தெள்ளத் தெளிந்த கண்ணாடி நீர் தொட்டியின் வலப்பக்கம் காற்றோடு உள்நுழைந்த நன்னீரால் நீர்க்குமிழிகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன.

விடிகாலை சூரியனைப் போன்ற தங்கநிற மீன் ஜோடிகள் தொட்டியின் வண்ணவண்ண கற்களுக்கு மேலே சுதந்திரமாக சுற்றி சுற்றி நீந்திக் கொண்டிருந்தன.

சுரேஷ் புதிய பைக்கில் ஸ்டிக்கரை ஒட்டி முடித்து நண்பர்களை சந்திக்கப் புறப்பட்டான் கத்தரிப்பது போன்ற வெயில் கும்மிருட்டில் எதிரே வரும் லாரியின் முகப்பு விளக்கு கூசி நிறுத்தும் ஓட்டுனரை போல விழிகளை சுருக்க வைத்தது வெகையின் சூட்டில் பனியன் எல்லாம் பிசுபிசுக்க மோட்டார் வாகனம் கிழிக்கும் காற்று அவன் மயிர்கால்களுக்குள் சென்று சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

மாரியம்மன் கோவில் சந்தை நெருங்கி வளைப்பதற்கான குறியீட்டை செய்து வளைத்தான் மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய வந்த வேகத்தில் தட்டுத்தடுமாறி நிலைத்து நின்றான் வெயிலோடு எரிச்சலும் அவன் மூளையில் ஏறியது சனியனே இறங்கி வந்தேன் கொன்னு பொதச்சிடுவே அதற்குள் அருகில் நின்றவர்கள் கல்லை எடுத்து பொதுவாக எறிந்தார்.

காலை தூக்கி லாவகமாக தப்பிய மகிழ்வில் வாலைச் சுருட்டிக் கொண்டு தெரு முனையை தாண்டி ஓடி மறைந்தது அந்த நாய்.

அமுதனும் கோபுவும் பிள்ளையார் கோயிலின் பின்புறம் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர் அகன்று விரிந்த அரச மரத்தின் உச்சியில் மோதி மோதி தோற்றுப்போன காற்று உடைந்து அரச இலைகளில் விழுந்து வடிந்தது இலைகள் அசையும் ஓசை மழைக்கால நீரோட்டத்தைப் போல சலசலவென சில்லிட்டது.

பிள்ளையாரை விட்டு பத்தடி தள்ளி எந்த திசை என்றில்லாமல் குப்புறக் கிடந்தார் ஒருவர, படிக்கட்டில் உட்கார்ந்து காய்ந்த இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தார் இன்னொருவர்

அமுதன் உட்கார்ந்திருந்த சுவற்று ஓரத்தில் கறுப்பு எறும்புகள் ஒன்றிரண்டு அலைமோதிக் கொண்டிருந்தன உச்சிவெயிலும் அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல இருந்தது.

கோபு நம்ம சுரேஷ இன்னும் காணோமே அவனுக்கு ஒரு போன் பண்ணு.

அவே ஏதோ சித்தி வீட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னானே கொஞ்சம் லேட்டாகும் போல

அப்படியா எதுக்கு கோயம்புத்தூர் போலாம்னு சொன்னான்.

ஏதாவது லவ்பேர்ட்ஸ் வாங்கவாயிருக்கும்…

ஏ இத்தன வெச்சிருக்கானே பத்தாதா…

மைனா தேன்சிட்டு சிட்டுக்குருவி எத்தனையோ பறவையினங்கள் அழிஞ்சிட்டிருக்க இவனுக எதுகூட எதையோ சேர்த்துவிட்டு சேர்த்துவிட்டு புதுசு புதுசா வளர்த்தராணுக.

இப்படித்தானே ஈமு கோழி வந்தது. ஆமாமா கொஞ்ச நாள்லயே காட்டுக்குள்ள தொறந்துவிட்டானுகளே. அது என்னனென்ன கலப்பு. நெருப்புக்கோழியும் சாதா கோழியும்.

உழைத்துக் கலைத்த சோர்வில் வியர்வை நெற்றியில் சொட்டச் சொட்ட அவ்வழியே வந்தான் ஒரு கம்மங்கூழ்காரன் வேடு கட்டிய பானையிலிருந்து கொஞ்சம் கம்மங்கூழ் மோந்து அதனோடு மோர் கலந்து மோர் மிளகாய் மாங்காய் வற்றல் உள்ளிட்டவைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான்.

கோபு கம்மங்கூழ் குடிக்கலாமா.

சரி வா,

அண்ணே 2 கம்மங்கூழ் கொடுங்க சொம்புகளில் கம்பின் கரைசல் மிதந்தது. அதனைப் பருகப் பருக உணவுக் குடலைப் கடக்கும் பாதை எங்கும் புத்துணர்வூட்டி சென்றது.

சுரேஷ் பிள்ளையார் கோயிலின் வடபுறம் இருந்த மரத்தின் அடியில் பைக்கை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழற்றி திரும்பி பார்த்தான்.

