இந்து சமூக அமைப்பு ஜனநாயகமற்றதாக இருப்பது தற்செயலானதோ, விபத்தோ அல்ல. அது ஜனநாயகமற்றதாக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணங்களாகவும், சாதிகளாகவும், சாதியைக் கடந்த பிரிவுகளாகவும் பிளவுபடுத்தும் அதன் சமூகப் பாகுபாடு ஒரு கருத்தியல் அல்ல ; மாறாக அதுவே அதன் சட்டம். இவையே ஜனநாயகத்திற்கு எதிரான தடைக்கற்கள்.

-டாக்டர் அம்பேத்கர்


“பாகுபாடு செத்துப் போச்சு”

நடுவணரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு ‘தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் இல்லா ஆண்டு 2007 - 2008’ என்ற அறிவிப்புடன் அரைப்பக்க விளம்பரத்தை அனைத்து நாளேடுகளிலும் வெளியிட்டது (15.9.2007). எஸ்.சி. / எஸ்.டி.களுக்கு எதிரான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை ஒழிப்பதற்காக அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்று, அரசு மரபுப்படி நிறைய பொய்களை அதில் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, தமிழக காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை, தமிழகத்தின் கிராமங்களில் தீண்டாமை பாகுபாடு நிலவுகிறதா என ஆய்வு செய்துள்ளது. அதில் சமூகப் பாகுபாடுகளின்றி கிராமங்கள் இருக்கின்றன என்ற ‘அரிய’ உண்மையையும் அது கண்டுபிடித்துள்ளது.

தமிழகமெங்கும் பரவலாக 338 குக்கிராமங்களில் காவல் துறை செய்த ஆய்வில், வெறும் 0.35 சதவிகித அளவே இரட்டை தம்ளர் உள்ளிட்ட பாகுபாடுகள் காணப்பட்டதாம்! தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் 12 பேர்தான் பாகுபாடு இருப்பதாகத் தெரிவித்தார்களாம்! “அடுத்த ஆண்டில் 38 ஆயிரம் கிராமங்களில் சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப் போவதாக”வும் இத்துறைக்கான அய்.ஜி. பிரதீப் வி.பிலிப் கூறியுள்ளார் (‘டைம்ஸ் ஆப் இந்தியா' 10.7.08). பாகுபாடே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, ஏன் 38 ஆயிரம் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

ஜாதியின்றி அணுவும் அசையாது!

அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் காவலர்களின் துப்பாக்கி காணாமல் போனது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கான காரணம் தற்பொழுது உண்மை அறியும் ‘நார்கோ’ சோதனையில் தெரிய வந்திருப்பது, மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. சாதிப் பெயரை சொல்லி திட்டிய எஸ்.பி.யை பழிவாங்குவதற்காகவே, தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்ததாக உண்மை கண்டறியும் சோதனையில் காவலர்கள் கூறியுள்ளனர்.

தருமபுரி மாவட்ட எஸ்.பி. நஜ்மீர் கோடா, போலிசாரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 போலிசார் அவரைப் பழிவாங்குவதற்காக, காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகளை நக்சல்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளனர் (‘தினகரன்’ 21.7.08). சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய எஸ்.பி. மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாயுமா?

காவலர்களின் துப்பாக்கி ‘காணாமல் போனதற்கு’ அது தானே மூலகாரணம்! டி.எஸ்.பி. என்ன, தமிழக அரசின் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரே (என்.சுரேஷ்ராஜன்), செ. ஜனார்த்தனன் என்கிற கன்னியாகுமரி மாவட்ட தனித்துணை ஆட்சியரை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக அவர் மீது 28.7.2008 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (‘தி இந்து’ 29.7.08). சாதி பாகுபாடுகளே இல்லை என்று சாதிக்கும் அரசு நிர்வாகத்தின் லட்சணம் இது.

