இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ காட்டிக்கொள்ளவில்லை. வருத்தமும் சந்தோஷமுமற்ற ஏதோவொரு பெருவெளியை நோக்கி, தான் பயணப்படுவதாக உணர்கிறது.
இன்னும் விடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இருட்டில் நுழைந்த அது, எங்கோ மாயமாகிவிட்ட பிரமையிலிருந்து விடுபட, கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது, எனக்கு.
நெடுநேரமாய் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்ததில் உடம்பு நோகிறது. புரண்டு மல்லாக்க முயற்சிக்கிறேன். ஒருவழியாய் உடம்பு அசைந்து மல்லாக்க... ஏதோவொன்று என்னிடமிருந்து விடுபடுகிறது. ஹா... நான் மெளத்தாகிப் போனேன்!
மய்யமாகிக்கிடக்கும் என்னை, இன்னும் யாரும் பார்க்கவில்லை. அண்ணன் சுபுஹ¥ தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் கிளம்பியதும் கதவைப் பூட்டிக் கொள்வதற்கு ஏதுவாக, பாபி அரைத்தூக்கத்தில் விழித்துக்கொண்டு கிடக்கிறாள். பின் வராண்டாவில் வேலைக்காரப் பொன்னம்மா பாத்திரங்களைப் போட்டு உருட்ட ஆரம்பித்திருக்கிறாள். சுபுஹ¥த் தொழுகைக்கான பாங்குச்சத்தம் காற்றில் அலையாடி வருகிறது.
கடந்த ஒரு மாதமாகவே எனக்கு உடம்பு சா¢யில்லை. மருந்து மாத்திரை தந்தார்கள். பெயருக்கு வாங்கித் தரப்பட்டவை, அவை. உடல் நிலைப்பற்றிய பேச்சு இங்கே வேண்டாம். பேசுவதற்கு, வேறு விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
முதலில் அம்மாவைப் பற்றிய நினைவை இங்கே பகிர்ந்தாக வேண்டும். என் புறத் தோற்றம் அம்மாவை மனமுடைய வைத்து, என் நினைவாகவே அவள் மெளத்தாகி விட்டதாகச் சொல்வார்கள்.
அம்மாவுக்கு மூன்று குழந்தைகள். ஒரு பெண். இரண்டு ஆண்கள். கடைசிப்பையன், நான். எங்கள் உறவில் வேறு எந்தக் குடும்பமும் மூன்று குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டதாகச் சரித்திரம் இல்லை என்பது எனக்குத் தொ¢யும். ஒவ்வொரு வீட்டிலும் அரை டஜன் என்பது மிகக்குறைந்த கணக்கு. நான் பிறந்த பின்பு அடுத்தக் குழந்தையே வேண்டாம் என்று அம்மா முடிவெடுத்துவிட்டாளாம்.
முதல் இரண்டு குழந்தைகளும் அப்படியே அம்மாவின் ஜாடையாக அழகுதான். கடைசியாகப் பிறந்த நான் மட்டும்... 'நம் மூதாதையா¢ன் முக வடிவில்!' பொருட் காட்சியில் குழந்தைகள் அழுது அடம்பிடித்து வாங்கி மாட்டிக்கொள்ளுமே பிளாஸ்டிக் குரங்கு முகமூடி. அது அப்படியே எனக்கு, உயிர் வடிவில்!
கண்ணாடியில் என் முகம் பார்த்து, பல நாட்கள் அழுதிருக்கிறேன். எனக்கே இப்படியென்றால், என்னைப் பெற்றவளுக்கு எப்படி இருந்திருக்கும்?
என்னை வெளியில் எங்கும் அனுப்பமாட்டாள். வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்தாள். ஆப்பா பெண் பிள்ளைதானே? அவளை, 'அங்கே நிக்காதே... இங்கே நிக்காதே' என்று அம்மா சொன்னதே இல்லை. வெளியிலெல்லாம் அனுப்பிவைப்பாள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் என் வயதையொத்தவர்களை நான் பொறாமையுடன் பார்ப்பேன். அவர்களைப்போல் வெளியே போய் விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை. ஆனால் என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப ஏனோ அம்மாவுக்கு சம்மதமில்லை. பாவாவும் அம்மாவின் பேச்சுக்கு எப்படியோ கட்டுப்பட்டுவிட்டார். வீட்டிலேயே எழுதப்படிக்கச் சொல்லித் தந்தாள். உலகம் எனக்கு சன்னல், வாசல், மொட்டை மாடி எனக் கூண்டாகப்பட்டது.
ஆனைக்குளம் முல்லையாற்றுப் பாசனத்தில் அம்மாவுக்கு அவளின் பங்காய் முப்பது ஏக்கர் நஞ்சை. மோட்டார் பம்ப்செட் போட்டதில்லை. தண்ணீரை காலால் எத்தியெத்தி சேந்தலாம். பச்சை மரகதப் போர்வையாய் நிலங்கள். கொழிப்பு. அடுத்தாற்போல் தென்னந் தோப்புகள். அம்மாவின் வசதியும் பாவாவின் வருமானமுமாக ராஜ வாழ்க்கை!
