அந்திவேளை… பத்தாவது தளத்தில் இருந்த ஒரு மாடத்தில் ஒரு வெள்ளைப் புறாவின் எச்சம் கீழே விழுந்த ஓசை கனமாக நூறு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மௌனத்தைக் கலைத்தது. அதைத் தொடர்ந்த ‘வெண்சிறகு’ அந்த எச்சத்தில் படர்ந்தது.

அதை ஓவியமாக மொழுகிக் கொண்டிருந்தான் வெண்மதியன்.

தனிமை விரும்பி, மனிதர்களை வெறுப்பவன், மரணத்தை வரவேற்பவன், பல சமயம் அவனது விரல்கள் தூரிகையைபோவதுண்டு. யாரும் குடிபுகாத அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் குடியுரிமைப் பெற்றவனாய் தனித்து வாழ்ந்து வந்தான். புறநகர் பகுதியில் அமைந்துயிருந்த அந்த அடுக்குமாடிப் போக்குவரத்து சரிவர இல்லாதால் அங்கு யாரும் குடிபுகாமல் இருந்தது.

வெண்மதி ஓவியம் வரையும் போதெல்லாம் ஒரு புறா அவனது மாடத்தில் வந்து அமர்ந்துக் கொள்ளும். அவன் ஓவியம் முடிக்கும் வரை அந்த மாடத்தில் அவனைப் பார்த்தபடியே கழுத்தை உள்ளும், வெளியும் இழுத்துக் கொண்டும் தனது சிறிய கண்களை உருட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருக்கும். வெண்மதியின் செறிவை அது சிதைப்பதில்லை.

அவன் தன் படைப்பை முடித்தவுடன் அங்கிருந்து பறந்து விடுகிறது. அது எங்கிருந்து வருகிறது, எங்கே தங்கிக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதில் வெண்மதியன் ஆர்வம் காட்டுவதில்லை.

வாரத்திற்கு நான்கு படங்கள் வரைவது, வரைவதை நகரத்தில் உள்ள ஓவிய கண்காட்சிகளில் பணமாக்குவதுமாய் இருந்தான் வெண்மதியன் . அங்கீகாரத்தை தேடி உருளும் இந்த சமூகக் கிடங்கில் வயதைத் தொலைத்து வாழ்க்கையைப் பணயமாக்கிக் கொண்ட மிச்சத்தில் மீதி இந்த வெண்மதி.

அன்று எப்போதும் போல ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் கவனம் சிதிறிப் போவது கிடையாது. திடீரென தன்னை ஏதோ ஒன்று திசை மாற்றுவதைப் போல உணர்ந்தான். வர்ணம் தீட்டுவதை நிறுத்திக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஏதோ ஒன்று அன்று இயங்காதது போல இருந்தது. சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், காற்றில் அந்த சிறகு உடையும் அலை கீற்றில் முழித்துப் பார்த்தான், அந்த புறாவின் வருகை அன்று தாமதமாக இருந்தது. இப்போது முழுமை பெற்றுக் கொண்டது அவன் இயக்கம். அந்த அறையிலும் ,அவன் படைப்பிலும் அந்த புறா நிறைந்து கொண்டிருப்பது அவன் அறிந்திருக்கவில்லை.

மாலை வெயிலை அவசர அவசரமாக கார்மேகம் சுருட்டிக் கொண்டிருந்தது. எப்போதும் போல வெண்மதி தன் படைப்பில் தீவிரமாக இருந்தான். வெளியில் மழை புனைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மின்னல் மினுக்கிக் கொண்டிருந்தது.

திடீரென… மின்சாரம் விடை பெறுகிறது.

வெண்மதியன் தட்டுத் தடுமாறி, அடுப்பங்கரைக்கு விரைந்து மெழுகுவர்த்தியுடன் வந்தான். மெழுகுவர்த்தியை அவன் புகைப்படத்திற்கு அருகில் கொண்டு போகவில்லை, மாறாக அவனை வெறுமையடையச் செய்த அந்த மழையும், மின்வெட்டும் அவனை எதோ தேடச் செய்தது, புரிந்துக் கொண்ட அவன், அந்த புறாவைத் தேடினான். புறா அந்த மாடத்தில் இல்லை.

மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மழையைப் பார்த்தான் ... மிரட்டிக் கொண்டிருந்தது மழை.

மழையை விட காற்று உக்கிரமாக இருந்ததில், மெழுகுவர்த்தி அணைந்து கொண்டது.

மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க மீண்டும் அடுப்பங்கரைக்குத் தட்டு தடுமாறி நடந்தான். இந்த முறை வேறொரு அறைக்குள் நுழைதலானான். தன் கைகள் தீப்பெட்டிக்கு அலைந்தன. ஒரு அட்டைப் பெட்டி ஒன்று தட்டுப்படுகிறது.

அட்டைப் பெட்டிக்குள் ஒரு பொருள் அகப்படுகிறது, அது பஞ்சுபோன்று மிருதுவாகவும், சற்று கனமற்றதாகவும் இருந்தது. இதுவரை அவன் கைகளுக்கு புலப்படாத ஒரு பொருளாக இருந்தது.

இப்போது சமையல் அறையில் இருக்கும் தீப்பெட்டி துணைகொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றிய கையுடன், அந்த பெட்டி இருக்கும் அறைக்கு வருகிறான்.

அதிர்ந்து போகிறான்…

அந்த பெட்டிக்குள் ஒரு பெண் புறா ஒன்று இறந்து கிடந்தது.

இறுகிப் போகிறான், உடல் முழுதும் ஒரு பதற்ற நிலை பரவத் துவங்கியது. நிதானித்துக் கொண்டு அதை கையில் எடுத்தான், உதிர்ந்த இறகுகள் போர்த்திய எலும்புக்கூடாய் கனமற்றுக் கைகளில் மிதந்தது.

இப்போது அந்த வெண்புறாவின் வருகை தெரிந்துகொண்டான். தொலைந்து போனப் புறாவைத் தேடிவந்த அந்த வெண்புறா இவனிடம் ஏதோ எதிர்பார்ப்பதை புரிந்துக் கொண்டவனாய், எடுத்த இடத்தில் அந்த புறாவை வைத்துவிட்டு. அவனுடைய வரைப் பலகைக்கு முன் நின்றான்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த பெண்புறாவை ஓவியமாக தீட்டுகிறான். மிகுந்த சிரத்தோடு முடிக்கிறான்.

வெளியே மழை நிற்கிறது…

அவன் புறா வரைந்த காகிதத்தில் வடிந்தது வெண்துளிகள்...

 -சன்மது

Pin It