நெடுஞ்சாலையோரம்
பூச்செடி விற்பவனின் காதுகள்
அன்பான சொற்களின் ஈரத்தை அரிதாகவே உறிஞ்சிப் பழகியவை
கடக்கும்
வாகனங்களின் இரைச்சல்
பேரம் பேசும் மீயொலி
அலைபேசி அழைப்பு
விளம்பர வாகனத்தின் குரலென
நாள்முழுவதற்குமான
சத்தங்களுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டதில்
நாட்களை மீட்டும் பணி
துயரங்களின் மெல்லிசைக்கானது
விற்பனையில்லா
இரவுகளில் சத்தங்களை ஒதுக்கி
முழங்கையை நெற்றிக்கு மடித்து படுத்திருப்பவனின்
கைக்கடிகார நொடிமுள் ஓசை
அத்தனை இதமாய்
விற்காத செடிகள் தரும்
கவலையின் மீது
தனிமையிடும் ஒத்தடமானதில் தான்
பரவுகிறது
அவனுக்கான உறக்கநிம்மதி.

- ந.சிவநேசன்

Pin It