இமோஜிகளில்
வாழ்பவளுக்கு
தருகிற முத்தத்தில்
ஈரமிருப்பதில்லை....

இமோஜிகளால்
அணைத்துக் கொள்பவளுக்கு
அணைப்பின் கதகதப்பு
கடத்தப்படுவதேயில்லை...

இமோஜிகளால்
முறைத்துக் கொள்பவளின்
கோபம்
ஒரு போதும்
சுடுவதேயில்லை...

இமோஜிகளால்
அழுபவளின் கண்ணீர்
துடைக்கும் விரல்கள்
அருகில் இருப்பதேயில்லை..

நெருங்கிய
நட்பென்றோ...
விலகிய
உறவென்றோ...
தொலைத்த
காதலென்றோ..
எதிர்த்திடும்
எதிரிகளோ...
முதுகில் குத்தும்
துரோகிகளோ
எப்போதுமில்லை.

இருப்பதற்கும்
இல்லையென்பதற்கும்
ஒளிரும் பச்சைவிளக்கே
போதுமானதாயிருக்கிறது.

- இசைமலர்