ennu ninte moideen

காதலைப் போல துக்கம் வேறொன்று இருப்பதாக தெரியவில்லை...

இந்தப் படம் பார்த்து விட்டு மனதுக்குள் சுழன்ற சூழல் ஒன்றில்..... நான் தொடர்ந்து மூழ்கிக் கொண்டே இருந்தேன்......... மூர்ச்சையாகி விழுவதைப் பற்றிய யோசனையின்றி....

இப்படித்தான் கிளறி விட்டுக் கொண்டே இருக்கும்.... இடைவெளி முழுக்க மொய்தீனும்... காஞ்சனாவும்.... நிறைந்து வழிந்து கொண்டிருந்தார்கள்........வழக்கம் போல ஒரு காதல் கதை என்று கடந்து விட தேவை இல்லை... அத்தனை நியாயம் செய்யப்பட்டிருக்கிறது... கொஞ்சம் நீண்ட காதல் கதைக்குள்.. அவர்களின் தீர்க்கமான காத்திருப்பு... இந்த மனிதர்களைக் கடந்து ஆழமாய்... மிக ஆழமாய்.. ஒரு கடலைப் போல அது தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது...இன்னும் எத்தனை காலத்துக்குதான் காதலை மூர்க்கமாக எதிர்க்கும் இந்த மானுடம்...? புரியவே இல்லை... பிடித்தால் சேர்ந்து கொள்ளட்டுமே.. இதில் எங்கிருந்து வருகிறது.....சாதி.....மதம்.. கெளரவம்.....

பிடித்த இரு மனங்களை சேர்த்து வைக்காத திருமணங்களை நான்... என் கால்களால் எட்டி உதைக்கிறேன்.."சற்று அருகே  வாடா..... காலா உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்"- என்று என் பாட்டன் கூறியது போல......

இந்த வறட்டு தத்துவ வெறிகள் கொண்ட மனிதர்களை நான் துச்சமென மிதித்தே கடக்கிறேன்.... காதலால் கசிந்துருகி தானே இங்கு எல்லாமே கற்பிக்கப் பட்டிருக்கிறது........ எல்லாம் அன்பை நோக்கிய பயணம் தானே...அன்பில்லாதவன் மரித்தே...... வாழ்கிறான் என்பது என் மொழி.......காதலால் ஆனது தானே இந்த உறவும்.. இந்த வாழ்வும்.. அது மீட்டும் நாதத்தில்...எப்படி வருகிறது சாதி.... எங்கனம் சேர்கிறது மதம்....படம் நெடுக கேள்விகள் சூழத் தான் படம் பார்த்தேன்.....கேள்விகளாலும்... வேள்விகளாலும்.... பதில் கிடைக்காத வெளியில்..நிஜம் தேடி புறப்படும்.... பயணங்களின் தூரத்துக்கு.... யாரின் வினா நிறம் கூட்டும்.... யாரின் கனா அமுதூட்டும்...? ஆணாதிக்க..... அப்பா ஆதிக்க..... அண்ணா ஆதிக்க......என்று ஒரு பெண்ணை அவள் வாழ்நாள் முழுக்க சித்ரவதை செய்து......  ஒரு மாதிரி அடிமையாக வைத்திருப்பது அப்பட்டமான தனிமனித உரிமை மீறல்....... தன் மகள் தன் மகன் என்பதற்காகவே அவளின் மீது அவனின் மீது தனது எல்லா ஆசைகளையும்.....கோபங்களையும்... வாதங்களையும்.. முடிவுகளையும் பிரயோகிக்கலாம் என்று எவன் சொன்னது...... அவர்கள் உங்கள் மூலமாகத்தான் வந்திருக்கிறார்கள்.. உங்களிடமிருந்து வரவில்லை...என்பதை அந்த உங்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்...

இந்த படத்தில் நிறைந்து வழியும் காதலில்...... அத்தனை இயல்பு... இறுக்கம் தளர்ந்து பின் மீண்டும் இறுக்கமாகி விடும் பாத்திரத்தில் பார்வதி... அல்ல அவர்.. காஞ்சனா... மொய்தீன்- பிர்த்வி- இனி பாராட்ட எல்லாம் ஒன்றும் இல்லை.. கடந்து விட்டவர்..கண்களில் நிறைகிறார்..... இறுதி வரைக்கும்... இறுதிக்கு பின்னும்....

