உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய  நியமனத்திற்கு நமது  மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்வோம். வாரிசு அரசியல் வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி ஒரு அளவுகோளில் பார்த்தால் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதிலிருந்து  தப்பி விட முடியாது. (இது குறித்த விரிவான பட்டியலைத் தனியாக வெளியிட் டுள்ளோம்) ஆனால் வாரிசு அரசியல் இப்போது எந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறது என்று சொன்னால்,  மன்னர்கள் காலத்தில் நடந்த வாரிசு அரசியலோடு ஜனநாயக காலத்தில் நடக்கின்ற வாரிசு அரசியலை ஒப்பிட்டுப் பேசுகின்ற  ஒரு போக்கு தான் காணப்படுகிறது. இரண்டுக்கும் பண்பு ரீதியில், குணாதிசய வகையில்  வேறுபாடு உண்டு.

ஜனநாயக முறையில்  வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றவர்கள்  நேரடி நியமனங்கள் வழியாக வராமல் தேர்தலில் நின்று  மக்கள் வாக்குகளைப் பெற்று  அதற்குப் பிறகு தான் அவர்கள்  அதிகாரத்துக்கு வருகிறார்கள். மக்கள் ஆதரவோடு அதிகாரத்துக்கு வருகிறவர்களை, அவர்கள் வாரிசுகளாக இருந்துவிட்டார்கள் என்பதற்காக வாரிசு அரசியல் என்ற முத்திரை குத்துவதில் எந்த நியாயமும் இருப்பதாக நமக்குப் புரியவில்லை . இதற்கு ஆழமான பதில் ஒன்றை உதயநிதி ஸ்டாலின்  வழங்கி இருக்கிறார்.

“இத்தகைய விமர்சனங்கள் வரத் தான் செய்யும் நான் அதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். அதை எப்படி எதிர்கொள்வேன் என்று சொன்னால் என்னுடைய எதிர் கால செயல்பாடுகளின் வழியாக, மக்களின் மனங்களை வெல்வதன் வழியாக அதை நான் எதிர் கொள்வேன்” என்று அவர்  மிகவும் பகுத்தறிவுப் பார்வையுடன் ஒரு பதிலை முன்வைத்து இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த காலங்களில் தனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் தன்னுடைய செயல்பாடுகள் மூலம்  அவர் வெற்றிகரமாக நிறைவேற்றியதையும் பட்டியல்  போட்டுக் காட்டி இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கிற அறிக்கையொன்றில் கூறியிருக்கிற கருத்தும் அவரது ஆழமான புரிதலை விளக்கிக் கொண்டு இருக்கிறது . “மக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கு அதிக பொறுமை தேவைப்படுகிறது. அந்த வகையில் தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடைமையை உணர்த்தி உள்ளது” என்று அவர் கூறி இருப்பது அனுபவத்தின் வாயிலாகக் கற்றறிந்த அவர் பாடத்தை உணர்த்துகிறது. ஆகவே  பொறுப்பும் கடமையும் நிறைந்த ஒரு இடத்திற்கு நான் வந்து இருக்கிறேனே  தவிர அதிகார மய்யத்தில் அல்ல என்பதை மிகத் தெளிவாக அவர் விளக்கி யிருக்கிறார்.

நம்மைப் பொறுத்தவரை அதிகார அரசியலாக இருந்தாலும் சரி, வாரிசு அரசியலாக இருந்தாலும் சரி, அந்த அரசியல் எதற்குப் பயன்படப் போகிறது என்பது தான் மிக முக்கியமான ஒன்றாகும்.

 தன்னை ஒரு பெரியாரியல்வாதியாக இப்போதும் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிற உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தப் பொறுப்புக்கு வந்து இருக்கிறார் என்ற முறையில் பெரியாரிஸ்டுக்களைப் பொறுத்த வரை உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான நியமனம் என்று தான் பார்க்கிறோம். அண்ணா விற்குப் பிறகு முதல்வராக யார் வருவது என்ற போட்டி நாவலருக்கும் கலைஞருக்கும் இருந்த நேரத்தில் கலைஞரை விட நாவலர் மூத்தவராக இருந்தாலும், கூட பெரியார் கலைஞர் பக்கம் தான் உறுதியாக இருந்தார்.  அதற்குக் காரணம் கலைஞர் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்த ஜாதிக் கொடுமை எனும் வலிகளை உணர்ந்த ஒரு தலைவர். அவர் தான் சமூகநீதி யோடு செயல்படக்கூடியவராக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தார்.  அதே பெரியார் பார்வையில் தான் இப்போது நாம் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் பார்க்கிறோம்.

யார் தான் வாரிசு அரசியலில் இல்லை என்று எதிர்கேள்வி கேட்பதைவிட விமர்சனம் வரும்;  செயல்பாடுகளால் எதிர்கொள்வேன் என்ற முதிர்ச்சியான பதிலே அவர் இப்பதவிக்கு முழு தகுதியானவர் என்பதற்கு அடையாளம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It