பாவாவுக்கு வேட்டை பிடிக்கும். துப்பாக்கியைத் தூக்கிவிடுவார். அப்படியொரு நாள் போனபோது, தவறுதலாக ஒரு குரங்கைச் சுட்டுவிட்டதால், அதன் பின்பு பிறந்த நான் குரங்குபோல ஜனித்தேன் என்று ஒரு கதை உண்டு!
அம்மா அசந்த நேரம், வீட்டுக்கு வெளியே ஓடிவருவேன். எந்த வேலையாக இருந் தாலும், அவள் கண் என் மீதுதான் இருக்கும். தூங்கும்போது கூட அவள் பார்வையில் படும்படிதான் தூங்கப் பண்ணுவாள். அதனால் வெளிவாசலைத் தாண்டும் முன்பே பிடிபட்டுவிடுவேன்.
அன்று அப்படித்தான். அம்மா பரண்மேல் சிரத்தையாய் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். நான் வெளியே ஓடி வந்துவிட்டேன்.
வெளிவாசலை அடுத்த பரந்த தெரு, எனக்கு சந்தோஷமாக இருந்தது. புதிய உலகம் காணும் பிரமிப்பு. காற்று எப்படி வந்து மோதியது தொ¢யுமா? தரையில் கால்களை ஊன்றியதும் சுட்டது. மணல் நெருநெருத்தது. அது புதிய சுகம். நடக்க நடக்க இதமாக இருந்தது. மெல்ல ஓடிப் பார்த்தேன். அதுகூட சுகம்தான்!
தெருமுனையில் என்னை விட நாலைந்து வயது மூத்த பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் அவர்களின் விளையாட்டு திசை மாறியது.
"ஹேய்... மனுஷக் கொரங்குடா... ஹேய்... ஹோய்... ச்சூ!" என்று என்னைச் சீண்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் காட்டிய சந்தோஷமும் எனக்குப் பிடித்திருந்தது. அவர்களுடன் சேர்ந்து நானும் கைக்கொட்டிச் சி¡¢த்தேன். புதிய சுழலை அனுபவிக்கத்தானே ஆசைப்பட்டேன். ஆனால் நேரமாக ஆக, அவர்களின் சீண்டலை என்னால் சமாளிக்க முடியவில்லை.
ஒரு சிறுவன், தன் உதடுகளை உள்பக்கமாய் இறுக்கி வாய்க்குள் காற்றை நிரப்பி, என்னைப்போலவே முகத்தை மாற்றிக்கொண்டு 'உர்...உர்..' என உறுமிக் காட்டினான். எனக்குள் ஏதோவொன்று புறப்பட்டது. நானும் 'உர்...உர்...'ரென்று உறுமினேன். என் உறுமல் அவர்களுக்கு வேடிக்கையானது. மேலும்மேலும் சீண்டினார்கள். என்னைச் சுற்றி மனித வட்டம். கும்மாளக் குரல்கள். கற்களை, கையில் கிடைத்தப் பொருட்களையெல்லாம் தூக்கி வீசினார்கள்.
அப்போதுதான் அம்மா வந்தாள். அவள் ஜத்தர் அணிந்திருக்கவில்லை. ஓடி வந்ததில் மேல்மூச்சு வாங்கினாள். செருப்பில்லாத கால்களை வெயில் தரையில் பாவ சிரமப்பட்டாள். அதையும் மீறி முகத்தில் கலவரமும் பதட்டமும் இருந்தது. சீண்டிக் கொண்டிருந்த கூட்டத்தை ஏதோ கெட்ட வார்த்தைச் சொல்லி விரட்டியடித்து என்னை மீட்டாள்.
'அம்மா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்?'
"வெளியப் போகக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல" என்று சொல்லிக்கொண்டே இழுத்துப் போனாள். தெருமுழுவதும் நான் 'தரதர'வென்று இழுபட்டபோது, எல்லா வீட்டுவாசல்களிலும் தலைகள். சில சன்னல்களில். சில மொட்டை மாடிகளிலும் தென்பட்டன. அம்மா தலைகுனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டு நடந்தாள். கண்ணீர் வழிந்தது.
அவள் வேகத்துக்கு நான் ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடும்போது, "வா.. வேகமா வா" என்று அடித்தொண்டையில் கத்தினாள். சில இடங்களில் தூக்கிக்கொள்ள முயற்சித்தாள். முடியவில்லை.
எங்களை வேடிக்கைப் பார்க்கும் எல்லோரையும் நான் வேடிக்கைப் பார்த்தேன். அவர்கள் உச்சுக் கொட்டினார்கள்.
முன் வாசலை எட்டிய நொடிகளில், 'தொம்...தொம்...'மென்று என் முதுகில் அடி விழுந்தது.
'அம்மா அடிப்பாளா?'
அடித்தவள், சிலநொடிகளில் என்னை நெஞ்சு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
தெருக்கூட்டம் வாசலில் நின்றுவிட்டது. ஏதேதோ பேச்சுச் சத்தம்.
இதுநாள்வரை, நான் இருப்பதை மறந்துபோயிருந்த உறவினர்கள், தெருக்காரர்களுக்கு நான் மறுபடியும் நினைவூட்டப்பட்டேன்.
