farmers rally 651கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகளவிலும் இந்தியாவிலும் பொருளாதாரத்தை மேலும் முடக்கிப் போட்டதுடன் நாட்டின் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம், ‘கே’ வடிவப் பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்வதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இது உண்மையான பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சியைக் குறிப்பிடவில்லை. வருவாய் அடிப்படையிலான வளர்ச்சி மாற்றத்தையே ’கே’ வடிவக் குறியீடு குறிப்பிடுகிறது. ஒரு பக்கம் பெரும்பாலான உழைக்கும் மக்கள் வேலையிழந்து, கூலியிழந்ததால் அவர்களின் வருவாய் குறைந்துள்ளது.

இன்னொரு பக்கம் பெருஞ்செல்வந்தர்களின் செல்வ மதிப்பு அதிகரித்துள்ளது. ’கே’ (K) வடிவத்தில், ஒரு அம்பு மேற்புறம் அதிகரித்துச் செல்கிறது, மற்றொன்று கீழ்ப்புறமாகத் தாழ்ந்து செல்கிறது. அது போலவே, நாட்டின் ஒரு தரப்பு மக்களின் செல்வ வளம் மேல்நோக்கி உயர்ந்தும், மற்றொரு தரப்பு மக்களின் பொருளாதார நிலை கீழ்நோக்கிச் செல்வதையும் குறிக்கிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதையும், ஏழை, நடுத்தர மக்கள் மேலும் ஏழைகளாவதையுமே குறிக்கிறது. பொருளாதார நெருக்கடிகளும் கூட செல்வந்தர்களின் சொத்துகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவே மாற்றப்படுகின்றன.

2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் சேவைத் துறை, உற்பத்தித் துறை, வர்த்தகம், சுற்றுலாத் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் அதிக வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் மட்டும் 1.14  கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

2020 டிசம்பர் வரை வேலைவாய்ப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட 40 வயதிற்குட்பட்டவர்களில் 80% 20 வயதுகளில் உள்ளவர்கள். 2009 பொருளாதார மந்தநிலையின் போது ஏற்பட்ட இழப்புகளைப் போல்  கோவிட் தொற்றுநோயினால் நான்கு மடங்கு அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தைகள் 2020ஆம் ஆண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளன. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் 2010க்கு பிறகு முதல் முறையாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பங்குச் சந்தை மூலதனத்திற்கும் உள்நாட்டுப் பொருளாக்க மதிப்புக்கும் இடையிலான  விகிதம் 100 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பங்குச் சந்தை நிலவரம், உண்மையான பொருளாதார நிலையை வெளிப்படுத்துவதில்லை.

பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றங்கள் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியைக் குறிப்பதில்லை, பங்குகளின் விலையேற்றத்தையே குறிக்கிறது. உண்மையான பொருளாதாரத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. உலகெங்கும் மத்திய வங்கிகள் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மலிவுப் பணக் கொள்கையைக் கடைபிடிப்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளின் வங்கிகள் 0% வட்டிக்குக் கடன் அளிக்கின்றன. வளரும் நாடுகளில் அதை விட அதிக வட்டியில் கடன் அளிக்கப்படுவதால் இந்த வட்டி வேறுபாடுகளின் மூலம் லாபம் ஈட்டவே பெருமளவில் அந்நிய முதலீடுகள் வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. பங்குகளின் விலைக்கும் வருவாய்க்கும் இடையிலான விகிதம் (P/E Ratio) தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையில் பங்குகளின் மூலம் பெறும் வருவாயின் அளவும் குறைந்துள்ளது. லாபமும் வீழ்ந்துள்ளது. ஆனால் பங்குகளின் விலை மட்டும் எகிறிக் கொண்டே போகிறது. நடுத்தர வர்க்கத்திலிருந்து, பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பு நிதி முதலீட்டாளர்களும், பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள காலக்கட்டத்தை பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பாகக் கருதி அதிக அளவில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு உள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளில் மட்டும் புதிதாக 1 கோடிப் பேர் பங்குகளில் முதலீடு செய்யக் கணக்குகள் திறந்துள்ளனர்.

