மரண வீட்டு வாசலில் தனித்து நிற்பது உள்ளும் புறமும் பாறை உருளும் உணர்வு.

"கதவை தட்டலாமா... மெல்ல கூப்பிடலாமா" கண்கள் பிசைய நின்றேன். காகம் உட்கார கனவு கறுப்பானது போல... திடும்மென திறந்த கதவில் தேன்மொழியின் அம்மா.

"யாரோ நிக்கறாப்ல இருந்துச்சு... அதான்..." சட்டென்று கண்கள் கலங்க..." வாங்க" என்பது போல தலை அசைத்துக் கொண்டே..." விஜய் தம்பி வந்திருக்கு..." என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டே உள் அறைக்குள் சென்றார்.

தேன்மொழியின் அப்பா கண்கள் நிரம்ப என்னை பார்த்தார். டெத் நிகழ்ந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை எனக்கு. தடுமாறினேன்.

அவர் சோபாவின் கைப்பிடியை பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

"இல்ல... காலையில தான் வயநாட்டுலருந்து வந்தேன்... பாட்டி சொல்லுச்சு... அ... அதான்..."

என்னைப் பார்த்தார். அதே நேரம் பொதுவாக சூனியத்தை வெறித்துக் கொண்டே..." டீ கொண்டாம்மா..." என்று கிச்சனைப் பார்த்து குரல் கொடுத்தார்.

"என்னாச்சு... எப்படி...?" என் தயக்கம் கேள்விகளானது.

தேன்மொழியின் நாட்குறிப்பில் 13ம் பக்கத்தில் இருந்து ஆரம்பித்தது போல "என்னனு சொல்றது தம்பி.. எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்.. ட்ரைன்ல வரும் போது.. கதவு பக்கம் நிக்காத கதவு பக்கம் நிக்காதன்னு.. எங்க கேட்டா... ட்ரேக் மாறும் போது ஸ்லிப் ஆகி வெளிய போய்ட்டா போல... எதுத்தாப்ல வந்த ட்ரெயின்..." வாய் பொத்திக் கொண்டார். நானும் தலை குனிந்து கொண்டேன். பக்கத்து வீட்டு மரணங்களுக்கு அவ்வளவு தான் நாம் செய்ய முடியும் போல.

இரவுக்கு சாவு வாசம் அதிகம். என் வீட்டில் இருந்து தெரியும் தேன்மொழியின் வீடு தனித்து தெரிந்தது. வீட்டின் நிறமே மாறியது போல ஒரு பிரம்மை. நான் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் அவள் அறையின் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி பார்க்க வேண்டும் போல இருந்தது. இரவுக்கு தலை விரித்தாடும் கற்பனை அதிகம். எப்போது தூங்கினேன் எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. தூங்கினேனா என்று கூட தெரியவில்லை.

விடிந்தும்... விடியாததுமாக அனிச்சை செயலைப் போல கண்கள் அவளின் ஜன்னலுக்கு தான் போனது. கண்கள் மயமயவென இருக்க... ஜன்னலோரம் தேன்மொழி அமர்ந்து என்னைப் பார்த்து கொண்டிருக்கும் காட்சி ஒரு புகை வடிவில் கண்ணில் பட்டது. திக்கென்று எழுந்து ஜன்னலோரம் ஓடி சென்று மீண்டும் கண்கள் குவித்தேன். அவளே தான். பார்த்துக் கொண்டே இருந்தேன்.

பொதுவாக இறந்து 10, 15 நாட்களுக்கு இறந்தவர்கள் தங்கள் வீட்டையே
சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது நிஜம் தானா....? உள்ளுக்குள் கடிகார சத்தம் அதிவேகமாய் கேட்டது.

கண்களைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அங்கே அவள் இல்லை. என் கால்கள் தன்னிச்சையாக நடுங்கிக் கொண்டிருந்தன.
சிமிட்ட மறந்த கண்களில் பார்வை இருக்கிறதா என்று சந்தேகம் கூட வந்தது. எது நிஜம் எது மாயை என்ற குழப்பம் என் அறையில் நானாய் சுற்றியது.

சட்டென மூளையில் நேற்றைய இரு கணம் வந்து போன வெளிச்சத்தில்... தேன்மொழியின் வீட்டுக்குள் கொலுசு சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சே... அது என்ன...? ஒருவேளை அவுங்கம்மாவோட கொலுசு சத்தமா இருக்குமோ... இல்ல... அது கனத்த கொலுசு சத்தம்... அது தேன்மொழியோடதுதான்.. நல்லா தெரியுமே... எப்படி தெரியும்... தெரியும்.

என்ன இது குழப்பம்...

