corona testingஒரு பெருந்தொற்று ஆசியாவில் தொடங்குகிறது, ஐரோப்பாவின் தலைநகரங்களில் ஊடுபுகுந்து அதன் வழியில் குறைந்த பட்சம் மனித இனத்தின் மூன்றில் ஒரு பகுதியில் அழித்து கொண்டு செல்கிறது. அது அனைத்தும் முடிகிறபோது, கலகங்கள் தொடங்குகின்றன, விருப்பத்திற்குரிய நிறுவனங்கள் வீழ்கின்றன, பொருளாதார அமைப்பு முழுதும் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டியதாகிறது.

இதுதான் கறுப்பு மரணத்தின் சுருக்கமான வரலாறு, பெருவீக்க (நெறிக்கட்டு) பிளேக் பெருந்தொற்று நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் உருவானது, அது 1340 களில் மங்கோலியாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரை பரவியது.

அப்போது பொருளாதாரம் விவசாயத்தையும் கைவினைத் தொழில்களையும் சார்ந்திருந்ததால், இயல்பு வாழ்க்கை ஒப்பீட்டளவில் விரைவாகத் திரும்பியது.

ஆனால், தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பெருமளவுக்குக் குறைத்ததன் மூலம் அது பிழைத்திருந்தவர்களின் பேரம் பேசும் திறனை அதிகரித்தது, அது விரைவில் மத்தியகால நகரங்களின் மக்களிடையே விடுதலை குறித்த புதிய கருத்தாக்கங்களாக மாறியது.

அதன் தொடர்ச்சியாக இறுதியாக நிலப்பிரபுத்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு பொருளாதார மாற்றத்திற்கான நிகழ்ச்சிப் போக்கைத் தொடங்கி வைத்தது, முதலாளித்துவத்தின் எழுச்சியைத் தூண்டி விட்டது.

முதலாளித்துவத்தின் பிளேக் கொடுங்கனவு

இன்று முதலாளித்துவம் அதன் சொந்தப் பிளேக் கொடுங்கனவை எதிர்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பீடிக்கப்பட்டவர்களில் 1 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காட்டுக்குள் இறக்க நேரிடலாம் என்றாலும், 1340 களில் நிலவியதை விட அதிகமான அளவு சிக்கல் கொண்ட பொருளாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எளிதில் நொறுங்கக் கூடிய புவிசார் அரசியல் அமைப்பினாலும் பருவநிலை மாற்றத்தின் விளைவாலும் ஏற்கனவே பாதிப்படைந்து இருக்கும் சமுதாயத்தின் மீது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெருந்தொற்று ஏற்கெனவே நிர்ப்பந்தித்துள்ள பெரும் மாற்றங்களைப் பற்றிப் பரிசீலிப்போம். .

முதலாவதாக, சீனா, இந்தியா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் அமெரிக்காவின் எண்ணற்ற மாநிலங்களில் அன்றாட வாழ்வு பகுதியளவுக்கு முடக்கப்பட்டு விட்டது.

இரண்டாவதாக, அரசாங்கங்கள் மற்றும் அரசியல் மேட்டுக்குடியினர், நெருக்கடியின் தீவிரத்தன்மையை மறுத்தார்கள் அல்லது தொடக்கக் கட்டங்களில் அதைச் சந்திப்பதற்கான மருத்துவ அமைப்பைத் திரட்டும் திறனற்றவர்களாக இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இதனால் அவர்களுடைய பெயர் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, பெரும் பொருளாதார நாடுகள் அனைத்திலும் நுகர்வோர் செலவினத்தில் ஏற்பட்டுள்ள உடனடி வீழ்ச்சி உறுதியாக மிகவும் ஆழமான மந்தநிலையைத் தூண்டி விட்டுள்ளது. அதாவது, பங்கு விலைகள் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்துள்ளன, அதன் தொடர்ச்சியாக, ஓய்வூதிய நிதிகளைப் பங்குகளில் முதலீடு செய்துள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதற்கிடையில் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், மற்றும் தங்கும் உணவு விடுதிகள் கடன்களில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், அரசுகள் பொருளாதார மீட்புத் திட்டங்களைத் தொடங்கியுள்ளன, பெரும்பாலான மக்களுக்கு இவற்றின் உட்பொருள் என்னவென்றே தெரியாத அளவுக்கு அவை மிகப் பெரிய திட்டங்களாக இருக்கின்றன. அமெரிக்க அரசாங்கம் இரண்டு இலட்சம் கோடி டாலர்களைப் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருகிறது, அதில் குடிமக்களுக்கான நேரடி வழங்கலும் வணிகக் கடன்களும் அடங்கும், இது ஓர் ஆண்டில் அரசாங்கம் வரிகளாக வசூலிக்கும் தொகையில் பாதிக்கும் மேலாகும்.