இவ்வாறுதான் பங்குச் சந்தைக் குமிழி தூண்டப்படுகிறது. வட்டிவீதம் குறைந்திருக்கும் வரை பங்குச் சந்தைப் பங்குகளின் விலை உள்ளார்ந்த மதிப்புக்குப் பொருத்தமில்லாத அளவிற்குக் குமிழி போல் பெருக்கமடைகிறது. வளர்ந்த நாடுகளின் வங்கிகளில் வட்டிவீதம் அதிகரிக்கப்படுமானால், பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை மட மடவென்று சரிந்து பங்குச் சந்தைக் குமிழி உடையும்; இந்தக் கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்துப் பங்குகளை வாங்குவோருக்குப் பெரும் இழப்பு ஏற்படும்.

கோவிட்-19 நெருக்கடியில் மருத்துவ நிறுவனங்கள்தான் அதிக லாபம் ஈட்டியுள்ளன. 2020இல் இந்தியாவின் மருந்து / சுகாதாரப் பராமரிப்புத் துறையில் 7 புதிய பெரும் பணக்காரர்கள் உருவாகியுள்ளனர். கடந்த ஆண்டு 10ஆக இருந்த இவர்களின் எண்ணிக்கை  இப்போது 17ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் ரூ. 4.35 லட்சம் கோடி சொத்துச் சேர்த்துள்ளனர்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு வகையான மூலதனத் திரட்டல் காணப்படுகிறது. பங்குச் சந்தையின் மூலம்  மூலதனம் திரட்டப்படுவதை நிதி மூலதனத் திரட்டல் எனலாம், இது இரண்டாம் வகையான மூலதனத் திரட்டல். இதன் மூலம் திரட்டப்படும் மூலதனம் அனைத்துமே உற்பத்தித் திறனுள்ள முறையில் முதலீடு செய்யப்படுவதில்லை.

அதுவும் லாபம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத இது போன்ற பொருளாதார மந்த நிலையில் முதலீடு செய்யப்படும் மூலதனத்தின் அளவு மிகவும் குறைவாகவே காணப்படும். அப்படி என்றால் முதலாளித்துவச் சமூகத்தில் உண்மையான / முதன்மையான மூலதனத் திரட்டல் எங்கு  நடைபெறுகிறது? நிச்சயமாக நிதித் துறைகளில் அல்ல.

உற்பத்தித் துறைகளில் உழைப்பாளரின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் திரட்டப்படும் உபரிமதிப்பின் திரட்டலே உண்மையான / முதன்மையான மூலதனத் திரட்டல் ஆகும். உபரி மதிப்பிலிருந்தே லாபம் பெறப்படுகிறது.

பங்குச் சந்தையின் சந்தை மூலதனத்தின் மொத்த மதிப்புமே உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படுவதில்லை. சந்தை மூலதன மதிப்பிற்கும், உற்பத்தித் துறையில் செய்யப்படும் மூலதன மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடே நிதிமுதலீட்டாளர் லாபம் என்று பொருளாதார அறிஞர் ஹில்ஃபெர்டிங்க் வரையறுத்துள்ளார்.

இதிலிருந்தே, நிறுவனங்களின் முதன்மைப் பங்குதாரர்களும், நிதி நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பெரும் லாபம் அடைகிறார்கள். நீண்ட கால அளவில் மட்டும்தான் பங்குச் சந்தை நிலைகள், மூலதனத் திரட்டலுக்கான சுழற்சியுடன் ஒத்துப் போகின்றன. குறுகிய கால அளவில் செய்யப்படும் ஊக முதலீடுகளே இந்த வேறுபாடு ஏற்படக் காரணமாகின்றன.