அமுதா அவன் வந்துட்டான்.

அண்ணே இந்தாங்க.

இரண்டு பத்து ரூபாய் தாளை கொடுத்துவிட்டு சுரேஷை நோக்கி நடந்தனர்.

என்னடா சுரேஷ் என்ன விஷயம். என்ன ஏதுன்னு விளக்கம் கொடுத்தா தான் வருவியா.

அப்படி இல்லடா சரி வா அங்க போய் கொஞ்ச நேரம் உட்காரலா.

மறுபடியும் அதே இடத்தை நோக்கி நடந்தனர் பைக்குள் இருந்த இரண்டு குளிர்சாதன பாட்டில்களை உருவிக் கொண்டு கோபுவின் பின்னேயே நடந்தான் சுரேஷ்.

டேய் என்ன இது.

ஆப்பிள் ஜூஸ்தான் ஆன்லைன் ல ஆர்டர் பண்ணி வாங்கினேன்.

இது எப்ப தயாரித்ததோ என்னவோ.

எல்லா டிடெய்லும் பார்த்துட்டு தான் வாங்கினேன்.

சரிவை கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்சிகளா இப்பதான் நாங்க கம்மங்கூழ் குடிச்சோம்.

கோபுவும் அமுதனும் உட்கார்ந்திருந்த திட்டினருகே இரண்டு நாய் குட்டிகள் தவழ்கிற பிள்ளையைப் போல சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.

சற்று தூரத்தில் அதன் தாய் மார்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தது.

இதுக எப்படா வந்துச்சு பார்க்கவே அழகா இருக்கே என அள்ளிக் கொள்ள கையை நீட்டினான்.

அமுதா வேண்டாம் தாய் வந்திட போகுது என்று தடுத்தான் கோபு.

பானத்தை தொண்டைக்கு கீழே இறக்கி விழுங்கிய பின் சேறு தெறித்த சட்டையை கசக்குபவன் போல முகம் சுழித்தான் சுரேஷ்.

இந்த தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல கண்ட இடங்களில் நார வச்சுக்கிட்டு சுத்திட்டு திரியுதுக.

அது என்ன பண்ணுச்சு உன்ன என்றான் அமுதன்.

ஆமா இங்க பாரு வதவதனு குட்டிய போட்டுடுது அதுக சாக்கடையிலிருந்து டீக்கடைக்கு போவது அதே சேறு சகதியோட வாய்க்கால் ஆத்துல தண்ணி குடிக்கிது இதனால எவ்வளவு நோய் பரவாது சுகாதார சீர்கேடு வருது.

இதனால மட்டும்தான் வருதா என்ன அந்த நாய்களின் அழகான கோணத்தை செல்பேசியில் படம் பிடித்துக்கொண்டே கோபு கேட்டான்.

அப்படி இல்ல ஆனா இதுனாலயும் பொதுமக்களுக்கு ஏகப்பட்ட தொந்தரவு. இப்ப கூட வண்டியில வர்றப்போ ஒரு தெருநாய் குறுக்க வந்துருச்சு நான் வேகமா வந்து இருந்தா அவ்வளவுதான் சோலி முடிஞ்சிருக்கும்.

போலீஸ் கேஸாகாத ஏகப்பட்ட விபத்து இதுனால தான்.

நகராட்சி நாய் புடிக்கிற வண்டி சொல்லி தூக்கிட்டு போக சொல்லனும்.

ஆமாமா இப்படியேதான் சுற்றுச்சூழலை காக்கறோம்னு ஒவ்வொரு விலங்கையும் அழிக்கிறீங்க. என்றான் கோபு

மண்ணோட பிறந்ததுக்கு மண்ணோட கலந்து வாழத் தெரியும் உங்க கரிசனை எல்லாம் அதுக்கு தேவையில்லை என்று கொப்பளித்தான் சுரேஷ்.

நாய்களால நோய் பரவுவது மக்களுக்கு தொந்தரவுனு சொல்லி சொல்லி தான் எல்லா நாயும் புடிச்சு கருத்தடை பண்ணாங்க.

அப்புறம் என்ன நடந்தது.

செருப்பு விளம்பரம், சிம்கார்டு விளம்பரம், ஒரு முட்டாய் விளம்பரத்துக்கு கூட வெளிநாட்டு நாய்களை. காமிச்சு காமிச்சு பொருளை விட நாய்கள் அதிகமாக வாங்க வச்சாங்க.

அதுமட்டுமா அமுதா அந்த நாய்களுக்குனு தனியா ஷாப்பிங் சென்டர் கூட வச்சிடாங்க என சிரித்தான் கோபு.

ஆமடா இந்த தெருநாய்களுக்கு எந்த மருந்தும் இல்லை ஊசியும் இல்ல பழைய சோறு நேத்து சுட்ட இட்லி எதை கொடுத்தாலும் தின்னுட்டு நம்ம காலையே சுத்தி சுத்தி வாலாட்டும்.

