ஊருல பெரிய சாவு,
நாலு பேருக்கு படியளந்த
நாட்டாமை மண்டயைப் போட்டுட்டாரு.
நூறு நாள் வேலை கூட கிடைக்கல
ஒரு மாதத்திற்குப் பிறகு
நாட்டாமை செத்து கூலி தரப் போறாருன்னு
தோட்டி முத்தனுக்கு உற்சாகம்.
இன்னைக்குக் கிடைக்கிற
கூலிப் பணத்திலயாவது
பிள்ளைகளுக்கு
நல்ல சோறு ஆக்கிப்போடணும்னு
முத்தன் மனதில் ஓட்டம்
ஆனந்தமா அய்யாவ
அனுப்பி வைக்கணும்னு
ஆட்டம் போட்டுத் தப்படிச்சபோது
தப்பு கிழிஞ்சு போச்சு.
இன்னிக்கு இந்தக் கூலியில
எழவு விழுந்திருச்சுன்னு
கிழிஞ்ச தப்பைப் பார்த்து
முத்தன் கதறி அழுதப்ப
பாவம்... தோட்டி முத்தனுக்கு
நாட்டாமை மேல
எம்புட்டு பாசம்னு
ஊரு உச்சு கொட்டுச்சு
-இலமு, திண்டுக்கல்.