இந்த ஊக முதலீடுகளைக் கட்டுப்படுத்தவும், நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் வரிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக டோபின் என்ற பொருளாதார அறிஞர் நாணயப் பரிவர்த்தனைகளில் செய்யபடும் ஊக முதலீடுகளைத் தடுக்க ஒரு வரிமுறையை முன்மொழிந்தார் இது டோபின் வரி என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வரிவிதிப்பினால் நிதித் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சொல்லி அது நடைமுறைபடுத்தப்படாமல் தடுக்கப்படுகிறது.

மொத்தத்தில் வங்கிகளின் மலிவுப் பணக் கொள்கையின் மூலம் ஊக நிதி முதலீடுகளே அதிகரித்துள்ளன. யாருக்குப் பண உதவி தேவையோ, யாரைக் கடன் நிதி சென்றடைய வேண்டுமோ அவர்களை அது சென்றடையவில்லை. சிறு குறு நிறுவனங்கள் கடன் கிடைக்காமல் தவித்து வருகின்றன. வங்கிகளில் வைப்புத் தொகை அதிகரித்துள்ள போதும் வங்கிகள் கடனளிப்பதில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படுவதால் தேவைப்படுபவர்களுக்குக் கடன் கிடைக்கவில்லை.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இது ஒன்றும் புதிதல்ல. முதல் முறை இத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருந்தால் ஏதோ தெரியாமல் செய்து விட்டார்கள் என்று கருத முடியும். ஆனால் இவர்களின் வங்கிக் கொள்கையால் இப்படிப்பட்ட விளைவுகள்தான் ஏற்படும் என அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் செக்கு சுற்றுவது போல் அதே கொள்கையையும், நடைமுறையையும் கடைபிடிப்பதால், பொருளாதார மீட்சி ஏற்படுவதுதான் தாமதப்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவம் என்ற பாழுங்கிணற்றின் பணக் கொள்கைகள் மக்களைப் பாதாளத்தில்தான் தள்ளுகின்றன. இதை அறிந்தும் அறியாதது போல் ஆளும் வர்க்கம் தன் சொத்துக்களைக் காத்தும் வளர்த்தும் வருகிறது. உலகப் பொருளாதார மாநாட்டில்  ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் சமநிலையற்ற சமூகத்தை உருவாக்கிய வைரஸ் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது.

இந்த கரோனா வைரஸ் உருவாக்கிய பொருளாதாரச் சிக்கலைக் கடந்த 1930ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தோடு ஒப்பிடலாம் எனவும் சுகாதாரம், மருத்துவ வசதிக்குக் குறைந்த அளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா 4ஆவது இடத்தில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட பொது முடக்கக் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் உயர்ந்து ரூ.12.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ஆக்ஸ்ஃபாம் ஆய்வு தெரிவிக்கிறது. 

பொது முடக்கக் காலத்தில் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் ஈட்டியதைத்   தேர்ச்சிபெறாத ஒரு தொழிலாளி ஈட்ட வேண்டுமானால் 10 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுமாம். முகேஷ் அம்பானி ஒரு வினாடியில் ஈட்டுவதை எளிய மக்கள் ஈட்ட 3 ஆண்டுகள் தேவைப்படும். 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 1.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அம்பானி கரோனா ’லாக்டவுன்’ காலத்தில் ஈட்டிய தொகை அமைப்புசாராத் துறையில் உள்ள 40 கோடிப் பணியாளர்களை வறுமையில் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைப்புசாராத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12.20 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள். இதில் 75 சதவீதத்தினர், அதாவது 9.20 கோடிப் பேர் அமைப்புசாராத் துறையைச் சேர்ந்தவர்கள். 2020 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 கோடிப் பெண்கள் வேலையிழந்துள்ளார்கள்.

இந்தியாவின் முதல் 11 கோடீஸ்வரர்கள் கரோனா காலத்தில் பெருக்கிக் கொண்ட சொத்தில்  குறைந்தபட்சமாக ஒரு சதவீதம் வரி விதித்தாலே விளிம்புநிலை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் வழங்கும் மத்திய அரசின் ’ஜன் அவுஷதி’ திட்டத்துக்கு 140 மடங்கு நிதி ஒதுக்க முடியும்.