இதற்கிடையில், மத்திய வங்கிகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தீவிரமாகக் கடன் வழங்கும் புதிய வடிவத்திற்கு மாறியுள்ளன. கடந்த 2008 இல் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு போல, அவை அரசாங்கக் கடன் முழுவதையும் வாங்குவதற்கு புதிய பணத்தை உருவாக்கும் – ஆனால் இம்முறை, அது படிப்படியாக இருக்கப் போவதில்லை, அல்லது பாதுகாப்பான அரசாங்கப் பத்திரங்களில் குவிக்கப் போவதில்லை. கட்டுப்பாடற்ற வகையில் கடன்களை வழங்குவது 2008 இல் ஒரு பீதியைத் தவிர்க்கும் நடவடிக்கையாக அறிமுகப் படுத்தப்பட்டது, இது பல பத்தாண்டுகளுக்குத் தொடரலாம்.

அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், அது ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியை ஏற்படுத்தும் 'V' வடிவ மந்தம்தான் என்றும், 'உண்மையான பொருளாதாரம்' பலமாக இருப்பதாகவும் அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.

நொறுங்கி விழும் அடித்தளங்கள்

இது மிகை-நம்பிக்கைவாதம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஒரு கட்டிடத்தை உருவகப்படுத்திக் கொள்வோம்.

2008 இல் நிதி நெருக்கடியில், ஒரு கட்டிடத்தின் “கூரை” போன்ற நிதி அமைப்பு அடிக் கட்டமைப்பின் மீது நொறுங்கி வீழ்ந்தது போலத் தோன்றியது. அந்தக் கூரை சேதமடைந்திருந்தாலும், அடிக் கட்டமைப்பு உறுதியாக நின்றது, இறுதியாக கூரையை நாம் மீண்டும் கட்டியமைத்தோம்.

இம்முறை, அதற்கு மாறாக, அடித்தளங்களே நொறுங்கிக் கொண்டிருக்கின்றன – ஏனென்றால் முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார வாழ்க்கை முழுவதும் மக்களை வேலைக்குச் செல்லவும் அவர்களுடைய கூலியைச் செலவழிக்கவும் நிர்ப்பந்திப்பதை அடிப்படையாகக் கொண்டது. இப்போது நாம் அவர்களை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கவும்’ வழக்கமாக அவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய ஊதியத்தை வழக்கமாகச் செலவழிக்கச் செல்லும் அனைத்து இடங்களுக்கும் செல்லாமலிருக்கவும் நிர்ப்பந்திக்க வேண்டியிருக்கிறது என்பதால், கட்டிடம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.

உண்மையில், கட்டிடம் பலமாக இல்லை. கடந்த நிதி நெருக்கடியிலிருந்து பன்னிரெண்டு ஆண்டுகளில் நாம் கண்டுள்ள வளர்ச்சி மத்திய வங்கிகள் பணம் அச்சிடப்பட்டதன் மூலமும், வங்கிகளைக் கடனிலிருந்து மீட்க அரசாங்கங்கள் வழங்கப்பட்ட நிதி மற்றும் கடன் மூலமும் தூண்டி விடப்பட்டதே ஆகும்.

கடன்களைக் குறைப்பதற்குப் பதிலாக, நாம் மேலும் 72 இலட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு கடனை உருவாக்கியுள்ளோம்..

