1930 ஜூலை மூன்றாம் வாரம் வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடருக்கு பிரதிநிதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. லண்டனில் நடைபெறும் மாநாட்டில் சுலந்து கொள்ளுமாறு டாக்டர். பி.ஆர்.அம்பேத்காரும் மகாத்மா காந்தியும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த வட்டமேசை மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொள்வாரா என்பது இன்னமும் தீர்மானிக்கப் படாமல் இருந்தது. எனவே, பம்பாயில் மகாத்மா காந்தி தங்கியிருந்த மணிபுவனத்தின் மீதே அனைவரின் கண்களும் பதிந்திருந்தன. டாக்டர் அம்பேத்கர் எத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள காத்திஜி விரும்பினார். எனவே, காந்திஜி அம்பேத்கருக்கும் பின்வரும் கடிதத்தை எழுதினார்.

"அன்புள்ள திரு. அம்பேத்கர்,

உங்களைச் சந்திப்பதற்கு இரவு 8 மணிக்கு வருகிறேன். அதற்கான நேரத்தை ஒதுக்குவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் இங்கு வருவதற்கு சௌகர்யப்படவில்லை என்றால் உங்கள் இடத்துக்கு நானே வருகிறேன்.

பம்பாய்                                                        உங்கள் மனமார்ந்த

6.8.31                                                                       எம்.கே.காந்தி"                                                                                                            

ambedkhar 400டாக்டர் அம்பேத்கர் அப்போதுதான் சாங்கிலியிலிருந்து திரும்பியிருந்தார்; அவருக்குக் காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. இரவு 8 மணிக்கு காந்தியின் இருப்பிடத்துக்குத் தாமே வருவதாக அவர் பதில் எழுதினார். ஆனால் அன்று மாலை அவருக்கு காய்ச்சல் 106 டிகிரிக்கு அதிகரித்துவிட்டது; எனவே, காய்ச்சல் குறைந்ததும் வருவதாக டாக்டர் அம்பேத்கர் தகவல் அனுப்பிவிட்டார்.

அவ்வாறே, காத்தியைச் சந்திப்பதற்காக 1931 ஆகஸ்டு 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அம்பேத்கர் மணிபுவனம் சென்றார். அவருடைய சகாக்களான தியோரால் நாய்க், ஷில்தர்கர், பிரதான், பாவ்ராவ் கெய்க்வாட் மற்றும் சுத்ரேகர் ஆகியோர் அவருடன் சென்றனர். மூன்றாவது மாடிக்குச் செல்லும்படி டாக்டர் அம்பேத்கருக்குக் கூறப்பட்டது. காந்தி சில பழங்களைத் தின்ற வண்ணம் தம்முடைய கட்சி சகாக்களுடன் மும்முரமாக உரையாடிக் கொண்டிருந்தார். டாக்டர் அம்பேத்கரும் சகாக்களும் காந்திக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுக் கம்பளத்தில் அமர்ந்தனர்.

முஸ்லீம்கள் அல்லாத, ஐரோப்பியர்கள் அல்லாத தலைவர்களுடனும் பிரதிநிகளுடனும் தமக்கே உரிய முறையில் நடந்து கொள்ளும் தோரணையில் காந்தி முதலில் கணநேரம் டாக்டர் அம்பேத்கரை ஏறிட்டுப்பாராது குமாரி ஸ்லேடுடனும் ஏனையோருடனும் மும்முரமாக அளவளாவி உரையாடிக் கொண்டிருந்தார். காந்தி இன்னும் சிறிது நேரம் இந்த அலட்சியப் பேக்கைக் காட்டியிருப்பாரேயானால் மோதல் வெடித்திருக்கும். நல்ல வேளையாக காந்தி அம்பேத்கரைத் திரும்பிப் பார்த்தார்; அவரைப் பார்ப்பது காந்திக்கு இதுவே முதல் தடவை. சேம‌ நலத்தை விசாரித்த பிறகு பிரதான விஷயத்துக்கு வந்தார்.

காந்தி: நல்லது, டாக்டர், இந்த விஷயத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அம்பேத்கர்: உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்கள். தயைகூர்ந்து நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள் அல்லது என்னிடம் சில கேள்விகளைக் கேளுங்கள், அவற்றிற்கு நான் பதிலளிக்கிறேன்.

