சன்னமாய் அறுந்துவிட்டிருந்த மீன்வலையை
அவன் துல்லியமாய் தைப்பது
ஆச்சர்யம் தான்.
அப்பா தான் கற்றுத் தந்தாரென
அடிக்கடி சொல்கிறான்.
ஆழ்கடல் அலசி
ஆயிரமாயிரம் முத்துக்களும்
அழகிய சிறு நட்சத்திரங்களும்
மை தீர்ந்த பேனா நிரப்ப கணவாய்கள் பலவும்
பிடித்துவரப் போனவரின்
மிதப்புத் தோணி இன்னும்
கரை திரும்பாதது கவலை தான்.
பகல் முழுக்க கரையமர்ந்து
கண்ணெட்டும் தொலைவு வரை
காத்திருப்புப் பார்வை எறியும் அவனுக்கு
இரவெல்லாம் துணையிருக்க
நிலவொன்றும் நிறைய விண்மீன்களும் நியமனமாயின.
புயல் திரிந்து பூங்காற்றாகிவிட்டது.
கொலைக் கடலும் அடங்கிவிட்டது.
உவரியில் இப்போது அலைகளில்லை.
அந்த இறுதிப் பேரலை
கரை கொணர்ந்த சிறு தோணியில்
ஆயிரமாயிரம் முத்துக்களும்
அழகிய சிறு நட்சத்திர மீன்களும்
மை தீர்ந்த பேனா நிரப்ப
கணவாய்கள் பலவும் நிரம்பக் கிடந்தன.
அழுகையில் புதைந்த
அவன் முகம் தெறித்த உவர்நீரில்
இப்போது அப்பாவின் வியர்வை வாசம்.
- பூவன்னா சந்திரசேகர்