சுளையாக ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்தபிறகும் வெறும் நான்கைந்து கிலோ எடைப்பொருட்களில் லேசாகிக் கிடந்த ஒயர் கூடையுடன் கடைவீதியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மனம் கனத்துக்கிடந்தது. 'இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை நாற்பது நாற்பத்தைந்து ரூபாய்க்கு விற்ற துவரம்பருப்பு இந்தக் குறைந்த நாட்களில் என்ன காரணத்திற்காக இரண்டு மடங்காக விலை ஏறிற்று? அரிசி, உப்பு, புளி, எண்ணெய் போன்ற மக்களின் அவசியப் பொருட்கள் அத்தனையும் ஏன் தாறுமாறாக விலை உயர்ந்து நிற்கிறது.

என்ன ஆயிற்று இந்த நாட்டுக்கு? என் இப்படி ஒரு விலைவாசி விபரீதம், கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை நகர்த்துவதற்கே மாதம் இருபதாயிரம் சம்பளக்காரன் தகிடு தத்தம் போட வேண்டியிருக்கிறது. வருமானம் இல்லாத ஏழை, எளிய அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்வார்கள்? எப்படிப் பிழைப்பார்கள்? மனதில் ஆழிப்பேரலையாகப் பொங்கும் கேள்விகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு கால்களை எட்டி வைத்தேன். 

இருபுறமும் துருத்திக் கிடக்கும் கடைகளின் நெரிசலில் குறுகி கிழக்குமேற்காக ஓடும் கடலூர்-விருத்தாச்சலம் நெடுஞ்சாலையிலிருந்து விடுபட்டு தொழிலாளர் குடியிருப்பை நோக்கிய தெருவில் நுழைந்தேன். பக்கத்துத் தபால் அலுவலகத்தின் காம்பவுண்டுச் சுவருக்கு வெளியே மண்வெட்டியை எதிரே வைத்து - குத்திட்டு உட்கார்ந்த நிலையில் பெயருக்கு பொருத்தமாக பனம்பழம் தோற்கும் நிறத்தில், நெட்டைக்கட்டையான கனத்த தோற்றத்தில் நரை காணா தலைக்கு நேர் எதிராக நரைகள் பளிச்சிடும் பத்து நாள் தாடி மீசையில் கருப்பன் எனக்கு மங்கிய சித்திரமாகத் தெரிந்தான். கருப்பனை நேரில் பார்த்துவிட்ட பயத்தில் கால்களைச் சட்டென்றுபின்நோக்கி வைத்தேன். 'தெருத்திருப்பம் தாண்டி மறையும் சீக்கிரத்திற்குள் கருப்பன் என்னைப் பார்த்துவிடக்கூடாது' என்று எல்லா கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டேன். "நூறு மீட்டர் தூரத்தில் ஆரம்பமாகும் தெருவழியே வீடு சேர்ந்துவிடலாம்" என்னும் முடிவில் விருத்தாச்சலம் நோக்கிய மேற்குப் பாதையில் கண்களைப் பதித்து நடந்தேன். 

நல்ல வேளை கருப்பன் என்னைக் கவனிக்கவில்லை. 'அப்பாடா தப்பித்தேன்!' ஆசுவாசப் பெருமூச்சுடன் நடந்த எனக்குள் ஏதோ வெற்றிச் சாகசகம் நிகழ்த்திய உணர்வு ஏற்பட்டது. 'கருப்பனின் கண்களில் பட்டுவிடக்கூடாது' என்று நான் அவசரம் அவசரமாக திசை மாறி நடந்ததற்கு 'அந்த ஏழை மனிதன் காலை நேரத்திலேயே என்னிடம் பத்து, இருபது ரூபாய்களைப் பறித்துவிடக்கூடாது!' என்பதே முக்கியக்காரணம். ஆனாலும் இந்தக் காரணத்தின் பின்னணி விரிவாகப் பேசப்படவேண்டிய ஒன்று.

