியின் பக்கம் திரும்பி ‘வைதேகி செல்லம் படிச்சி பெரியவளாகி என்ன ஆகணும்ன்னு நெனைக்கறாங்க?’ என்று ஆசையாகக் கேட்டார். அவர் விரல்கள் அவளுடைய மழமழப்பான கன்னத்தைத் தட்டின. ‘டாக்டராவேன் டாக்டர்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வைதேகி. ‘சபாஷ் வைதேகி, ஐ அப்ரிசியேட் யுவர் ஸ்பிரிட். எங்க க்ளினிக்ல எனக்கே ஜூனியரா வந்துடு சரியா?’ என்றபடி சிரித்தார். சிரித்தபோது அவர் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி சென்றார்.

மருத்துவமனைக் கட்டணத்தை செலுத்துவதற்காக அப்பா வெளியேறியதும் அறையில் வைத்திருந்த பொருட்களையெல்லாம் எடுத்து பெட்டிக்குள் அடுக்கி வைத்தாள் அம்மா. அருகில் உட்கார்ந்த தாத்தாவிடம் ஓவியங்களைக் காட்டி ஒவ்வொன்றைப் பற்றியும் உற்சாகத்துடன் விளக்கத் தொடங்கினாள் வைதேகி. எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு பூனை இடம் பெற்றிருந்தது. எட்டிப் பார்க்கிற பூனை. கதவோரமாக வந்து நிற்கும் பூனை. கட்டிலுக்குக் கீழே தூங்கும் பூனை. மரக்கிளையில் தொங்கும் பூனை. கிணற்றங்கரையில் வாளிக்கருகே தரையில் தேங்கிய தண்ணீரை நக்கும் பூனை. தன் பூனைப் பொம்மைகளைப் பற்றி தாத்தாவிடம் உடனடியாகக் கேட்கலாமா என்று யோசித்தாள் வைதேகி. மாறிமாறி மருத்துவமனைகளில் இருந்த காலக்கணக்கு குழப்பமாக இருந்தது. அவை இப்போது எங்கே இருக்கின்றன, அவற்றின் அருகே யாராவது இப்போது படுத்துக் கொள்கிறார்களா, மங்கத் தொடங்கிய அவற்றின் நிறம் சரியாகிவிட்டதா. பூனைகளைப்பற்றி கேட்பதற்கு அவள் நெஞ்சில் அப்படி ஓராயிரம் கேள்விகள் முட்டின. மறுகணமே எவருடைய பதில்களும் தனக்கு நிறைவைத் தராது என்று நினைத்து மனத் திரையில் அவை உட்கார்ந்திருக்கும் கோலத்தின் கற்பனையில் மூழ்கினாள். மனஉலகில் அவளுடைய தீண்டலுக்காகவும் வருடலுக்காகவும் அவை உடல்மடங்கி முகம் பார்த்துக் கிடந்தன.

விளையாடும் பருவத்தில் எல்லாக் குழந்தைகளாலும் கவனமாக ஒதுக்கப்பட்ட குழந்தையாகவே வளர்ந்தவள் வைதேகி. உறவுக்காரக் குழந்தைகள்கூட உதடு பிதுக்கி கண்களில் அருவருப்பு தென்பட நகர்ந்து விடுவார்கள். ஒரு சில கணங்கள் செயற்கையான புன்னகையோடு பக்கத்தில் நிற்க நேரும் பெரியவர்கள்கூட தொட்டும் தொடாமலும் சிரித்தும் சிரிக்காமலும் புறக்கணித்துச் செல்வதே வாடிக்கையாக இருந்த நாட்கள் அவை. கன்னங்களிலும் காதோரங்களிலும் கைகளிலும் கால்களிலும் கரிக்கோடு இழுத்ததுபோல புசுபுசுவென்று அடர்ந்து வளர்ந்த முடிச்சுருள் எல்லாக் குழந்தைகளிலிருந்தும் அவளைத் தனிமைப்படுத்திப் பார்க்கவைத்தது. மூன்று வயதுவரை எல்லாக் குழந்தைகளைப் போல மாநிறமான உடலுடனும் ஆரோக்கியமான தோற்றத்தோடும் நடமாடிய குழந்தையின் உடலில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஆறே மாதங்களில் அது உடல்முழுதும் முளைத்து படரத்தொடங்கியது. புதுச்சேரியில் பார்க்காத டாக்டர்களே கிடையாது. அவர்கள் தந்த ஆலோசனைகளுக்கும் மாதக்கணக்கில் சாப்பிட்ட பலவிதமான மருந்துகளுக்கும் ஒரு பலனும் கிட்டவில்லை. மனவருத்தத்தை முன்வைத்தபோது சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவரைப் பார்த்து கலந்தாலோசிக்கும்படி சீட்டு தந்தார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் திறமையையும் தாண்டியதாக அது இருப்பதாக அறிவித்து பெங்களூருக்குப் போகும்படி சொன்னார்கள். சேமிப்புப் பணத்தையெல்லாம் மருந்துகளுக்கும் விதவிதமான ஆலோசனைகளுக்கும் கணக்குப் பார்க்காமல் செலவழித்தார் அப்பா. ‘பூவாட்டம் இருந்த என் பொண்ணு இப்படி பொதராட்டம் நிக்கறாளே, யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலையே, முருகா, என் பொண்ண கொணமாக்குப்பா, வர ஆடி மாசமே உன் சந்நிதிக்கு நான் பூ காவடி எடுத்து வரேன் தாயே’ என்று தெய்வத்தின் கால்களை சரணடைந்தாள் அம்மா. தெரு முனையிலேயே இருந்த பள்ளி நிர்வாகம் அவளைச் சேர்த்துக்கொள்ள மறுத்தபோது அப்பா அதிர்ச்சியில் மூழ்கினார். அக்கம்பக்கம் உள்ள எல்லா பள்ளிகளும் அவளைப் பார்த்த கணத்திலேயே அனுமதிக்க தயக்கம் காட்டின.