எனக்கு காய்ச்சல் வந்தது போல இருந்தது. உள்ளே எதுவோ அழுத்துகிறது. உள்ளே எதுவோ துரத்துகிறது. எனக்கு அந்த கால்கொலுசின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
பாட்டியிடம் கேட்டேன்.

"நிஜமாவே அவ ட்ரைன்ல இருந்து தவறி விழுந்துதான் செத்தாளா பாட்டி...?"

"ஏன் சும்மா செத்தவள பத்தியே கேட்டுட்டுருக்க.. அப்டிதான் சொல்றாங்க. போலிஸ்லாம் கூட வந்தாங்க.. மூட்டைல தான் கொண்டு வந்தாங்க..." பாட்டி மாத்திரையை கொடுத்து தண்ணீர் டம்ளரையும் நீட்டியது.

மாயம் சுழன்ற மனதுக்குள் மறுபடியும் மறுபடியும் கொலுசொலி ஏதோ செய்தி சொல்லிக் கொண்டேயிருந்தது.
உள்ளுணர்வு போ போ என்று தள்ளிக் கொண்டே இருக்க..அன்று மாலை இன்னும் அதிக பயத்தோடு மீண்டும் அவள் வீட்டு வாசலில் நின்றேன்.

"வாங்க தம்பி... நேத்து சரியா பேச முடியல... உங்க வேலைல்லாம் எப்பிடி போகுது..." தேன்மொழியின் அப்பா பேச பேசவே அடக்கி வைத்த அதே கொலுசு சத்தம் தூரத்தில் கேட்பது போல கிட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.

"சார்.. தேன்மொழிக்கு ஏதும் ப்ரோப்லம் இருந்துச்சுங்களா..." ஒரு மாதிரி கேட்டே விட்டேன். என் காது சத்தம் வந்த உள்ளறையில் ஒரு பாம்பின் தீவிரத்தோடு ஊர்ந்தது.

நொடியில் கண்கள் மாறினார். அவர் காது முயல் காது போல என் பக்கம் ஒரு கணம் திரும்பி இயல்பானது.

"இல்லை..." என்றவர் யோசித்துக் கொண்டே... அழுத்தமாக "இல்லையே... ஏன் கேக்கறீங்க...!" என்றார். அவள் முகம் என்னை யோசித்தது.

என் கண்கள் மாலை போடாத அவள் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

"தம்பி...!" என்று சத்தத்தால் என்னை உலுக்கினார்.

"இல்ல சார்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... தேன்மொழி ஆவி உங்க வீட்டுல இருக்குதுன்னு எனக்கு தோணுது..." என் கண்கள் வீட்டை சுற்றி சுற்றி மேய்ந்தது.

குறிப்பிட முடியாத புள்ளியில் அவர் என்னையே பார்த்தார். அந்த அறையில் புதிதாக ஒரு மௌனம் முளைத்து எங்களை சுற்றி நின்றது போல இருந்தது.

"நம்பி தான் சார் ஆகணும். இன்னைக்கு காலைல நான் உங்க வீட்டுக்குள்ள உங்க பொண்ணு நடமாடறத ஜன்னல் வழியா பார்த்தேன் சார்...." என்றேன். எனக்கு நா வறண்டது. அவர் கண்களில் யோசனை என்னை அங்கிருந்து கிளம்ப சொன்னது.
ஒரு வாரம் ஆகியும் நான் சரியாக தூங்கவில்லை. அந்த வீட்டில் சராசரி நடவடிக்கைகள் இயல்பாய் இருப்பதாக தெரியவில்லை. எதுவோ மறைந்திருப்பது போன்ற தோற்ற மயக்கம் என்னை ஆட் கொண்டிருந்தது.
நட்ட மரம் வளர்ந்து முறிந்து விட்டதா... முறிந்து விட வெட்டப்பட்டதா... ஏதேதோ உளறல் என்னுள்.

"ஏன் செத்த பொண்ணு போட்டோவுக்கு மாலை போடாமல் இருக்கிறார்கள்...?" சிறு மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு கதவைத் தட்டினேன்.

படக்கென்று கதவைத் திறந்தார் தேன்மொழியின் அப்பா. ஆனால் நின்று யோசித்து திறந்தது போல இருந்தது.

"வாங்க தம்பி" என்று ஜாடை செய்தார்.

மாலையைக் கொடுத்தேன். புரிந்து கொண்டார். தலை தொங்கிய என் முகத்தை பார்க்காமலே... மாலையை தேன்மொழியின் புகைப்படத்துக்கு சூட்டினார்.