பெருவீக்க பிளேக் காலத்தில் போல் அல்லாமல், 21 ஆம் நூற்றாண்டு வர்த்தகம் மற்றும் நிதி அமைப்புக்கள் சிக்கலானவை – அவை 2008 இல் தெரிந்து கொண்டது போல, நொறுங்கிப் போகக் கூடியவை யாகும்.

நிதி அமைப்பில் சுற்றோட்டத்தில் இருக்கும் சொத்துக்களில் பல – 2008 நெருக்கடிக்கு இட்டுச் சென்றதைப் போன்று- வங்கிகள், காப்பீட்டு குழுக்கள், மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வெளியிட்ட கடன் ஏற்பு உறுதிமொழிகளின் (I owe you) சிக்கலான தொகுப்புக்கள் ஆகும். அவற்றின் மதிப்பு, அவற்றை வைத்திருப்பவர்களுக்கு எதிர்கால வருவாயின் மீதான உரிமையைக் கொடுக்கும் என்பதில் அடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு, மற்றும் அதற்கு அப்பால் நமது உடற்பயிற்சிக் கூட உறுப்பினர் தொகை, நமது மாணவர்களின் கல்விக் கடன் திருப்பிச் செலுத்துதல்கள், நமது வாடகைகள், வாகனக் கடன் திருப்பிச் செலுத்துதல்கள், ஆகியவை ஏற்கெனவே 'செலுத்தப்பட்டதாக' கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, நிதி நிறுவனங்கள் தாம் கடன் கொடுப்பவர்களின் தகுதிகளைக் கொண்டும் அவர்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தைக் கணக்கில் கொண்டும் அவர்களுக்குப் பதிலாகத் தாம் கடனைச் செலுத்தி விடுகின்றன. பிறகு தாம் கடன் கொடுத்தவர்களிடமிருந்து கடனை வசூலிக்கின்றன.

ஆனால் நாம் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லவில்லை என்றாலோ, ஒரு புதிய வாகனம் வாங்கவில்லை என்றாலோ என்ன நடக்கிறது? இந்த கடன் ஏற்பு உறுதிமொழிகள் மதிப்பற்றவையாக ஆகின்றன, மேலும் நிதி அமைப்பு அரசால் பணமளித்து மீட்கப்பட வேண்டியவை ஆகின்றன.

நினைத்துப் பார்க்க முடியாதது இங்கு நடக்கிறது

இது எவ்வளவு அபாயகரமானது என்று பெரும்பாலான சாதாரண மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் பத்திரச் சந்தைகளைச் செயலூக்கத்துடன் தேசியமயமாக்குமாறு மத்திய வங்கிகளை இணங்கச் செய்துள்ளார்கள்.

அரசுகள் மக்களையும் நிறுவனங்களையும் நெருக்கடியிலிருந்து மீட்பதற்குக் கடன் அளிக்கின்றன – டிரம்ப் இரண்டு இலட்சம் டாலர்கள் அளிப்பதைப் போல – அந்தக் கடன்கள் அரசின் இன்னொரு பகுதியால் – மத்திய வங்கியால் - விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.

நீண்ட காலப்போக்கில், தேக்கமடைந்த வளர்ச்சியும் உயர்ந்த கடனும் இந்த மூன்று கொள்கைகளுக்கு இட்டுச் செல்லலாம் என்று இடதுசாரிப் பொருளாதாரவியலாளர்கள், நான் உட்பட – எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர், அதாவது, தானியங்கிமயமாக்கல் நன்கு ஊதியமளிக்கப்பட்ட வேலையை நிலையற்றதாகவும், அரியவையாகவும் ஆக்கி விட்டதனால் அரசுகள் குடிமக்கள் அனைவருக்கும் வருவாயை அளித்தல்; அரசு செயல்படுவதற்கு மத்திய வங்கிகள் அரசுக்கு நேரடியாகக் கடன் வழங்குதல்; இலாபத்தில் நடத்த முடியாத முக்கிய சேவைகளைப் பராமரித்து வருவதற்குப் பெரிய அளவிலான பெருங்குழுமப் பொதுத்துறை நிறுவனங்ககளை உருவாக்குதல்.

