தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட "'மாற்று' என்ற பெயரில் ஏமாற்றுகளின் அணிவகுப்பு!" என்ற சிறு வெளியீட்டில் இன்றைய தேர்தல் முறைகள் குறித்தும், த.நா.ம.லெ.க.வின் நிலைப்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் பல பிரச்சனைகளை முன் வைத்து இவைகளை தீர்க்க முடியுமா(?) என்று கேள்வி எழுப்புகிறது. ஆனால், பிரச்சனைகளின் உண்மைத் தன்மையை வர்க்க கண்ணோட்டத்தில் ஆராயாமல் மேலோட்டமாக மட்டுமே பார்ப்பதாக உள்ளது. மேல்கட்டுமானத்தில் வெளிப்படும் பிரச்சனைகளை சிலவற்றை சுட்டிக் காட்டி பேசுகிறார்கள். வர்க்க கண்ணோட்டத்தில் இன்றைய பிரச்சனைகளை பற்றி பேசவில்லை. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், அரைபாட்டாளிகள் ஆகியோரின் பிரச்சினைகளை வர்க்க கண்ணோட்டத்தில் ஆராயமால், மேலோட்டமாக, தமிழர்களின் பிரச்சினை என்பதாகவே பேசுகிறது. தமிழகத்தில் (இவர்கள் முன்வைக்கும் தமிழ்தேசிய அடிப்படையிலேயே கூட) பல்வேறு வர்க்கங்களின் நிலை எவ்வாறு உள்ளது, சுரண்டு வர்க்கங்கள் மற்றும் அவர்களின் அணிச் சேர்க்கை, சுரண்டப்படும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் நட்பு சக்திகள் ஆகியவற்றைப் பற்றி தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த வித விவரிப்பையும் காணோம்.
தொழிலாளர்கள், ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் வைக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்படுவது குறித்தும், தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு கூட கடுமையாக போராட வேண்டியதன் நிலையையும், தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்படுவதை குறித்தும், தொழிலாளர் விரோத போக்கின் நடப்பு நிலைமைகள் குறித்தும் எதுவும் பேசவில்லை. பாட்டாளி வர்க்க தலைமையில் தமிழ் தேசிய மக்கள் சனநாயக குடியரசு அமைப்பது இலட்சியம் என்று கூறும் த.நா.ம.லெ.க, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலை குறித்தும் அதன் நெருக்கடிகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் தவறியும் வாய் திறக்கவில்லை.
இங்கு அரசு என்பது இந்திய அரசாக மட்டுமே உள்ள நிலையில், இந்திய அரசின் வர்க்கத் தன்மை, பிற நாடுகளின் அரசுகளோடு அதற்கு உள்ள வர்க்க உறவுகள், தனியார்மய-தாரளமய-உலகமய திணிப்புகளுக்கு பின்பான நிலை ஆகியவற்றை பற்றிய எந்த விளக்கமும் இல்லை. பல்வேறு வர்க்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நெருக்கடிகள் ஆகியவை பற்றி எந்த வரையறுப்பும் இல்லை.
தொழிலாளர்களின் போராட்டங்கள் இந்திய அளவில் ஒருங்கிணைந்து நடந்து வருகின்றது; ஆண்டுக்கு ஒருமுறை முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் சார்பாக பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கின்றன (அவை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை முழுமையாக பிரதிபலிக்காவிட்டாலும், பாட்டாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தும் வேலையை செய்து வருகிறது). இதற்கு எந்த இடத்திலும் தேசியத்தன்மை தடையாக இல்லை. ரயில்வே, வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எண்ணற்ற துறை சார்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் என்று தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அப்படியான தேசம் தழுவிய வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதில்லை; தமிழ்த் தேசிய விடுதலை குறித்து பேசும் த.நா.ம.லெ.க, தமிழக பாட்டாளிகள் பிற தேசிய இனப் பாட்டாளிகளோடு சேர்ந்து போராட எவை தடையாக இன்னமும் நீடிக்கின்றன என்பது குறித்து எவ்வித விளக்கமும் இல்லை
இத்தகைய தன்மைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தன் அக விருப்பத்தின் அடிப்படையில் தமிழக பாட்டளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரச்சனைகள் என்று கூறி அவற்றையும் வர்க்க அடிப்படையில் ஆராயாமல், பிரச்சனைகளின் வெளிபுறத் தன்மைகளை மட்டுமே முன்னிறுத்துகிறது. வர்க்க கண்ணோட்டத்தில் மார்க்சிய வழியில் இதை அவர்கள் முன்வைத்தால் அவர்களின் தமிழ்த்தேசிய கோட்பாட்டிற்கு தடை வந்து விடும் என்பதால் இதனை புறக்கணிக்கின்றனர்.