தோப்புக்குப் போயிருந்த பாவா திரும்பிவந்ததும், அம்மாவைச் சமாதானப்படுத்தினார்.
அன்று மதியம் அவள் சாப்பிடவில்லை. அன்று இரவும் கூட. மனவேதனையில் பல வேளைகள் தொடர்ந்தாற்போல சாப்பிடாமல், யார் சொல்லியும் கேட்காமல் பட்டினிக் கிடந்ததில், மெளத்தாகிப்போனது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
அதன்பின் பாவா என்னைப் பார்த்துக் கொண்டார். அது கொஞ்சக் காலம்தான் நீடித்தது. பாவாவும் மெளத்தாகிவிட, அடுத்து அண்ணனிடம் இருக்கவேண்டியதாகிப் போனது.
*
இப்போது மணி ஏழு. காபியை கலந்து எடுத்துவந்த பாபி, மவுத்தாகிக் கிடக்கும் என்னருகே 'நங்'கென்று வைக்கிறாள். என்னை எழுப்பவோ, அதற்கான முயற்சியில் அவள் ஈடுபடவோ இல்லை. 'எந்தி¡¢ச்சுக் குடிக்கட்டும்' என்று முனங்கிக் கொண்டே போகிறாள்.
கரிசனமே இல்லாமல் ‘சுடல்னி’ போல் தொ¢யும் பாபி, நிக்காஹ் ஆகிவந்த புதிதில் மிகவும் நல்லவளாகவே தொ¢ந்தாள். என்மீது அவளுக்கு இரக்கம் இருந்தது. பாவம் என்றெல்லாம் பேசினாள். தின்பண்டம் தந்தாள். அது, புதியசூழலில் புது மனிதர்களிடம் காட்டும் தெளிவாய் ஆழம் அறியும் அக்கறை என்று சிலநாட்களில் தெரிந்து போனது.
ஒருநாள் அண்ணனிடம் என்னைக்காட்டி, "ஒங்க தம்பிய எங்கனயாவது விட்டுருங்களேன்!" என்றாள்.
இது, நான் எதிர்பாராதது!
இது, என் வீடு. அவள்தான் இங்கே வாழவந்தவள். ஒண்ட வந்த பிடாரி உள்ளூர் பிடாரியான என்னை விரட்டப் பார்த்தாள்.
என் முகம்தான் அப்படியே தவிர, இயல்பான என் நடவடிக்கைகளிலோ, செயல்பாட்டிலோ மாற்றம் எதுவுமிருக்காது. மூளை கொஞ்சம் மந்தம் என்று சொல்வார்கள். பேச்சு, அவ்வப்போது உதறும். கோபமோ ஆத்திரமோ வந்தால்... வீடு ரணகளப்பட்டுவிடும் என்று பேசுவார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. வீட்டுக்கு வந்திருந்து அவர்கள் கண்ணில் நான் பட்டுவிடும்பட்சத்தில், என்னைப் பார்க்கும் எதிர் நபர் மிரள்வது மட்டும் ரசிப்புக்குரியது.
அவ்வப்போது எனக்கு அம்மாவின் மீது கோபம் வரும். சூல் அறியும் என்பது என் விஷயத்தில் ஏன் அம்மாவுக்குப் பு¡¢படவில்லை. என் ஆசைகளையும் எண்ணங்களையும் அவள் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. மற்ற பிள்ளைகளைப்போல என்னையும் நடத்தியிருந்தால், இப்படியாகியிருக்குமா? குறையுள்ள பிள்ளையென்று பரிதாபம் காட்டி பொத்திப் பொத்தி வளர்த்ததே குறையாகிவிட்டதோ என்று மறுகுவேன்.
"நாம எதுக்கு இத வெச்சுக்கிட்டு அழணும்? ஏர்வாடில இல்லாட்டி, மும்பை போய்ட்ட ஒங்க தங்கச்சிக்கிட்ட விட்டுறலாம். நம்ம புள்ளைங்க இதப் பார்த்துட்டு அலறுதுக"
அண்ணன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தார். "பாவா மெளத்தானப்போ எங்கையப் புடிச்சு ஒப்படைச்சுட்டுப் போனாரு. எனக்கு இருக்குற அவ்வளவு உ¡¢மைகளும் அவனுக்கும் இருக்கு. ஏர்வாடி, மும்பை இல்ல. அவன நம்ம வீட்டவிட்டு எங்கனயும் விட முடியாது. சும்மாக்கெட!" என்றபோது, எனக்கு உயிர் வந்தது. உறவுப் பிணைப்பு. வார்த்தைகளில் பாவாவைப் பார்ப்பதுபோல உணர்ந்தேன். என்னையுமறியாமல், கண்ணீர் பொங்கியது.
அதைப் பார்த்த அண்ணன், "எதுக்கு அழற?" என்று கேட்டார். கேள்வி, மேலும் துக்கத்தை அதிகரித்தது.
"அதுக்கும் பொங்கிப் போடணும்ன்னு என் விதி. அல்லா அப்டி எழுதியிருக்கும்போது, நீங்க என்ன பண்ணுவீங்க?" பாபி வெடுக்கென்று முகத்தை வெட்டிக்கொண்டு, உள்ளே போய்விட்டாள்.