அரிதான சூழ்நிலைகளில் கடந்தகாலத்தில் முதலீட்டாளர்களுக்கு அத்தகைய ஆலோசனைகள் அளிக்கப்பட்டன, அதற்கான பதிலளிப்பு வழக்கமாக ஒரு நாகரிகமான தலையசைப்பாக, அல்லது, சோவியத் கம்யூனிசத்தின் வீழ்ச்சியைக் கண்ணுற்ற மக்களிடையே சீற்றமாக இருந்தது. அது முதலாளித்துவத்தை அழிக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இப்போது, நினைத்துப்பார்க்க முடியாதது இங்கு நடக்கிறது – அனைத்தும்: அனைத்துத் தொகை செலுத்துதல்களும், அரசு மீட்பு நடவடிக்கைகளும், மத்திய வங்கிகள் மூலம் அரசுக் கடன்களை அடைத்தலும் -ஆகிய இவை அனைத்தும் மிகவும் விரைவாக ஏற்பளிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் வழக்கமான ஆதரவாளர்களைக் கூட அதிர்ச்சியடையச் செய்யுமளவுக்கு அவை நடைபெறுகின்றன.

கேள்வி என்னவென்றால், இன்னொருபுறம் தோன்றி எழுந்து கொண்டிருக்கும் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான பார்வையுடன் இதை நாம் உற்சாகத்துடன் செய்யப் போகிறோமா, அல்லது இப்போது உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் அமைப்பைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் தயக்கத்துடன் செய்யப் போகிறோமா?

இப்போதுவரை நெருக்கடி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு பொருளாதாரவியலாளர்கள் ஏன் மிகவும் எதிராக இருந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் வருவாய் செலுத்துதல்கள் 'மக்களை வேலைக்குச் செல்வதிலிருந்து ஊக்கம் குன்றச் செய்யும்' என்பதுதான் பிரச்சனை என்று பிரிட்டிஷ் பழமைவாத அரசியல்வாதி அயாயின் டங்கன் ஸ்மித் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசு உடமை மற்றும் உற்பத்தியைத் திட்டமிடும் முயற்சிகளுக்கும் வருகிறபோது, மனிதக் கட்டுப்பாட்டுக்கான அத்தகைய முயற்சிகள் சந்தையின் வழியில் குறுக்கிடும் என்று சுதந்திரச் சந்தைப் பொருளாதாரவியலாளர்கள் நம்புகிறார்கள், அது அவர்களுடைய கருத்துப்படி, எந்த ஒரு திட்டமிடும் முகாமையோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்ய முடியாத வழியில், உலகில் ஒழுங்கைக் கொண்டுவரும் ஓர் அறிவார்ந்த இயந்திரம் போலச் சந்தை செயல்படுகிறது.

அரசுக் கடன்களுக்கு மத்திய வங்கிகள் நிதியளிப்பதைப் பொருத்தவரை, இது முதலாளித்துவம் தார்மீகரீதியாகத் தோல்வியடைந்து விட்டதன் ஒப்புதலாகவே பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து வங்கியோ அல்லது அமெரிக்க தேசிய வங்கியோ பணம் அச்சிட்டு, அதை அவர்களுடைய கருவூலங்களுக்குக் கடன் வழங்குவது அல்ல, மாறாக தொழில்முனைவும் போட்டியும்தான் வளர்ச்சியை முடுக்கி விடுபவை என்று கருதப்படுகின்றன. ஆகவே, நிரந்தரமாக இந்தப் பொறியமைவுகளைச் சார்ந்திருக்கும் ஒரு முதலாளித்துவம் பெரும்பாலான மரபுவழிப் பொருளாதாரவியலாளர்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும்.

