farmers protest at delhi 361இந்தியாவில் ஊதியக் குறைப்பாலும், வேலையிழப்பினாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலோகங்கள், கட்டுமானப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி வார்ப்பாலைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களிடமிருந்தே அயோத்தியில் பிறக்காத ராமருக்கு கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டப் போகிறார்களாம். ஏன் இதற்கும் அந்நிய முதலீடுகளையே அனுமதிக்கலாமே?

கோவிட் தாக்கத்தால் "இந்தியாவில், அமைப்புசார் தொழிலாளர்களின் ஊதியம் 3.6 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைப்புசாராத் தொழிலாளர்களின் ஊதியம் 22.6 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு இது வரை 0.75 விழுக்காடு நிதித் தொகுப்பை மட்டுமே அளித்துள்ளது, முதல் நிதித் தொகுப்புக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அனைத்து நிதித் தொகுப்புகளும் வெறும் கடன் திட்டங்களே தவிர நிதிச் சலுகைகள் அல்ல, ஆனால் நிதியமைச்சகம் 10 விழுக்காட்டிற்கு மேல் நிதித் தொகுப்பை அளித்துள்ளதாகவும், அதனால் பொருளாதாரம் வேகமாக மீட்சி அடைவதாகவும் பொய்களை அடுக்குகிறது.

பொருளாதார மீட்சிக்கான நிதித் தூண்டல்களை செல்வம் உருவாக்குபவர்களாக கருதப்படும் பெருமுதலாளிகளும் அளிக்கத் தயாராக இல்லை, அவர்கள் பொருளாதாரத் தூண்டல்களை வெளிநாடுகளுக்குத்தான் அளித்துள்ளார்கள் 2020இல் மட்டும் இந்திய நிறுவனங்களால் சுமார் 13 பில்லியன் டாலருக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2020இல் டாலரின் மதிப்பு 6 விழுக்காட்டிற்கு மேல் குறைந்து டாலர் குறியீடு 90களுக்குச் சரிந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளில் 64,940 கோடி அளவிற்கு அந்நிய நிதி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக மதிப்பேற்றம் பெறாமல் சரிந்து ஆசிய அளவில் வலுவிழந்த நாணயமாகக் காணப்படுகிறது.

ஆசியாவின் மற்ற நாணயங்கள் மதிப்பேற்றம் பெறும் போது இந்திய ரூபாய் மதிப்பு தலைமை வங்கியின் வெளிச்சந்தை நடவடிக்கைகளால் ஏற்றம் பெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி 2020இல் 10,000 கோடி டாலருக்கு மேல், மொத்தப் பொருளாக்க மதிப்பில் 4 விழுக்காட்டு மதிப்பிற்கு அமெரிக்க டாலர்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.

எதற்காக என்றால் ஏற்றுமதிக்கான இந்தியாவின் போட்டித் திறன் குறைந்து விடக் கூடாது என்பதற்காகவே இது செய்யப்படுகிறது. . இந்தியாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் ஒரு சிறு பகுதியாகவே ஏற்றுமதி உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் உலகளவிலான கோவிட்-19 தாக்கத்தால் ஏற்றுமதியின் மதிப்பு மேலும் குறைந்துள்ளது.

சர்வதேச வர்த்தகம் மந்த நிலையில் உள்ள போது ஏற்றுமதியின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதல் அளிக்கலாம் என்பது முட்டாள்தனமான வாதமே. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் தலைமை வங்கியின் ரூபாய் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறக்குமதிச் செலவையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் அதிகரித்துள்ளன.

அமெரிக்க டாலர்களை வாங்கும் வேண்டா வெட்டி வேலையைச் செய்வதற்குப் பதிலாக மத்திய வங்கி மத்திய அரசிற்கு நேரடியாக நிதிக் கடன்களை அளித்திருந்தால் அதன் மூலம் கூடுதல் நிதிச் சலுகைகளை அரசால் அளித்திருக்க முடியும்.