அன்று நெடுநேரம்வரை சாப்பாடு போடப்படவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது.
நான் சமையல் கட்டில் நுழைந்தேன். வேலைக்காரப் பொன்னம்மா, "எதுக்கு நீ அங்கனப் போற? உம்பாபி எங்கே?" எனத் தடுத்தாள்.
விஷயத்தைச் சொன்னதும், "ஐயோ பாவம்" என்றுவிட்டுப் போனாள். அவளால் முடிந்தது.
நானே எடுத்துப்போட்டு சாப்பிட, அது கொஞ்சம் சிந்திவிட்டது. யதேச்சையாய் அந்தப் பக்கம் வந்த பாபி, "கொரங்கு மொங்குறதப் பாரு" என்றுவிட்டுப்போனாள், சாயங்காலப் பூக்காரியின் குரலுக்கு வாசலைநோக்கி.
*
மணி எட்டாகிவிட்டது. பாபி வைத்துவிட்டுப் போயிருந்த காபி ஆடை படிந்துவிட்டது. ஒரு ஈ, தம்பளா¢ன் விளிம்பில் உட்காருவதும், எழுவதும், பறப்பதுமாய்க் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது. அதுகூட வாழும்வரை சந்தோஷமாக வாழுகிறதே!
பள்ளிக்கூடத்துக்குப் புறப்படும் அவசரத்தில் அண்ணன் குழந்தைகள். மூத்தவன், "புளுகலர் சாக்ஸ்ல ஒண்ணைக் காணாம்" என்று வீட்டை தலைகீழாகப் புரட்டுகிறான். சின்னவன் "என்னோட ஸ்கூல் ¨டா¢யக் காணல!" என்கிறான்.
"எடுத்தா எடுத்த இடத்துல வைக்கணும். வந்ததும் தூரப்போட்டுட்டு ஓடுனா இப்டித் தான்!"' அவர்கள் பின்னால் ஓடியோடி, அதட்டி உருட்டி சாப்பிட வைத்துக் கொண்டிருக்கிறாள். யதேச்சையாக என்னைக் கடக்கும்போது, அவள் வைத்துவிட்டுப்போன காபி அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, "தூக்கத்தைப்பாரு!" என்கிறாள்.
லோக்கல் சானலில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. வாசலில் பொன்னம்மா மீன்காரனிடம், "செதிலை நல்லா எடுப்பா. ஆய முடியலை" என்கிறாள்.
தூக்கம் என்பது என்னைப் பொறுத்தவரை காலநேரமற்ற விஷயம். தூக்கம், விழிப்பு, புரளல், சன்னல் வாசம், கதவுத்தடுப்பு, மொட்டை மாடி விஜயம் என சக்கரமாய்ச் சுழல்வதுதானே என்வேலை. எனினும், படுக்கையைவிட்டு ஏழு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் வழக்கம் கை வந்திருந்தது. தொழுகைக்கு நான் விதிவிலக்கு. அதனால் எட்டு மணிக்கு மேலாகியும் எனது 'படுக்கை' யாருக்கும் சந்தேகத்தைத் தரவில்லை. அதுவேறில்லாமல் ஒருமாதமாக உடல்நிலை வேறு சரியில்லையா? கண்டு கொள்ள... ம்ஹ¥ம்.
அண்ணன் என்னை வேறு எங்கும் அனுப்ப முடியாது என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டதும், பாபி கோபப்பட்டு சிலநாட்களாக அவரிடம் பேசுவதில்லை என்று தொ¢ந்தது. ஒருவிஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதையே சுற்றிச்சுற்றி வருவது, வீட்டில் நிலவும் மெளனத்திலிருந்து பு¡¢கிறது. சூனியக்காற்று எல்லோரையும் சூழ்ந்து, தவிர்க்க இயலாத ஒன்றாய் இருப்பதும், அவர்களின் இல்லறத்துக்கு நான் தடைகல்லாக இருப்பதும் சங்கடத்தைத் தந்தது.
அதன்பிறகு அண்ணன், பாபியைச் சமாதானப்படுத்திய விதம் எனக்குத் தொ¢ய வந்த போது ஆடிப்போனேன். "ஏய் ... எதுக்கு நீ மூஞ்சியை தூக்கி வைச்சுருக்க? அவன் நம்மக்கூட இருக்குறதுதான் நமக்கு லாபம். நமக்கு ஈக்குவலா அவனுக்கு சொத்து இருக்கு. இப்ப அவனை வெளில அனுப்பிட்டா சொத்தை பி¡¢ச்சுல்லத் தரணும். ஊர்ல என்ன பேசுவாங்க"
சிறுநீர்க் கழிக்க எழுந்த நான், லாப நட்டக் கணக்குக்கு இலக்காகி, அங்கும் இங்கும் எறியப்படும் அவலத்தில் அனாதையாக்கப்பட்ட மனச்சுமையுடன் திரும்பிப்போய் படுத்தேன். தூக்கம் வரவில்லை.
