ஓரிரு நாட்கள் கழிந்தும்
ஓய்ந்தபாடில்லை
வண்ண வண்ணமாய் கேட்கும்
ஒப்பாரி சத்தம்
யாரிடம் நியாயம் கேட்பதெனத் தெரியாமல்
அகதிகளாய் நகர்ந்தலையும் அப்பாவிசனங்கள்
படுத்தெழ ஒட்டுக்குடிசையின்றி
தீக்கிரையாக்கிய சாதியவன்மம்
கர்ப்பிணிப் பெண்களையும் கறவை மாடுகளையும்
விரட்டிவிரட்டி தாக்கிய அதிகாரத்தின் உச்சம்
சாதிவிட்டு சாதி மாறி கரம்பிடித்த
செவலையனின் துணிச்சலே
சன்னசன்னமாய் உருக்குலையச் செய்தது
ஆதிக்கம் தலைக்கேறியவர்கள்
சேரியை மட்டுமா சேதப்படுத்தினார்கள்
ஆணவக்கொலைக்கு ஆட்களைத் திரட்டினார்கள்
செவலையனை
முன்னும் பின்னுமாய் சுற்றிவளைத்து
தலைவேறு உடல்வேறென
கண்டந்துண்டமாய் வெட்டியெறிந்தார்கள்
சாதியைத் தக்கவைக்க
சந்ததிகளை துணிந்து காவுகொடுக்கிறார்கள்;
காய்ந்த சருகாய் வீழ்ந்து கிடக்கிறது
சமத்துவம்!

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It