1.

அன்புள்ள காயத்ரிக்கு,

டேவிட் எழுதிக் கொள்வது...

நான் தற்கொலை செய்யப் போகிறேன் காயத்ரி! இதைப் படிக்கும்போது தயவு செய்து அதிர்ச்சியடையாதே. நான் சாவதற்கு ஒரேயரு காரணம் தான். வன்முறை. இந்த உலகின் ரத்தத்தை அட்டையைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் வன்முறை. எதனால் இத்தனை வன்முறை காயத்ரி? நான் தங்கிக் கொண்டிருக்கும் இந்த பம்பாயில் போனவாரம் நடந்த படுகொலைகளைப் பற்றி நீ படித்திருப்பாய் தானே. வெடித்துச் சிதறிய அந்த விநாயகர் கோவிலும், படுகொலைகள் நிகழ்ந்த மசூதியும் நான் வசிக்கும் அதே தெருவில் தானுள்ளது. பார்த்தேன்... அத்தனைப் படுகொலைகளையும் நான் கண்கூடாகப் பார்த்தேன். குழந்தைகள், பெரியவர்கள், இளம்பெண்கள் யாரையும் மதப்பேயின் கோர நாக்கு விட்டுவைக்கவில்லை. அத்தனை பேரின் உயிரையும் அது வெறி கொண்டு சுவைத்திருக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடவுளென்று ஒருவர் மட்டுமில்லாதிருந்தால் நமக்கு எந்தப் பிரச்சினையுமே வந்திருக்காது. எப்போது கடவுளை மனிதன் கண்டுபிடித்தானோ அப்போதே மதத்தின் கண்டுபிடிப்பும் நிகழ்ந்துவிட்டது. மதம் மனிதனுக்குள் பிரிவினையை உண்டு பண்ணியது. இப்போது நான் சொன்னதை நீ நிறைய சினிமாவில் கேட்டிருக்கலாம், ஆனாலும் என்ன செய்வது. அதையே மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. உனக்கொரு விஷயம் தெரியுமா? கோவில் வெடித்துச் சிதறிய போது அதற்குள் கடவுள் சிலை இல்லை. சுத்தப்படுத்த வெளியே எடுத்துப் போயிருக்கிறார்கள். பார்... இதற்கெல்லாம் காரணமான கடவுள் மட்டும் சரியான சமயத்தில் Escape. என்னைப் பொறுத்தவரை கடவுள் ஒரு Selfish Guy அவ்வளவுதான். அதற்கு நான் சொன்ன சம்பவமே சாட்சி. கடந்த ஒருமாதமாக என்னால் சாப்பிட முடியவில்லை; உறங்க முடியவில்லை. கண்மூடினால் தலை சிதறுண்டு போன மனித உடல்கள் நடனமாடுகின்றன. சில நேரங்களில் நானே ஒரு சடலமாய்ப் போய்விட்டதாக உணர்கிறேன். பயம், பதட்டம், குழப்பம் இவற்றுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான். மரணம்தான்... மரணம் மட்டும் தான் எனக்கு முக்தி தரும்... காயத்ரி.

இந்த உலகில் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத இன்னொரு விஷயம் பெண்கள் மீது திணிக்கப்படுகிற வன்முறை. அய்யோ... ஒரு நாளில் தான் எத்தனை கற்பழிப்புகள். கொஞ்சம்கூடக் குற்றஉணர்வு இல்லாமல் ஓர் உடலைக் கோரமாகச் சிதைப்பதில் இவர்களுக்குக் கிடைப்பது என்ன? போகட்டும்... குடும்பத்திலாவது பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? இல்லை. திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பாட்டியாகி சாகும்வரை பெண் என்பவள் அடிமையாகவே இருக்க வேண்டும். அவளுக்கு வெளியுலகம் தெரியக்கூடாது. கணவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் அடிமையாக - ஒரு நாயாக இருக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலும் இவர்கள் திருந்துவதாக இல்லை. இன்றைக்கும் பெண் அடிமைதான். What a fucking concept?

நான் வெறுக்கிறேன் காயத்ரி.

