மேட்டாங்காட்டு செம்பரப்பில்
வெம்மை தணிக்கிறது
அவள் ஓடைப் பாதங்கள்...
கவிதையா என்றாள்
கவிதையும் என்றேன்.

ஆடுகளாய் மேய்ந்து
கொண்டிருந்தோம்
சில போது அவளை மேய்க்கும்
கடவுள் நான்
சில போது என்னை மேய்க்கும்
பிதா அவள்..!

வழக்கம் போல நாங்கள் ஓய்வெடுக்கும்
இடத்திலிருக்கும்
ஒற்றைப் பனையில்
குருவி உட்கார்ந்தாலும்
பனம் பழம் விழுந்து விடுகிறது..!

கூழாங்கற்கள் தேடும்
தொடையளவு ஆற்றுக்குள்
வேண்டுமென்றே சரிந்து விழுவது
யாருக்குத்தான் பிடிக்காது என்றாள்....
சரிந்து விழுந்தது அத்தனை நேரம்
பொறுக்கிய குளக் கண்கள்...

கூடை தளும்ப பானை சலம்ப
கள் கொண்டு போகும்
காட்டு துரைச்சி மேல் கண்படுகையில்
சடக்கென்று களை வெட்டி வீசும்
அவள் கத்திக்கு மகாராணியின் வாள் நினைப்பு.

நாக்கு கடித்து முகம் துடைக்கிறது
பின் மதிய வெக்கை சுளுக்கல்கள்...

கருவேல மரங்களுக்கிடையில்
எப்போதாவது பூத்து விடும்
காட்டுப் பூவை காண்கையிலெல்லாம்
என் விறகு சுமைக்குள் அவள் சுமையும்
ஏறி விடுகிறது...

நடந்து தீர்ந்த பின்
உலரும் வெயிலென இரவோடு
வீடு திரும்புகையில்
படக்கென்று கள்ளிப்பழம் ஒன்றை
கையில் திணித்துச் செல்கிறாள்...

இனி முள்ளாய் இனிக்கும்
இவ்விரவும்.....!

- கவிஜி

Pin It