இந்தநேரத்தில் உறவுக்காரர்கள் எல்லாம், வருஷத்துக்கு ஒருமுறை வரும் பாத்திஹா வுக்கு ஒன்றுகூடினார்கள். அப்போது, எங்கெங்கோ திரும்பியப் பேச்சுக்களில் முத்தாய்ப்பாக வந்துநின்றது, என் விஷயம். "மாபாட்சாக்கு ஒரு நிக்காஹ் செஞ்சு வெச்சா நல்லாருக்குமே!"
அண்ணன்கூட, "செஞ்சுட்டா போச்சு!" என்று சொன்னார். கூடியிருந்த சொந்தக்காரர்கள் முகத்தில் சந்தோஷம்.
ஆனால் அதற்கான நடவடிக்கைளில் அண்ணன் ஈடுபடவில்லை என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இரண்டொரு வாரத்தில் உறவுக்கார பெரியப்பா, ஒரு குமர் இருப்பதாக வந்து சொன்னார்.
இந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். பார்க்க சுமாராய் இருப்பாள். இல்லாத குடும்பம். அவள்போதும் எனக்கு. எனக்கு சிறகுகள் முளைத்தன. அவளை அழைத்துக்கொண்டு நான் பெருவெளியில் அலைகிறேன். நீண்டதூரம் நானும் அவளும் பயணப்படுகிறோம். பெயர்தெரியாத ஒருமரத்தின் நிழலில் நாங்கள் இளைப்பாறுகிறோம். அப்போது அவள், என் முகத்தை தன் கைகளில் ஏந்தி, மெல்லக்குனிந்து என் உதட்டில் ஒரு பூவை ஒத்துவதைப்போல, தன் உதடுகளைப் பொருத்துகிறாள்.
திடீரென்று கசமுசா சத்தம், அண்ணன் குழந்தைகள் ஓடிப்பிடித்தும், டிவி இரைச்சலாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன், உறவுக்காரப் பெரியப்பாவுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை. பாபி முகத்தில் சவக்களை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை. எங்கிருந்தோ கிளம்பிவந்த அமானுஷ்யம் வீட்டில் பரவுகிறது.
வந்திருந்த பெரியப்பா, நிலைமையை எப்படி உணர்ந்து கொண்டாரோ தெரியவில்லை. கிளம்பிவிட்டார்.
அவர் போனதுதான் தாமதம். "இதுக்கு எதுக்கு பொண்டாட்டி? அதுவேற சுமையா? வர்றது தெளிவா இருந்துச்சுன்னா, இதப் பிரிச்சுக்கிட்டு போயிருமே! வேலியில ஓடற ஒணானை எடுத்து எதுக்கு உள்ளே விட்டுக்கணும்?" என்றாள் பாபி. என்மீது அவளுக்கு ஏதோவொரு அசூயை. உள்ளே எனும் வார்த்தையின்போது, செய்கை மோசமாக இருந்தது. நான் இருப்பது பற்றி அவள் கவலைப்படவில்லை.
அண்ணன் இப்போதும் பதில் பேசவில்லை, ஆனால் புன்சி¡¢ப்பு ஒன்றை உதிர்த்தார். பிறகு அதைப் பற்றிய பேச்சே எழவில்லை.
ஒன்பதரை மணியாகிவிட்டது. அண்ணன் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார். பொன்னம்மா மிக்ஸி இருந்தும் அம்மியில் மீனுக்கு மசாலா அரைத்துக் கொண்டிருந்தாள். குழவிக்கல், தட்டை அம்மியில் உருளும் 'சரட்... சரட்...' சத்தம், சீராக வந்தது. சைக்கிள் வியாபாரி, ஏதோ கூவி விற்றுக்கொண்டே போகிறான்.
புறப்பட்டு வாசல்வரை போய்விட்ட அண்ணன், "எங்கே அவனைக் காணோம்?" என்று கேட்டார்.
"தூங்குதுபோல. காலைல காபி வைச்சேன். அப்பதப் பாக்குறப்போ, அது அப்டியே இருந்துச்சு"
"நீ உசுப்பலியா?" எனும் கேள்விக்கு, பாபி பதில் சொல்லவில்லை.
"ஏன் இன்னும் எந்திரிக்கலை? ஒடம்புக்கு நல்லாயிருச்சுன்னு நேத்து சொன்னானே!" என்று சொல்லிக்கொண்டே என்னை நெருங்கிவந்தார். ஆறிக்கிடந்த காபியைப் பார்த்தார். "மாபாட்சா...டேய் மாபாட்சா!" என்று கூப்பிட்டார்.
நான் எப்படி பதில் சொல்ல முடியும்?
தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு அசையாது கிடந்த என்னை, போர்வையை விலக்கிவிட்டுப் பார்த்தார். அவருக்கு ஏதோ பொறிதட்டியிருக்க வேண்டும். 'சட்'டென்று குனிந்து, என் மூக்கருகே கைவைத்துப் பார்த்தார். சிலநொடிகளுக்குப் பின் அனிச்சையாய் நிமிர்ந்தவர், லேசாய்த் தள்ளாடினார். கண்களில் நீர் அரும்பு. "வா இன்னால்லாஹி ராஜியூன்!" என்றார்.