அந்த நிதிச் சலுகைகளை வழக்கம் போல் பெருமுதலாளிகளுக்கு அளிக்காமல், மக்களின் வாங்குந்திறனை உயர்த்துவதற்கான வேலைவாய்ப்புகளையும், பணச் சலுகைகளையும் அளித்திருந்தால் ஓரளவுக்கேனும் வேண்டல் மீட்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கும். வர்த்தகப் பற்றாக்குறையும், பணவீக்கமும் சிறிதளவேனும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் மத்திய அரசின் கோரிக்கை இல்லாமல் மத்திய வங்கியால் தன்னிச்சையாக நிதிப் பற்றாக்குறையைப் பணமாக்கவும் இயலாது. ஆனால் நவீன தாராளமயப் பெட்டியைத் தாண்டிச் சிந்தித்துச் செயல்படுவதற்கான அறிவோ துணிவோ பாஜக அரசுக்கு இல்லாததால் அதற்கான வழியும் தடைபட்டது.

பெயரளவுக்கு மட்டும்தான் தற்சார்பு என்பது கூவப்பட்டு வருகிறது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமல் மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை’ என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வெளிச்சந்தை நடவடிக்கைகளும், 4 விழுக்காடு வங்கிக் கடனும் யாருக்கு உதவியுள்ளன? பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பெருநிறுவனங்களுக்கு மட்டுமே உதவியுள்ளன. விரைவில் வெடிக்கப்போகும் ஒரு பங்குச்சந்தைக் குமிழி உருவெடுத்துள்ளது.

பங்குச் சந்தையில் ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல்கள் மூலம் பெருநிறுவனங்கள் பெருமளவில் மூலதனம் திரட்டி வருகின்றன. அவற்றின் பங்குகளது விலை அவற்றின் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. மூலதனத்தை உயர்த்த முடியாமல் சிறு நிறுவனங்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் பங்குகளது விலை உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் வீழ்ந்துள்ளது.

பொருளாதார மந்த நிலையை முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கின்றனர். பெருநிறுவனங்களில் முதலீடு செய்வதே முதலுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் அவற்றின் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளார்கள்.

இந்த ஆண்டில் குடும்பங்களுக்குச் சொந்தமாக உள்ள பெருநிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 31 விழுக்காடு உயர்ந்து ரூ. 115 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.

அதானியின் பசுமைப் பங்குகள் மட்டும் 565 விழுக்காடு உயர்ந்துள்ளன. பங்குச் சந்தைகளில் அனைத்துத் தனியார் துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதன மதிப்பு இந்த ஆண்டு 24.4 விழுக்காடு அதிகரித்து 142.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து இந்த ஆண்டில் 33 விழுக்காடு உயர்ந்து 364 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பணக்காரர்க் கூட்டணியில் புதிதாக 10 பெரும்பணக்காரர்கள் சேர்ந்ததால் இவர்களின் மொத்த எண்ணிக்கை 80லிருந்து 90ஆக உயர்ந்துள்ளது.

தனது வளர்ச்சியையே இந்தியாவின் வளர்ச்சியாகப் பார்க்கும் முகேஷ் அம்பானி இந்திய அரசு செயல்படுத்தி வரும் டிஜிட்டல் இந்தியாமயமாதலில் தனிநபர் வருமானம் உயரும் என்கிறார். யாருடைய தனிநபர் வருமானம் உயரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சூழலியல் நெறிகளுக்குப் புறம்பான முறையில் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

2021இல் அரசு கூடுதலாகக் குறைந்தது 300 கனிமச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விடுவதற்குத் தயாராயிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் ஒப்புக்குக் கூட சூழலியல் நெறிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தைத் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியைத் தவிர்ப்பதற்கு அவற்றை தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுடன் கோத்து விடும் போக்கையே இது ஏற்படுத்தும் என்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை. அக்டோபரில் மத்திய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்கீடு ஐந்தில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்திய நிதியுதவித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் 9 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளன.

பெருநிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த தேர்தல் நிதியைக் கடுவட்டியோடு அறுவடை செய்வதற்கும், சாறுண்ணிக் கட்சிகளுக்கு அவை தொடர்ந்து நிதியளிக்கவும் ஏதுவாகவே பாஜக அரசு சந்தர்ப்பவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துகிறது.