இயற்கை அன்னை கொடையாக வாரி வழங்கியிருக்கும் அரிய பழுப்பு நிலக்கரி மூலம் நாட்டை ஒளிமயமாக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்று மண், கரி வெட்டும் இராட்சத இயந்திரங்களை இயக்கும் பணி எனக்கு. இரண்டு ஆண்டுகாலப் பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையான பதவி உயர்வு போன்ற இருபதாண்டு கால சுரங்கப்பணி அனுபவத்தில் எனது இருபத்தைந்தாவது வயதில் முப்பத்தெட்டு வயதுக்காரனாக அறிமுகமானவன் கருப்பன், சர்பேஸ் பெஞ்ச், நியூ சர்பேஸ் பெஞ்ச், டாப் பெஞ்ச், மிடில் பெஞ்ச், லிக்னைட் பெஞ்ச் என்று பல அடுக்குப் படுகைகள் கொண்ட சுரங்கத்தில் மண்ணை, கரியை வெட்டவும்-கொட்டவும் ஒவ்வொரு படுகைக்கும் மூன்று, நான்கு கணக்கில் இயங்கும் இருபதுக்கும் அதிகமான 'பாக்கெட்டு வீல்'களில், 'ஸ்பிரடர்'களில்--- 'பாக்கெட் வீல்' 'ஸ்பிரடர்'களை இணைக்கும் 'கன்வேயர்'களின் 'ட்ரைவ் ஹெட்', 'டெயில் எண்ட்'களில் டோசர்கள், பைப் லேயர்கள், கிரேன்களில் மழை, வெயில், பனி,குளிர், தூசி, பாசி, புழுதி போன்ற இயற்கை, செயற்கை இன்னல்களுக்கு ஈடு கொடுத்து பகல், இரவு பாராமல் மண், சேறு, கரி, சகதி நீக்கும் முக்கிய வேலையில், சுரங்கத்தில் அதன் இரத்த நாளங்கள் போல் நிறைந்து கிடக்கும் உயர்மின்னழுத்த கேபிள்களை தோள்களில் தூக்கிப்பொருத்தமான இடங்களில் மாற்றி வைக்கும் கடின வேலையில், 'யார்டு'களின் பிரத்தியேக வேலைகளில் இரத்தத்தை வேர்வையாக்கும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களில் கருப்பன் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவன், 'ஐடிஐ, அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து அரசாங்க உத்தியோகம் பெற்றவன்' என்னும் எண்ணம் கொண்ட என்னைப்போன்ற தொழிலாளர்கள் மற்றும் பெரிய படிப்பு படித்த பொறியாளர்கள் மத்தியில் சாதாரணமான 'கட்டிங் ஆள்'களில் தனது ஓயாத உழைப்புத் திறமையால் கருப்பன் அசாதாரணமானவன். 

கருப்பனின் பூர்வீகம் சின்னசேலம் பக்கத்தில் ஒரு சிறிய கிராமம். நெய்வேலியில் சுரங்கம் வெட்ட ஆரம்பித்த 'அறுபது' காலகட்டத்தில், 'உள்ளே சென்றால் பிணம். வெளியே வந்தால் பணம்' என்று சுரங்க வேலைக்குப் பயந்து உள்ளூர்க்காரர்களே ஒதுங்கி நின்ற நேரத்தில் பூர்வீகத்திலிருந்து குடிபெயர்ந்து நெய்வேலியிலேயே நிலைத்துவிட்ட பல நூறு குடும்பங்களில் கருப்பனின் குடும்பமும் ஒன்று. ஒற்றைத் தங்கையுடன் பெற்றவர்களுக்கு பேர் சொல்லும் பிள்ளையாக நிலைத்த கருப்பனுக்கு உடல் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை. இரண்டாம் சுரங்கத்தில் கட்டிங் ஆளாக வேலை செய்பவனுக்கு பெண்ணைக்கட்டிக்கொடுத்த சீக்கிரத்தில் பெற்றெடுத்த கடமையில் பிள்ளைக்குத் திருமணம் முடிந்த மூன்று, ஆறு மாதங்களில் மாரடைப்பிலும் மஞ்சட்காமாலையிலும் நம்ப முடியாத வகையில் அடுத்தடுத்து இயற்கை எய்திவிட்டனர்.

ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாத, 'ஒற்றை நூறு ரூபாய்த்தாள் மதிப்பில் குறைந்தது' என்று அதற்குப்பதிலாக பத்து, ஐந்து ரூபாய்த்தாள்களை, நாணயங்களை கை நிறைய கேட்கும் புத்தியற்ற மனிதனுக்கு வாழ்க்கைப்பட்ட விரக்தியில் கருப்பனின் மனைவி பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துப்போட்டுவிட்டு விருப்பப் பட்டவன் எவனுடனோ எங்கோ ஓடிப்போய்விட்டாள். தங்கையின் கணவன் வாங்கிக் கொடுத்த கட்டிங் ஆள் உத்தியோகத்தில் கருப்பனின் வாழ்க்கை அவனது ஐம்பத்தெட்டு வயது நிறைவு வரை தாண்டவன் குப்பம் தங்கையின் வீட்டில் நிலை கொண்டதாக குடைசாயாமல் நின்றது.  

மனைவி ஓடிப்போன பிறகு கருப்பன் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. தங்கையோ, தங்கையின் கணவனோ அவனைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லவில்லை. பெண், வீட்டில் ஆளாகி நிற்கும் அவதியிலிருந்து மீட்சி பெறும் எண்ணத்தில் கருப்பனின் பெண்ணை சேலம் பக்கத்தைச் சேர்ந்த கிழவன் ஒருவனுக்கு 'தள்ளி' விட்டவர்கள் கருப்பனின் வார சம்பளம் ஐநூறு, அறுநூறுகளை அப்படியே பறித்துக் கொண்டனர்; என்.எல்.சி. நிறுவனத்தின் பேருந்துச் சலுகையில் தாண்டவன் குடும்பத்திலிருந்து இரண்டாம் சுரங்கத்திற்குப் போக வர தேவையான மூன்று ரூபாய் மற்றும் சுரங்கக் கேன்டீன் மூலம் பத்து, பதினைந்து, இருபத்தைந்து காசுகளுக்கு வழங்கப்படும் தேநீர், இட்லி, வடை, பூரி, தயிர் -எலுமிச்சம்-புளி பட்டை உணவுகளுக்குப் போதுமான இரண்டு ரூபாய் எல்லாவற்றையும் பைசா துல்லியமாகக் கணக்கிட்டு கருப்பனுக்கு நாளொன்றுக்கு வெறும் ஐந்து ரூபாயைத் 'தாராள'மாகப் படியளந்தனர். நிறுவனம் கேன்டீன் உணவுகளில் ஐந்து பைசா, பத்துப்பைசா விலையேற்றம் செய்தபோதும் கருப்பனுக்காக 'தினப்படி' மட்டும் அரைரூபாய், ஒரு ரூபாய் கூட கூடுதல் பெறாமல் அப்படியே நீடித்தது. கையில் காசில்லாத நாட்களில் வேலைக்கு வருவதை அல்லது வீடு திரும்புவதை நடைபயணமாக்குவது கருப்பனுக்கு இயல்பாகவே மாறியது. 

'பத்துப்பைசா, பதினஞ்சிப்பைசா இட்லி, வடை, பட்டை பாடாவதிங்களத் தின்னுட்டு எப்படி இந்த மனுஷனால் எட்டு மணி நேரம் சளைக்காம மண் வெட்ட முடியுது?' என்று என்னுள் மற்றும் எனது சக தொழிலாளர்களுக்குள் எழுந்த கேள்விக்கு ஒரு முறை "இந்த கேன்டீன் இட்லி, வடைலாம் துன்னுட்டு மண்வெட்டிய புடிக்க முடியாது சார். அதுக்கு வாரத்துக்கு ஒரு தபா நல்லா பன்னிக்கறி சாப்பிடணும். பன்னி வார பச்சையாவே துன்னலாம். நல்ல சத்து, நல்லாருக்கும். தங்கச்சி வூட்ல எது தப்பனாலும் தப்பும், வாரத்துக்கு ஒரு வாட்டி பன்னிக்கறி மட்டும் தப்பாது" என்று நீட்டி முழக்கி கருப்பன் சொன்ன விளக்கம் நேற்று சொன்னதுபோல இன்னும் எனது காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 