தற்போது தமிழக மக்களின் பிரச்சனைகளாக சுட்டிக் காட்டுபவைகள் கூட முதலாளித்துவ கட்சிகள் வைக்க கூடிய தன்மையிலேயே முன் வைக்கின்றன.
சிங்கள இராணுவம், தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லுவதின் பின்னணியில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் கடல் வளச் சுரண்டலை சுட்டிக் கட்டாமல், இந்திய -சிங்கள அரசின் கூட்டு குறித்து சுட்டிக் காட்டாமல், சிங்கள தேசிய இனம் மற்றும் தமிழ் தேசிய இனத்திற்குமான முரண்பாடாக முன்வைக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள மீனவர்களில் ஒரு பிரிவினர், பொருளாதார ரீதியில் வலுவடைந்து நவீன மீன்பிடி கலங்களை கொண்டு மீன்வளங்களை மொத்தமாக வாரி சுருட்டுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து எதுவும் இல்லை. இவர்கள் (பண பலம் படைத்த மீனவர்கள்) சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிப்பதை ஒப்புக் கொண்டு அதனை உடனடியாக சரி செய்ய இயலாது, கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து கொள்வதாக, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட ஆற்று நீர் சிக்கலில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் என்ன? அதனை எப்படி தீர்ப்பது? தமிழகத்தின் உரிமை என்பது என்ன? பிற தேசிய இன விவசாயிகளின் தேவை என்ன? அவற்றை எப்படி தீர்த்துக் கொள்வது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மேலோட்டமாக தமிழகத்திற்கு சொந்தமான ஆற்று நீரை பெற்று தர முடியுமா என்று கேட்கிறது.
வங்கி துறை, இரயில்வே துறை உள்ளிட்ட எண்ணற்ற துறைகளை தமிழகத்திற்கென்று தனியாக கேட்கும் இவர்கள், தொழிலாளர் துறைகளுக்கு மட்டும் இந்திய அரசிடம் சீர்த்திருத்தங்களை கோருகிறார்கள். உலகமயம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், இந்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் ஆகியவை பற்றியும், இவற்றில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்தும், எந்த வித பகுத்தாய்வையும் காண முடியவில்லை.
கல்வித் துறையில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் திணிப்புகளை பற்றி பேசும் போது கூட சி.பி.எஸ்.சி முறையில் மட்டுமே உள்ளதாக கூறுகிறார்கள், தமிழக அரசின் மாநில பாடத்திட்டமும் ஆங்கில வழியையும் கொண்டுள்ளது பற்றி இவர்கள் வாய் திறப்பதில்லை. தமிழக அரசும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியை படிப்படியாக கொண்டு வருகிறது.
அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி தமிழில் வழங்குவதாக மற்றோர் இடத்தில் கூறும் த.நா.ம.லெ.க. இதில் மக்களின் விருப்பங்கள் மற்றும் ஆங்கில கல்வி வழியை தேர்வு செய்யும் நிலைக்கு சென்றதற்கான காரணங்களை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அவற்றை வெறும் திணிப்புகள் என்று கூறி உண்மை நிலைமையை பார்க்க தவறுகிறது. இன்றைய உற்பத்தி முறைக்கு பொருத்தமான அளவில், நவீன அறிவியலை, தொழில்நுட்பங்களை தமிழ் மொழி தற்போது பெற்றிருக்கவில்லை என்பதையும், இது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், அதனை நோக்கி மக்கள் தள்ளப்படுகின்றனர் என்பது குறித்தும் எதுவும் கூறவில்லை. மேலோட்டமாக திணிப்புகள் என்று கூறி அதனை இன முரண்களாக சித்தரிக்கும் த.நா.ம.லெ.க, அதன் வரலாற்று வழியிலான மாற்றத்திற்கான காரணங்களை பார்க்க மறுக்கிறது.