"மாலை போட்ட அவ போட்டோவை பார்த்து பார்த்து அவுங்கம்மா அழறா தம்பி.. அதான் போடறது இல்ல..." என்றார். அவர் மொழியில்... தடுமாற்றம் இருந்தது. தனக்கே சொல்லிக் கொள்ளும் சமாதானம் இருந்தது. சரி என்பது போல வெளியேறினான்.

இம்முறையும் அந்த கொலுசு சத்தம் துல்லியமாக கேட்டது. நான் உள்ளே நுழைந்ததுமே அங்கொரு அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்தேன். சற்று முன்பு வரை அங்கே வேறென்னமோ நடந்து கொண்டிருந்தது. நான் சென்றதும் அது கலைக்கப்பட்டு ஒத்திகை செய்யப்பட்ட வீடாகி விட்டது. தேன்மொழியை சுற்றி ஏதோ மர்மம் இருப்பதை மனம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இருந்தது. நட்ட மரம் வளர்ந்து முறிந்து விட்டதா... முறிந்து விட வெட்டப்பட்டதா... அதே உளறல் என்னுள்.

தேன்மொழியின் அப்பா வெளியே சென்ற நேரம் பார்த்து கதவைத் தட்டினேன். அவள் அம்மா திறந்தார்.

"தேன்மொழிகிட்ட என் டிக்சனரி குடுத்திருந்தேன்... அது கொஞ்சம் வேணும்.. உள்ள இருக்கானு பாக்கறீங்களா... கிடைச்சா நல்லாருக்கும்..." என்றேன். தயக்கம் எனது உடல் மொழியில் இயல்பாகவே சேர்ந்திருந்தது.

'ம்ம்' என்ற தளர்ந்த உடலில் உள்ளே சென்ற அம்மாவை வேகமாய் ஒரு எலி கண்ட பூனையாய் பின் தொடர்ந்தேன்.

தேன்மொழி அறைக்குள் இயல்பாய் செல்வது போன்ற பாவனையில்... அந்தம்மாவின் பின்னாலேயே நானும் சென்று விட்டேன்.

நான் பின்னால் வந்தததை அறியாத அந்தம்மா.. ஒரு கட்டத்துக்கு பின்... ஏதோ உள்ளுணர்வில் திரும்பி பார்த்து... மிரண்டு... பயந்து..."எதுக்கு உள்ள வந்தீங்க... சொன்னா கேளுங்க.. வெளிய போங்க... தம்பி.. வெளிய போங்கன்னு சொல்றேன்ல" என்று கத்த ஆரம்பித்தது.

அதற்குள் என் கண்கள் கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த சந்துக்குள் குறுகி அமர்ந்திருக்கும் தேன்மொழியை நன்றாகவே பார்த்து விட்டன. அடுத்த நொடி அந்த அறையில் மின்விசிறியின் வேகம் பயமுறுத்துவதாக மாறியது. சுவற்றிலெல்லாம் பாம்புகள் வளைந்து நெளிந்து ஊர்ந்தது போன்ற காட்சிப் பிழைகள் நொடியில் வந்து வந்து போயின.

அடுத்த கணம் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தேன்.

முகத்தில் நீர் தெளித்து எழுப்புகையில் என் உடல் பயங்கரமாக நடுங்கியது.

தேன் மொழியின் அப்பா என்னை கைத்தாங்கலாக எழுப்பி நாற்காலியில் அமர வைத்தார். எதிரே அவளின் அம்மாவும் அம்மாவுக்கு பின்னால்
தேன்மொழியும் நின்றிருந்தார்கள்.

"என்னாச்சு... என்ன நடக்குது..." என்று நடுங்கும் உடலோடு... நான் பயந்து உளற..." தம்பி… பொறுமையா கேளுங்க....எல்லாம் சொல்றோம்" என்றவர்
எல்லாம் சொன்னார்.

"செத்து காரியம் பண்ணிட்டு வீட்டுக்கு வர்றோம்... இதே மாதிரி தான்... வீட்டுக்குள்ள அவ கட்டில்ல உக்காந்துட்டுருக்கா... மிரண்டு பயந்து... நடுங்கி... தடுமாறி.. ஒரு வழியா பேச்சு குடுத்தா... அவ ஆன்மா தான்னு புரிஞ்சிடுச்சு. சரி செத்தாலும் கூடவே இருக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.. அத ஏன் வேண்டான்னு சொல்லனும்னு அவள இங்கயே மறைச்சிட்டோம்..."

இடையே பெருமூச்சு.