குறுகிய காலத்திற்குள்

என்னைப் பொருத்தவரை, இந்த நெருக்கடி நடவடிக்கைகள் எப்போதும் நினைத்துப் பார்க்கக் கூடியவைதாம். 2015 இலிருந்து, முதியோர் மக்கள் தொகைக்கு ஆதரவளிக்கும் பொருளாதாரச் செலவுகளால் இல்லையென்றாலும், பின்னர் பருவநிலைப் பெருங்கேடால் நாம் ஒரு புதிய, மிகவும் மாறுபட்ட, முதலாளித்துவ மாதிரிக்கு ஏற்பளிக்க நிர்ப்பந்திக்கப் படுவோம் என்று நான் வாதிட்டுள்ளேன்.

ஆனால் கொரோனா நெருக்கடி அனைத்தையும் குறுகிய காலத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது.

இதிலிருந்து தோன்றுகிற முதலாளித்துவம் 2020 களின் மத்தியில் கோடிக்கணக்கான டாலர்களில் அடிப்படை வருவாய் செலுத்தியிருக்கும்; விமான நிறுவனங்கள், தொடர் தங்கும் விடுதிகள் ஆகியவை தேசியமயமாக்கப்பட்டிருக்கும்; முன்னேறிய நாடுகளின் அரசாங்கக் கடன்கள் தற்போது சராசரியாக அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 103 விழுக்காடாக இருப்பது இன்னும் அதிகரித்திருக்கும். எவ்வளவு அதிகரித்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால், மொத்த உற்பத்தி எந்த அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று இன்னும் நமக்குத் தெரியவில்லை.

நாம் உண்மையில் அதிர்ஷ்டமற்றவர்கள் என்றால், தொடர்ச்சியான பல வாராக் கடன்கள் மற்றும் சில பலவீனமான அரசுகளில் அரசாங்க ஒத்திசைவு சிதறிப் போயிருப்பதும் பல்தரப்பு உலக அமைப்பை மோசமாகப் பாதித்திருக்கும். பாதுகாப்புத் திட்டமிடுவோர் வெனிசுலா, வட கொரியா, அல்லது உக்ரெய்ன் போன்ற அரசுகள் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துபோகலாம் என்றும், அதனால் படைகளை அனுப்பி அவற்றை “மீட்டுக் காப்பாற்றுவதற்கு” அமெரிக்கா, சீனா மற்றும் இரசியா போன்ற அருகாமை வல்லரசுகளிடத்தில் பலமான எண்ணங்கள் ஏற்படலாம் என்றும் அஞ்சுகின்றனர்.

முன்பு, 1930 களின் தொடக்கத்தில், நாம் விரைவான உலகமய அகற்றலை நாம் கண்டோம். அது ஒரு வங்கி நெருக்கடியுடன் தொடங்கியது, சர்வதேச நாணய ஏற்பாடுகளின் முறிவுக்கு இட்டுச் சென்று, உடன்படிக்கைகளின் மறுதலிப்புக்கள் மற்றும் கட்டாய இணைப்புக்களுடன் முடிவுற்றது.

இன்றைய நெருக்கடி - சர்வதேச நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.மன்றம் மற்றும் பிற - மிகவும் சக்திவாய்ந்த நிறுவனங்களுடன் தொடங்கினாலும், 1930 களில் போன்ற அதே அடிப்படைப் பிரச்சனைகளையே எதிர்கொண்டுள்ளோம்: தலைமை தாங்குவதற்கும், நடத்தையின் தரத்தை நிர்ணயிப்பதற்கும், கடனளிப்பதற்கான கடைசிப் புகலிடமாக செயல்படக் கூடிய ஒரு வலிமை வாய்ந்த நாடு இல்லை.

2008 க்குப் பின்பு போல, நாம் வழமையான பொருளாதாரப் புத்தகத்தைப் பின்பற்றுவோமானால், நெருக்கடி தீர்ந்ததும், அரசியல் மேட்டுக்குடியினர் மேலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு – அரசுச் செலவினத்தைக் குறைப்பதற்கும் மற்றும் கடன் அதிகரிப்பைக் குறைப்பதற்கும் எளிய மக்களுக்கு மருத்துவப் பராமரிப்பில் வெட்டு, ஊதிய வெட்டு, வரி உயர்வு – கோருவார்கள்.