கருப்பன் குறித்த கசப்பான நினைவுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தவன் ஒயர் கூடையிலிருந்த மளிகைப்பொருட்களை விலை சரிபார்த்து எடுத்து வைக்கும் முக்கிய வேலையில் இறங்கினேன். வீட்டுக்கு வெளியே தெருவில் "தோட்ட வேல! தோட்ட வேல! தோட்ட வேலம்மா! தோட்ட வேல!" என்று கருப்பனிக் குரல் அடைபட்ட காதுகளுக்கும் தெளிவாக கேட்கும் வகையில் உரத்து ஒலித்தது. உணவு தயாரிக்கும் மும்முரத்திலிருந்த என் மனைவி, செய்யும் வேலையை விட்டு வெளிவர முடியாத சிக்கலுடன் "ஏங்க, அந்த தோட்ட வேலையாள கூப்பிடுங்க!" என்று என்னிடம் அவசரம் காட்டினாள். 

"ஆள் வச்சி செய்யற அளவுக்கு அப்படி என்ன வேலைஇருக்கு இப்ப தோட்டத்துல? இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். சமையல் வேலைய முடி!" என்று கருப்பனைத் தவிர்த்து விடுவதற்கு முயற்சித்த எனது சமாளிப்புக்குரல் அவளது காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. அடுப்புத்தணலைச் 'சிம்'மில் குறைத்துவீட்டுக்கு வெளியே விரைந்து சென்றவள் மூன்று வீடுகள் தாண்டிவிட்ட கருப்பனைத் தனது அவசரக்குரல் வீச்சின் அதிர்வில் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினாள். 

"இந்த ரோஜா, மல்லி, பவழ மல்லி பூஞ்செடிங்க கீழ இருக்கற புல்லெல்லாத்தையும் செதுக்கிப்போடணும். இருக்கற இந்த நாலஞ்சி வாழ மரங்களுக்கு, பலா, மாங்கன்னுங்களுக்கு சுத்தி நல்லா மண் அணைச்சி விடணும். எவ்வளவு கொடுக்கணும் சொல்லு!" 

"இப்ப இந்த நிமிஷம்னு எறங்கனாலும் பொழுதுக்கும் வேல இருக்குதும்மா! நூறு ரூபா குடுங்க. சுத்தமா செஞ்சீ தர்றன்!" 

"தோ பாரு! ஒன்னுமில்லாத ரெண்டு மணி நேர வேல! நூறு ரூபால்லாம் முடியாது. இருபத்தஞ்சி ரூபாய் கொடுத்துடறன். கட்டுப்படியாவும்னா செய்! ஆவாதுன்னா சட்டுப்புட்டுன்னு கௌம்பு! வேற படியிற இடத்துல பாரு!" 

நடந்து அனைத்தையும் ஜன்னல் வழியில் பார்த்தறிந்த எனக்கு தலை கிறுகிறுத்தது. அதிரடியாகச் சொன்ன இருப்பத்தைந்து ரூபாய்க்கு கூடுதலாக பைசா கேட்காமல் வேலையில் இறங்கிவிட்ட மனிதன் கிடைத்த மகிழ்ச்சிப்பூரிப்பில் வாயெல்லாம் பல்லாக வீட்டுக்குள் வந்த மனைவியிடம் கோபத்துடன் கேட்டேன். 

"என்ன மாலா, உனக்கே இது அநியாயம்னு படலையா?"

