வாக்கப்பட்ட ஊர்ல இருந்து
மூணு புள்ளைகளோட வாழாவெட்டியா
வந்தவதான் நம்ம வேலாயி;
வரும்போதே மூணு புள்ளையோட
வைராக்கியத்தையும் சேர்த்தே
கொண்டு வந்தவ!
பொறந்தவீட்டு திண்ணையில
நாலு தென்னங்கீத்து மறைப்புதான்
அவளுக்கும் அவ புள்ளைங்களுக்கும்
புழக்கடையானது; கூடவே அவள்
தன்னம்பிக்கையும் சேர்ந்தே வாழ்ந்தது!
கட்டுனவனே வச்சி கஞ்சி ஊத்த
துப்பில்லாதபோது அவன் கட்டுன
தாலிஎதுக்குனு தூக்கிவீசி எறிஞ்சிட்டு வந்தவ;
ஆத்தா வீட்ல போட்ட குண்டுமணி
நகையை வித்துதான் ஒருசோடி
வெள்ளாட்டு குட்டிய தேவிகாபுரத்து
சந்தைல வாங்கிட்டு வந்தா!
அக்கம் பக்கத்து வீட்டு
கொல்லையிலேயோ இல்ல
கழனியிலயோ கூலி வேலை செய்ஞ்சி
மூணு புள்ளைகளோட பசியாத்திட்டு
கால்வயிறு அரைவயிறு பசியோடுதான்
தெனமும் படுப்பா; சிலநேரம் ஈரத்துணிதான் அவ பசியாத்தும்!
புள்ளைங்க படிச்சி பெரிய ஆளா
வரனும்னோ நல்லா சம்பாதிக்கனும்னோ
பள்ளிக்கூடம் அனுப்புல; ஒரு வேள சாப்பாடாவது வயிறார உண்ணட்டுமேனுதான் பள்ளிக்கூடம்
அனுப்புனா!
நாத்து நடவோ களையெடுக்கவோ
போற எடத்துல வெள்ளாட்டு குட்டி
ரெண்டையும் இடுப்புல கட்டி மேய்ச்சலுக்கு
கூடவே இழுத்துட்டு போவா; குட்டிங்க
ரெண்டும் அந்த பக்கமும் இந்த பக்கமும்
இழுத்துத் தள்ளும்,”கட்டுனவந்தான் என்
உயிர வாங்குனான்,இந்த சனியன்களும் என் உயிரை எடுக்குதேனு “ திட்டிக்கினே
இழுத்துட்டு போவா!
கரம்புகாட்லயோ வாய்க்கா மேட்லயோ
கூட்டமடிச்சி கட்டிட்டு பக்கத்துல அறுவடைக்கோ நாத்துநடவோ கூலிவேலைக்கோ போயிடுவா;
சிலநேரம் கூட்டம் புடுங்கிக்கினு பக்கத்து
கழனியிலே பயிரெல்லாம் மேய்ஞ்சி
வச்சிரும் வெள்ளாட்டு குட்டிக;
கழனிக்காரன் பார்த்துட்டா அவ்வளோதான்
பஞ்சாயத்துல தண்டம் கட்டிட்டுதான்
ஓட்டிட்டு வரனும்!
பூவாயி இப்போலாம் அவ்வளவா
கூலி வேலைக்கு போறதுல்ல;
பெரிய ஆடுங்க குட்டி ஆடுங்க
அப்படி இப்படினு சேர்த்து ஒரு
முப்பது நாற்பது ஆடுகளா ஆயிருச்சு;
மாசத்துல ரெண்டு மூணு ஆடுகள
வித்துருவா; அத வச்சுதான் குடும்பத்தையும் பசங்க படிப்பு செலவையும் பாத்துக்குறா!
இப்போலாம் பூவாயி ஒரு கையில
தொரட்டிக் கொம்போடும் கையில
குட்டி ஆட்டோடுதான் கரம்புக்காட்ல
பார்க்க முடியும்; முள்ளேலி மரத்தாண்டயோ நுணா மரத்தாண்டியோ
தழை அறுத்து போட்டுக்கினு இருப்பா;
எல்லா ஆடுகளும் “ம்ம்மானு’ கத்திக்கினே
அவள சுத்திக் கெடக்கும்!
பூவாயியோட மூத்தமகன் இப்போ
வாத்தியாராயிட்டான்;
நடுப்பையன் இஞ்சினியரிங்
படிச்சிட்டு பக்கத்து டவுனுலேயே
வேலைக்கு போயிட்டு வரான்;
சின்னவன் கல்லூரிக்கு போயிட்டு
வந்துட்டு இருக்கான்!
மூத்தமகன்தான் இப்படி பேச்சை
ஆரம்பித்தான்,”அம்மா இன்னும்
எத்தனை நாளைக்குத்தான் இந்த
ஒத்தத்திண்ணைல வாழப்போறோம்;நமக்குனு ஒரு வீடு வேணாமா,நானும் வேலைக்குப்போறேன்,
கூடவே இந்த ஆடுகளையும் கொஞ்சம்
வித்து ஒரு வீடு கட்டுவோம்னு” சொன்னான்
காட்டுலயும் மேட்லயும் தன்னோடு
உயிரோடு உயிராக இருந்த ஆடுகள
விக்க மனமில்லனாலும் இந்த
ஒத்தகுடிசைல எவ்ளோ நாள்
காலத்த ஓட்றதுனு நெனச்சி ஆடுகள
விக்க சம்மதிச்சா;
புள்ளைகளுக்கும் காலாகாலத்துல
நல்லது கெட்டது நடத்துனுமேனு
மனச தேத்திக்கிட்டா பூவாயி!
ஒண்ணகரத்து வியாபாரிகிட்ட
ஆட்ட ஓட்டிவிட்டு வந்த காசுல
கூடகொஞ்சம் கடனவுடன வாங்கி
ஒரு மெத்தைவூட வாங்கி மூணு
புள்ளகளையும் கரைசேர்த்தி
விட்டா பூவாயி!
தூரத்தில் கண்ணுக்குள் மறையும்
வரை “ம்ம்மானு” கத்திச்செல்லும்
ஆடுகளின் சத்தம் கசக்கி பிழிந்தது
மனதை; முந்தானை முழுதும்
கண்ணீர்த் திவலையின் ஈரங்கள்!
யாரோ ஓடிவந்து சொன்னார்கள்
“உன் வீட்டுக்காரன் குடிகுடிச்சி குடல்வெந்து செத்து போயிட்டான்,ஒரு எட்டு வந்து பார்த்துட்டு வந்துடு தாயீ”
அப்படினு சொன்னான், அதைகேட்டு
வீட்டுக்கு பின்புறம் சென்றவள்
தலைமுழுகி வந்தாள்!
விற்கப்படாத ஒரு சோடி குட்டி ஆடும்
தோளில் தொரட்டிக்கம்போடும்
கம்மாக்கரை நோக்கிப் பயணித்தது
எப்போதும் விட்டுவிடாத வைராக்கியத்தை
நெஞ்சில் சுமந்து பூவாயியின் கால்கள்!
இப்போது சேதி சொல்ல வந்தவனோடு
ஊரும் சேர்ந்து பார்த்தது
அவள் கால்கள் பயணித்த தடத்தை!