man aloneஎன்னைக் கொல்ல துடிக்கும்
உன் நினைவுகள்
விஷமேறிய நல்ல பாம்புகள்..!

மனப்புற்றுக்குள்
பதுங்கி மறைந்து
மீண்டும் படமெடுத்து ஆடும்..!

பேசப்பட்ட சொற்களில்
ஒன்றுமே இல்லை..!

பேசப்படாத
சொற்களில் தான்
பிரிவு -
உறங்கும் மலைப்பாம்பாக
சலனமற்று இருந்தது..!

இரவின்
இரகசியத்தில் உதிரும்
உன் கண்ணீர்த்துளிகள்
விடிந்த பின்பு -
விழிகளுக்கு தோன்றாத
விண்மீன்களாகின்றன..!

மரணம் -
நேருக்கு நேர் நின்று
'வா' என்று அழைத்திருக்கலாம்..!
பிரிவு என்னும்
முகமூடி அணிந்து
அழைத்திருக்கத் தேவையில்லை..!

காதல் -
ஒரு வழிப்பாதை..!
திரும்பிச் செல்ல
வழிகள் இல்லை..!

காதல் -
நாய்க்குட்டியைப் போல
பின் தொடரத்தான் தெரியும்
முன் செல்லத் தெரியாது..!

காதல் -
ஒரு பிச்சைப்பாத்திரம்..!
அதில் நாணயங்களுக்குப் பதிலாக
நாமே விழுந்து விடுகிறோம்..!

அணைத்த பின்பு
அணைவது காமம்..!

அணைத்த பின்பும்
அணையாமல்
சுடர்விட்டு ஒளிர்கிறது
காதல்..!

உன்னோடு
பேசிக்கொள்ள முடியாத
பொழுதுகளில்
உன் மௌனத்துடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்..!

உன் பெயரை
உச்சரித்த பின்னால்
நான் என்பது
புனைப்பெயராகி விட்டது..!
நீ தான்
என் இயற்பெயர்..!

உனக்காக சிந்தப்பட்ட
கண்ணீர்த்துளிகளில்
எனக்கான
இரங்கல் கவிதைகள்
ஒளிந்திருக்கின்றன..!

காதல் -
செரிக்காத விஷம்..!
வாழவும் விடுவதில்லை
சாகவும் விடுவதில்லை..!

- அமீர் அப்பாஸ்

Comments

2 comments

2
balabharathi
Awesome
Jamzeeth
super

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.