"இருபத்தஞ்சி ரூபாய்க்கு செய்யின்னு சொன்னா பேரம் பேசி அந்த ஆள் அம்பது ரூபாய்க்கு வந்து நிற்பான்னு பார்த்தன். அந்த ஆள், சொன்ன இருபத்தஞ்சிக்கே மறுபேச்சுப் பேசாம இறங்கி வேல செய்யறதுக்கு நா என்ன பண்றது? வேல முடியட்டும். அஞ்சி, பத்து சேத்துக்கொடுத்துடலாம்." 

"மாலா, இந்த ஆள் நான் ஆப்பரேட்டரா இருக்கிற மெஷின்ல கட்டிங் ஆளா இருந்து ரிட்டயர்டு ஆனவன், ஏற்கெனவே கருப்பன்னு ஒரு ஆள்பத்தி உங்கிட்ட நா நெறைய சொல்லியிருக்கறனே! சாட்சாத் அந்தக்கருப்பன்தா இருப்பத்தஞ்சி ரூபாய்க்கு இப்ப நீ வேலையிலமர்த்தியிருக்கிற இந்த ஆசாமி! சரி, மத்தியான சாப்பாட்டு லிஸ்டுல கருப்பனையும் அடிஷனலா சேத்துக்க!" 

"வேலையிலிருந்து ரிட்டையர்டு ஆன ஆளுன்றீங்க, எங்கனா ராமா, கிருஷ்ணான்னு கெடக்க வேண்டியதுதானே? வீடு வீடா வேலை கேட்டு எதுக்கு இப்படி அல்லாடணும்?"

"பொண்ணுன்னு உறவு சொல்லப்பட்டவளையே அவளோட கல்யாணத்துக்குப் பிறகு ஒரே ஒருமுறை முகம் பார்க்க முடியாத மனுஷன்! ஒரு ஜாண் வயித்த நிறைச்சாலும், காயப்போட்டாலும், எது எப்படி ஆனாலும் தங்கச்சி வீடே தஞ்சம்னு கிடக்கிற அப்பாவி ஜீவன், அன்றாட வருமானம் அத்துப்போன பிறகு வீடு வீடா ஏறி வேலை கேட்காம வேற என்ன செய்ய முடியும்? இனிமே அந்தக்கருப்பன் வாழ்க்கை இவன் கடைசி காலம் வரைக்கும் இப்படித்தான் ஓடணும். இதத்தவிர வேற வழியில்ல." என்றவன் மனைவி தொடர்ந்து எதுவும் கேட்பதற்கு, சொல்வதற்கு இடம் கொடுக்காமல் கருப்பனைச் சந்திக்க முடிவெடுத்து வாசலில் வந்து நின்றேன். அணிந்து வந்திருந்த காக்கி அரைக்கால் சட்டை, நீலநிற பழைய அழுக்கு டீசர்ட், சிவப்பு ஈரிழைக் குளியல் துண்டு என்னும் சிக்கனமான ஆடையலங்காரத்தில் டீ சர்ட்டை வேலியோர காட்டுப்பூவரசின் அடியில் சுருட்டி வைத்து, துண்டைத் தலையில் இறுக்கி வேலையில் மூழ்கிவிட்டவனை "கருப்பா!" என்ற அடங்கிய குரலோட்டத்தில் என்னை நோக்கித் திருப்பினேன். 

நீண்ட நாட்கள் பழகிய குரலின் அனுபவம் முப்பது நாட்கள் இடைவெளியில் அற்றுவிட்டது என்பதை நிரூபிப்பவன் போல கூப்பிட்ட நொடியில், கீழிறக்கிய மண்வெட்டியை பூமிப்பரப்பில் அழுந்தப்பதித்து தலைநிமிர்ந்த கருப்பன், பக்கத்தில் நான் நிற்பதை நம்ப முடியாதவனாக "சார், நீங்களா! நீங்க எங்க சார் இங்க?" என்றுமனதின் மகிழ்ச்சிப் பரபரப்பில் கண்களில் ஆச்சரியம் மலர்த்தினான். 

