இடிக்கப்பட்ட
திண்ணையில் இருந்து
உதிர்கின்ற கற்களில்
மூதாதையர்களின் அனுபவங்கள்
மூச்சு விடுகின்றன
ஒவ்வொரு வீட்டின் திண்ணைகளிலும்
எழுதப்படாத
இலக்கியத்தின்
மகத்தான தருணங்கள்
காற்றில்
கதையாடிக் கிடக்கின்றன
ஒவ்வொரு நாள்
மாலையிலும்
இருள் வந்து கூடி
பொழுது புலர்வது போல்
அன்றாடம்
வழிப்போக்கர்கள்
தலைசாய்த்து
செல்கின்றனர்
பாத யாத்திரை செல்லும்
பக்தர்களின் கால்கள்
காயப்படும் வேளைகளில்
ஒத்தடங்கள் தருவதற்கு
கடவுள்
தேர்வு செய்த இடமாக
திண்ணைகள் திகழ்ந்தன
வீட்டைச் சுற்றி
எழுப்பப்படும்
சுற்றுச் சுவர்களில்
உரையாடலுக்கான
வாசல்கள்
அடைக்கப் படுகின்றன
ஆளுயரக் கதவுகள்
ஊமை நாவுகளால்
உருவாக்கப் படுகின்றன
வீட்டின் முகப்பில்
கட்டப்படும்
வரவேற்பு அறைகள்
எல்லையற்ற அன்பிற்கும்
எல்லைகள்
வகுத்து விடுகின்றன
வெற்றிலைப் பெட்டியோடு
அமர்ந்திருக்கும் மூதாட்டி
இந்த இடத்தில்
இருந்து தான்
வசீகர இளமையின் வாசனைகள்
பூட்டிக்கிடக்கும்
மொட்டுக்களின்
இதழ்க் கதவுகள் திறந்து
வசந்த காலங்களை
வரவேற்றாள்
திண்ணைகள்
மனக்குறைகள்
தீர்த்துவைக்கும்
மனித நீதிமன்றங்களாக
நிகழ்ந்தன
திண்ணைப் பேச்சுகள்
ஆளுகின்ற அரசாங்கத்தின்
அச்சாணிகளைக் கழற்றி விட்டு
சரித்திரத்தில் இருந்து
அதன் சக்கரங்களை
உருண்டோடி
விழச் செய்கின்றன
திண்ணைகள்
கடந்த காலத்தின்
அடையாளங்கள் மட்டும் அல்ல
வான்நோக்கி வளரும்
உயர்ந்த கட்டிடங்களால்
மனிதர்கள்
குள்ளமாகிக் கொண்டே போவதைக்
காட்டும் குறியீடுகளின் எச்சங்கள்
கால வரிசையின்
கண்ணாடிச் சிதறல்கள்
தோற்றுப்போன
மனிதர்களின்
வாழ்விலும் கூட
அன்பு தோற்பதில்லை
வெற்றிப்பெற்றதாக
பெருமிதம் கொள்ளும்
மனிதர்களில் பலரும்
அன்பை
வெற்றிக் கொள்ள
அறிந்திருக்கவில்லை
காற்றின் ஈரம்
உலர்ந்தவிட்ட இடத்தில்
பொழியாத
மழைக்கூட்டம் போல்
மனதின் ஈரம்
உலர்ந்து விட்ட
சொற்களில் இருந்து
அன்பின் மலர்கள்
பூப்பதில்லை
- அமீர் அப்பாஸ்