நிதின் கட்காரி பொருளாதார வளர்ச்சிக்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறையின் பங்களிப்பை 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும், சிறுகுறு நடுத்தரத் தொழில் துறைகளில் இருந்து மேலும் 5 கோடி வேலைகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி வருகிறார்.

ஆனால் சிறு நிறுவனங்கள் கடன் பெற இயலாத நிலையில் தவித்து வருகின்றன என்பதே உண்மை நிலவரமாக உள்ளது. இந்தியாவில் பெருநிறுவனங்கள் கடன் பெறுவதற்குப் பின்பற்றப்படும் ‘பேசல்’ (BASEL reforms) விதிமுறைகளையே சிறு நிறுவனங்களுக்கும் செயல்படுத்துவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

குறைந்த சந்தை மதிப்பைக் கொண்ட சிறு நிறுவனங்களுக்கு அதிக வட்டியிலேயே கடன் அளிக்கப்படுவதும், அதிகச் சந்தை மதிப்பைக் கொண்ட பெருநிறுவனங்களே மலிவுக் கடன் பெற முடிவதும் சமூக நீதிக்கு முற்றிலும் புறம்பானதே என்பதுடன் சிறு நிறுவனங்களின் செயல்பாடுகளை, வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளன. பேசல் விதிமுறைகளால் வங்கிக் கடன் பெற முடியாமல் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட 740 சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்புகள். வங்கித் துறையில் ’பேசல்’ விதிமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் இவை எதுவும் தெரியாதது போல் மத்திய வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் வங்கிகள் கடன் வழங்குதலைப் பிணையத்தின் அடிப்படையில் என்றில்லாமல் பணப் புழக்கத்தின் அடிப்படையிலான கடன்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெயரளவிற்குக் கூறி வருகிறார்.

2019ஆம் ஆண்டில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதன் மூலம் பெருமளவு நிதி திரட்டத் திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த நிதியாண்டில் 2.1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்தது.

இந்த ஆண்டு பாஜக அரசு பொதுத்துறைப் பங்குகளைத் தனியார்மயப்படுத்துவதன் மூலம் இது வரை 42,871.94 கோடி திரட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயம் அரசு நினைத்த வேகத்தில் நடக்கவில்லை என்பதே இந்த ஆண்டில் ஆறுதலளிக்கும் விசயமாக உள்ளது. அனில் அகர்வால் 10 பில்லியன் டாலருக்குப் பொதுத்துறைப் பங்குகளை வாங்கும் திட்டத்தில் உள்ளார். அவற்றின் சந்தை மதிப்பின் பெருவீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தவும், போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கொல்லப்படவும் காரணமான ‘மனித நேயர்’ அனில் அகர்வால் வணிகத்தின் இலாபங்கள் சமூகத்தின் மிகவும் முக்கியமான தேவைகளுக்கு உதவ வேண்டும் என்றும், நம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்றும் நம்புவதாகப் பசப்புகிறார்.

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறனுக்கும் மதிப்பும் முக்கியத்துவம் அளிக்கப்படாது, அவற்றின் சந்தை மதிப்பை அதிகப்படுத்தவே அரசு முயல்கிறது. அரசின் தொடர்ச்சியான பங்கு விற்பனையே பொதுத்துறை நிறுவனத்தின் குறைந்த செயல்திறனுக்கு முக்கியக் காரணமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் குறியீடு 18 சதவீதம் குறைந்துள்ளது. கோவிட்-19 நோயால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டதற்கும், உயிழப்புகளுக்கும் லாப நோக்கில் செயல்படும் தனியார் மருத்துவ நிறுவனங்களே காரணம் என்ற போதும் கூட சுகாதாரத் துறையில் அரசின் முதலீடுகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. சுகாதாரத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் நிதி ஆயோக் கூறி வருகிறது.

ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்குச் சொத்துகள் வைத்துள்ளார் எனக் கொள்வோம். அவர் அந்த ஒரு கோடி ரூபாயை வருவாய் பெறும் முறையில் முதலீடு செய்யாமல் அதைப் பகுதி பகுதியாக விற்றுச் செலவழித்தால் அவரின் சொத்துகளது மதிப்பு குறைந்து விடும்.

