கருமையாகி வெம்மஞ்சளாகி
நீலமாகி மீண்டும் கருமையாகும் வானத்தை
நோக்கியபடி...

மரங்களில்
மெல்லியதாக உயர்ந்து உச்சமடைந்து நிசப்தமாகி
மீண்டும் உயரும்
சீக்கையொலிகளை
கேட்டபடி...

வாடை குளிரேறி
பனியாகி வடிந்து
இளங்காற்று வெம்மையாகி
மீண்டும் வாடையாவதை
உணர்ந்தபடி...

அவள் விட்டுச் சென்ற இடத்திலேயே நிற்கிறேன்
எந்த மாற்றமுமின்றி...
எதையும் எதிர்பார்த்தபடி

- கா.சிவா

Pin It