சோர்வில்லாமல் முயற்சி செய்த அப்பா இறுதியில் பழக்கமான ஒரு பாதிரியாரின் பரிந்துரையோடு நகரத்தில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக அவர் சில ஆயிரங்களைத் தர வேண்டியிருந்தது. பள்ளியில் சிறுமிகள் யாரும் அவளோடு பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை. ஆட்டத்திலும் அனுமதிப்பதில்லை. புறக்கணிப்புகள் முதலில் அவளைத் திகைப்புக்குள் ஆழ்த்தின. மனபாரத்தில் ஒடிந்துபோனாள். அப்போதுதான் தனக்குக் கிட்டிய தனிமையையே ஒரு விளையாட்டுத் தோழியாக மாற்றிவிடும் நுட்பத்தை அவள் மனம் வெகு விரைவில் கண்டடைந்தது.

அப்பா வாங்கித் தந்த நோட்டுகளில் அவள் விதவிதமான வண்ணங்களில் கோடிழுத்து, வட்டம் போட்டு, குறுக்கும் நெடுக்குமாக கட்டங்களைப் போட்டு மனம்போன போக்கில் இழுத்து இழுத்து படம் வரையத் தொடங்கினாள். கொம்பில்லாத விலங்குகளைக் கொம்பில்லாமலும், கொம்பற்ற விலங்குகளுக்கு கொம்பு போட்டும் வைத்தாள். அவள் ஓவியச் சுவடியில் கோழிகள் வானத்தில் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்தன. பறவைகள் தத்தித்தத்தி நடந்தன. ஆடுமாடுகள் கார்களில் காணப் பட்டன. மனிதர்களுக்கு வால் முளைத்து நான்கு கால்களால் நடந்தார்கள். அம்மாவால் அப்படங்களைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திகைத்து கண்கலங்க நின்றாள். மனத்தைத் திசைதிருப்ப குவிக்க முனையும் குழந்தையின் விருப்பத்தைத் திருப்தியாக உணர்ந்தபடி தலையசைத்துவிட்டு பேசாமல் போய்விடுவார் அப்பா.

அப்பாவும் அம்மாவும் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழாவில் அவள் முதல்முறையாக ஆறு கோப்பைகள் வாங்கினாள். முதல் மதிப்பெண், நூறு சதவீத வருகை, பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி, தவளைப்பாய்ச்சல் ஓட்டம், சாக்குப் பந்தயம்,கைதட்டல்கள். கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தபோது அப்பா கலங்கிய கண்களோடு வைதேகியின் கைகளை வாங்கி அழுத்தமாகப் பற்றிக்கொண்டார். அந்த வார ஞாயிறு மாலையில் கடற்கரையிலிருந்து திரும்பிய வேளையில் கடைத் தெருவின் முன்னால் நிறுத்தி ‘உனக்கு என்ன வேணும் கேள் வைதேகி, உன் முதல் பரிசுக் கோப்பைகளுக்காக உனக்கொரு பரிசு தரப்போறோம்...’ என்றார் அப்பா. அந்த இன்பத் திகைப்பை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நம்ப முடியாமல் இருவருடைய கண்களையும் மாறிமாறிப் பார்த்தாள். கண்கள் விரிய ஒரு பொம்மைக்கடைக்குள் புகுந்து ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு நடந்தாள். தலையாட்டிப் பொம்மை, மின்கலப் புகைவண்டி, குதிரைவீரன், குட்டி யானை. உற்றுப் பார்த்தபடி ஒரு கணம் நின்றாலே ‘இதுவா? இதுவா?’ என்று ஆர்வத்தோடு கேட்டார் அப்பா. ஒரு மூலையில் மேசைமீது உட்காரவைக்கப்பட்ட ஒரு பூனைக்குட்டிப் பொம்மையின் அருகில் நின்று அதைச் சுட்டிக் காட்டினாள் வைதேகி.