மகனையே குத்தி சாய்க்கும் அளவுக்கு.. சாதி மத பேய் முற்றிப் போன சமுதாயத்தின் ஒரு சோறு பதம்தான் மொய்தீனின் தந்தை கதாபாத்திரம்...... சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால கட்டத்தில் நடக்கிறது கதை .... இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் சண்டைகள் பற்றிய முன்னுரையாக இருந்தது....அன்றும் நடந்தேறிய ஆகப் பெரிய அதே அரசியல்... 

ennu ninte moideen 1

வெறும் கடிதங்களாலே வாழ்க்கையை நடத்தும் கதை நாயகனும் நாயகியும்...தனித்தனியாக சிறை பட்டாலும், மனத்தால்..... சேர்ந்தே இருப்பதில்தான்... கதையின்.... காதலின் ஆழம் இன்னும் மிகப் பெரிய அனுபவமாக மாறுகிறது....அவர்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டே இருக்கிறார்கள்... அது கண்ணீராலும்... கனவுகளாலும்...அன்பாலும்.... நேசத்தாலும்... கருணையாலும்.... காமத்தாலும்...ஜாடைகளாலும்... சமிஜைகளாலும்.. நாடகங்களாலும்.. உணர்த்து நிலைகளாலும்... நிகழ்த்து உணர்வுகளாலும் நிறைந்து வழிந்து மீண்டும் காதலாகவே மாறிக் கொள்கிறது.......நரைக்கத் துவங்கிய பின்னும்... ஒருவர் வழியை ஒருவர் காத்து நிற்பது காதலுக்கு மரியாதை....

"இவள் இல்லனா அவ.. அவனும் இல்லனா.....எவனாது ஒரு அமெரிக்க மாப்பிள்ளை"- என்று ஜஸ்ட் லைக் தட் கடந்து விடும் இன்றைய யுவ யுவதிகள் காண வேண்டிய படம்.. காதல் அப்படி ஒன்றும் இலகுவல்ல....காதலும் கடந்து போகும் என்று கடந்து போக.....அது... ஒரு தீர்க்கம்..... ஒரு நம்பிக்கை.... ஒரு அனுபவம்.. .. ஒரு தேடல் .. ஒரு தத்துவம்...ஒரு போராட்டம்...ஒரு மாற்றம்..... பிரிவோ...... இணைவோ... அது காதல்... அது ஆத்மார்த்தம்.... அடிப்படையில் அது அன்பு.... என்னைப் பொறுத்த வரை..... காதலிக்கப் படாமல் கூட இருக்கலாம்..... காதலிக்காமல் இருந்து விடவே கூடாது.... இந்த வாழ்க்கை காதலுக்கானது........ அது ஆகாயம் ரசிப்பது போலொரு அந்தரங்கம்....அது ஒரு வாழ்வியலின் சூத்திரத்தை கற்றுக் கொடுக்கிறது...

படம் நெடுக மழையும்... ஆறும்... வந்து கொண்டே இருக்கிறது.. ஒரு கட்டத்தில் உள்ளே ஏதோ தட்டியது....இயக்குனர் வேறு ஒரு கிளைமாக்ஸ் வைக்கப் போகிறார் என்று... அது அப்படியே நடந்தது....கடைசி வரை அவர்களை சேர விடாமல் விரட்டிய வர்க்க மனம்... அவர்களின் சூழலாகவும் உருவெடுத்து கதை நாயகனை பலி வாங்கும் இடத்தில்..."அட போங்கடா....."- என்று மனதுக்குள் திட்டவும் தோன்றியது, பொதுவாக.  நாயகன் இறந்த பிறகும்....நாயகன் வீட்டுக்குள் நாயகனின் அம்மாவால் மருமகளாகவே  அழைத்து செல்வதில்.....ஏதோ ஒரு ஆதிக்க வேலியை உடைத்ததாகவே உணர்ந்தேன்... கொஞ்சம் முன்னமே உடைத்திருக்கலாம்......என்று யோசிக்கையில்... அது கண்ணீர் சுழலை கடந்து ஆழமிக்க கரை தேடி .. ஒரு காற்றைப் போல.. கனவைப் போல..... மீண்டும் மீண்டும்.....காதலின் புதிய  நிறம் பூசி....தேவையான நியாத்தின் சுவடுகளை பதிய வைத்துக் கொண்டே சென்றது....

காலம் முழுக்க காத்திருந்த இந்த காதலை...அடைத்து வைக்கவே முடியாது....... காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

- கவிஜி 

Pin It