அவருக்குப் பின்னால் வந்து நின்ற பாபி, "என்ன?" என்று மட்டும் கேட்டாள்.
அண்ணன், குற்றவுணர்வில் தத்தளிப்பவர்போல் தென்பட்டார். பேச வாய் வராமலேயோ அல்லது பேச வார்த்தைகள் கிடைக்காமலேயோ திணறுவதுபோலவும் தெரிகிறது.
"ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டீங்க? மாபாட்சாவுக்கு என்ன?" பாபி என்னை நெருங்கி வந்து தொட்டுப் பார்த்தாள். "முடிஞ்சுருச்சா?" என்றவளின் குரலில் நடுக்கம் இருந்தது. சிலநிமிடங்கள்வரை மெல்லிய பதட்டத்துடன் நின்றிருந்தவள், முதலில் வெளியே போனாள். அவளைத் தொடர்ந்து அண்ணன்.
நடுக்கூடத்தில் இப்போது அவர்கள் நிற்பதும், பேசுவதும் தெரிகிறது.
ஐந்துநிமிடங்களில் எதிர்வீட்டு ரசீத் வந்தான். "எப்போ?" என்று கேட்டான்.
"சரியாத் தெரியலை"
"அப்ப மெளத்தை எப்படி சொல்றது?"
"அத எவங் கேக்கப் போறான். அதுவும் இவனைப் பத்தி!" என்றதும், நான் உடைந்தே போனேன்.
யார் யாருக்கு மெளத் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டும் எனும் லிஸ்ட் தயாரானது. ரசீத் வா¢சையாக பெயர்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். திடீரென்று "மீன் கொழம்பா?" என்று அவன் மோப்பம் பிடித்துக் கேட்டதும், "அதை எறக்கிவெச்சுட்டு வந்துர்றேன்!" என்று பாபி உள்ளே ஓடினாள்.
*
ஒருமணி நேரத்துக்குப்பின் ஜமாத் ஆட்களும், லெப்பையும் வந்துசேர்ந்தார்கள். என்னைச் சுற்றிநின்று ஏதேதோ பேசிவிட்டு, நான் மெளத்தாகிப் போன சேதியை முறைப்படி அறிவிப்பு செய்தார்கள்.
வீடு இருட்டாகிவிட்டது. வாசலில் பூமிநாதன் ஒற்றைக் கிடுகுக் கொட்டகைப் போடுகிறான். ஏ.எஸ்.எம்.ஷா கடையிலிருந்து ஸ்டீல் சேர்களும், பிளாஸ்டிக் சேர்களும் வந்து இறக்கப்பட்டு, விரிக்கப்படுகின்றன.
என் உடுப்புகளைக் களைந்து 'கடுவா' மாற்ற முனைந்த லெப்பை, உடம்பின் சில்லிடலைக் கணக்கிட்டு, "ரொம்ப நேரம் ஆயிருக்கும்போல" என்கிறார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
என் உடம்புக்கு 'கடுவா' மாற்றி, நடுக்கூடத்துக்குத் தூக்கிவந்து, கட்டிலில் கிடத்திய போது, உறவுக்காரர்கள் வர ஆரம்பித்தனர். தலைமுதல் கால்வரை வெள்ளைத் துணியால் போர்த்திக் கிடத்தப்பட்டிருக்கும் என்னைப் பார்த்து அரற்றுகின்றனர். ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு வாயிலும் வெவ்வேறு வசனங்கள்.
அம்மாவின் அன்பும் பராமரிப்பும், பாவாவின் பா¢வும் அரவணைப்பும் மறுபடியும் பேசப்படுகிறது. ராஜ வாழ்க்கை பிற குடும்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.
அண்ணன் முன்வாசலில் நின்று, வந்தவர்களுக்கு 'சலாம்' சொல்கிறார். உள்ளே வருபவர்கள் முகத்தைப்பொத்தியிருக்கும் வரை துணி நகர்த்தி 'சலவாத்து' சொல்கிறார்கள். ஆயினும் உறவுக்காரர்களின் அழுகை, ஒரு சில நிமிடங்களுக்குமேல் நீடிக்காமல் 'சட்'டென்று வேறுவேறு கதைகளாய்த் திசைமாறி ஊடாடியது.
நான் ஒருபொருளாகக் கருதப்படாமல் கிடத்தப்பட்டிருக்கிறேன். கபரஸ்தானில் குழி வெட்ட ஆள் வந்து நிற்கிறான். இருபது ரூபாய் வித்தியாசப்பேரத்தில் அவன் முனங்குகிறான். "குழி வெட்டுறதுலப்போய் கணக்குப் பாக்குறீங்களே?" அவன் குரல் எழுகிறது.
"போதும்... போதும் ... இதுவே அதிகம்" என்கிறார், அண்ணன். அவர் சொன்னது பணத்தின் அளவீட்டிலா... இல்லை இவனுக்கு இதுபோதும் எனும் எண்ணத்திலா என்று தொ¢யவில்லை.
கபன் துணி வாங்க, சிச்சாலால் கடைக்குக் கிளம்பிய ரசீத் குழிவெட்டுபவனிடம், "வா, நான் எடம் காட்டிட்டுப் போறேன்"என்று அழைத்துப் போகிறான்.