உடல்முழுக்க புசுபுசுவென்று தொங்கும் முடிச்சுருள். சின்னச்சின்ன உருண்டையான கண்கள். ஒரு புல் கொத்துபோன்ற மீசை. விரல்களால் வருடியபோது வழவழப்பாக இருந்தது. மடிந்து விரைத்த காதுமடல்கள். முன் பக்கமாக வளைந்து உட்கார்ந்த கோலம். எடுத்து மடியில் வைத்து கொஞ்சலாம் போல இருந்தது. பக்கத்தில் நின்று ஒவ்வொரு உறுப்பாக தொட்டுத்தொட்டுப் பார்த்து ஆச்சரியத்தில் திளைத்தாள். அப்படியே உயிருள்ள பூனைக் குட்டியாட்டம் இருக்கதுப்பா....’ என்று சிரித்தாள். காரணமே இல்லாமல் அம்மாவின் முகம் சட்டென்று கூம்பியது. தேவையான பணம் கொடுத்து அதையே அவளுக்கு வாங்கித் தந்தார் அப்பா. அன்று இரவு தன் பக்கத்திலேயே பொம்மைப் பூனையை படுக்க வைத்துக் கொண்டு தூங்கினாள் வைதேகி. நெடுநேரம் கண்விழித்து அதற்கொரு பெயர் சூட்டுவதற்காக பல பெயர்களை மனசுக்குள் எழுதி எழுதிக் கலைத்தாள். ஒரு பெயரும் தட்டுப் படாமல் அறை ஜன்னலுக்கு வெளியே இருளை வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். தற்செயலாக சன்னல் திரையின் நீல நிறத்தைப் பார்த்து நீலா என்ற பெயர் நெஞ்சில் உதித்தது. அக்கணமே அந்தப் பூனை நீலா என பெயர் பெற்றது. ‘இந்த நிமிடம் முதல் நீதான் என் பெஸ்ட் ப்ரண்ட் நீலா’ என அதன் காதருகே முணுமுணுத்தாள். அதன் நெற்றியிலும் காதுமடலிலும் மெதுவாக முத்தமிட்டாள். அதன் முடி மூக்கில் பட்டபோது குறுகுறுப்பாக இருந்தது. அதன் காலை நீவியபடி ‘நீ நாலுகால் பூனை, நான் ரெண்டுகால் பூனை இல்லையா?’ என்று சிரித்தாள்.

மறுநாள் முதல் மனப்பாடப் பாடல்களை நீலாவிடம் ஒப்பித்தாள் வைதேகி. அதன் கால் விரல்களைத் தட்டியபடி வாய்ப்பாடுகளைச் சொன்னாள். ‘முழிக்கற முழியப் பாரு’ என்று வைதேகி தந்த செல்லக்குத்துகளை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டது குட்டிப்பூனை. தோட்டத்தில் உதிர்ந்திருந்த மகிழம்பூக்களால் கோர்க்கப்பட்ட மாலையை அதன் கழுத்தில் சூட்டி மகிழ்ந்தாள். மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து திரும்பியதும் நீலாவுக்கு விதவிதமான கதைகளைச் சொன்னாள் வைதேகி. அப்போது அவள் விரல்கள் நீலாவின் கழுத்தை வருடியபடி இருக்கும். பதிலுக்கு வைதேகியின் காதோடு காதாக நீலாவும் கதைகளைச் சொல்லும் பதுங்கிப் பதுங்கித் திரிந்த கதைகள். பானையை உருட்டி பாலருந்திய கதைகள். எலியை விரட்டி விரட்டிப் பிடித்த கதைகள். இரவு முழுக்க அந்தக் கதைகளின் கதகதப்பான அணைப்பில் அமைதியாக உறங்கினாள் வைதேகி. அவளுடைய நடவடிக்கைகளைக் கண்டு அம்மா மனம்கலங்கி குமைந்தாள். ‘இருக்கட்டும் விடு..’ என்ற அப்பா ஒற்றை வார்த்தையால் அவளை அடக்கிவிட்டாள். வைதேகி தன்னைச் சுற்றி பின்னிவைத்திருக்கும் தனிமைத்திரையை விலக்கி ஊடுருவிச் சென்று அவளை வாரியெடுக்க முயன்று தோல்வியடைந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தோடு நின்றாள்.

அடுத்த ஆண்டும் அவள் ஆறு கோப்பைகள் பெற்றாள். அப்பா இன்னொரு பரிசை வாங்குவதற்கு கடைக்க அழைத்துச் சென்றார். வைதேகி மறுபடியும் இன்னொரு குட்டிப் பூனையை வாங்கிக் கொண்டாள். அதற்கு மாலா என்று பெயர் சூட்டினாள். அதைத் தொடர்ந்த ஆண்டிலும் அவளே முன்னிலை வகித்தாள். அவளுக்கு ஏழு கோப்பைகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று முறைகள் விருது வாங்கியதால் அளிக்கப்பட்ட சிறப்புக் கோப்பையே அந்த ஏழாவது கோப்பை. அந்த முறையும் பரிசு வாங்கிச் சென்றபோது இன்னொரு பூனைக்குட்டிப் பொம்மை வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பெற்றுக்கொண்டாள் வைதேகி. அதற்குச் சூட்டுவதற்காக அப்போதே அவள் ஒரு பெயரை முடிவு செய்து வைத்திருந்தாள். கலா. தன் கட்டிலில் பாதி இடத்தை பூனைப் பொம்மைகளுக்கு ஒதுக்கிவைத்தாள் அவள். கடலூரிருந்து ஏதோ விசேஷத்துக்கு வந்திருந்த அத்தை பொம்மைகளுக்கு நடுவே அவள் படுத்திருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு ‘இப்பிடியே போற போக்க பாத்தா, எது பூன எது வைதேகின்னு வித்தியாசமே தெரியாம போயிடும் போல...’ என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

சொல்லப்பட்ட சொற்களின் கூர்மையை அவர் உணரும் முன்பே, அவை வைதேகியின் நெஞ்சில் கத்திகளைச் செருகிவிட்டன. நெஞ்சே வெடித்து விடுவது போல குமுறி குமுறி அழுதாள். ஒருபோதும் அதிர்ந்து பேசாத அப்பா அன்று அத்தையைத் தனியாக அழைத்துச் சென்று கடுமையாகக் கடிந்து கொண்டார். நடந்ததெல்லாம் ஏதோ நேற்று நடந்ததுபோல தன் மனம் அசைபோடுவதை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கினாள் வைதேகி. அவிழ்ந்த பொட்டலத்திலிருந்து உருண்டோடும் முத்துகள் போல ஞாபகங்கள் உருண்டன.

