hijab issue in karnatakaமோடியின் குஜராத்தை நோக்கிய பாதையில் கர்நாடகா சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சில நாட்களாக அங்கு நடந்து வரும் சம்பவங்கள் மதச்சார்பின்மையை விரும்பும் ஜனநாயக சக்திகளை கவலை கொள்ள வைத்திருக்கின்றன.

ஒரு சிறிய தீப்பொறி ஒரு காட்டையே கொளுத்தப் போதுமானதாக இருப்பதுபோல ஹிஜாப் அணிவதற்கு சில பள்ளிகளில் விதிக்கப்பட்ட தடை ஒரு பெரிய மதமோதலாக வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

உடுப்பி மாவட்டத்தில் குந்தாபூரில் உள்ள பந்தர்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து 6 இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்தப் பிரச்சினை கர்நாடகாவைத் தாண்டி ஒன்றியம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

மாணவிகளின் போராட்டத்திற்கு எதிராக அதே கல்லூரியைச் சேர்ந்த சில இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்குள் பிரச்சினை செய்துள்ளனர். சில இடங்களில் ஹிஜாப் அணிந்து படிக்க வந்த மாணவிகளை இந்து மதவெறிக் காலிகள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தவும் செய்துள்ளனர்.

இது தொடர்பாக போட்டியளித்துள்ள கர்நாடகா பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், "இந்த மாநிலத்தில் பாஜக அரசு உள்ளது. ஹிஜாப் அல்லது பிற வகை அனுமதிக்கப்படாத ஆடை அணிய இடமில்லை. பள்ளிகள் அன்னை சரஸ்வதியின் கோயில்கள்; அங்கு அனைவரும் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்குள் மதத்தைக் கொண்டு வருவது சரியல்ல. மாணவர்களுக்குத் தேவையானது கல்வி, யாருக்காவது விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால், அவர்கள் வேறு எங்காவது தங்கள் பாதையைத் தேர்வு செய்யலாம்," என்று கூறியுள்ளார்.

மேலும் கர்நாடகாவை ஆளும் பாசிச பாரதிய ஜனதா கட்சி அரசாங்கமும் "சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்" எனக் கூறி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்திருக்கின்றது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது" என மதவெறியோடு திமிர்தனமாகக் கூறியுள்ளது.

கர்நாடகா முழுவதும் சங்கிகளும் அவர்களின் அடிப்பொடிகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அணிதிரள, அவர்களுக்கு ஒரே ஆதரவாக கழுத்தில் நீலத் துண்டுடன் சில முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர்களும் `ஜெய்பீம்' கோஷத்துடன் கல்லூரிக்கு வந்து பதிலடி தந்துள்ளார்கள்.

ஏற்கெனவே இது போன்ற பிரச்சினை வந்த போது அங்குள்ள முஸ்லிம் கல்விச் சங்கம் (எம்இஎஸ்) தான் நடத்தும் 100க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி முதல் தொழில்முறைக் கல்லூரிகள் வரை ஹிஜாப் அணியத் தடைவிதித்துள்ளது. இது அந்தப் பள்ளியின் விதிகளிலேயே உள்ளது. மேலும் எம்இஎஸ் தலைவர் டாக்டர் ஃபசல் கஃபூர், "ஹிஜாப் என்பது ஓர் ஆடையேயன்றி வேறில்லை. இது ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட்,'' என்றும் கூறியுள்ளார்.

அதனால் இஸ்லாமியர்கள் எல்லாலோருமே ஹிஜாப் அணிவதை வரவேற்கின்றார்கள் என்று நாம் புரிந்துகொள்ளத் தேவையில்லை.

ஆனால் பிரச்சினை ஹிஜாப் அணிந்து வருவதைப் பற்றியது அல்ல. அதை ஏன் பிஜேபி அரசு தடுக்கப் பார்க்கின்றது என்பதும் அதன் பின்னுள்ள ஒரே காரணம் இஸ்லாமியர்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்பதும்தான்.

ஒரு கல்வி வளாகத்துக்குள் மாணவர்கள் ஒரே மாதிரியாக சீருடை அணியச் சொல்வதில் எந்த தவறும் இருக்க முடியாது.தமிழ்நாட்டில் கூட அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சீருடை அணிவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது.

மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்பதும், கூட்டுறவு சிந்தனை வளர வேண்டும் என்பதும்தான் சீருடை அணியச் சொல்வதற்கான முக்கிய காரணம்.

ஆனால் மத அடையாளங்களை வெளிப்படுத்த யாரும் தடை விதிப்பதில்லை. ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருவதை தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசுப் பள்ளியோ, கல்லூரியோ தடை செய்யவில்லை. காரணம் இந்து மத மாணவர்கள் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டோ, கழுத்தில் மாலை அணிந்து கொண்டோ வருவதையும் தடை செய்யவில்லை என்பதால்தான்.

ஒரு மதச் சார்பற்ற அரசு என்பது இந்தியாவில் முரண்பாடாக எல்லா மதங்களையும் சமத்துவமாக நடத்துவது என்பதாக பொருள் கொள்ளப் படுகின்றது. அதன் அடிப்படையில் அவரவர் மத வழக்கத்தை கடைபிடிக்க எந்தத் தடையும் விதிக்கப் படுவதில்லை.

ஆனால் இந்துத்துவா குண்டர்களுக்கு காணும் இடங்களில் எல்லாம் தங்களுடைய அடையாளமே இருக்க வேண்டும் என்ற அரிப்பு எப்போதுமே இருந்து வருகின்றது.

ஒரே நாடு, ஒரே பண்பாடு என்ற நிலையை ஏற்படுத்த பல ஆண்டுகளாக முயன்று கொண்டு இருக்கின்றார்கள். அப்படியான நிலையை ஏற்படுத்துவதற்காக மாணவர்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே மதவெறி ஊட்டி அவர்களை காலிகளாக வளர்த்தெடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட காலிகள்தான் சிவமோகா மாவட்டம், அரசுக் கல்லூரியில் இந்திய தேசியக் கொடியை கம்பத்தில் இருந்து இறக்கி விட்டு காவிக் கொடியை ஏற்றியவர்கள். அதே காலிகள்தான் மாணவி முஸ்கானை முற்றுகையிட்டு அச்சுறுத்தியவர்கள்.

கர்நாடகாவில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு விதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்கள் 4 பேர் தங்களுடைய இரண்டு இஸ்லாமிய நண்பர்களுடன் ஒன்றாக காரில் சென்றதற்காக பஜ்ரங்தளம் அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மேலும் தாக்கியதை பஜ்ரங்தளம் அமைப்பினரே செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பெருமையாகப் பரப்பினர்.

ஸ்ரீராம் சேனா போன்ற மதவெறி பிடித்த பொறுக்கி அமைப்புகளின் ஆதிக்கம் கர்நாடகாவில் வலிமையாக இருக்கின்றது. இவர்களின் வேலை இந்துக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீறுகின்றார்கள் என்று சொல்லி இந்துப் பெண்களையே இரவு விடுதிக்குள் புகுந்து தாக்குவதும், லவ் ஜிகாத் என்று சொல்லி இஸ்லாமிய ஆண்களைத் தாக்குவதும்தான்.

கெளரி லங்கேஷ், கல்புர்கி போன்றவர்களைக் கொன்ற சனாதன் சன்ஸ்த்தா போன்றவை அங்கு வேர்விட்டுப் பரவி வருகின்றன.

ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான முனைவாக்கத்தை ஆர்எஸ்எஸ் மிகத் தீவிரமாக கர்நாடகாவில் செய்து வருகின்றது.

தற்போது இஸ்லாமிய மாணவிகளின் ஹிஜாப் அணியும் போராட்டத்தை இந்தப் பின்னணியில் வைத்துதான் நாம் பார்க்க வேண்டும். ஒரு மதத்துக்கு சிறப்புச் சலுகை கொடுக்கப்படுவதும், மற்றொரு பக்கம் இன்னொரு மதத்துக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும் நடக்கும் போது, ஒடுக்கப்படும் மதத்தைச் சேர்ந்த மக்கள் இயல்பாகவே தங்களுடைய மத அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கேட்பார்கள். அது கிடைக்காது போனால் போராடுவார்கள். அதுதான் தற்போது நடந்து வருகின்றது.