பள்ளிக்கூடத்துக்குப் போன அண்ணன் குழந்தைகள் திரும்பி வந்துவிட்டன. "ஹையா, ஜாலி...இன்னிக்கு லீவு!"
அண்ணனிடம் உறவுக்காரர் ஒருவர், "எப்ப எடுக்கலாம்" என்று கேட்க, பாபிதான் முந்திக்கொண்டு சொன்னாள். "ஒடம்பு சரியில்லாம இருந்துச்சா. உடனே தூக்கிறலாம். யாரு அதுக்காக வரவேண்டியிருக்காக? அதோட மும்பைக்கார அக்கா, 'எடுங்க, நாங்க வரோம்'ன்னுட்டாகல்ல!" சடவு காட்டினாள்.
அண்ணனின் இளையமகன் பாபியிடம் வந்து, "பசிக்குது" என்று சொல்கிறான். அவனை யாருக்கும் தொ¢யாமல் உள்ளே இழுத்துப்போன பாபி, பொறித்து வைத்திருந்த மீன்துண்டங்களில் இரண்டை எடுத்து முள்நீக்கி ஊட்டிவிட்டாள். சுற்றும்முற்றும் பார்த்தவள் இரண்டு மீன் துண்டங்களை முள்நீக்கி வாயில் போட்டுக்கொண்டு, ஏதும் தெரியாதவள்போல வெளியில் வந்தாள். பதினோரு மணிவாக்கில் ஜனஜா பெட்டி வந்து சேர்ந்தது. கைவண்டியொன்றில் வைத்துக் கொண்டுவரப்பட்ட அதை இறக்கி வைத்துவிட்டு கூலி கேட்டான் வண்டிக்காரன்.
"இதுல வெச்சே கொண்டு போயிறலாம்" என்று அண்ணன், "வண்டிய ஓரமா நிறுத்து" என்று கை காட்டினார்.
பாவாவின் மெளத்தின்போது அவரைத் தூக்கிச் செல்ல, நான் நீ என்று போட்டிப் போட்டு தோள் கொடுத்துத் தூக்கிப் போனார்கள். இத்தனைக்கும் கபரஸ்தான் வீட்டிலிருந்து ரொம்ப தூரம். தேள் கொடுத்துத் தூக்குவது, 'சுன்னத்' என்று தூக்கிச் சுமந்தார்கள்.
பாவா, அம்மாவின் மெளத்தை மிகவும் சிறப்பாகத் தூக்கினார் என்று பேசிக் கொள்வதுண்டு. வழக்கமாக, இந்த மஹல்லாவில் யார் மெளத்தானாலும் அவர்களுக்கு நூர்தீன் ஜமாத் பள்ளிவாசலிலிருந்துதான் ஜனாசா பெட்டி வரும். ஆனால் அம்மாவுக்கு பாவா புதுப்பெட்டி செய்தார். அதுவும் அலுமினியப் பெட்டி. அம்மாவுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தப்பெட்டி, வேறுவேறு மெளத்களுக்குப் பயன்படுத்துவது எனக்குத் தொ¢யும். அந்தப் பெட்டிதான் இப்போதும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதைக் கழுவி சாம்பிராணிப் புகை போடச்சொல்லி யாரோ குரல் கொடுப்பது கேட்கிறது. ஜனாஜாமேல் போர்த்த பூல்கி ஜத்தர், பாபையிடம் கட்டச் சொல்லியிருப்பார்கள். அவர்தான் ரொம்பவும் சூப்பராக பூக்கட்டித் தருவார். நல்ல கணம். நல்ல மணம். அவருடைய வேலையில் நுணுக்கம் தெரியும். பாபையிடம் அண்ணன் பவுசானக் குரலில் பேசுவது தெரிகிறது.
மெளத்துக்கு வந்தவர்கள், மய்யத் தூக்கப்பட்டதும் சாப்பிட்டுவிட்டுச் செல்ல, உள் பக்கமாய் 'பகாரியா' ஆகிக்கொண்டிருக்கும் வாசனை, கமகமக்கிறது. பாவாவின் மெளத்திலும், அம்மாவின் மெளத்திலும் கூட கோஷ் பலவ்தான் போடப்பட்டது. ஏன் அண்ணன் இத்தனை கஞ்சூஸாக இருக்கிறார். கடைசி கடைசியாய் செய்யும் ஒன்றை நல்லபடியாகத்தான் செய்துவிட்டால் என்னவாம்? அதன் பிறகுதான் செலவே இல்லையே? என் நினைவாவது அவர்களுக்கு இருக்குமா?
என் கண்ணில் இருபத்தேழு வருட சம்பவங்கள் வா¢சையாக வருகின்றன. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியெப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். என்னதான் உடன்பிறப்பாக இருந்தாலும், அடுத்தவன் எனும் பாகுபாடு ஏன் உறவுகளுக்குள் உண்டாகிறது?
உறவுகளால் அனாதையாக்கப்பட்ட உணர்வு, இப்போது என்னை அலைக்கழிக்கிறது.