‘கிளம்பலாமா..?’ என்றபடி அப்பா வந்து வைதேகியின் தோளைப் பற்றினார். வைதேகி அணிந்திருந்த கவுனைப் பார்த்ததுமே, ‘ஐதராபாத்லேருந்து பொறந்த நாளுக்கு வாங்கியாந்த கவுன்தான இது...?‘ என்றபடி அம்மாவை ஒருகணம் பார்த்தார். மெதுவாக ‘ரெண்டு வருஷம் ஓடிப் போச்சில்ல...’ என்று பெருமூச்சுவிட்டார். ஆளுக்கு இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டு வெளியே வந்தார்கள். வைதேகி ஓடிச் சென்று பக்கத்து அறையில் இருந்த ஒரு தாத்தாவிடமும் சிறுவனிடமும் விடைபெற்றுக்கொண்டு வந்தாள். காரின் முன்னிருக்கையில் அப்பாவுக்கு அருகில் தாத்தா உட்கார்ந்திருந்ததால் அம்மாவும் வைதேகியும பின்னிருக்கையில் உட்கார்ந்தனர். நிறுத்தத்திலிருந்து அப்பா காரை ரிவர்ஸ் இடுத்து நேராக்கினார். வண்டி குலுங்கி நின்று முன்னோக்கி எம்பியபோது வயிறு கலங்கியது. வாசலைவிட்டு வெளியேறி சாலையில் ஓடத்தொடங்கிய பிறகுதான் இயல்புநிலைக்கு மனமும் உடலும் திரும்பின. சிறிதுதூரம் கடந்த பிறகுதான் சன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள் வைதேகி.

ஈரமண்ணில் செருகப்பட்ட விதவிதமான குச்சிகளைப்போல கட்டடங்கள் உறைந்திருந்தன. தெருவோரங்களில் மரங்கள் வானோக்கி விரிந்திருந்தன. நிழலடியில் பல தள்ளு வண்டிக்கடைகள் தெரிந்தன. சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுவரொட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து, அவற்றின் பெயர்களை மனத்துக்குள் படித்தபடி வந்தாள். அவள் நெஞ்சில் உறைந்திருக்கும் பல திரைப் படங்களின் பெயர்கள் முதலில் கலங்கி பிறகு நினைவில் வந்து மோதின. திடீரென்று அப்பாவை அழைத்து ‘சிவாஜி படம் வந்தா பாக்கலாம்ன்னு சொன்னிங்களேப்பா, வந்திருச்சாப்பா?’ என்று கேட்டாள். அதைக் கேட்டதும் அப்பாவுக்கு ஒருகணம் தொண்டை அடைத்தது. கண்கள் தளும்பின. திரும்பாமலேயே ‘வந்திருச்சிம்மா. அடுத்த வாரம் சிடி வாங்கி பாக்கலாம்மா’ என்றார். பாதை காட்டும் கண்ணாடியில் தன் முகம் தெரிவதைப் பார்த்தாள் வைதேகி. இடுங்கிய கண்களுடன் கன்னம் ஒடுங்கி எலும்புகள் தெரிந்தன, காற்று தீண்டும் போதெல்லாம் முடிச்சுருள் பட்டு உடலில் உருவாகும் குறுகுறுப்பு எதுவுமே இல்லாமல் கன்னமும் கழுத்தும் கைகளும் மழமழப்பாக மாறியிருப்பதை உணர்ந்தாள். எல்லாரையும்போல தன் உடல் மாறிவிட்டதை உணர்ந்தாலும் கரிந்த விறகு போல தன் நிறம் இருப்பதை எண்ணி சங்கடம் கொண்டாள்.

தோள்களில் பெரிய பள்ளம் விழுந்திருந்தது. கைகள் குச்சிகளைப் போல காணப்பட்டன. அந்த வருத்தம் மனத்தில் ஒரு கவலையாக ஊடுருவியது. மறுகணமே டாக்டரின் ஆலோசனைச் சொற்களை ஒருமுறை அசை போட்டாள். அவள் குரலை நெஞ்சில் ஒலிக்க வைத்தாள். ‘நடந்ததை ஒரு போதும் நினைக்கக் கூடாது வைதேகி. நேற்று என்பதே இனி இல்லை. இனிமேல் எல்லாமே நாளைதான்’ இரண்டு மூன்று முறை வேறு யாருக்கோ சொல்வதுபோல சொல்லச்சொல்ல மனம் உற்சாக நிலைக்குத் திரும்பியது.

ஓர் ஓவியப்போட்டியில் விருதளித்துப் பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக ஒரு டாக்டர் வந்து கலந்துகொண்டதும் வைதேகியின் அம்மாவையும் அப்பாவையும் மறுநாளே பள்ளிக்கு வரவழைத்துப் பேசியதும் தற்செயலாக நடந்த விஷயங்கள். லேசர் ட்ரிட்மென்ட்டால இத நல்லபடி கண்டிப்பா குணப்படுத்த முடியும். ‘ஏழெட்டு மாசத்துல நிச்சயமா சரியாக்கிடலாம்’ என்று சொன்ன வார்த்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நம்பிக்கை ஊட்டின. ‘படிப்பு போனாலும்கூட ஒரு வருஷம் கழிச்சி படிச்சிக்கலாம். இந்த கோலத்தோட ஒரு பொம்பள புள்ளய எவ்வளவு காலம் வச்சிக்க முடியும் சொல்லுங்க, எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சரி பண்ணிரலாம்‘ என்று அப்பாவிடம் கெஞ்சினாள் அம்மா. பள்ளியின் அனுமதியோடு விடுப்பு கிடைத்து விட்டது. அடுத்த வாரமே அப்பா அலுவலகத்திலிருந்து ஒரு பெரிய தொகையைக் கடனாக வாங்கியதும் மருத்துவம் தொடங்கியது.