“குறிப்பிட்ட ஒரு நாட்டில், வாணிப உறவுகளின் நலன்களை முன்னிட்டு எந்த மொழி தெரிந்திருந்தால் பெரும்பாலோருக்கு அனுகூலமாய் இருக்கும் என்பதைப் பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள் தாமாகவே தீர்மானித்துக் கொண்டுவிடும்” என்று லெனினியம் கூறுகிறது (தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்).
மேலும் அழிந்து கொண்டிருக்கும் சமசுகிருதம், உற்பத்தி முறை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து வழக்கொழிந்து போன சமசுகிருதம் திணிக்கப்படுவதாக கூறி இவர்களே அதற்கு உயிரூட்டி வருகின்றனர். இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கி, சில சிறப்பு சலுகைகளை இந்திய அரசு அளித்து வந்தாலும் கூட இந்தி மொழி படித்தவர்களும் வேலை வாய்ப்பிற்காக சொந்த இடங்கள் விட்டு வேறு மாநிலங்ககளுக்கும், வெளி நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். அங்கு கொத்தடிமைகள் போன்று வேலை செய்து வருகிறார்கள்.
இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்திய அரசு தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய இனங்களிடயே முரண்களை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு த.நா.ம.லெ.க.வும் பலியாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கு அரசு வேலை வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் த.நா.ம.லெ.க உழைக்கும் வர்க்கம், சுரண்டும் வர்க்கம் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அனைவரையும் உற்பத்தியில் பங்கேற்பதற்கான திட்டம் குறித்து இங்கு எதுவும் பேச வில்லை. அனைவரையும் உற்பத்தியில் பங்கேற்பு என்பதை முன்வைக்காமல் அனைவருக்கும் அரசு வேலை என்று முதலாளித்துவ கட்சிகளின் ஏமாற்றுகளை இதுவும் முன்வைக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கோரும் த.நா.ம.லெ.க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிற தேசிய இன மக்களுக்கு எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. பிற தேசிய இன மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்குரிமை போன்றவற்றை வழங்க கூடாது என்று “தமிழ்த் தேசிய பேரியக்கம்” கோருவதற்கும், அவர்கள் (இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்துள்ள உழைக்கும் மக்கள்) பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் த.நா.ம.லெ.க.விற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. இரண்டுமே இனவாதம் தான்.
அது மட்டுமல்லாமல், தமிழீழ அரசு அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று கோரும் த.நா.ம.லெ.க காசுமீரில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை பற்றி வாய் திறக்கவில்லை. த.நா.ம.லெ.க.வின் தமிழ் இனவாதம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. காசுமீர் மக்கள் மீது இந்திய அரசு நாள் தோறும் செலுத்தி வரும் இராணுவ ஒடுக்குமுறைகள் குறித்து மறந்தும் அது பேசவில்லை. சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து பேசும் அதே வேளையில், சிறுபான்மை முசுலீம்கள் பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு சிறையில் அடைக்கபடுவது குறித்தும், இந்தியாவில் உள்ள பிற தேசிய இனத்தை சார்ந்த போராளிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கபடுவது குறித்தும் எதுவும் வாய் திறக்காமல் இருப்பதும் இவர்களின் இனவாதத்திற்கு சான்றாக உள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேரின் ஆயுள் தண்டனை குறித்தும், சங்கம் ஆரம்பித்ததற்காக மாருதி சுசுகி ஆலை தொழிலாளர்கள் இன்னமும் 60க்கும் மேற்பட்டோர் நான்காண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும், எண்ணற்ற தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி சிறைப்பட்டிருப்பது குறித்தும் மவுனம் சாதிக்கிறது.