இன்னொரு கயர்லாஞ்சி

கோவை மாவட்டம் உடுமலை அருகில் உள்ள ஆனைமலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் அக்கா மகன் மனோகரனுக்கு 4 தென்னந்தோப்புகள் உள்ளன. அதில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள கோழிப்பண்ணையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், அவரது மனைவி மீனாட்சி (35), மகள் செல்வி (18) உள்ளிட்டோர் குடும்பத்துடன் கொடைக்கானலிலிருந்து வரவழைக்கப்பட்டு, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

5.7.2008 அன்று முருகனின் மனைவி தலையில் ரத்தக் காயத்துடன் பிணமாக இருந்திருக்கிறார். அருகில் ரத்தக்கறையுடன் சம்மட்டி. அவருடைய மகள் குடிசையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இரு கைகளும் கட்டப்பட்டு, உடலில் துண்டு துணியுமின்றி தென்னங்கன்று வைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த தண்ணீர் நிறைந்த தென்னங்குழியில் தலை திணிக்கப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். ஆனால் காவல் துறை, வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யாமல் சந்தேகத்திற்கிடமான மரணம் என்றே பதிவு செய்துள்ளது.

இதில் ‘விழுதுகள்’ அமைப்பு தலையிட்டுப் போராடியும், வழக்குப் பதிவுகள் மாற்றப்படவில்லை; குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழங்கு சீர்குலைந்து விட்டது என எதிர்க்கட்சிகள் நாள்தோறும் ‘வாய்ப்பாடு’ பாடுகின்றனர். ஆனால் இவர்கள் கூட, தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் சமூக வன்கொடுமைகள் குறித்தும், அதன்மீது அரசின் அலட்சியப் போக்கு குறித்தும் மவுனம் சாதிக்கின்றன. ஜாதி காக்கும் அரசியல்.

சாதி ஒழிப்புக்கு கிடைத்த பரிசு

கோவை மாவட்டம் ஊஞ்சப்பாளையம் பகுதியில் சாதி ஒழிப்புப் பணியை மேற்கொண்டிருந்தவர் சிற்றரசு. விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றியபோது அப்பகுதியில் உள்ள கோமதி என்ற கவுண்டர் சாதி பெண்ணை காதலித்து, சாதி இந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்ததால், இவர்களிருவரும் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும் கோமதி நிறைமாத கர்ப்பிணியாக பெருமாள் பாளையத்தில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் 6.7.08 அன்று வேலாயுதம்பாளையம் என்ற இடத்தில் சிற்றரசு அரை நிர்வாண நிலையில், தலை நசுக்கப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். குற்றவாளிகளை கைது செய்யவும், வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யவும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. சாதி ஒழிப்புப் போராளி சிற்றரசுக்கு நம் வீர வணக்கம்.

எஸ்.சி. மயிருக்கும், பி.சி. மயிருக்கும் வேறுபாடு?

திண்டுக்கல் வத்திப்பட்டி கிராமத்தில் உள்ள முடிதிருத்தகங்களில், தலித்துகளுக்கு முடிவெட்ட அனுமதி இல்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமரின் அனுபவம் இது: “என் மகள் வைதேகியை முடியை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வான்னு டீச்சர்கள் சொன்னதால், சேதுராமன் வச்சிருக்கும் சலூனுக்கு என் மகளுடன் போனன். ஆனால் அவர், நாங்க பி.சி.க்கு மட்டுந்தான் முடி வெட்டுவோம், எஸ்.சி.க்கெல்லாம் வெட்டமாட்டோம்னு சொல்லிட்டார். ஊர்ல இருக்கும் மத்த மூணு சலூன் கடைகளுக்கும் அழைச்சிட்டுப் போயும் யாருமே வெட்டிவிட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

அடுத்து, “எங்க அப்பாவுக்கு ஒரு வருடமா உடம்பு சரியில்லை. நடக்க முடியாம படுத்த படுக்கைதான். தலைமுடி மண்டிப் போய் கிடந்ததால், கைத்தாங்கலா எங்கப்பாவை சலூனுக்கு அழைச்சிட்டுப் போனேன். முடிவெட்ட முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க” என்கிறார் சின்னப் பொண்ணு வேதனையுடன். சாதி இந்துக்களான அம்பலக்காரர்கள் தரப்பில் இது குறித்துக் கேட்டபோது, “காலங்காலமாக இப்படித்தாங்க... யாரை எங்க வைக்கணுமோ அவங்களை அங்க வச்சிருக்கோம். இதில் என்ன தப்பு இருக்கு?” என்கிறார்கள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வாசுகியிடம் கேட்டபோது, “எனக்கும் புகார் வந்தது. உடனே தாசில்தாரையும், டி.எஸ்.பி.யையும் அங்கே அனுப்பி விசாரணை நடத்தினோம். அதேபோல் அங்கே ‘பீஸ் கமிட்டி’யை அமைத்து, எல்லா இடங்களிலும் தலித்துகளுக்கு சம உரிமை கொடுக்கணும்னு வலியுறுத்தி இருக்கோம்” என்றார் ("நக்கீரன்' – 2.7.08). தலித்துகளை ‘வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருப்பதால்தான்’ இவர்கள் சூத்திரன்களாக இருக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாதவர்களை சட்டமும் காவல் துறையும் மட்டும் என்ன செய்து விடும்?