"லுஹருக்குத் தூக்கணும்ன்னு சொன்னீங்க. ரெடி பண்ணுங்க!" வெளியிலிருந்து வந்தக் குரலுக்கு எல்லோரும் கட்டுப்பட்டார்கள். உள்ளேயிருந்த உறவிக்காரர்கள் விலகி வெளியே போனார்கள்.
வராண்டாவில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அண்டாக்களுக்குப் பக்கத்தில் இன்னொரு பெஞ்சு கிடந்தது. அதில் நான் தூக்கிக்கொண்டு போய்க் கிடத்தப்பட்டேன்.
லெப்பை 'ஒலு' எடுத்துக்கொண்டு, என்னைக் குளிப்பு செய்யத் துவங்கினார். உள்ளே ஹஜரத் ஒருவர் கபன் துணியில் வைத்து என்னை மூட்டைக் கட்டத் தோது பண்ணிக் கொண்டிருந்தார்.
சியக்காய், சோப்பு, அத்தரால் நான் கழுவப்படுகிறேன். எனக்கு ஒலு செய்யப்படுகிறது. யாரோ ஒரு இளைஞன், "நாரே தக்பீர்' என்கிறான்.
பதிலுக்கு யாரோ, "அல்லாஹ¥ அக்பர்!'' என்கிறார்.
உள்ளுக்கு கொண்டு வரப்பட்ட நான், ஹஜரத் தயார்செய்து வைத்திருக்கும் வி¡¢க்கப்பட்ட கபன் துணியில் வைக்கப்படுகிறேன்.
என் உடல் துணியால் சுற்றப்படுவதற்கு முன், "தீதார் பாக்குறவங்க பாத்துக்குங்க!" என்கிறார்கள்.
உறவுக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து, என்னைப் பார்க்கிறார்கள்." தூங்குறது மாதிரியே இருக்குப்பா!"
"மொகத்துல சிரிப்பைப் பாரேன்!"
"நல்ல மெளத்துன்னா இப்படித்தான் இருக்கும்!"
அவரவர் தங்கள் பங்குக்கு ஏதாவது சொல்லி, அழுதுவிட்டுப் போனார்கள். எல்லாருமே தூரத்து உறவு.
"பார்த்தாச்சா?" ஹஜரத், என் கால் பகுதியின் துணியைச் சுருட்டிக் கட்டினார். பின்பு வயிற்றுப் பகுதி துணியினை சுருட்டி முடிச்சிட்டார். அப்புறம் முகம் மூடுமுன், "வேற யாரும் பாக்கணுமா?" என்று கேட்டார்.
"இல்ல!" என்று ஒற்றைக்குரல் வந்தது, தீனமாக.
அவர் என்னைப் பொட்டலமாகக் கட்டிவிட்டார். "ஜனாஜாவை உள்ளாறக் கொண்டுட்டு வாங்க"
வந்தது.
சாம்பிராணி வாசம் கமகமத்தது.
"ஓலப் பாய அப்டி இழுக்காதீங்கப்பா!"
"இப்டி... இப்டி... இதுதான் சிஸ்தா!"
"ஏய், மய்யத்தைப் போட்டு ஒலட்டாதீங்கப்பா!"
என்னை உள்ளே வைத்துவிட்டார்கள். மூடிபோட்டு மேலே அஸ்மான்கிரி விரித்து, அதன்மேல் பூல்கி ஜத்தரும் அழகாய் விரித்தாகிவிட்டது.
ஜனாஜாவைத் தூக்கினார்கள்.
"கல்மா ஷஹாதத்!"
"கல்மா ஷஹாதத்!"
நான் கிளப்பப்பட்டதும் அழுகுரல்கள் எழுகின்றன. அவை என்னைச் சங்கடப்படுத்துகின்றன.
அதில் ஒருகுரல், "மாபாட்சா... மாபாட்சா... எங்களைவிட்டுப் போறீயே, மாபாட்சா!" என்று அடிவயிற்றிலிருந்துக் கிளம்பிவருகிறது.
நான் திடுக்கிடுகிறேன். இந்தக் குரல் என் பாபியின் குரல். என் அண்ணனைக் கட்டிக் கொண்டு அவள் கதறுகிறாள்.
"மாபாட்சா... டேய்... மாபாட்சா... ஏங்க, நம்ம மாபாட்சா நம்மளவிட்டுப் போறாங்க!"
ஓ... 'நம்ம' மாபாட்சா!
என்னவொரு அற்புதச் சொல்?
குறுக்கு நெருக்கு இழைகளைக் கொண்ட பாச பந்தம் நிறைந்த அந்தச் சொல்லைக் கேட்டதும், உயிர்ப் பிடித்து எழவேண்டும்போல இருக்கிறது.
ஜனாஜா, ஓரம் கட்டப்பட்டிருந்த கை வண்டியில் வைக்கப்பட்டது. "கல்மா ஷஹாதத்... வண்டிக்காரா இழுப்பா!"
வண்டிக்காரன் கால்களை அழுத்தமாகத் தரையில் ஊன்றி, மூச்சை முழுசாய் உள்வாங்கி, முதுகு வளைத்து உன்னி வண்டியை இழுக்க, நான் குலுங்கி அடங்குகிறேன்.
- எஸ்.அர்ஷியா