அதற்காக, ஈழத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் கூடாது என்பதல்ல. அனைத்து தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின், பாட்டாளி வர்க்க கட்சிகளின் கடமை. ஆனால், த.நா.ம.லெ.க இனவாதத்தில் சிக்கியுள்ளதால், அவர்களுக்கு தங்கள் சொந்த இன உறவுகள் மட்டுமே தெரிகிறது. பிற தேசிய இன ஒடுக்குமுறைகள் குறித்து தெரிவதில்லை.
மருத்துவம் குறித்து பேசும் போது கூட சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை கோருகிறது. ஆனால், பிற மருத்துவ முறைகளின் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் சரியான மருத்துவ முறைகளை அனைத்திலிருந்தும் ஒருங்கிணைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் எதையும் பேசவில்லை.
நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் ஒரு அங்கமான ஜல்லிகட்டின் மீது தீராத காதல் கொண்டு அதனை நடத்த முடியுமா என்று கோருகிறது. ஜல்லிகட்டு தமிழர்களின் பண்பாடு என்ற அடிப்படையில் அதனை கோருகிறது. ஆதிக்க சாதிகளின் ஆதிக்க தனத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு விழாவாகவும், மனித இனத்திற்கு விரோதமான பண்பாடாகவும் விளங்கும் இதனை தூக்கி நிறுத்துவதும், த.நா.ம.லெ.க.வின் இனவாதத்தை அம்பலப்படுத்துகிறது. தமிழர்கள் கலாச்சாரம் என்ற பொதுத் தன்மையில் ஆதிக்க சாதி நிலவுடைமைகளின் பண்பாட்டை அனைவருக்குமான பண்பாடாக பார்ப்பது என்பது பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு எதிரானதாகும். பூர்ஷ்வா வர்க்கம் தான் பொதுவான பண்பாடு என்ற அடிப்படையில் தேசியவாதத்தை உள்நுழைத்து உழைக்கும் மக்களை ஏமாற்றும். த.நா.ம.லெ.க.வும் அதை தான் செய்து வருகிறது.
தமிழகத்தில் தற்சார்பு தொழில் துறை நிறுவுவதாக கூறும் த.நா.ம.லெ.க. இன்றைய அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தமிழ் நாட்டிற்கு வெளியே தான் உள்ளது என்பதையும், அதன் துணை இல்லாமல் சோசலிச உற்பத்தி முறையை நிறுவ முடியாது என்பதையும் பார்க்க மறுக்கிறது. இந்த நிலைப்படானது, த.நா.ம.லெ.கவின் குறுகிய தேசியவாதம், தனித்து இருத்தல், ஒதுங்கி வாழ்தல் என்ற பிற்போக்கை அப்பட்டமாக காட்டுகிறது. அந்நிய தொழில் நுட்ப உதவியில்லாமல் எந்த பின் தங்கிய நாடும் அல்லது தேசமும் முன்னேற முடியாது எனபதும், அதனை பெறுவதற்கு சில இழப்புகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பதும் ரசியாவின் உதாரணம் நமக்கு காட்டுகிறது.
அனைத்து அதிகாரங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளன. என்று கூறும் த.நா.ம.லெ.க, டெல்லி (இந்திய) அரசை வழி நடத்துகின்ற வர்க்கங்கள் எங்கெங்கு எவ்வாறு பரவியுள்ளன. அவற்றின் அணிச் சேர்க்கைகள் என்ன, என்பது பற்றி, எதுவும் கூறாமல், டெல்லி அரசுக்கும், தமிழ் நாட்டில் உள்ள சுரண்டும் வர்க்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல கூறுகிறது.