இந்த வரியைக் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேண்டிய நிதி ஒதுக்கலாம், அல்லது சுகாதாரத் துறைக்கு 10 ஆண்டுகளுக்கு வேண்டிய நிதி ஒதுக்கலாம்  என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நேரடி வரியை அதிகப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையே ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அரசு நேரடி வரியில் சலுகைகள் அளித்த பிறகும் கூட 2020இல் நேரடி வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மறைமுக வரிகளின் பங்கு சுமார் 56 சதவீதம் அதிகரித்துள்ளது, நேரடி வரி வருவாய் 26-27 சதவீதம் சரிவடைந்துள்ளது.

பங்குச் சந்தைகள் உச்சத்தைத் தொட்ட போதும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்துள்ளது. மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களிடம் அதிக ஈவுத் தொகை அளிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. பிற பங்குகளின் சந்தை மூலதனம் 18 சதவீத உயர்வடைந்த போதும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பொதுத் துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 16.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) உலக வங்கியுடன் இணைந்து சொத்து பணமாக்குதல் குறித்த திட்டங்களை விவாதிப்பதற்கும் பொதுத் துறை நிறுவனங்களின் முக்கியமற்ற  சொத்துகளின் விற்பனையை விரைவுபடுத்துவதற்கும் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

முக்கியமற்ற சொத்துகளை ஏலம் விட ஒரு மின்-ஏலத் தளம் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சொத்துகளில் ரூ. 100 பில்லியன் மதிப்புள்ள உபரி நிலம், பொதுத் துறைப் பயன்பாட்டு (பி.எஸ்.யூ) சொத்துகள் அடங்கும்.

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் லண்டனில் உள்ள சென்ட்ரிகஸ் சொத்து மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து பொதுத் துறை நிறுவனங்களில் 10 பில்லியன் டாலர் நிதியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலானா 8 மாதத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் 22 விழுக்காடு உயர்ந்து 58.37 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையில் நேரடி அந்நிய முதலீடுகளும், நிதி முதலீடுகளும் மற்ற நாடுகளின் நிதி வளங்களைச் சுரண்டுவதற்கான கருவிகளாகவே பயன்படுத்தப்படுகின்றன.

கூடுதல் வரி வருவாயின் (CESS, SURCHARGE) மூலம் பெறப்படும் வருவாயை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்ற அவசியம் இல்லாததால் மத்திய அரசு  கூடுதல் வரிகளின் பங்கையே அதிகரித்து வருகிறது. 14ஆவது நிதி மையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வரி வருவாயின் பங்கு 42 விழுக்காடாக உயர்த்தப்படவில்லை. 

2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் வரிவருவாய்ப் பகிர்வை 21% குறைந்துள்ளது. 2020 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் தமிழ் நாடு உட்பட 12 மாநிலங்களில் மாநிலங்களின் மொத்த மூலதனச் செலவு 26 சதவீதம் வீழ்ந்து ரூ. 1.1 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மாநில அரசுகளின் மூலதனச் செலவை ஊக்குவிக்கும் வகையில் 2020 அக்டோபர் 12ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக மூலதனச் செலவிற்காக மாநிலங்களுக்கான சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் இது வரை 27 மாநிலங்களில் ரூ. 10,657 கோடி மதிப்பிலான மூலதனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5,378 கோடி ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் நாட்டிற்கு நிதி அளிக்கப்படவில்லை.

நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்கள் தங்கள் நிதி வரம்பை அதிகரிக்குமாறும், சரக்கு, சேவை வரி இழப்பீட்டுக்கு உதவுமாறும், கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பெறுவதற்கு உதவுமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

முன்-பள்ளி முதல் உயர் இடைநிலைக் கல்விக்கான நிதியுதவி அளிக்கப்படும் சமக்ரா சிக்ஷா எனப்படும் ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டத்திற்கு (சிஎஸ்எஸ்) 2020இல் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 29 விழுக்காடு மட்டுமே கொடுத்துள்ளது. மாநிலங்கள் இதற்கான ஒதுக்கீட்டுத் தொகையில் 26 விழுக்காடு மட்டுமே அளித்துள்ளன.