பெண்களை மதிக்காத... படுகொலைகள் நிகழ்கிற இந்த உலகை வெறுக்கிறேன். ஏன்... என்னை - கடவுளை வெறுக்கிறேன். நான் சாகப் போகிறேன். எனக்காக வருந்தாதே...

இப்படிக்கு,

உன் இனிய டேவிட்.

2.

அன்புள்ள டேவிட்,

காயத்ரி எழுதிக் கொள்வது.

நானும் சாக ஆசைப்படுகிறேன் டேவிட். உனக்காவது சுற்றிலுமுள்ள உலகைப் பிடிக்கவில்லை. எனக்கு என்னையே பிடிக்கவில்லை. போதும் என்கிற மனத்தை நான் தொலைத்துவிட்டேன். யாருடனும் ஒத்துப்போக என்னால் முடியவில்லை. காலையில் நேரத்தில் எழுப்பி காலேஜ் போகச் சொல்லும் அம்மாவிடம்... சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கட்டளையிடும் அப்பாவிடம்... என்னை டீவியே பார்க்க விடாமல் மெகா சீரியலே கதியென்று கிடக்கும் உமாவிடம்... யாரிடமும் என் மனம் ஒன்ற மாட்டேனென்கிறது. காலேஜில் நான் படிப்பது Visual Communication என்று உனக்குத் தெரியுமல்லவா... அங்கே நடக்கும் அநியாயம் சொல்லி மாளாது. சினிமாவைக் காதலிப்பவர்கள் என்று அங்கு யாருமில்லை. எல்லோருக்கும் ஒரு டிகிரி முடிக்க வேண்டும்.. அவ்வளவுதான். நான் அப்படியல்ல. எனக்கு சினிமா என்றால் உயிர். ஒரு பெண் இயக்குநராக வரவேண்டுமென்பதுதான் என் ஆசையென்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா?!.. என் மூன்று வருடம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கிறது டேவிட். எனக்கு பைத்தியம் பிடிக்கிறது.

உனக்கொரு விஷயம் தெரியுமா? Ingmer bergmen இறந்ததற்கு என் காலேஜில் ஒரு சின்ன இரங்கல் போஸ்டர் கூட ஒட்டவில்லை. பெர்க்மேன் யாரென்று தெரிந்தால்தானே ஒட்டுவார்கள். ராஸ்கல்ஸ்.. அவர் எவ்வளவு பெரிய இயக்குனர் தெரியுமா டேவிட்?!... ஸ்வீடன் சினிமாவுக்கே ஒரு தனி அடையாளம் தந்தவர். Silence, Fannys Alexander, Seventh Seal போன்ற காவியங்களை எடுத்தவர். அவரை மதிக்கத் தெரியாத இந்தக் காலேஜுக்கெல்லாம் விஷ§வல் கம்யூனிகேஷன் ஒரு கேடா? இந்தப் பொய் மனிதர்களைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டுவருகிறது. நான் என்னையே வெறுக்க இன்னொரு காரணம் காமத்தின் மீதான தீவிர ஆசை. எத்தனையோ புத்தகங்கள் வாசிக்க இருந்தும் காமம் சம்பந்தப்பட்ட புத்தகமென்றால் உடனே பல்லிளித்துக் கொண்டுபோய் வாங்கி வாசிக்கிறேன். இணைய தளத்தில் எத்தனையோ நல்ல வலைத்தளங்களிருந்து WorldSex.com-ல்தான் என் மனம் ஒன்றுகிறது.

