வானம் சிறிய துண்டாகி குவளையில் மிதக்கும் போது

அது தன் முடிவற்றத் தன்மையை மறந்து கொள்கிறது,

வழிதவறிய பாதங்கள் வெம்மையை பொருட்படுத்திக்கொள்வதில்லை.

           ***

ஒரு ஆழ்ந்த காயத்தின் இரத்தத்தை உலரவைக்கும் போது

அது தன் பிரார்த்தனைகளை மிக இரகசியமாக்கிக் கொள்கிறது,

பிளவுபட்ட மனம் தன்னிடமிருக்கும் வலியை ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.

          ***

மிகப்பெரிய தேடலில் கிடைத்த அப்பிரார்த்தனையின் சொல்லை

நினைத்துக்கொண்டிருந்த போது தான்

அந்த இலையை உதிர்த்தது மரம்.

அக்கணம் தான் இவ்வளவு பெரிய பிரபஞ்சமாக

உருமாறி யிருக்கிறது.

         ***

ஒருவருக்கொருவர் சதா நினைவூட்டிக்கொண்டிருக்கும் இப்பாடலை

யாரும் எழுதவுமில்லை, அது மிகப்பிரபலமானதுமில்லை,

ஆனால்

அதன் அர்த்தத்திலிருந்து துவங்கும் தீவிரமான வலியே

வாழ்வை மிக நெருக்கமாக உணரவைக்கிறது.

மேலும்,

இவ்வளவு அபரிமிதங்களினாலான இவ்வுலகின் குரல்வளையில்

எப்போதும் சிக்கியபடியே யிருக்கிற தது.

       ***

காலத்தின் ஞாபகங்களிலிருந்து தவறிய ஒரு மெலிந்த ஆன்மா,

தன்னருகில் வந்து விழந்து கிடக்கும் கருணைகளை

ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்து,

அவ்வொவ்வொன்றின் சதைகளுக்குள்ளும் கசிந்து கொண்டிருக்கும்

ஆழமான கீறல்களைத் தன் கனிந்த கைகளினால்

வலியற்று தைத்து விடுகிறது.

வலி ஓராயிரம் மனிதர்களை இப்படித்தான் இணைக்கிறது.

    ***

தன் வசிப்பிடத்திலிருந்து துவங்கும் வானத்தின்

அடையாளங்களைத் தேடி அவற்றைப் பிடித்த படியே 

ஒவ்வொரு நாளும் அம்மனம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

பல நெருடல்களினால் தொகுப்பட்ட அப்பாதைகளினிடத்தில்

தான் வெறுக்கப்பட்ட கதைகளை ஒருபோதும் சொல்லியதில்லை யது.

அதன் தனிமை அதற்கு நிறைய்ய நிறங்களைக் கொடுத்திருக்கிறது.

வானம் தன் நீலத்தை அங்கிருந்து தான் தொடங்கிக் கொள்கிறது.

எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்ட அன்பின் கடல்

அங்கிருந்து ஊற்றெடுக்கிறது.

    ***

பெரிய சுவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு

துரோகத்தின் மிக நீண்ட கைகளால்

மெதுவாகக் கொல்லப்பட்ட ஒரு உயிரின்

இதயமொன்றை கொஞ்சமாகத் திறந்து பார்க்கும் போது,

இன்னும் ஒரு நம்பிக்கையை கையிலெடுத்து நீட்டுகிற தது.

சாதலின் கடைசி வலியிலும் அதனன்பை பதிலீடென

அமைதியாகத் தருகிற தது.    

உலகமோ..

அது இறந்து போனதையே

அர்த்தமெனச் சொல்லிக்கொண்டிருக்கிறது.!

- ஜீவன் பென்னி