1) கடவுளே
என்னை மன்னித்துவிடு
நான் காதலை கும்பிடுகிறேன்
2) நீ அழகுக்கு
நேர்ந்துவிடப்பட்டவள்
3) உனக்கான அரிதாரத்தை
மான்களே கொண்டுவருகின்றன
4) உண்மையாகச் சொல்
நீ தேவதைகளின் அசலா! நகலா!
5) உன்னை சுவைபட
சொல்ல வேண்டும் என்றால்
நான் சோகப்பட வேண்டும்
6) இரவு நதியில்
உன் ஆனந்த வெள்ளம்
கரைபுரண்டோடுகின்றது
7) நீ தாவணி அணிந்தபோதுதான்
என்னில் பிரபலமானாய்
8) உன் ரகசியத்தை அறிந்ததால்
நான் அம்பலமானேன்
9) என் இதயத்தில்
நீ தங்காவிட்டாலும்
பரவாயில்லை
வந்தாவது போ
10) விளக்குகள் அணைக்கப்பட்டால்
நீ எரிகிறாய்
11) அவளைப் பிரிந்துவிட்டாயா
பரவாயில்லை தேடாதே
நீ கவிஞன்
ஆகும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்
12) உனக்கென்ன
இரண்டொரு துளிகள்
கண்ணீர் சிந்திவிட்டு
போய்விட்டாய்
இப்போது என்கண்ணீல் அல்லவா
சிறுதுளி பெருவெள்ளம்
13) நீ சரி என்று சொல்
தவறெல்லாம் திருத்தப்படும்
14) நீ காதல் அன்னப்பறவை
என்னில் இருந்து
என்னையே பிரித்தாய்
15) உன் மெளனத்தைக் கண்டுபிடிக்க
நான் ஊமையானேன்.
16) நீ வெட்கப்படும்போதுதான்
நான் வெளிப்படுகின்றேன்
17) காதல் வேடம் தரித்தேன்
உலகம் பிணத்திற்கு
ஒத்திகை பார்க்கின்றான் என்றது
18) இரகசியமாக அழுகின்றேன்
நீ வெளிப்படையாக சொல்லிவிட்டதால்
19) கனவில் கூட
உன் காலடிச்சுவடுகள்
என்னை அடிக்கின்றன
20) என் தேசத்தில் வெளியாகும்
ரகசியப் பத்திரிகை நீ
21) காதலின் சிறு வெப்பமும்
உயிர் சுடும்
22) நீ மின்சாரம்
நான் விளக்கு
நீ வந்து வந்து போகிறாய்
நான் எரிந்து எரிந்து அணைகிறேன்
23 ) என் ஓட்டை வீடெல்லாம்
உன் கிரணங்களின் பாய்ச்சல்
24) நீ ஊரைவிட்டுப் போய்விடு
என் கண்ணீர் வெள்ளம்
உன் வீட்டை மட்டும்
மூழ்கடிக்கப் போகின்றது
25) காதலின் நிறமும்
தனிமையின் நிறமும் ஒன்றுதான்
26) சொர்க்கத்திற்கு
உன் நினைவுகள்
வழியாகத்தான் செல்ல வேண்டும்
27) என்னை உயிரோடு சிதைத்து
நீ உருப்பெறுகிறாய்
28) நான் சுயநினைவை இழந்தபோது
உன் நினைவில் இருந்தேன்
29) உனக்காக செத்து செத்து
உனக்காகவே பிழைத்துக் கொள்கின்றேன்
30) என்னுயிரை ஜெபமாலையாக்கி
நீ உருட்டுகின்றாய்
31) காதல்
ஆண்பாலோ பெண்பாலோ அல்ல
அது கண்ணீர்பால்
32) காதல் ஒரு கற்பூரம்
நான் சாகாமலேயே ஆவியானேன்
33) என் சிறிய உறக்கத்தின்
நெடிய கனவு நீ
34) காதல்
உன்னையும் என்னையும் தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கின்றது
35) என் உணர்ச்சியின்
உச்ச நிலை நீ
36) அனைவரின் தவமும்
இங்கு காதலை நோக்கியே
37) காதல் குருடர்களே
நீங்கள்தான் உலகத்தை
முழுமையாகப் பார்ப்பவர்கள்
38) பிழைகளைப் பேசி
நாம் சரிப்படுத்திக் கொண்டோம்
39) வெப்ப இரவில்
மழைக்காற்று நீ
40) காதலி நான் யூதாசு
நான்தான் கவிதைக்கு ஆசைப்பட்டு
உன்னை பிரிவிடம் காட்டிக் கொடுத்தேன்
41) என் இறகுகளை பீய்த்து
நீ காதுகுடைகிறாய்
42) ஓரிரு வார்த்தைகளாலேயே
நீ காதல் சொற்பொழிவாற்றுகிறாய்
43) நீளமான இரவுகளை
உன் நினைவுகளைக் கொண்டு அளக்கின்றேன்
44) காதலி!
உன்னால் மரணமும் நானும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றோம்
45) என் சுவாசப்பையில்
நீ அத்வைதம் அடைகிறாய்
46) என் உயிரின்
கடைசி வினாடி நீ
47) நான் தொலைத்த இரவுகளில்தான்
நீ உறங்குகின்றாய்
48) யார் சொன்னது
உனக்கு காதலென்று
உனக்கும் காதல்
49) உன்னிடம் எப்படி சொல்வது
காதலுக்குதான் மொழியில்லையே
50) உன் ஜீவநதியில் நீராடத்தான்
இந்தக் கவிதை யாத்திரை
51) இருவரின் இரகசியமும்
ஊரறிந்த இரகசியம்
52) நீ ஊமைப்பாடகி
நான் செவிட்டு ரசிகன்
53) கனவுகளின் பாரம் தாங்காமல்
இரவுகள் ஒடிந்தது
54) உன் வெய்யில் மறைவுப் பிரதேசங்களெல்லாம்
எனக்கு மட்டும் வெளிச்சமானவை
55) நீ கனவில் கூட இரகசியமாகவே
சந்திக்க விரும்புகின்றாய்.
- செ.கார்கி