பாரளுமன்ற சனநாயகம் போலி ஜனநாயகம், சோவியத் ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம் என்னும் உள்தலைப்பில், 8 கோடி தமிழர்களின் வாழ்வும் ஏற்றம் பெற தற்சார்பான (?) தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக குடியரசு வேண்டும் என்று பொதுவாக கோருவதன் மூலம் தன்னுடைய முதலளித்துவ வர்க்கத் தன்மையையும் அதனுடைய தேசியக் கோரிக்கையையும் முன்வைக்கிறது. இதில் வர்க்க முரண்கள், அதனை எதிர்க் கொள்ளுதல் ஆகியவற்றை பற்றி எதுவும் பேசவில்லை.
விவசாய கூட்டு பண்ணைகளுக்கு பக்கத்தில் சிறு சிறு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என்பதானது பெருவீத உற்பத்தியை விட்டு பின் தங்கிய உற்பத்தி முறையை தக்க வைக்க முயல்வதாகும். பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய சகாப்தத்தில் உருவான பெருவீத, நவீன உற்பத்தியை கைகொள்வதன் மூலம் சோசலிச கட்டுமானத்தை விரைவுபடுத்த முடியும். ஆனால், இவர்கள் சிறு உற்பத்தியை முன்வைத்து காந்திய பொருளாதாரவாதத்தை முன் நிறுத்துகின்றனர். இதன் மூலம் கால சக்கரத்தை முன்னேறவிடாமல் தடுக்க முயல்கின்றனர்.
மேலும், அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கபடும் என்பதில் இடஒதுக்கீடு குறித்து அதனுடைய நிலைப்பாட்டை பற்றி தெளிவுப்படுத்தவில்லை. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் சில காலமாவது அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டிய தேவை குறித்து எதுவும் பேசவில்லை.
இனவாதத்தின் உச்சகட்டமாக, தமிழக தமிழர்களை ஓர்மைபடுத்தும் நோக்கத்துடன், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மீண்டும் தாய்தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கிறது. தேசிய இனம் கடந்து பாட்டாளிகளின் ஒன்று கலத்தலை பொறுத்துக் கொள்ள முடியாத த.நா.ம.லெ.க இனவாதத்தை நிலைநிறுத்த உழைக்கும் மக்களை மீண்டும் தேசிய இன ரீதியாக ஒன்று சேர்க்க பாடுபடுகிறது.
தேசிய இன இயக்கங்களின் இரண்டாவது காலகட்ட பகுதியில், பாட்டாளி வர்க்கமானது தேசிய இனம் கடந்து ஒன்று கலக்கிறது. சர்வதேச ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட மூலதனத்துக்கும் சர்வதேச தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாட்டை முன்னணிக்கு கொண்டு வருகிறது என்கிறார் லெனின். ஆனால் த.நா.ம.லெ.க. வரலாற்றின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்க பார்க்கிறது. தேசிய இனம் கடந்து தமிழர்கள் பல்வேறு இடங்களில் ஒன்று கலந்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் தமிழ் தேசியவாதத்திற்குள் இழுக்க பார்க்கிறது. இதன் மூலம் தேசியவாதத்தை நிலைநிறுத்த பார்க்கிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது த.நா.ம.லெ.க.வின் இந்த வெளியீட்டில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் என்பது சிறிதும் இல்லாமல், மேலோட்டமாக பிரச்சனைகளை பேசுவதும், அதற்கு மாற்றாக சோவியத் மாதிரி வடிவங்களை சில பேசுவதும், ஆனால், வர்க்க பகுப்பாய்வு செய்யாமல், தேசியவாத கண்ணோட்டத்தில் அதனை முன்வைப்பதும். பல இடங்களில் அப்பட்டமாக தமிழினவாதமும், பிற்போக்குவாதமும் தலைத்தூக்குவதுமாக உள்ளது.
இறுதியாக லெனினுடைய தொழிலாளி வர்க்கத்தின் தேசிய இன வேலைத்திட்டத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற்சங்க, கூட்டுறவு, கல்வித்துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. (தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியவாதமும்)
- தோழர்.குறிஞ்சி