"அவளும் நம்மள மாதிரி தான்... என்ன ஒன்னு... சாப்பிட முடியாது... தூக்கம் கிடையாது... ராத்திரியில கொஞ்சம் உலாத்திட்டே இருப்பா... அப்போ தான் நீங்க பார்த்துருக்கீங்க... அவ கொலுசொலி தான் அன்னைக்கு உங்கள டிஸ்டப் பண்ணிருச்சு. இவ்ளோ சின்ன வயசுல பெத்த புள்ளைய தூக்கி குடுத்துட்டோம்... இப்டி பாத்துக்கவாவது முடியுதேன்னு தான்... இந்த விஷயத்தை ரகசியமாய் வெச்சிருக்கோம். வெளிய சொல்லிட வேண்டாம் தம்பி... பேய் பூதும்னு டிக் டாக்ல போட்ருவானுங்க..."- இருவரும் அழுதார்கள்.

தேன்மொழியைப் பார்த்தேன். பிணமாகியும் நிற்பது நடப்பது எல்லாம் கால சாபம். அவள் உடலில்... பிண சுமை அதிகமாய் இருக்க வேண்டும். பள்ளிக்கால தோழி தான். அவளை அப்படி பார்க்க கஷ்டமாக
இருந்தது. அவள் கண்கள் சாம்பல் பூத்திருந்தது. வாய் தைக்கப்பட்டிருந்தது. பேய் படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியேறுவது போல அவள் வீட்டை விட்டு வெளியேறினேன். விரல்களில் அவளுடைய இருபது முகங்கள். காலை பார்க்காமல் நடந்தேன்.

"என்ன விஜி தேன்மொழி வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கு" என்றபடியே பாட்டி வாசலில் இருந்து வேகமாய் உள்ளே வந்தது.

பாட்டியை உற்றுப் பார்த்து விட்டு ஜன்னல் வழியே தேன்மொழி வீட்டை எட்டிப் பார்த்து விட்டு... "அப்புறம் அவுங்க பண்ணுன காரியத்துக்கு போலீஸ் தான் வரும்.." என்றேன்.. நிதானமாக. சற்று முன் போலிஸிடம் பேசிய அலைபேசி சூடாக இருந்தது.

"என்னடா லூசு மாதிரி உளறிட்டு இருக்க" என்ற பாட்டியின் கண்களில் ஒரு கணம் திகில் அடித்தது.

" பாட்டி... தேன்மொழிய... காதல் விவகாரத்துல ரயில்ல இருந்து தள்ளி கொலை செஞ்சுருக்காங்க. பண்ணுனது வேற யாரும் இல்ல... அவுங்க அப்பா அம்மா தான். ஆணவ கொலை. ஆனா அவ இப்டி வீட்டுக்குள்ள ஆவியா வருவான்னு அவுங்க எதிர்பாக்கல. தவறி விழுந்து செத்தது மாதிரியே அவகிட்டையும் அழுது புலம்பி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க."

"என்ன விஜி என்னென்னமோ சொல்ற....?" பாட்டி ஜன்னல் வழியே தேன்மொழியின் வீட்டையே வெறித்து பார்த்தது.

"இதுல இன்னொரு பயங்கரம் என்னனா... அவ அங்க தனியா இல்ல... யாரை காதலிச்சாலோ... அவனையும் தான் கொன்னுருக்காங்க. அவனும் அவ கூடயே தான் இருக்கான். இது அவங்களுக்கு தெரியாது... எந்த வீட்டுக்கு அவன் மருமகனான வரக்கூடாதுன்னு கொன்னாங்களோ அதே வீட்டுல அவ அவன் கூட வாழ்ந்துட்டு இருக்கா..."

மயங்குவதற்கு முன் சில நொடிகள்... தேன்மொழியின் தோளைப் பற்றிக் கொண்டு நின்றிருந்த அவளின் காதலனின் உருவம் தெரிந்த காட்சி ஒரு கணம் கண் முன்னால் எனக்கு வந்து போனது.

பாட்டி கண்கள் விரிய காது நடுங்க தேன்மொழி வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தது.

அன்றிரவு... தேன்மொழி வீட்டு ஜன்னலில் இருந்து தேன்மொழியும் அவளின் காதலனும் இறுக அணைத்துக் கொண்டு என்னையே பார்த்தார்கள். நானும் அவர்களை பார்த்தேன். அவர்களின் பார்வையின் அர்த்தம் புரிபடவில்லை. அவர்கள் கூர்ந்து என்னை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். சலனமற்ற பார்வை.

ஒருவேளை அவர்களின் காதலை மொட்டைக் கடிதம் போட்டு அவளின் அப்பாவிடம் நான் தான் போட்டுக் கொடுத்தேன் என்று தெரிந்திருக்குமா..!

இப்போது அவர்கள் என்னறையில் எனக்கு பின்னால் நிற்பது போன்று இருக்கிறது.....!

- கவிஜி

Pin It