பிரதமர்-விவசாய உதவித் திட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.6 ஆயிரம் உரிய விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டிலிலிருந்து, 2020 ஜூலை 31ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கும், தகுதியற்ற விவசாயிகளுக்கும்  என மொத்தம் 20.48 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ. 1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதில் 55.58 விழுக்காட்டினர் வருமான வரி செலுத்துவோர். மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்ற பிரிவில் வருகின்ற விவசாயிகள்.

டிசம்பரில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 26% அதிகரித்துள்ளது. இந்தியாவின் 7ஆவது வர்த்தகக் கொள்கை உலக வர்த்தக நிறுவனத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2021 ஏப்ரல் 1 முதல் ஐந்து வருட காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவது இதன் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது. உலக வர்த்தக மையம் ’ஆத்மநிர்பர் பாரத்’ போன்ற பாதுகாப்புவாதத் திட்டங்களால் வர்த்தக கட்டுப்பாடுகள் ஏற்படும் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 1இலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி சார்ந்த உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் சலுகை அடைய இருப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பை அடிமட்ட விலைக்கு வாங்கிச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள்தானே தவிர இது உள்நாட்டு உற்பத்தித் துறையை எந்த விதத்திலும் மேம்படுத்தப் போவதில்லை.

இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் உள்நாட்டுச் சிறு நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படாமல், மூலப் பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், மூலப் பொருட்கள் தட்டுப்பாடு, விலையுயர்வால் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மூலப்பொருள் இறக்குமதி செய்யவும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு  20 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவின் பெரிய எஃகு, சிமெண்ட் நிறுவனங்கள் ஒரு கூட்டமைப்பாக செயல்பட்டு விலையை அதிகப்படுத்தி வருகின்றன. சிமெண்ட், எஃகுக்கு மாற்றுப் பொருட்களை ஆராயுமாறு குறிப்பிட்ட நிதின் கட்காரி, இதை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும், நிதி அமைச்சகத்துடனும், பிரதமருடனும் இது குறித்துப் பேசுவதாகவும் கூறியுள்ளார்!

பணவீக்கம்:

டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 4.59 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 3.41 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 10.41 விழுக்காடு குறைந்துள்ளது. தானியங்களின் விலைவாசி 0.98 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 15.98 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 16.08 விழுக்காடு உயர்ந்துள்ளது. மீன், இறைச்சியின் விலை 15.21 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம்  4.74 விழுக்காடு உயர்ந்துள்ளது.

நவம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி நவம்பரில் மொத்த உற்பத்திக் குறியீடு 1.9 விழுக்காடு சரிவடைந்துள்ளது. முதன்மைத் துறைகளின் உற்பத்தி 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதில் சுரங்கத் துறையில் உற்பத்தி 0.1 விழுக்காடு சரிவடைந்துள்ளது. செய்பொருளாக்கத் துறையில் உற்பத்தி 0.4 விழுக்காடும், மின்சார உற்பத்தி 0.8  விழுக்காடும் அதிகரித்துள்ளன.

பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 0.2 விழுக்காடும், மூலதனப் பொருட்களின் உற்பத்தி 8.9 விழுக்காடும் சரிவடைந்துள்ளன. கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 0.7 விழுக்காடும்,  நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 1.4 விழுக்காடும் சரிவடைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்கள் (1.1%), இடைநிலைப் பொருட்கள் (17.2%)  ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

டிசம்பரில் தொழில்துறை வளர்ச்சி:

தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு டிசம்பரில் 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி  2.2 விழுக்காடும், மின்சார உற்பத்தி 4.2 விழுக்காடும் அதிகரித்துள்ளன. உரத் துறையில் உற்பத்தி 2.9 விழுக்காடும், கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 விழுக்காடும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.2 விழுக்காடும், பெட்ரோலியச் சுத்திகரிப்புத் துறையில் உற்பத்தி 2.8 விழுக்காடும் குறைந்துள்ளன. எஃகு உற்பத்தி 2.7 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 9.7 விழுக்காடும் குறைந்துள்ளன.

