உயிரே போய் விட்டது என்கிறான்
போன முறையும் ஒருவருக்கு சொன்ன
அதே பேனர் வாக்கியம்
தமிழ் செத்தது என்கிறான்
ஒவ்வொரு சாவுக்கும் சொல்லும்
அதே தத்து பித்து தக்காளி சாதம்
ஒன் அண்ட் ஒன்லி என்பதெல்லாம்
முதிரா மானுடத் துவையல்
பகிர்ந்து கண்ணீர் சிந்தும் கைகளில்
சாக்கு போக்கு கோப்பை
பொக்கிஷம் என்கிறான்
மலையளவு இழப்பு என்கிறான்
வெற்று வார்த்தைகளில்
இட்டு கட்டிய ஒப்பாரி
லைக்கில் சிக்கி இன்னொருமுறை சாகிறது
நாளை காலை இன்னொரு கன்டோலன்ஸ்க்கு
அலையும் மனிதா
இன்று செத்தவனை கன்டென்ட் ஆக்காதே
பத்தி பத்தியாய் எழுதி அதற்கும்
பேரிட்டுக் கொள்ளாதே
பெரு மரணத்துக்கு பேரமைதி கொள்
- கவிஜி