தொடர்ச்சியாக ஆறு மாத மருத்துவத்தில் அவளுடைய கோலம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் முற்றிலும் மாறி விட்டது. ஒரு சின்ன முடிகூட இல்லாமல் எல்லாம் உதிர்ந்துபோயின. ஆனால் அவள் உடலின் கருமை நிறம் நம்ப முடியாதபடி அடர்த்தியானது. கருத்த தோள்கள். கருத்த கைகள். கரிய கழுத்து. கரிய கன்னங்கள். மருத்துவமனையிலிருந்து திரும்பிய இரவில் தூங்காமல் அருகில் பூனைகளை அணைத்துக் கொண்டு சத்தம் வராமல் அழுதாள். அறை முழுதும் அடர்ந்திருந்தது இருளின் கருமை. சன்னல் வழியே உலகெங்கும் நிறைந்திருந்த கருமை ஒரு மகா சமுத்திரமெனப் பொங்கி அறைக்குள் நுழைந்து தளும்பிய கணத்தில்
‘நாம் அனைவருமே கருமை நிறம் கொண்டவர்கள் அல்லவா?’ என்று சொல்லி அமைதிப்படுத்தின குட்டிப் பூனைகள். குட்டிகளின் கைகள் தரவாக நீண்டு அவள் முதுகைத் தீண்டி தட்டிக்கொடுத்தன. பூனையின் கண்கள் அவளை உறங்க வைப்பதற்காக கதைகளைக் கட்டிச் சொல்லத் தொடங்கின. அவற்றின் வளைந்த உடல்கள் நிமிர்ந்து, சின்னச் சின்ன பின்னல்களோடு அவை சிறுமிகளாக உருமாறி வந்த கோலம் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தந்தது. சிறுமிகள் மெதுவாக நகர்ந்து வந்து அவள் அருகில் உட்கார்ந்தார்கள்.

அவளை எழுப்பி இருண்ட தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வைக்கோல் போரில் சாய்ந்து கதைபேசியபடி கருத்த வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணி விளையாடினார்கள். கைகோர்த்து ஆடினார்கள். பம்பரமாகச் சுழன்றார்கள். பின்னல் பறக்க ஓடினார்கள். அவளை ஒரு இளவரசிபோல ஒப்பனைசெய்து மலர்பறித்து மாலைகட்டி அவள் கழுத்தில் சூடி ஒரு பல்லக்கில் உட்காரவைத்து சுமந்து சென்றார்கள். பல்லக்குப் பயணத்தில் அவர்கள் பாடிய பழைய பாடல்கள், தாலாட்டாக ஒலித்தன. ஒருகணத்தில் பல்லக்கிலிருந்து இறக்கி ஊஞ்சலில் உட்கார வைத்து முன்னும் பின்னுமாக அசைத்தார்கள். வானத்தில் ஒரு பறவையைப்போல வட்டமடித்து நீந்தி அசையும் அனுபவத்தில் மனமொன்றித் திளைக்க வைத்தார்கள். பிறகு, ஊஞ்சலிலிருந்து இறக்கி ஒரு பறக்கும் கம்பளத்தில் உட்கார்ந்து மேகங்களை நோக்கி சென்றார்கள். அவள் ஒருபோதும் உணர்ந்திராத மென்மையான குளிர்மேகங்கள். அவற்றை ஒரு அம்புபோல துளைத்துக் கொண்டு மறுபுறம் சென்ற விசித்திரத்தை அவளால் மறக்கவே முடியவில்லை. தன் மனம் முழுதும் அப்பிக்கிடந்த துக்கமும் வேதனையும் அவர்களுடைய உல்லாசத் துணையால் கரைந்து போயின. ஆனந்தக் களைப்பில் எப்போது உறங்கத் தொடங்கினோம் என்றே தெரியாமல் உறக்கத்தில் மூழ்கினாள் வைதேகி.

எப்போதும் இல்லாதவகையில் அவளுக்கு பூனைக்குட்டிகள்மீது அவளுடைய பிரியம் அன்றுமுதல் பலமடங்காக அதிகரித்தது. பகல் முழுதும் இரவின் அனுபவங்களை அசை போட்டவாறு கண்மூடி கனவுகளில் திளைத்திருந்தாள். மறுநாளும் இரவு கவிந்து எல்லாரும் உறங்கியபிறகு கட்டிலின் மூலையிலிருந்து சிறுமிகள் புரண்டு வந்தார்கள். நெருங்கிவந்து அவள் கைகளை எடுத்து பற்றிக் கொண்டார்கள். கன்னத்தைத் தொட்டுக் கிள்ளினார்கள். மாறிமாறி கதைகளையும் பாடல்களையும் சொன்னார்கள். சிரித்தார்கள். துள்ளிக் குதித்தார்கள். முத்தமிட்டார்கள். அடங்கிய குரலில் முணுமுணுப்புகள் எல்லா நேரங்களிலும் அவளைச் சுற்றி ஒலித்தபடி இருந்தன. ஒருநாள் ‘அல்லும் பகலும் என்னாடி பெனாத்தல் இது?’ என்று அவளுக்கருகே இருந்த பூனைப் பொம்மைகளை எடுக்க அம்மா குனிந்தபோது அதன்மீது தாவிப் படுத்துக் கொண்டு தரமறுத்தாள் வைதேகி. மீறிப் பிடுங்கமுனைந்த போது கண்ணீர்விட்டு அழுதாள். ‘எப்படியாவது போ, ஒன்ன திருத்த என்னால முடியாது. வாங்கியாந்து தராரே அவரே வந்து பாத்துக்கட்டும்’ என்று சலித்து ஒதுங்கினாள் அம்மா. அழுகை ஓய்ந்ததும் பூனைகளின் காதுமடல்களைத் திருகியும் புல் மீசையைத் திருகிவிட்டும் உடலை வருடிக் கொடுத்தும் வாலை முறுக்கியும் விளையாடினாள் வைதேகி.