காந்தி: (அம்பேத்கரைக் கூர்ந்து பார்த்தபடி) என் மீதும் காங்கிரஸ் மீதும் உங்களுக்குச் சில மனக்குறைகள் இருப்பதாக அறிகிறேன். என் பள்ளிக்கூட நாட்கள் முதலே அப்போது நீங்கள் பிறந்துகூட இருக்க மாட்டீர்கள்- தீண்டத்தகாதவர்களின் பிரச்சினை குறித்து யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் வேலைத் திட்டத்தில் இடம் பெறச் செய்வதற்கும். காங்கிரஸ் மேடைகளில் இது குறித்துப் பேசச் செய்வதற்கும் நான் எவ்வளவு பெரும் முயற்சி மேற்கொண்டு வந்திருக்கிறேன். என்பது அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். காங்கிரஸ் தலைவர்கள் இதனை எதிர்த்தனர்; இது மதம் மற்றும் சமூகப் பிரச்சினை சம்பந்தப்பட்டது. இதனை அரசியலில் கலக்கக்கூடாது. என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல.

தீண்டத்தகாதவர்களின் முன்னேற்றத்திற்காக இருபது லட்சம் ரூபாய் வரை காங்கிரஸ் செலவிட்டுள்ளது. இவ்வாறு எல்லாம் இருக்கும்போது உங்களைப் போன்றவர்கள் என்னையும் காங்கிரசையும் எதிர்ப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. நீங்கள் மேற்கொண்டுள்ள நிலையை நியாயப்படுத்த நீங்கள் ஏதேனும் கூற விரும்பினால், தாராளமாக அவ்வாறு செய்யலாம்.

அம்பேத்கர்: தீண்டத்தகாதவர்களின் பிரச்சினை குறித்து நான் பிறப்பதற்கு முன்பே தீங்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்பது உண்மைதான், மகாத்மாஜி, வயதானவர்கள் அனைவரும் வயதுப் பிரச்சினையை வலியுறுத்திக் கூற விரும்புவார்கள் என்பது மெய்யே. மேலும், நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக இந்தப் பிரச்சினையைக் காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டது என்பதிலும் ஐயமில்லை. தீண்டத்தகாதவர்களின் மேம்பாட்டிற்காக இருபது லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக காங்கிரஸ் செலவிட்டுள்ளது என்றும் கூறினீர்கள். இதெல்லாம் வீண் என்று நான் கூறுகிறேன். இது போன்ற பக்க பலத்துடனும், உதவியுடனும் என் மக்களின் கண்ணோட்டத்திலும், பொருளாதார நிலைமைகளிலும் வியக்கத் தக்க மாற்றங்களை என்னால் ஏற்படுத்தி இருக்க முடியும். அவ்வாறு நேர்ந்திருக்குமானால் முன்னரே என்னை நீங்கள் பார்த்திருக்க வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கும். ஆனால் நான், அடித்துக் கூறுகிறேன்: காங்கிரசுக்கு தான் கூறுபவற்றில் உள்ளார்ந்த நேர்மையில்லை. அவ்வாறு நேர்மை இருந்திருக்குமானால், ஒருவர் காங்கிரசில் உறுப்பினராவதற்கு கதர் அணிவது அவசியம் என்பது போல், தீண்டாமையை ஒழிப்பதும் அவசியம் என்று அது அறிவித்திருக்கும், தீண்டத்தகாத பெண்கள் அல்லது ஆண்களைத் தங்கள் வீடுகளில் வேலைக்கமர்த்திக் கொள்ளாத எவரும், அல்லது தீண்டத்தகாத மாணவனைத் தங்கள் இல்லங்களில் ஊட்டி வளர்க்காத எவரும், அல்லது குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது தீண்டத்தகாத மாணவனுடன் வீட்டில் உணவு அருந்தாக எவரும் காங்கிரசில் உறுப்பினராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று அறிவித்திருக்க வேண்டும். இத்தகைய ஒரு நிபந்தனை கடைப்பிடிக்கப் பட்டிருக்குமானால் தீண்டத்தகாதவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எதிர்க்கும் இழிவினும் இழிவான அவலக்காட்சியைக் காணும் துருதிர்ஷ்டமான நிலைமையை நீங்கள் தவிர்த்திருக்க முடியும்