"என் வீடுதான் கருப்பா இது! மந்தாரக் குப்பத்துல முதல் தெருவுல 'கே'டைப் வீடுன்னு நெம்பரோட உங்கிட்ட ஒரு முறை அட்ரஸ் சொல்லியிருக்கறனே!" 

"எப்பவோ சொல்லியிருப்பீங்க. சொன்னது இப்ப சுத்தமா ஞாபகத்துல இல்ல. டவுன்ஷிப் வூடுங்க மாதிரி வூட்டைச் சுத்தி எடம் தாராளமா இருக்குது சார். மரம், செடி, கொடிங்களும் நெறைய நல்லா இருக்குது. வூடு, மேல சிமெண்ட் ஓடா இருக்கறதுதா குறையா தெரியுது. புள்ளைங்க எங்க சார்?"

'மகன், மகள் படிக்கும் பன்னிரண்டு, பத்து வகுப்புகள் குறித்த விவரங்கள் கருப்பனுக்குத் தேவைற்றது' என்னும் தெளிவில் "பிள்ளைங்க பள்ளிக்கூடம் போயிருக்காங்க கருப்பா. வர சாயங்காலம் ஆயிடும்!" என்று சுருக்கமாகச் சொல்லி வைத்தேன். 

'ஐம்பத்தெட்டு வயது நிறைவிலும் இருபது வயது இளைஞனும் ஈடு கொடுத்துச் செய்ய முடியாது' என்னும் வேகத்தில் இயங்கும் கருப்பனின் வேலைத்திறனில் அதிசயித்து 'இப்படிப்பட்ட ஒப்பற்ற உழைப்பாளியை எந்த வகையில் உபசரிக்கலாம்?' என்னும் யோசனையுடன் வீட்டின் மேற்குப்புறத்தில் கிளைத்துப் படர்ந்திருந்த வேப்பங்கன்றின் அடியில் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தேன். 'பார்க்குமிடமெல்லாம் மரங்கள்!' என்னும் பசுமைச்சூழலைப் புறந்தள்ளி வறுத்தெடுக்கும் ஆடி வெயிலின் தீவிரத்திலும் இரவுப்பணி பார்த்து வந்த காரணத்தின் அயர்வு கண்களில் உறக்கமாக ஆக்ரமித்தது. 

***

"ஏங்க உங்க ஆளு வேலைய முடிச்சிட்டாரு. பணம் கொடுத்து அனுப்புங்க!" உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தவனை உசுப்பிய மனைவியின் குரலில் விழித்தெழுந்தவன் "கருப்பன் வேலை எப்படி? நல்லா செய்திருக்காப்லியா?" என்று அவளிடம் கேள்விகளை வைத்தேன்.  

"முழு ஆள் கணக்குல மூணு ஆள் செய்திருந்தாலும் இத்தனை சுத்தமா, அழகா வேலை நடந்திருக்காது. சும்மா சொல்லக்கூடாது. மெஷின் தோத்துடும் உங்க ஆளு கிட்ட!" என்ற மனைவியிடம் "இப்படி ஒரு வேலைக்காரன்றதாலதா சுரங்கத்துல கருப்பனுக்கு "மண்வெட்டி மன்னன்-னு பட்டப்பேரு!" என்று கருப்பனை பெருமைப்படுத்தினேன். 

"எவ்வளவு கொடுக்கலாம்?" என்ற எனக்கு "மத்தியான சாப்பாட்டுக்கு கொஞ்ச நேரம் உக்காந்தது தவிர காலை பத்து மணியிலேர்ந்து தோ இந்த நாலு மணி வரைக்கும் வேலைன்னா வேலை! ஒரு அஞ்சி நிமிஷம் அப்பிடி இப்பிடி நிக்கல! நிமிரல! மனுஷனுக்கு மனப்பூர்வமா தாராளமா கொடுக்கலாம். உங்க விருப்பப்படி கொடுங்க!" என்று மனைவி சுதந்திரம் கொடுத்தாள். 