அதை நாம் வளர்ச்சி என்று சொல்வோமா, வளர்ச்சிக் குறைவு என்று சொல்வோமா? வளர்ச்சிக் குறைவு என்றுதானே குறிப்பிடுவோம், இன்னும் சொல்லப் போனால் ஊதாரித்தனமாகவே அது கருதப்படும் இல்லையா? அதை வளர்ச்சி என்று ஒரு முட்டாளால் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.

ஆனால் இந்திய அரசு பொதுச் சொத்துக்களை ஒவ்வோர் ஆண்டும் பகுதி பகுதியாக தனியாரிடம் விற்பனை செய்து விட்டு அதை வளர்ச்சி என்றே குறிப்பிடுகிறது. இப்படித்தான் இந்தியாவின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியாக இல்லாமல் தனியார் பெருநிறுவனங்களின் வளர்ச்சியாக உள்ளது.

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா ஓரிடம் பின்சென்று 189 நாடுகளில் 131ஆம் இடத்தில் உள்ளது, ஆனால் வணிகத்தை இலகுவாக்குவதற்கான குறியீட்டில் 14 இடங்கள் முன்னேறி 63ஆம் இடத்தில் உள்ளது என்பதிலிருந்தே இந்தியாவின் வளர்ச்சிப் பாதை எத்தகையது என்பதையும் யாருக்கானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

பணவீக்கம்:

உணவுப் பொருட்களின் விலை, குறிப்பாகக் காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 6.93 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 9.10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

காய்கறிகளின் விலைவாசி 15.63 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 17.91 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 20.26 விழுக்காடு உயர்ந்துள்ளது. மீன், இறைச்சியின் விலை 16.67 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 6.74 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அக்டோபரில் உற்பத்தி நிலை:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி முதன்மைத் துறைகளின் உற்பத்தி 3.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதில் சுரங்கத் துறையில் உற்பத்தி 1.5 விழுக்காடு சரிவடைந்துள்ளது. செய்பொருளாக்கத் துறையில் உற்பத்தி 3.5 விழுக்காடும், மின்சார உற்பத்தி 11.2 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 3.3 விழுக்காடு சரிவடைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்கள் (7.5%), மூலதனப் பொருட்கள் (3.3%), இடைநிலைப் பொருட்கள் (0.8%), கட்டுமானப் பொருட்கள் (7.8%), நீடித்த நுகர்வுப் பொருட்கள் (17.6%) ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நவம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு நவம்பரில் 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி 2.9 விழுக்காடும், உரத்துறை உற்பத்தி 1.6 விழுக்காடும், மின்சார உற்பத்தி 2.2 விழுக்காடும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 4.9 விழுக்காடும், இயற்கை எரிவாயு உற்பத்தி 9.3 விழுக்காடும், பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 4.8 விழுக்காடும் குறைந்துள்ளன. எஃகு உற்பத்தி 4.4 விழுக்காடும், சிமென்ட் உற்பத்தி 7.1 விழுக்காடும் குறைந்துள்ளன.

தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு 2019-20:

22 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் முடிவுகளை சுகாதாரம், குடும்ப நலத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு இதற்கு முன்னர் 2015-16இல் எடுக்கப்பட்டது. 2019-20இல் குறைந்தது 10 ஆண்டுகள் வரை கல்வி பெற்ற ஆண், பெண்களின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றம் காணப்படவில்லை.

குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 2015-16இல் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் (41.6 விழுக்காடு), பீகார் (40.8 விழுக்காடு) ஆகிய மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன.

2019-20இல் இரத்த சோகையுடைய குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. காஷ்மீர், திரிபுரா, குஜராத், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்களில் 2015-16ஐ விட இரத்த சோகையுள்ள குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மற்ற மாநிலங்களை விட காஷ்மீரில் ஆண்களும் அதிக அளவில் ரத்த சோகையுடையவர்களாக உள்ளனர் என்பது காஷ்மீரில் மத்திய அரசால் ஏவப்பட்ட ஒடுக்குமுறையால் காஷ்மீரிகள் எந்தளவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் குறியீடே. கர்நாடகா, சிக்கிம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது.

அசாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. 20 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

பிரசவம், குழந்தை வளர்ப்பு, குடும்ப வேலைகள் என குடும்ப அமைப்பால் பெருஞ்சுமைகளைத் தாங்கும் பெண்களுக்குக் கூடுதலாகக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை என்ற சுமையையும் திணிக்கும் அவலநிலை எவ்வளவு அநீதியானது! இது இந்தியாவில் பாலின சமத்துவமின்மையை வெளிக்காட்டும் பல குறியீடுகளில் ஒன்று மட்டுமே.

கோவிட்-19 தாக்கத்திற்கு பிறகு பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் 9 சதவீதத்திற்கு மேல் குறுக்கமடைந்திருப்பது பாலின சமத்துவமின்மையை மேலும் அதிகமாக்கவே செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய முடியரசு 2021இல் இந்தியாவுடன் தடையற்ற வணிகத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இருக்கிறது.

டிசம்பரில் ஜெனிவாவில் நடைபெற்ற உலக வர்த்தகக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் அனைத்து நாடுகளுக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தை கிடைக்கப் பெறச் செய்வதற்காக கோவிட்-19 தடுப்பு மருந்தை அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்குவதற்கான முயற்சி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடுக்கப்பட்டு ஒருமித்த கருத்து இல்லாமல் தோல்வியடைந்தது.

வளர்ந்து வரும் ஏழை நாடுகளையும், உலகெங்கும் வாங்கும் சக்தியற்ற கோடிக் கணக்கான ஏழை மக்களையும் நிர்க்கதியில் தள்ளியுள்ளது. மனித நேயமற்ற உலக வர்த்தக அமைப்பு. அருகி வரும் மீன்வளங்களைப் பாதுகாப்பதற்காக மீன்களின் ஏற்றுமதிக்கு அளிக்கப்படும் நிதிச் சலுகைகளைத் தடை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த இரட்டை நெருக்கடிக் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள்விரோதச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவற விடவில்லை என்பதில் பெருமை கொண்டுள்ள நிதியமைச்சர் அடுத்த நிதி நிலை அறிக்கைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் தொழிலதிபர்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.

இந்திய மக்களையும், மாநிலங்களையும் ஒடுக்குவதில் திறமை காட்டியதற்காகவும், ஆசியப் பிராந்தியத்தில் அமைதி நிலவாமல் போர்ச்சூழலைப் பேணி வருவதற்காகவும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் விருது அளித்துச் சிறப்பித்துள்ளார். டெல்லியில் கடுங்குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராடிவரும் லட்சக் கணக்கான விவசாயிகளை நிதியமைச்சரும் பிரதமரும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

இது வரை 50க்கும் மேலான விவசாயிகள் இப்போராட்டத்திற்காக இன்னுயிர் ஈந்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதற்காகவே நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வை நடத்தாமல் தடுத்துள்ளனர்.

இதனால் மத்திய அமைச்சகங்கள், துறைகள் பண நெருக்கடியை எதிர்கொள்கின்றன உலகிலேயே தொழில்முனையும் பெருநிறுவனங்களுக்கான வரிவிகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவு எனப் பெருமிதம் கொள்ளும் நரேந்திர மோடி ‘ரியல் எஸ்டேட்’ துறையை ஊக்குவிக்கவே அக்கறை காட்டியுள்ளார்.

ஜனநாயகமற்ற இந்தப் பாசிச ஆட்சிதான் அமிதாப் காந்த்திற்கு அதிகமான ஜனநாயகமாக தெரிகிறது! அதுவே சீர்திருத்தங்களுக்குத் தடையாக உள்ளாதாக அவர் கடிந்து கொள்கிறார்.

மத ரீதியாகவும், இன ரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டம் பஞ்சாபில் தொடங்கி இப்போது இந்தியாவெங்கும் எழுச்சியுடன் பரவியுள்ளது. இந்தியாவில் ஒரு பெரும் கூட்டம் ஒன்றுமே செய்யாமல் மேலும் மேலும் சொத்து சேர்த்து வருகிறார்கள்.

நமக்குச் சோறு போடும் விவசாயிகளோ போராட்டத்தில் ஈடுபடும் போதும் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் வெங்காயத்துடன் புரட்சியின் விதைகளையும் விதைக்கிறார்கள். அதன் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது.

- சமந்தா

Pin It