காங்கிரசுக்கு எல்லலையற்ற வலு வேண்டும். எனவே, இத்தகைய நிபந்தனையை விதிப்பது விவேகமல்ல என்று நீங்கள்கூறலாம். அவ்வாறாயின் கோட்பாடுகளைவிட பலத்திலேயே காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்ற உண்மையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதான் உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நான் சுமத்தும் குற்றச்சாட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் எத்தகைய மனமாற்றத்தையும் காட்டவில்லையே என்று நீங்கள் கூறுகிறீர்கள். எங்கள் பிரச்சினை சம்பந்தமாக இந்துக்கள் எத்தகைய மனமாற்றத் தையும் காட்டவில்லை என்று நான் கூறுகிறேன். அவர்கள் உடும்புப் பிடிவாதமாக இருக்கும்வரை நாங்கள் காங்கிரசையும் சரி, இந்துக்கனையும் சரி நம்பமாட்டோம். சுய உதவியில், சுயமரியாதையில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களையும் மகாத்மாக்களையும் நம்ப நாங்கள் தயாராக இல்லை. இதனை ஒளிவு மறைவின்றி மனம் விட்டுக் கூறுகிறேன். கண நேரத்தில் தோன்றி மறையும் புகையுறுத்தோற்றம் போல் மகாத்மாக்கள் தூசியைக் கிளப்புகிறார்களே தவிர, இலக்குகளைக் குறிவைப்ப தில்லை. காங்கிரசார் எங்கள் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? எனக்கு துரோகி என்று எதற்காக முத்திரைகுத்துகிறார்கள்?

டாக்டர் அம்பேத்கர் இப்போது பெரிதும் கிளர்ச்சியடைந்தார். அவரது முகம் சிவந்தது; கண்கள் கனலொளி பொழிந்தன. ஒரு கணம் மௌனமாக இருந்தார்; பின்னர் தொடர்ந்து கடுமையான, கோபாவேச மிக்க தொனியில் பேசினார்.

அம்பேத்கர்: காந்திஜி, எனக்குத் தாயகம் இல்லை.

காந்தி : (அதிர்ச்சியடைத்து குறுக்கிட்டுப் பேசினார்): உங்களுக்குத் தாயகம் இருக்கிறது. வட்டமேசை மாநாட்டில் நீங்கள் ஆற்றிய பணி குறித்து எனக்குக் கடைத்துள்ள தகவல்களின்படி நீங்கள் அப்பழுக்கற்ற தேசபக்தர் என்பதை நான் அறிவேன்.

அம்பேத்கர்: எனக்குத் தாயகம் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். எனக்குத் தாயகம் இல்லை என்று மீண்டும் கூறுகிறேன். நாய்களையும், பூனைகளையும்விட நாங்கள் மோசமாக இழிவினும் இழிவாக நடத்தப்பட்டு வரும்போது, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காதபோது, இந்த நாட்டை என் சொந்தத் தாயகம் என்றும், இந்து மதத்தை எனது சொந்த மதம் என்றும் எப்படி நான் கூறமுடியும்? சுயமரியாதையுள்ள தீண்டத்தகாதவன் எவனும் இந்த நாட்டைக் குறித்து பெருமையும் பெருமிதமும் கொள்ள முடியாது. இந்த நாடு எங்களுக்கு இழைத்துவரும் இன்னல் இடுக்கண்களும், துன்ப துயரங்களும், கொடுமைகளும் குரோதமும் எண்ணிறந்தவை; தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் கொடும் குற்றத்துக்கு நாங்கள் ஆளாவோ மானால், இந்தக் குரூர செயலுக்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதாகவே இருக்கும். ஒரு துரோகி என்று நான் பழிசுமத்தப்படுவதற்காக வருத்தப்படவில்லை; ஏனென்றால் என் செயலுக்கான முழுப் பொறுப்பும் துரோகி என்று எனக்குப் பட்டம் சூட்டும் நாட்டையே சேரும். நீங்கள் கூறியதுபோல் இத்த நாட்டின் தேசபக்த லட்சியத்துக்கு உதவக்கூடிய அல்லது பலனளிக்கக் கூடிய தேசிய சேவை எதையேனும் செய்திருக்கிறேன் என்றால் மாசுமறுவற்ற எனது மனச் சான்றுதான் அதற்குக் காரணமே தவிர என்னுள் பொதிந்துள்ள எந்த தேசபக்த உணர்வுகளும் காரணமல்ல. இந்த நாட்டில் காலம் காலமாக, ஆண்டாண்டாக அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், மிதித்துத் துவைக்கப்பட்டு வரும் என்னுடைய மக்களுக்கு மனித உரிமைகளைப் பெற்றுத் தரும் என் முயற்சியில் இந்த நாட்டுக்கு நான் ஏதேனும் தீங்கு செய்தேன் என்றால் அது பாவமாகாது; அதேபோல் என் செயல்பாட்டின் மூலம் இந்த நாட்டுக்கு எந்தத் தீங்கும் நேரிடவில்லை என்றால் அதற்கு என் மனச்சான்றே காரணமாக இருக்கும்: எனது மனச்சான்றின் உந்துதல்கள் காரணமாக இந்த நாட்டுக்கு எத்தகைய தீங்கும் நேராத வகையில் என் மக்களுக்கு மனித உரிமைகளைப் பெற்றுத்தர அயராது, சோராது பாடுபட்டு வருகிறேன்.