தூக்கக் கலக்கம் போக கண்களைத் துடைத்தபடி கருப்பனின் கை வண்ணத்தில் மிளிரும் தோட்ட அழகில் மனதைப் பறிகொடுத்தவன் வேலிப்படல்களின் ஓரம் புற்களைச் சுத்தப்படுத்தும் பணியிலிருந்த கருப்பனை நோக்கிச்சென்றேன். 

"போதும் கருப்பா! இவ்ளோ அழகா பொறுப்பா செய்திருக்கியே இதுவே போதும்! நல்லா முகம், கை, கால் கழுவிக்கினு புறப்படு! இந்த எழுபத்தஞ்சி ரூபா! திருப்தியா வச்சிக்க!" ஓயாமல் உழைத்துழைத்து இறுகிக் காய்ப்பேறிக்கிடந்த கருப்பனின் வலது உள்ளங்கையில் ஏழு பத்து ரூபாய்த் தாள்களை மற்றும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அழுந்த வைத்தேன்.  

"காலைல டீ, அப்பளம், பொரியலோட மத்தியானம் அருமையான சாப்பாடு. மைன்ஸ்ல எத்தனையோ தடவ எவ்வளவோ துட்ட உங்கக்கிட்ட ஓசியா வாங்கியிருக்கறன். அந்தக் கடனுக்கெல்லாம் உங்களுக்கு இன்னும் நா எவ்ளோ செய்யலாம். அதனால இந்த தடவ எனக்கு ரூபா வேணாம். இன்னொரு வாட்டி வேலைசெய்துட்டு இவ்ளோ குடுங்க சார்னு நானே கேட்டு வாங்கிக்கறன்!" 

"பொழுதுககும் வேலை செய்துட்டு ஒண்ணுமில்லாம போகக்கூடாது கருப்பா! அது ரொம்பத்தப்பு! கைச்செலவுக்காவது எதுனா கொஞ்சம் வாங்கிக்க!" என்ற எனது வேண்டுதலைக் கருப்பன் எளிதாக மறுத்துவிட்டான். மனைவி பெரிய டம்ளரில் கொண்டு வந்து கொடுத்த தேநீரைச் சுடச்சுடப்பருகியவன் இடதுதோளில் உதறிப்போட்ட டீ சர்ட்டின் மேல் தனது உயிர் ஆயுதமான மண்வெட்டியை லாவகமாகச் சார்த்தி "வர்றேன் சார்! வர்றம்மா!" என்று எங்களிடம் விடைகேட்டான். விடை கேட்பது மரியாதைக்கு என்னும் வகையில்,. பாதங்களின் அளவுக்குப் பெரிதாகத் தெரிந்த மலிவு விலை ஹவாய் செருப்புகளை 'டப்! டப்!' என்று சப்திக்க எங்களின் பதிலை எதிர்பார்க்காமல் ஓடுபவன் போல நடக்க ஆரம்பித்தான். 

நடந்ததை நம்ப முடியாதவளாக என்னையும் எனது கையில் கருப்பன் திருப்பிக்கொடுத்துச்சென்ற பணத்தையும் மாலா கேள்வியுடன் நிலைகுத்தப் பார்த்தாள். 

'இருபதாண்டுகள் சுரங்கத்தில் ஒன்றாகப் பணிபுரிந்த காலத்தில் ஒன்று, இரண்டு, ஐந்து என்று கருப்பன் என்னிடம் வாங்கிய தொகை எவ்வளவு இருக்கும்?" என்று யோசித்துப் பார்தேன். யோசனையின் தொடர்ச்சியில் 'அதிகபட்சம் அறுபது அல்லது எழுபதுதான் இருககும்' என்று எழுந்த எண்ணம் மிகவும் நியாயமாகப்பட்டது. 

கருப்பன் என்னும் அந்த 'உயர்ந்த மனிதன்' குறித்த நினைவோட்டத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து தளும்பிற்று எனக்கு. 

- ப.ஜீவகாருண்யன்

Pin It