உண்மையிலேயே கர்நாடகாவை ஆளும் பிஜேபி அரசுக்கு மதச்சார்பின்மையில் அக்கறை இருக்குமானால் கர்நாடகாவில் எந்த ஒரு பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் மாணவர்களும் எந்தவித சாதிய, மத அடையாளத்தையும் கடைபிடிக்கக்கூடாது எனச் சட்டம் இயற்றட்டும்.

இந்து மாணவர்கள் நெற்றியில் பட்டை போடவோ, காவித் துண்டு போடவோ, இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கவோ, பார்ப்பனர்கள் பூணூல் போடவோ, பள்ளி, கல்லூரிகளில் இந்துக் கோயில்களை கட்டிக் கொள்ளவோ தடை விதிக்கட்டும். அப்படிச் செய்யாமல் எல்லா இடங்களிலும் தீவிரமான பார்ப்பன அடையாளங்களை கடைபிடித்துக் கொண்டு மற்றவர்கள் மட்டும் மத அடையாளத்தைத் துறக்க வேண்டும் என்பதும், கடைபிடிக்கக் கூடாது என்பதும் பாசிசமே ஆகும்.

ஆர்எஸ்எஸ் இந்துமத வெறியர்கள் எல்லோரையும் ஏமாற்ற அணிகளை வைத்திருக்கின்றார்கள். ஏன் முஸ்லிம்களை ஏமாற்றக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை எளிதில் எல்லா நோய்களும் தாக்குவது போல பகுத்தறிவு சிந்தனை குறைவாக உள்ள எல்லா மாநிலங்களையும் பார்ப்பனியம் தாக்கி நாசமாக்கிக் கொண்டு இருக்கின்றது.

ஹிஜாப் அணிவதை பெண் அடிமைத்தனத்துடன் ஒப்பிட முடியுமா எனத் தெரியவில்லை. காரணம் அது போன்ற செயல்கள் அதாவது தலைக்கு முக்காடு அணிவது பல இந்து மத சாதிகளிடையே கூட உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்றும் கூட நடைமுறையில் உள்ளது.

பெண் அடிமைத்தனம் என்பது ஆண்களால் திணிக்கப்பட்ட ஒன்று. ஆனால் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அடிமைத்தனத்தை பெண்களே கூட இயல்பாக ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினையில் கூட சம்மந்தப்பட்ட ஏ.ஹெ. அல்மாஸ் என்ற மாணவி ஒருவர், "எங்கள் பள்ளியில் ஐந்து அல்லது ஆறு ஆண் விரிவுரையாளர்கள் உள்ளனர். ஆண்களுக்கு முன்பாக எங்களுடைய தலைமுடியை மறைக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் ஹிஜாப் அணிகிறோம்'' என்கிறார்.

நிச்சயமாக இந்தப் போராட்டத்தின் பின்னால் வெறும் மதம் சார்ந்த உரிமை கோரல்கள் மட்டுமே உள்ளன. ஆனால் மற்ற மதங்களுக்கு குறிப்பாக இந்து மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அதே மத உரிமையை தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

இதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற கேள்வி வந்தால் என்னுடைய சகோதரியை நீங்கள் பாரபட்சமாக நடத்தினால் நான் நிச்சயமாக அவர் சார்ந்த மதத்தைக் கடைபிடிக்க அவருக்கு உள்ள உரிமையை ஆதரிப்பேன் என்பதுதான்.

நீ உன்னுடைய மத, சாதிய அடையாளங்களைப் பின்பற்றிக் கொண்டு அதை மற்றவர்களுக்கு மறுக்கும் போது அதை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்?

நம்மைப் பொறுத்தவரை ஹிஜாப்பும் வேண்டாம், காவித் துண்டும் வேண்டாம், பொது இடங்களில் அனைவரும் மத அடையாளத்தை வெளிப்படுத்த கண்டிப்பாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் அப்படியான ஒரு நிலை ஏற்படாதவரை பெரும்பான்மை மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மையின மக்களின் உரிமைகளைக் காப்பது நம் கடமை.

- செ.கார்கி

Pin It