ஆணுடலை நிர்வாணமாகப் பார்க்கும்போது கிடைக்கிற திருப்தி கோயிலில் கடவுளைப் பார்க்கும்போது கிடைக்க மாட்டேன் என்கிறது. எதிலும் காமத்தைத் தேடுகிற பெட்டைநாய் நான். என் மீதே எனக்கு வெறுப்பு பீறிடுகிறது. என்னுடலை நான் வெறுக்கிறேன். இத்தனை சின்ன மார்புகளைப் பார்க்கையில் எந்த ஒரு ஆணுக்கு கவர்ச்சி தோன்றும்?! ஷிட்... என்னை ஏன் கடவுள் பேராசை பிடித்தவளாக... காமப்பேயாக எதனோடும் ஒன்ற முடியாதவளாக.. ஒட்டடைக் குச்சியாக படைத்தான். உனக்குத் தெரியுமா இப்போதெல்லாம் ரயிலின் சத்தம் கேட்கும் போதெல்லாம் தண்டவாளத்தில் என்மீது ரயில் பயணிப்பதாக நினைத்துக் கொள்கிறேன். அதில் ஒரு திருப்தி. உயரமான பில்டிங்கைப் பார்க்கும்போதெல்லாம் அதன்மீது ஏறி நின்று சிரித்துக் கொண்டே குதிக்க வேண்டும் போலிருக்கிறது. ஷிட்... கடவுள் என்பவன் படைத்ததால் தானே நான் இத்தனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நானும் உன்னைப் போலவே கடவுளை வெறுக்கிறேன். ஏதாவதொரு நேரம் சொல்... ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம்!

இப்படிக்கு,

பிரியங்களுடன்,

காயத்ரி.

3.

அன்புள்ள

காயத்ரிக்கும், டேவிட்டுக்கும்

கடவுள் எழுதிக் கொள்வது.

என்மீது உங்களிருவருக்கும் உள்ள கோபத்தை கொட்டியிருந்தீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் விமர்சனத்தை நான் மதிக்கிறேன். To escape from Criticism do nothing, Say nothing என்பார்கள். அதை நான் ஆமோதிக்கிறேன். ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உலகைப் படைத்த பிறகு நான் என் இருப்பை ரகசியமாக வைத்துக் கொள்ளவே ஆசைப்பட்டேன். ஆனால் நீங்கள் முதலில் என்னை சூரிய வடிவில் வணங்கினீர்கள். பிறகு நெருப்பு என்றீர்கள். பிறகு மனித உருவையே எனக்கும் தந்தீர்கள். பிறகுதான் பிரச்சினை முளைத்தது... மதம் என்ற பெயரில்..! அதற்கு நான் பொறுப்பல்ல. பிறகு ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு கடவுளை நீங்கள் உருவாக்கினீர்கள்; பிரிவினையைக் கொண்டுவந்தீர்கள். அடித்துக் கொண்டீர்கள், மாண்டுபோனீர்கள். Fuck... இதற்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும். அப்பா, அம்மாவால் உங்களைப் பெற்றெடுக்க முடியும்.. வளர்க்க முடியும்... அதன்பின் உங்கள் பாதையை நீங்கள்தான் தீர்மானிக்க முடியும். அவர்கள் உங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறார்களா என்ன?!...

நானே ஓராள்.. நீங்கள் எத்தனை கோடிபேர். நானும், என் சொற்ப வேலையாட்களும் மொத்த உலகையும் கட்டிக்காக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா..! உலகில் நடக்கும் எல்லாவற்றுக்கும் என்மீது பழி போடுவதுதான் என்னை வருத்துகிறது. மதக்கலவரங்களை விடவும், யுத்தங்களை விடவும் என்னைக் காயப்படுத்துவது ஒன்றுதான். தற்கொலைகள்... என் மடிக்கணினியிலிருக்கும் கணக்குப்படி போன வருடம் மட்டும் சுமார் எண்பத்து ஐந்து கோடி பேர் உலகில் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது என்னை அவமானப்படுத்தும் செயல். உங்கள் மீதிருந்த நம்பிக்கையில் தான் உங்கள் உயிரை உங்களிடம் தந்தேன். நீங்களோ அதை துச்சமாக எடுத்தெறிந்து விடுகிறீர்கள்... Oh...what an insult போதும்... இது போதும்... இன்னும் தற்கொலைகளைத் தாங்க எனக்கு சக்தியில்லை. நீங்கள் சாகவேண்டாம். உங்களைப் படைத்த நானே என்னுயிரை மாய்த்து விடுகிறேன். இந்தக் கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இறந்திருப்பேன்.

இத்துடன் விடை பெறுகிறேன்.

நானாக ஏதாவது தவறு தெரியாது செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்... உங்களைப் படைத்ததைத் தவிர..!

பிரியங்களுடன்,

கடவுள் 

Pin It