(சூழ்நிலைமை கடுமையானதாயிற்று, முகங்களின் வண்ணங்கள் மாறி, காந்தி அமைதி இழந்தவரானார். டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க விரும்பினார். இச்சமயம் இந்தப் பேட்டிக்குப் பெரிதும் சம்பந்தப்பட்ட கேள்வியை அவரிடம் டாக்டர் அம்பேத்கர் கேட்டார்.)

அம்பேத்கர்: முஸ்லீம்களும் சீக்கியர்களும் தீண்டத்தகாதவர்களைவிட சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் முன்னேறியவர்களாக இருக்கின்றனர் என்பதை அனைவருமே அறிவர். வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டத் தொடர் முஸ்லீம்களின் கோரிக்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தது; அது மட்டுமன்றி அவர்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. அவர்களது கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் இணக்கம் தெரிவித்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்கும் வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டத்தொடர் அங்கீகாரம் வழங்கிற்று, அவர்களுக்கு அரசியல் பாதுகாப்புகளும் போதிய பிரதிநிதித்துவமும் வழங்க வேண்டும். என்றும் பரிந்துரை செய்தது. எங்களைப் பொறுத்தவரையில் இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுகூலமானது, உங்கள் கருத்து என்ன?

காந்தி: தீண்டத்தகாத மக்களை இந்துக்களிடமிருந்து அரசியல் ரீதியில் பிரிப்பதை நான் எதிர்க்கிறேன். இது முற்றிலும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

அம்பேத்கர் : (எழுந்து நின்றவாறு) / ஒளிவு மறைவின்றி உங்கள் கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி. இந்த ஜீவாதாரமான பிரச்சினையைப் பொறுத்தவரையில் நமது நிலை என்ன என்பதை இப்போது தெரிந்து கொண்டது நல்லது. இப்போது உங்களிட மிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறிவிட்டு டாக்டர் அம்பேத்கர் அந்த மண்டபத்தை விட்டு வெளியேற்றினார். தமது முழு வலிமையையும் கொண்டு இந்தப் பிரச்சினைக்காக போராடுவது என்றும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமது மக்களுக்கு மனித உரிமைகளைப் பெற்று தருவது என்றும் தீவிர உறுதி பூண்டிருப்பதை அவரது முகம் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்திற்று.

பேட்டி இவ்வாறு கடுகடுப்பான சூழ்நிலைமையில் முடிவடைந்தது. காந்தி இந்திய அரசியலின் பிதாமகர், சர்வாதிகாரி, இந்திய வெகுஜனங்களின் முடிசூடா மன்னர்; தமது திகைப்பும் வியப்புமூட்டும் செயல்பாடுகளின் மூலம் மக்களை ஈர்த்தவர். இத்தகைய மகானுபாவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது நிரந்தர வெறுப்பை, அழியாத கசப்பைத் தோற்றுவிக்கக் கூடியதாக இருந்தது. அதிலும் ஓர் இந்துத் தலைவர் இவ்வாறு செய்வது காந்தியின் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? பகடைக்காயை உருட்டியாகி விட்டது. எதிர்ப்பு என்ற தீ பற்றவைக்கப்பட்டு விட்டது. இந்தப் பேட்டி காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையே போர் தொடங்கி விட்டதை முரசறைந்து தெரிவிப்பதாக இருந்தது.

எனினும் அம்பேத்கர் ஒரு ஹரிஜன் அல்ல என்று காந்தி எண்ணியது வியப்பூட்டுவதாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அம்பேத்கர் யாரோ ஒரு பிராமணர், ஹரிஜனங்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர், எனவேதான் வரம்பு கடந்து உணர்ச்சியோடு பேசுகிறார் என்றே காந்தி வண்டன் செல்லும் வரை எண்ணினார்.

தொகுப்புமுனைவர் எ. பாவலன்

Pin It