ஆனா இந்த வெளிநாட்டு நாய்களுக்கு திங்க தனி செலவு, மாசாமாசம் வெறி பிடிக்காமல் இருக்க ஊசி, ஊட்டச்சத்து ஊசி, பராமரிப்பு செலவே ஏகப்பட்டது.

நீங்க என்ன வேணும்னாலு சொல்லுங்க டா அதுகளோட அழகும் கம்பீரமும் கெத்தும் இதுகளுக்கு இருக்கா வெளிநாட்டில் பெரிய பெரிய அரசியல்வாதி பிரதமர்களை பாதுகாக்கவே அந்த நாய்கள் தான் வச்சிருக்காங்க ஏன் இங்கேயும் போலீஸ் வெளிநாட்டு மோப்ப நாய்களதானே பயன்படுத்துறாங்க இந்த ராஜபாளையம் நாய் முயல் வேட்டைக்குதா லாயக்கு.

என்றபடி காலி பாட்டிலை தூக்கி எறிந்தான் லொடக்கென அது கல்லில் விழுந்த சத்தத்தில் நாய்க்குட்டிகள் ஓடித் தன் தாயின் மார்பில் தஞ்சமடைந்தன.

நாட்டு நாய்களை பத்தி உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.

சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் போருக்காக பயன்படுத்தப்பட்டது அலங்கு நாய் மண்டை நாய்கள்.

போர்ல எதிரிப்படையோட குதிரைக் கால் நரம்புகள கடிச்சி கொதறிடும் அப்புறமா அந்த குதிரைகளால ஜென்மத்திலும் நடக்கவே முடியாது போர்க்காக காட்டு வழி போறப்போ நரி, ஓநாய், ஏன் சிங்கம்,புலி வந்தாழும் நாட்டு நாய்க ஒண்ணு சேர்ந்தால் குதறிப் போட்டுடும்.

நீ சொல்றயே பாதுகாப்பு இன்னைக்கு கூட பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர்ல ராஜபாளையம் நாய்கள் தான் எல்லை வீரனா காத்து நிக்குது ராஜபாளையம் நாயோட விசுவாசதுல மனுசன் கூட தோத்திடுவான்.

நீ சொல்ற வெளிநாட்டு நாய்க தின்னுட்டு தூங்கத்தான் இலாயக்கு

பாசமா பழகுவதற்கும் ஆபத்துன்னு வந்தா முன்னே நின்று உசுரக் கூட கொடுக்க தயங்காததுக தான்டா இந்த நாட்டு நாய்கள்.

அலங்க, மண்டை நாய், கோம்பை, கன்னி, சிப்பி பாறை, இராஜபாளையம் இப்படி பேர் சொல்லிக் கெடந்த எல்லாமே அங்கொன்று இங்கொன்றுமாக வாழ்ந்துகிட்டு இருக்கு.மீதியெல்லாம் இத மாதிரி இனந் தெரியாத நாய்கள்தான் அன்னைக்கு ஆயுதத்துக்கு அடிமையா அடங்கிக் கிடந்த மாதிரி ஆங்கிலேய அவனோட உற்பத்திப் பொருளுக்கு இன்னைக்கு அடிமையாயிருக்கோம்

விவசாயத்துக்காக மாட்டுக்காகனு போராடுரோமே தப்பில்ல முதல்ல இந்த மண்ணை காக்கணும் அதுக்கு இந்த மண்ணோட வாழும் ஒவ்வொரு உயிர்களையும் நாம பாதுகாக்கணும் அதுக்காம முயற்சிக்கனும்.

அப்பத்தான் நாம நாமளா வாழ முடியும்.

இல்லனா மெக்காலே சொன்ன மாதிரி இங்கிலாந்து மூளை இந்திய உடம்போடு தான் இருக்கணும்.

கேட்டுக்கோடா சுரேஷ் முதல்ல இந்த மண்ண நேசி இந்த மண்ணோட உயிர்களை நேசி என்றான் கோபி.

நீ சொல்றதும் சரிதாண்டா இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரி நமக்கு அதுவெல்லாம் கவர்ச்சியா தெரியுது.

புரிஞ்சுக்கிட்டா சரி.

நான் இன்னைக்கு கோயம்புத்தூரில் ஒரு நாய் வாங்க தான் போலாம்னு இருந்தேன் நீ சொன்னத கேட்டதுக்கு அப்புறம் அவ்வளவு செலவு செஞ்சு நம்ம நாட்டு உயிர்களை புறக்கணித்து ஒரு திருப்தி எனக்கு தேவையில்லை இந்த நாயவே நான் வீட்டுக்கு கொண்டு போய் வளர்த்த போறேன் என அதன் வயிற்றை பிடித்து மேலே தூக்கினான். செல்ல முனகளில் குட்டி வாலை ஆட்டிக் கொண்டே அவன் முகத்தை நாவால் தடவிட அது துடித்தது.

- அ.இம்ரான் ஹக்

Pin It