தேசிய வருமானத்தின் முதல் கணக்கீடு (2020-21): 

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2020-21ஆம் ஆண்டின் தேசிய வருமானத்தின் முதல் கணக்கீட்டின் படி இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2020-21இல் 134.40 லட்சம் கோடியை எட்டக் கூடும் என்றும், 2019 மே மாதத்தில் 4.2 விழுக்காட்டு வளர்ச்சி பெற்ற  மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-21இல் 7.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்புக் கூட்டல்  நிலையான விலையில் 2020-21இல் 123.39 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2019-20ஐக் காட்டிலும் 7.2 சதவீதம் குறுக்கமடைந்துள்ளது. 2020-21இல் விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 3.4 விழுக்காடும், மின்சாரத் துறை 2.7 விழுக்காடும் உயர்ந்துள்ளன. சுரங்கத் துறை (12.4%), உற்பத்தித் துறை (9.4%), கட்டுமானத் துறை (12.6%), வர்த்தகம், ஹோட்டல் சார்ந்த துறைகள் (21.4%), நிதித் துறை (0.8%), பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறை (3.7%) என மற்ற அனைத்துத் துறைகளுமே வீழ்ச்சி கண்டுள்ளன.

சரக்குகளின் மீதான நிகர வரி 13.0 விழுக்காடு சரிந்துள்ளது. நிகர தேசிய வருமானம் 8 விழுக்காடு குறைந்துள்ளது. தனிநபருக்கான மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு 8.7 விழுக்காடு சரிவடைந்துள்ளது. நிகர தனிநபர் தேசிய வருமானம் 8.9 விழுக்காடு குறைந்துள்ளது. தனிநபருக்கான தனியார் நுகர்வுச் செலவினம் 10.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில் ‘வி’ (V) வடிவப் பொருளாதார மீட்சி பெறுவதற்கான எந்த அறிகுறியும் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அரசு நிதிச் சிக்கனத்தைக் கடைபிடிப்பது பொருளாதார மீட்சியைப் பாதிக்கும் என சர்வதேசப் பண நிதியத்தின் முதன்மைப் பொருளியலாளர் கீதா கோபிநாத் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அரசு முக்கியமான செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஏழ்மையான குடும்பங்களுக்கும், சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும்  நிவாரணம் அளிக்க வேண்டும் என ரகுராம் ராஜன் ஆலோசனை அளித்துள்ளார். மத்திய அரசு இவற்றைக் காது கொடுத்து கேட்டதாகத் தெரியவில்லை.

டெல்லியில் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு தொடர்ந்து 70 நாட்களுக்கு மேல் போராடி வரும் லட்சக் கணக்கான விவசாயிகளில் 155க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று அவர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட டிராக்டர் பேரணியிலும்  போராட்டத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வன்முறையைத் தூண்டியுள்ளதுடன் அவகேடான முறையில் 37 தலைவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 முறை நடந்துள்ள மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு விவசாயிகளின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து வருகிறது. பிரதமரோ, நிதியமைச்சரோ பெயருக்குக் கூட ஒரு முறை விவசாயிகளை நேரில் சந்திக்காது அலட்சியப்படுத்தியுள்ளனர்.

ஒரு தசாப்தம் காணாத, அதாவது நூறாண்டிற்கு ஒரு முறையே பார்க்க முடிந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அளிக்கப் போகிறாராம். விவசாயிகள்  மீது துளியும் அக்கறை காட்டாமல் அவர்களைக் கொலையும், சித்திரவதையும் செய்யும்  இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? மக்களின் உழைப்பையும், மாநிலங்களின் நிதியையும் ஒரு தசாப்தம் காணா அளவிற்குச் சுரண்டுவதற்கான கருவியாகவே  நிதிநிலை அறிக்கையை பயன்படுத்தப் போகின்றனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Pin It