கசப்புகளையும் சோர்வையும் அகற்றும் ஆனந்த உலகத்தில் இறகு விரித்துப் பறந்தாள். அவள் விரலைப் பற்றி வாவா என்று வான வீதியில் திசையறிந்து தாவிப் பறந்தார்கள் சிறுமிகள். அந்தப் பயணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருள் போர்த்திய மரங்கள். கருத்த புதர்கள். மலைச் சிகரங்கள். கார்மேகங்கள். அடுத்த கல்வியாண்டில்தான் மீண்டும் பள்ளியில் சேரமுடியும் என்பதால் வைதேகி வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். மகளுக்கு ஊட்டமான உணவு தரவேண்டும், பேச்சில் கலகலப்பு பெருகவேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா அவள்மீது அளவுக்கதிகமாக பிரியத்தைக் காட்டினாள். அவளுக்கு மிகவும் பிடித்த அதிரசம், பொறிவிளங்காய் உண்டைகள், முறுக்கு என விதவிதமாக செய்து கொடுத்தாள். பக்கத்தில் உட்காரவைத்து புதுப்புது விதமாக தலைவாரி பின்னிவிட்டாள். கூச்சம் தவிர்ப்பதற்காக கோயிலுக்கும் கடைத் தெருவுக்கும் துணையாக அழைத்துச் சென்றாள். பொழுதுகளை பயனுள்ள வழியில் கழிப்பதற்காக யாரிடமிருந்தோ கேட்டு வாங்கிவந்த பழைய பாட நோட்டுகளை கொடுத்து படிக்கச் சொன்னார் அப்பா. ஓவியம் வரைவதற்காக சுவடிகளையும் வண்ணப்பெட்டிகளையும் வாங்கிக் கொடுத்தார். தினந்தோறும் அவள் வரையும் படங்களைப் பார்த்து ஊக்க வார்த்தைகளைச் சொன்னார்.

யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியாத பொழுதுகள் பூனைகளோடு கழிந்தன. எந்நேரமும் அவற்றை மடியில் கிடத்தி, மார்போடு அணைத்து, செல்லம் கொஞ்சியபடி இருப்பதற்கே பிரியப்பட்டாள் வைதேகி. கால நேரத்தைப்பற்றிய கணக்கே இல்லாமல் அவள் நினைத்த போதெல்லாம் பூனைகளிலிருந்து சிறுமிகள் வெளிப்பட்டு வந்தார்கள். அவள் அருகே தோள்மீது முகவாயை வைத்து காதருகே கிசு கிசுத்தார்கள். அவர்கள் சொன்ன கதைகளும் பாடல்களும் அவளைச் சிரிக்க வைத்தன. கைதட்டிச் சிரித்தாள். சிரித்துச் சிரித்து கண்களில் நீர்கோர்த்தது அவளுக்கு. புரையேறி இருமத் தொடங்கினாள். இருமல் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த அம்மா அவளுடைய சிரிப்புக் கோலத்தைப் பார்த்து துணுக்குற்று நின்றுவிட்டாள்.

அவளுடைய வருகையால் எல்லாம் அறுபட்டு வெறுமை கவிந்தது. என்னடி இது என்னடி இது என்று அவளை அம்மா உலுக்கினாள்.பதில்சொல்லத் தெரியாமல் கண்களை உருட்டி விழித்தாள் வைதேகி. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாதபடி அந்தக் காட்சிகள் தினந்தோறும் நடந்தேறின. அம்மா கலவரமுற்று கண்ணீர் வடித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் அப்பாவும் குழப்பத்தில் மூழ்கித் தவித்தாள். அவசரமாக மருத்துவர்களைக் கலந்துபேச வேண்டும் என்று வற்புறுத்தினாள் அம்மா. மீண்டும் இன்னொரு மருத்துவமனையா என்று வேதனையில் நொறுங்கினார் அப்பா. இருட்டில் ஆழ்ந்து உறங்கும் வைதேகியின் அருகில் அவள் தலையை வருடிக் கொடுத்தபடி நெடுநேரம் நின்றார். மூச்சு ஏறி இறங்கும் போதெல்லாம் சின்னதாக திறந்துமூடும் அவள் உதடுகள் மீன்குஞ்சுகளை நினைவூட்டின. பளபளப்பான கன்னங்களில் குழந்தைமை மின்னியது. குழந்தையை எப்படியாவது சரிப்படுத்த வேண்டும் என்று அவர் மனம் உந்தியது. ஆளற்ற அறையில் இடைவிடாமல் அடங்கிய தொனியில் ஒலிக்கும் அவள் குரலைக் கேட்கும் போதெல்லாம் அந்த வேகம் பெருகியது.

