கீற்றில் தேட...

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக என்.டி.டி.வி. சார்பில் ஜெர்மனியில் பணியாற்றும் இந்தியப் பெண் செய்தியாளர் ஒருவர் லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலேசாகர் அன்டன் பாலசிங்கத்திடம் புற நகரில் உள்ள அவரது வீட்டில் பேட்டி கண்டார். அந்த ஒரு மணி நேரப் பேட்டியின் முக்கிய பகுதிகளையெல்லாம் வெட்டி - திருத்தி, தவறான கருத்தைத் திட்டமிட்டு பரப்பியது என்.டி.டி.வி.

ராஜீவ் மரணத்தை ஒரு துன்பியல் நிகழ்வு என்று ஏற்கனவே ஈழத் தமிழ்த் தேசியத் தவைலர் பிரபாகரன் கூறிய அதே கருத்தையே பால சிங்கமும் கூறியிருந்தார்.

ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விடுதலைப்புலிகள் ராஜீவ் கொலைக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர் என்ற முன்னறிவிப்போடு, பாலசிங்கத்தின் பேட்டியிலிருந்து இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அத் தொலைக்காட்சி ஒளிபரப்பி, ராஜீவ் கொலைக்குத் தாங்களே காரணம் என்று ஒப்புக் கொண்டதாக செய்திகளை திருத்தி வெளியிட்டது. இதுபற்றி உடனே ‘இந்து’ ராம், முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குநர் கார்த்திகேயன் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவின் கருத்துகளையும் கேட்டு, உடனே ஒளிபரப்பியது அந் நிறுவனம்.

இந்தியாவில் வெளியுறவுத் துறையிலும், ‘ரா’ உளவு நிறுவனத்திலும் உள்ள பார்ப்பனிய சக்திகள் ஞாயிற்றுக் கிழமை காலை பதிவு செய்யப்பட்ட இந்தப் பேட்டியை, வரிக்கு வரி அலசி ஆராய்ந்து, அதில் தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து, ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக, பல்வேறு இளைய தளங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

15 வருடங்களுக்கு முன்பு நடந்த தவறுக்கு விடுதலைப்புலிகள் இன்று மன்னிப்புக் கேட்பதாகவும், அய்ரோப்பியத் தடைகளால் வேறு வழியின்றி, இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகவும் ‘இந்து’ உட்பட, பார்ப்பன ஊடகங்கள், கேலி செய்து எழுதுகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்னர் நடந்த தவறுக்கு பாலசிங்கம் இப்போது மன்னிப்பு கேட்கிறார் என்று எள்ளி நகையாடும் பார்ப்பன ஊடகங்கள், ஈழத்தில் இந்திய அரசு செய்த அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று என்றைக்காவது எடுத்துக் கூறியதுண்டா?

ஈழத்தில் இளம் பெண்களும் தாய்மார்களும் வரலாறு காணாத சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள்.

எனது இனத்தை அழித்துத் திரும்பும் இந்திய ‘அமைதி’ப் படையை நான் வரவேற்கப் போக மாட்டேன் என்று - அன்று முதல்வராக இருந்த கலைஞர் சட்டமன்றத்திலே தலை நிமிர்ந்து அறிவித்தாரே!

அந்த இரத்தக்கறை இன்னமும் இந்தியாவின் கைகளில் படிந்திருக்கிறதே...

அதற்கு மன்னிப்புக் கேட்டு பரிகாரம் காண இந்தியா எப்போதாவது விழைந்ததுண்டா? அல்லது - அரசின் ஊட(த)கங்களாக அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஊடகங்கள் அத்தகைய மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுண்டா? மாறாக என்ன செய்தன?

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து ஒரு காலத்தில் அதை வளர்த்த நாடு இந்தியா, பிற்காலத்தில் தமிழர்களுக்கே துரோகமிழைக்கும் குழுக்களை உருவாக்கியது. அந்த நயவஞ்சக குழுக்களால் இந்திய ராணுவத்திடம் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழப் போராட்டத்தின் நாயகர்கள் எத்தனையோ பேரை தமிழினம் இழந்திருக்கிறது!

- இந்தியாவிடம் நிதி கேட்டு தியாக தீபம் திலீபன் இறந்தான்.

- அகிம்சா வழியில் போராடி அதே போல அன்னை பூபதி இறந்தார்.

- இந்தியாவின் சதிவலையில் சிக்கி குமரப்பா, புலேந்திரன் என்ற மூத்த தளபதிகளை தமிழினம் இழந்தது.

- நடுக்கடலில் விரித்த சூழ்ச்சி வலையில் தளபதி கிட்டுவை தமிழினம் இழந்தது.

- தமிழினத்தின் முதற்கட்ட தலைமை யிடம் நெருங்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்ததால் இரண்டாம் கட்ட தலைமைகளை தனது சதி வலையில் வீழ்த்தி ‘பாரதம் பண்ணிய பாதகங்கள்’ எத்தனையோ உண்டு!

இப்படியே அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றுக்கெல்லாம் இந்தியா தம்மிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழினம் எதிர்பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

ஆனால், ஈழத் தமிழினம் இன்று எதிர்பார்ப்பதெல்லாம் என்ன? அதனை பாலசிங்கம் தனது பேட்டியில் தெளிவாகக் கூறியுள்ளார்.

“கடந்த கால சம்பவங்களை மறந்த விடயங்களை தாராள மனப்பான்மையுடன் புதிய வடிவத்தில் அணுகுவோம் என்று இந்திய அரசையும், மக்களையும் வேண்டுகிறோம். கடந்த காலத்தை ஒருபுறம் தள்ளிவிட்டு புதிய அணுகு முறை ஒன்று முன்னெடுக்கப்படு மானால் இந்தப் பிணக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா சாதகமாக தீவிரமாக பங்கெடுக்கும் வாய்ப்பு நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட் டுள்ளார்.

இதுபோன்ற யதார்த்த நிலையை இந்தியாவும் இந்திய ஊடகங்களும் உணர்ந்து தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற மாறிவரும் அரசியல் போக்குக்கு ஏற்ற அணுகுமுறைகளை தமது நிலைப்பாடுகளில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இந்தியாவின் இன்றைய நிலை குறித்து புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் கூறுகையில் - “இலங்கை விடயத்தில் இந்தியா என்ன செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலை தொடரக் கூடாது என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு; அதுவே தமிழகத் தமிழர்களின் உணர்வும் கூட!