‘தலித்துகள் இந்துக்கள் அல்ல’ என்ற வரலாற்று உண்மையை வலியுறுத்தி, அவர்களை இந்து சிறையில் இருந்து மீட்க பாபாசாகேப் அம்பேத்கர் துணையுடன் நாம் முயலும்போது, கிராமத்தில் ‘இந்து’ என்றெல்லாம் யாரும் தங்களை சொல்லிக் கொள்வதில்லை. நகரங்களிலும், மாநகரங்களிலும்தான் மதப் பிரச்சினை இருக்கிறது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ‘மத அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை' என்பதை வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், மேலோங்கி நிற்கும் ஜாதி அடையாளத்திற்கு மூலகாரணம் இந்து மதம் அல்லவா?

அதே கிராமத்தில் இருக்கும் முஸ்லிமுக்கும், கிறித்துவனுக்கும் இத்தகு தீண்டாமை இல்லையே! ‘நகர்ப்புறங்களில் யாருங்க ஜாதி பாக்குறாங்க' என்று சொல்லி, திட்டமிட்டு இந்து அடையாளம் வளர்த்தெடுக்கப்படுகிறது. கிராமங்களில் ‘யாருங்க மதத்தைப் பாக்குறாங்க' என்று சொல்லி ஜாதி அடையாளம் வளர்த்தெடுக்கப்பட்டு அதற்கு வெவ்வேறு குல, இன, சிறுதெய்வ, மண்ணாங்கட்டி ‘வரலாறு’கள் சொல்லப்பட்டு (சமஸ்கிருதமயமாக்கல்) ஜாதி அமைப்பு நிலைப்படுத்தப்படுகிறது. பார்ப்பனியத்தின் இத்தகு சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு இந்து அடையாளத்தையும், ஜாதி அடையாளத்தையும் மயிருக்கு சமானமாகக் கருதி அதைப் பிடுங்கி எறிவோம்.

Saibaba
பெட்டிச் செய்தி

சிறைக்காவலில் அல்லது போலிஸ் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர். 2002 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 7,468 பேர் சிறைக்காவலில் அல்லது போலிஸ் காவலில் மரணம் அடைந்துள்ளனர். நாளொன்றுக்கு 4 பேர் வீதம் ஆண்டுக்கு 1,494 பேர் இறந்துள்ளனர். இத்தகைய இறப்புகளுக்கு துன்புறுத்தல்களே காரணம். 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இதற்குக் காரணமானவர்களில் மொத்தம் 7 போலிசார் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 1994 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, காவலில் நிகழ்ந்த வன்முறைகளில் 684 பேருக்கு மட்டுமே தேசிய மனித உரிமைக்கான ஆணையம் இழப்பீடு வழங்கியுள்ளது.

-ஆசிய மனித உரிமைகள் மய்யம், ‘இந்தியாவில் துன்புறுத்தல்கள் 2008’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் எழுதியுள்ள 'வர்சஸ் ஆப் பகவத் கீதா' என்ற நூலை சாய்பாபா வெளியிட்டார். 18.7.2008 அன்று புட்டபர்த்தியில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், உள்துறை அமைச்சர் சாய்பாபா காலில் விழுந்து ஆசி பெறுகிறார். பிறகெப்படி ஆசிரமத்தில் நடைபெரும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை காவல் துறை பதிவு செய்து, ‘பாபா பயங்கரத்தை’ கட்டுப்படுத்தும்?


Pin It