நிலா பார்க்கலாமா என்று ஆசை காட்டி அழைத்த சிறுமிகளின் அழைப்புக்கு வைதேகி ஒரு இரவில் கட்டுப்பட்டாள். மெதுவாக எழுந்து சத்தம் காட்டாமல் போர்வையை உதறிவிட்டு கட்டிலிலிருந்து இறங்கினாள். அடிமேல் அடி வைத்து நடந்து, துணிஅலமாரியில் இடித்து, திரும்பி வேறு பக்கமாக நடந்து, துணிக் கொடியில் மோதி, சமாளித்து திசையறிந்து நகர்ந்து கதவைத் திறந்து தோட்டத்தை அடைந்த போது இருளின் குளுமை வாரித் தழுவியது. பூச்சிகளின் சத்தம் இதுவரை கேட்டிராத விசித்திர ஓசையுடன் திசையெங்கும் அதிர்ந்தது. போட மறந்த கோலத்தில் வைக்கப்பட்ட புள்ளிகளென வானெங்கும் நட்சத்திர வரிசையின் வசீகரத்தால் அவள் திகைத்து நின்றாள். நடுவானில் ஒரு வட்டமான தட்டுபோல மிதக்கும் நிலாவைச் சுட்டிக் காட்டினார்கள் சிறுமிகள். சுடரும் அதன் அழகில் கண்பதித்து நின்றாள் வைதேகி. பனியின் ஈரம். பாலெனப் பொழிந்து பரவிய வெளிச்சம். புதரில் பூத்துக்குலுங்கும் அஞ்சு மல்லிகையின் மணம். நெஞ்சில் மோதிப் புரளும் குளிர்ந்த காற்று. புதிய பாடல்வரிகளைக் கட்டி பாடிக்கொண்டே ஆடினார்கள் சிறுமிகள். அவர்களோடு கை கோர்த்து வைதேகியும் ஆடினாள். கட்டுடைந்த ஆனந்தத்தில் அவளும் குரலெடுத்துப் பாடினாள். வட்டப்பாதையில் ஆடிக்கொண்டே வந்தபோது ஏதோ ஒரு கல் இடற தரையில் சரிந்தாள். கிணற்றோரமாக இருந்த துவைகல்லில் தலைமோத மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

விடிந்த வேளையில் தண்ணீர் எடுக்க வந்த அம்மா பார்த்துப் பதறி ஓடிவந்து வாரி எடுத்தாள். ‘வைதேகி வைதேகி’ என்று அவளை உலுக்கினாள். பேச்சுமூச்சில்லாமல் ஒரு சிலை போலக் கிடந்தாள் அவள். சத்தம் கேட்டு வந்த அப்பா அவளைத் தூக்கிவந்து கூடத்தில் சோபாவில் கிடத்தி முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். அரைப்பிரக்ஞை நிலையில் கண்விழித்த வைதேகி யாரையும் அடையாளம் தெரியாமல் நிலாப்பாடலை முணுமுணுத்தாள். அவள் கைகள் யாரையோ பற்றியிருப்பதைப் போல தாமாகவே உயர்ந்து அலைந்தன. அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அவள் கண்களில் படர்ந்திருந்த ஆனந்தத்தின் வசீகரத்தையும் தனிமையின் வீரியத்தையும் ஒருசேரக் கண்டு திகைத்து நின்றார்கள் அப்பாவும் அம்மாவும்.

மருத்துவமனைப் பயணங்கள் மறுபடியும் தொடர்ந்தன. ஒருவர் சரியில்லை என இன்னொருவர். அவரும் சரியில்லை என மற்றொருவர். மூன்றாவதாக சந்தித்தவர் தாய்மையோடு கவனித்துக் கொண்டார். தன் சொந்தக் குழந்தையைப்போல பார்த்துப் பார்த்து செய்தார்.

அவர் மருத்துவமனையையே ஒரு விளையாட்டுக் கூடமாக மாற்றிவைத்திருந்தார். குழந்தைகளும் பெரியவர்களும் சுதந்திரமாக அங்கே விளையாடினார்கள். மருத்துவரின் கனிவும் அக்கறையும் எல்லாருக்கும் ஆறுதலாக இருந்தன. கடுமையான மனஅழுத்தத்தில் புதைந்துபோன வைதேகியை ஆறு மாதமாகப் பாடுபட்டு மெல்ல மெல்ல விரல்பற்றி மீட்டெடுத்தார் அவர். ‘அப்பா நான் மறுபடியும் பள்ளிக்கூடத்துக்குப் போகமுடியுமா அப்பா, எனக்கு மீண்டும் கோப்பைகள் கிடைக்குமா அப்பா?’ என்று தினந்தோறும் கேட்டாள் வைதேகி.

கெடைக்கும் செல்லம், ஒனக்கு கெடைக்காம யாருக்கு கெடைக்க போவுதும்மா?’ கலங்கிய கண்களோடு வைதேகியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அப்பா. வீட்டை அடைந்ததும் காரின் கதவைத் திறந்து இறங்கிய தாத்தா பின்னிருக்கையின் கதவைத் திறந்துவிட்டார். ‘மெதுவா எறங்கி வாம்மா வைதேகி’ என்று அழைத்தபடி அவளை கைப்பிடித்து இறக்கினார். வாசல் ஜன்னலோரமாக சாத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம்புது சைக்கிளைப் பார்த்து ‘ஐ சைக்கிள்’ என்று கண்மலர்ந்து சிரித்தாள் வைதேகி. ‘ஆமாண்டி கண்ணு. ஒனக்காகத்தான் தாத்தா வாங்கி யாந்தேன். இனிமேல இதுலயே நீ ஓட்டிப் பழகலாம்...’ என்று தாத்தா ஆதரவோடு அவள் தலையை வருடித் தந்தார்.

