"ஆறுமுகம்..."

எந்த அங்கத்திற்கு பங்கம் வந்தாலும் இந்த அங்கத்தில் தான் கிலி ஒரு புள்ளியின் நீட்சியாய் உடல் முழுதும் அலகு ஏற்றி மரணத்தை மடியில் கட்டிக்கொண்டு பயணம் செய்யும் .அதுவும் இணைய தளத்தில் 'நெஞ்சு மற்றும் இடது கை வலி' என்று சொடுக்கினால் போதும் பலபெயர் கொண்ட இதய வியாதிகள் பூதாகாரமாய் அவதரிக்கும் .

"சார்… உங்களுக்கு என்ன பிராப்ளம்"

" எனக்கு ஒரு வாரமா இந்த இடது கை மட்டும் அப்பப்போ வலிக்குது அதோட இடது பக்க நெஞ்சு ஊசி குத்தறமாதிரி வலிக்குது, மூச்சு விட சிரமமா இருக்கு..."

"சரி வெயிட் பண்ணுங்க ‘எக்கோ ’ எடுத்து பார்த்தரல்லாம் .."

‘எக்கோ’ என்றவுடன் தன் மணிபர்ஸை தடவினான் சிவசங்கரன்.

காத்திருப்பு அறையில் ஒரு வண்டி நோயாளிகள் கையில் ஒரு பஞ்சுமிட்டாய் நிறத்தில் ஒரு கோப்புடன் மும்முரமாக அங்கு தொங்கிக் கொண்டிருந்த நான்கடி தொலைக்காட்சியை ஒளிப்பதிவு செய்துக் கொண்டிருந்தனர் .

"விதவை தாயாக பூர்ணிமா ஜெயராம் இரு சிறுவர்களை சீராட்டி பாடிக் கொண்டிருந்தார் ... வாய்மட்டும் அசைந்தது ... அமர்ந்திருக்கும் அனைவருக்குள் இருக்கும் ஜானகியம்மாள் அந்த பாடலுக்கு ஒலிசேர்க்கலானார்.

வெள்ளை காலர்க் கூட்டத்தில் பெரும்பான்மையான மதிப்பீடும் மரியாதையும் பெற்றிருக்கும் மருத்துவர்கள் ஒரு உயிரின் அளவுகோளை தெரிந்துகொண்டு நுண்ணறிவின் வெளிப்பாட்டில் ஒளிர்விடும் நுட்பங்களின் துணைக்கொண்டு மரணத் தேதியை ஒத்திவைக்கிறார்கள்.

பெயரை மிஞ்சும் பட்டத்தை அரைக்கால் புள்ளி இடைவெளி காக்க பெரிய நவீனப் புகைப்படத்தில் அமர்ந்திருந்தார் மருத்துவர். அவர் கைப்பற்றிய பல சான்றிதழ்கள் அவருக்கு கீழ் அடுக்கில் அவர் பெயரை இன்னும் சற்று கவுரவமாய் சித்தரித்தது.

அவர் புகைப்படம் சிவசங்கரனைப் பார்த்து சிரிப்பதைப் போன்று இருந்தது.

அன்று அவர் கடவுளாய் அவன் கண்களுக்கு தெரிந்தார் .

பெயர்கள் வரிசைக்குக்கேற்ப அழைக்கப்பட்டது .

நரைத்த தலைகொண்ட பாட்டி, வரிசை எண்ணைப் படிக்கும் இளம் பெண்ணொருத்தியின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த தாத்தா எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்த தம்பதி, பதட்டத்தின் விளிம்பில் பெருமையற்று இருந்தனர்.

சிறுமியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு எதையோ பறிகொடுத்தவள் போல காணப்பட்டாள் ஒரு பெண். அங்கிருந்தோர் விழிகள் எதற்கோ அவ்வப்போது பிதுங்கி நின்றது .

"சிவசங்கரன் ..." என்று அழைக்கப்பட்டது.

விறுவிறு என்று எழுந்து நடந்தான் .

"சார் உங்க சட்டையை கழட்டிக்கோங்க... ஒரு சின்ன டெஸ்ட் பண்ணிக்கலாம் " என்றான் அங்கிருந்த இயந்திரத்தைக் கையாளும் ஒரு இளைஞன்.

உடலியக்கத்தின் சந்தேகத்தைத் தீர்க்கும் தருணமென உடனுக்குடன் செயல் பட்டான் சிவசங்கரன்.

"உங்க பர்ஸை உங்க அம்மா கிட்ட கொடுத்திருங்க .." என்றான்

" எங்கம்மாவா ... யாரு ..." என்று அந்த இளைஞனை திரும்பிப் பார்த்தான் சிவசங்கரன்.

"என்கூட யாரும் வருல ..." என்று கூறும் போது அவன் குரல் கம்மி கனத்தது.

"சாரி.. சார் உங்க பக்கத்துல இருந்தவங்கள உங்கம்மான்னு நினைச்சேன் .." என்று ஒருகணிப்பொறியின் முன் அமர்ந்தான் அந்த இளைஞன் .

ஒரு நீண்ட மேசையில் படுத்திருந்த சிவசங்கரன் கண்களில் அவன் அன்னையின் நினைவு ஒரு நிமிடம் உறுத்தி நின்று போனது .

இடது மார்பக எலும்புகளில் ஒரு வெள்ளை நிற களிம்பு தேய்க்கப்படுகிறது .

