பா.ஜ.க. ஆட்சியின் பார்ப்பன கல்விக் கொள்கைக்கு - எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தோம்? நினைவிருக்கிறதா?
அனிதா - 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் - ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்த தலித் பெண்ணின் மருத்துவக் கனவை நீட் சிதைத்தது. மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற அந்த மாணவி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது. பா.ஜ.க. பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரத் திமிருடன் ‘நீட்’டை நியாயப்படுத்திக் கொண்டிருந்ததையும் தமிழ்நாடு பார்த்தது. அந்தப் பார்ப்பனர்கள்தான் இப்போது மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்தக் கோரி நமது மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள் - மறந்து விடாதீர்!
தமிழ்நாட்டிலிருந்து போட்டித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று உயர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படிக்கச் சென்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணத்தைச் சந்தித்தார்களே நினைவிருக்கிறதா?
சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். எம்.இ.ஆர். மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற முதலாம் ஆண்டு மாணவர் கிருஷ்ண பிரசாத் விடுதியில் இறந்து கிடந்தார்.
2016ஆம் ஆண்டு டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவர் சரவணன், மர்மமான முறையில் மரண மடைந்தார்.
அவை தற்கொலைகள் என்று சாதித்தன பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள். ஆனால் பிரேத பரிசாதனை முடிவுகள் தற்கொலை அல்ல; விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்பதை உறுதி செய்தன.
மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலே வாய்ப்பு அளிக்காமல் அகில இந்திய சேர்க்கை முறையைப் பயன்படுத்தியதும், தமிழ்நாட்டைப்போல் அதிக மருத்துவ உயர்கல்வி அமைப்புகள் வடநாட்டில் இல்லாத நிலையில் தமிழக மாணவர்களை வடநாட்டாரோடு போட்டியிட வைத்து, தமிழக மாணவர்களை மனஉளைச்சலுக்கும் அவமானத்துக்கும் பாகுபாடு களுக்கும் உள்ளாக்கிய பா.ஜ.க. அரசின் மோசமான கொள்கைகளும் தான் நமது தமிழகத்து இளம் அறிவுச் செல்வங்களைப் பறிகொடுத்து நிற்பதற்குக் காரணம்!
குஜராத் - அகமதாபாத்தில் பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்ற தமிழ்நாடு மாணவர் 2018 மார்ச் மாதம் இதேபோல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன்னை சகமாணவர்கள், பேராசிரியர்கள், ஜாதிய ரீதியாக இழிவுபடுத்துவதே தனது தற்கொலைக்குக் காரணம் என்றார் அவர்.
அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்த தலித் மாணவர் ரோகித் வெமுலா, ‘இந்துத்துவா’ எதிர்ப்புக் கொள்கையுடையவராக இருந்த ஒரே காரணத்துக்காக நிர்வாகம் அவரை விடுதியிலிருந்தும் பல்கலையிலிருந்தும் வெளியேற்றியது. வீதிகளிலும் வளாகத்தின் வாயில்களிலும் உண்டு, உறங்கும் அவல வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட அவர், மதவெறியர் - தனது உள்ளத்தின் வேதனைகளை இலக்கியத் தரம் வாய்ந்த கடிதமாக எழுதி வைத்து விட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது நண்பர் சேலம் முத்து கிருஷ்ணனும் அதே முடிவை சந்தித்தார். நாடே கண்ணீர் விட்டு அழுதது.
வளர்ந்து வரும் நமது இளந்தளிர்களின் வாழ்வை ‘வர்ணாஸ்ரம’ வெறிக்குப் பலியாக்கிய மதவாத சக்திகள்தான் இப்போது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வாக்குகளைக் கேட்டு வருகிறது!