கதவைத் திறந்து உள்ளே சென்றதும் அப்பா அவளுக்காக வாங்கி வைத்திருந்த வீடியோ விளையாட்டுப் பெட்டியைக் காட்டினார். இருபது முப்பது குறுந்தகடுகள். தொலைக்காட்சிப் பெட்டியோடு இணைத்து அதை ஆடும் முறையை சொல்லித் தந்தார். பாய்ந்துவரும் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து தப்பித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் வீரன் ஆட்டத்தைக் கண்டு அவள் மிகுந்த உற்சாகமடைந்தாள். பத்தாவது நிமிஷமே அவள் கைகள் தாமாகவே இயக்கும் அளவுக்குத் தேர்ச்சியடைந்தன. எல்லாருமே அவளிடம் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார்கள். அதையும் மீறி ஏதோ ஒரு மௌனம் அந்தச் சூழலுக்கு நடுவே நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பதுபோல வீற்றிருருந்தது.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு தன் அறைக்குள் சென்றாள் வைதேகி. சுத்தப்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களும் ஆடைகளும் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப் பட்டிருந்தன. வைதேகி ஒவ்வொன்றாக மாறிமாறிப் பார்த்தாள். மேசை, நாற்காலிகள், தொலைக்காட்சிப் பெட்டி, விளையாட்டுப் பொம்மைகள், கோப்பைகள், பதக்கங்கள், துணி அலமாரி, புத்தக அடுக்குகள், கட்டில். கட்டிலைக் கண்டதுமே அவள் கண்கள் தன்னிச்சையாக அவள் பூனைப் பொம்மைகளைத் தேடின. இடம் மாறி வைத்து விட்டார்களோ என்று பதற்றத்தோடு எல்லா இடங்களிலும் வேகவேகமாகப் பார்வையைப் படரவிட்டாள். பரண்மீது பார்த்தாள். கட்டிலுக்கடியில் மூட்டை கட்டிப் போட்டு வைத்திருக்கக் கூடுமோ என்று சந்தேகப்பட்டு குனிந்து பார்த்தாள். காணவில்லை. அவள் மார்பு விம்மியது.

உடலில் தன்னிச்சையாக வேர்வை ஊறிப் பொங்கியது. கன்னத்தில் நீர் கோர்த்துக் கொள்ள உதடுகளை அழுத்தமாகக் கடித்தாள். விசும்பியபடி வெளியேற முனைந்தபோது துணி அலமாரிக்குக் கீழே அவை தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்தாள். ஆவலோடு குனிந்து அவற்றை இழுத்தாள். உற்சாகத்தோடு அதன் கைகளைப் பற்றினாள். பூனைகள் அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவள் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்தன. வைதேகியின் விரல் தீண்டலை ஒன்றுகூட உணரவில்லை. அவற்றிலிருந்து திரண்டு உருப்பெற்றுவரும் சிறுமிகளின் சுவடே இல்லை. அவர்களை இனிமேல் ஒருபோதும் பார்க்கவே முடியாதோ என்ற எண்ணம் ஆழமாக அவள் மனத்தைத் தாக்கியது. கண்களை உருட்டி உருட்டி விழித்த பூனைப் பொம்மைகளை நழுவவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள். அழுகையின் சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் பதற்றத்தோடு உள்ளே ஓடி வந்தார்கள்.

‘என்னடி என்னடி?’ என்ற அம்மாவின் கேள்விகள் அவள் மனத்தில் இறங்கவே இல்லை. இடைவிடாத அழுகையில் அவள் மார்பு வேகவேகமாகத் துடித்தது. உடல் நடுங்கியது. கண்களில் வெள்ளம்போல பொங்கிவழிந்தது கண்ணீர். திடீரென்று அவள் கொண்ட பதற்றத்துக்கும் நடுக்கத்துக்கும் காரணம் புரியாமலேயே தவித்த அம்மா ஓடிச் சென்று நெருக்கடித் தருணங்களுக்காக டாக்டர் கொடுத்த மாத்திரைப் புட்டியை வேகமாகத் திறந்து ஒரு பச்சை மாத்திரையை எடுத்தாள். வைதேகியை நெஞ்சோடு சாய்த்து ‘அழாதடி செல்லம், அழாதடி, என் கண்ணு இல்லயா நீ? கொஞ்சம் வாய தெறம்மா..’ என்று கொஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தி ஒரு மாத்திரையை விழுங்க வைத்தாள். நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்ட அம்மா அவளுக்கு சிரிப்பு காட்டி ஒரு கதை சொல்லத் தொடங்கினாள். ஏழெட்டு நிமிடங்களுக்குள்ளேயே அவள் குரலால் எட்டிப்பிடிக்க முடியாத உறக்க வெளியில் அவள் அமிழ்ந்து போனாள். கவலை படர்ந்த முகத்தோடு அம்மாவும் அப்பாவும் வைதேகியின் முகத்தையே செயலற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

- பாவண்ணன்

Pin It