அந்த களிம்பின் குளிர்ச்சி அந்த கனத்த இதயத்தை குளிரூட்டியது .

களிம்பின் மேல் ஒரு சோதனைக் கருவி உழுது கொண்டிருந்தது. அநேக மணித்துளிகள் மாயமாகிக் கொண்டிருந்தன .

"எதாவது ப்ராபளமா...."

" டாக்டர் சொல்லுவாரு ..." என்று கணிப்பொறியில் வெள்ளையும் கருப்புமாய் கலந்த ஒரு உருவத்தை உருட்டிக் கொண்டிருந்தான் .

நீண்ட நேரத்திற்கு பிறகு அவன் சிவசங்கரனை விடுவித்தான்.

"ஒன்னும் பயப்படாதே டா அம்மா இருக்கேன்... உனக்கு ஒன்னும் இருக்காது ..."என்று தன் மகனை தேற்றிக் கொண்டிருந்தாள் அவன் முன்பக்கம் அமர்ந்திருந்த ஒரு தாய்.

இதை பார்த்த சிவசங்கரனின் நினைவில் திரும்பவும் வந்து போனது அவன் தாயின் உருவம். இந்த முறை மயான சடங்குகளுடன்.

" நான் என்ன பாவம் செஞ்சேன் ... என்பக்கத்துலே இப்போ நீ இருந்தா எப்படி இருக்கும்... நீ இதுவரைக்கும் எனக்கு என்ன பெருசா செஞ்சுட்டே .... அப்பத்திலிருந்து இப்போ வரைக்கும் கண்ணைக்கட்டி விட்டமாதிரி இருக்கு.

ஒன்னும் பெருசா அமையல கட்டுனதிலிருந்து பெத்துக்கிட்டவரைக்கும் எல்லாம் அப்படிதான் ... எனக்குன்னு சொல்லிக்க நீ மட்டும் இருந்தே இப்போ நீ போட்ட மோதிரம் மட்டும்தான் இருக்கு... இப்போ ஒடம்புல உருப்படியா துடிக்கிற ஒன்னும் மக்கர் பண்ணுது ... இத காப்பாத்த கூட காசு இல்ல நானும் உன்கிட்ட வந்துருவேன்.. அப்படி தான் தெரியுது..." என்று சத்தமாகத் தனக்குள் திட்டிக் கொண்டான் சிவசங்கரன்.

"என்ன பெத்த ஆத்தா..." என்று பின் இருக்கையில் இருந்த ஒருவரது அலைபேசி இளையராஜாவை பாடியது அவனை மேலும் சினமூட்டியது .

எத்தனை கரங்கள் முளைத்தாலும் அந்த ஒரு கரம் நம்மை உயர்த்தும் அறம். அந்த இல்லாமையை எதைக் கொண்டு நிரப்புவது. அந்த ஒற்றை இழப்பு படிமங்களில் இன்று வரைக்கும் புதைமேடாய் போனது வலிகளின் எச்சம். கருவிழி ஓரங்களில் அந்த கண பொழுதுகள் அவ்வப்போது நீர் குமிழாய் உடைந்து போகிறது .

"சிவசங்கரன் ... சிவசங்கரன் ..."

நீண்ட யோசனைக்குள் தாளிட்டுக் கொண்டவன் காதுகளின், தூரத்தில் ஒலித்தது அந்த கூக்குரல்... திடுக்கிட்டுக் கொண்டவன் ஒலியின் திசையில் நடந்தான்.

நடந்தவன் உடலில் ஆங்காங்கே புதிதாய் இதயங்கள் முளைத்து அத்தனையும் ஒன்று சேர, பலமாக துடித்தது.

மருத்துவர் அவர் முன் புகைப்படம் தாங்கியிருந்தத் தாளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். சிவசங்கரன் கேள்விக்குறிகள் உதிர்த்த படி மருத்துவரைப் பார்த்திருந்தான் .

"உங்களுக்கு ஸ்மோக்கிங் ஹாபிட் இருக்கா… ட்ரிங்க்ஸ்..."

"எப்போமே இல்ல, எப்போவாவது ..." என்ற குரல் நடுங்கியது.

"உங்களுக்கு ஸ்கேன் சீக்கிரம் எடுக்கணும் இருதய வீக்கம் இருக்கற மாதிரி தெரியுது..."

"டாக்டர் இன்னைக்கே எடுக்கணுமா..."

"கண்டிப்பா.. அப்போதான் சீக்கிரம் டிரீட்மென்ட் ஆரம்பிச்சு சரி செய்ய முடியும்..."

"எவ்வளவு ஆகும்..."

"இரண்டாயிரம் ..."

மொழி மறந்து போனது... ஏதேதோ பதட்டத்தில் வாய் குழறியது

வெளியே வந்தான்... சட்டைப்பைக்குள் விரல்கள் ஓடின... ஐநூரு மட்டும் தென்பட்டது .

கண்கலங்கியது யாருக்கு அழைப்பது என்று தெரியவில்லை... யாருக்கு அழைத்தும் பிரயோஜனம் இல்லை...

இடது கை வலித்தது... கலங்கிய கண்களை துடைத்தான்... நடு விரல் மோதிரத்தில் நீர் துளி தங்கத்தால் மின்னியது.

மோதிரத்தைக் கழட்டினான்…

இல்லாமையின் இருப்பிடத்தை நிரப்பித் துடித்தது இதயம்..

- சன்மது