நாம் ஒரு மாலையை

அதன் மயக்கம் கலையாமல்

அழைத்துச் செல்வோம்

மினுங்கும் அகல் விளக்குகள்

சுடரும் ஆலயங்களுக்கு

அழைத்துப் போவது இனிமையானதுதான்

மணம் பெருகும் மலர்களை

கற்சிற்பங்களை பார்வையிடுவது மிகவும் நல்லது

பிரகாரத்தின் முன்பு

கண்மூடும் மாலையை பின்புறமாய்

இறுக அணைப்பது தெய்வதம் நிறைந்தது

பிறகு மாலைக்கு

நெய்யிட்ட அமுதைத் தருவோம்

ஆழ்ந்த அமைதியில் இருக்கும்

மாலையை மீட்டெடுக்க

அது பரவிவந்த மலைமுகடுகள்

தைல வாசனை

நதிக்குளிர்ச்சி

இன்னும் சிள்வண்டின் ஓசைகள் யாவும்

மாசுபடாமல்

தோளில் மெல்ல சாய்த்துக்கொள்வது

இருளுக்கு முகமன் கூறுவதாக இருக்கும்

மாலையின் முன்பு மதுப்பழக்கம் ஆகாதது

அது நம்மை இருளினூடே

புலரிக்கு அழைத்துச் செல்வது.

 

வேடனின் வலை

 

பகலின் நிறம் கிளிப் பச்சை

அது மலையருவியிலும் கரும்பாறையிலும்

வண்ணம் குழைத்துப் பிறந்தது

கிளிபிடிக்கும் இரவொரு வேடன்

வேடன் பிறந்தது மலைக்குப் பின்புறம்

மலைக்கு இப்பக்கம் மனிதர்கள்

மனிதர்கள் பேசக் கற்றுக்கொண்டது கிளிகளிடம்

கிளிப்பேச்சு விட்டில்களுக்குத் தெரியாது

விட்டில்கள் துள்ளுவது புல்வெளி

புல்வெளி நிறம் கிளிப்பச்சை

பகல்நேரப் பச்சைக்கிளி

இரவுப் பாடலை ஏன் இசைக்கிறது

வேடனின் வலைபோலத்தான் விரிகிறது இவ்விரவு.

Pin It