சுதந்திரச் சந்தையின் தர்க்கம் இதுதான், ஆனால் பலர் அதைப் பைத்தியக்காரத்தனமாகக் காண்பார்கள்.

14 ஆம் நூற்றாண்டில், பிளேக் நோயின் பெருந்திரள் இறப்புக் கட்டம் முடிந்ததும், மிகச் சரியாக இதைத்தான் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் செய்ய முயற்சி செய்தார்கள்: கற்பனை செய்யவும் முடியாத துயரத்தில் வாழ்ந்துவந்த மக்கள் மீது, அவர்களுடைய பழைய சலுகைகளையும் மரபுகளையும் பொருளாதாரத் தருக்கத்தையும் மீண்டும் திணிக்க மேட்டுகுடியினர் முயற்சி செய்தார்கள்.

பின்னர், அது உடனடியான, இரத்தக் களரியான கலகங்களுக்கு – இங்கிலாந்தில் விவசாயிகள் கலகம், பிரான்சில், கென்ட், பாரிஸ் மற்றும் ஃபிளாரன்ஸ் போன்ற நகரங்களைக் கைவினைஞர்கள் கைப்பற்றியது போன்ற, குடிமக்களில் மிகவும் கூருணர்வுமிக்க “பூர்சுவாக்கள்” என்ற ஒரு குழுவால் வழிநடத்தப்பட்ட, ஜேக்வரி என்றழைக்கப்பட்ட கலகம் ஆகியவற்றுக்கு - இட்டுச் சென்றது.

பிளேக்குக்குப் பிந்தைய கலகங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், அவை மக்கள்திரளின் மனப்போக்கில் ஒரு நிரந்தரமான மாற்றத்திற்கு இட்டுச் சென்றன. “மிகுந்த ஏமாற்றத்திலிருந்தும் அச்சத்திலிருந்தும் ஒரு புதிய நம்பிக்கைக்கு இட்டுச் சென்றன… அவர்களும் கூட, தங்கள் வாழ்க்கையின் சமூக மற்றும் அரசியல் நிலைமைகளை அடிப்படைரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் உலகை மாற்ற முடியும்” என்ற மனநிலையை உருவாக்கின என்று வரலாற்றாசிரியர் சாமுவேல் கிளின் கொஹன் தனது “விடுதலைக்கான பெருவிருப்பம்” என்ற நூலில் எழுதுகிறார். மேலும், அது முதலாளித்துவத்தைக் கட்டவிழ்த்துவிட்ட முதலாளித்துவப் புரட்சிகளுக்கு வழிவகுத்தது.

முதலாளித்துவக் கோள்

இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு பெரும்பாலான அரசியல்வாதிகளின் மனங்களில் நிலவுவதைவிட மிகவும் விரிவான ஒரு திட்டம் தேவையாக இருக்கிறது.

அவர்களைப் பொருத்தவரை, கொரோனா மற்றும் பருவநிலை நெருக்கடி ஆகிய இரண்டுமே ஒரு கோளைத் தாக்கும் விண்கற்களைப் போன்று தெரிகின்றன. வெளியிலிருந்து வரும் அதிர்வுகளுக்கு ஒரு தற்காலிக மற்றும் மாற்றக்கூடிய பதிலளிப்புத் தேவை. உண்மையில், அவை “முதலாளித்துவக் கோளால்” அல்லது குறைந்தபட்சம் நாம் ஏற்றுக் கொண்ட வடிவத்தால் உருவாக்கப்பட்ட அதிர்வுகளாகும்.

கரிமம் இல்லாமல் ஒரு தொழில்துறை முதலாளித்துவம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது, ஏனென்றால் நமது நிறுவனங்கள், நமது நடைமுறைகள் மற்றும் கலாச்சாரங்கள் ஆகிய அனைத்தும் புதைபடிவ எரிபொருள் அகழ்வை அடிப்படையைக் கொண்டவை.

அதேபோல, வளர்ச்சியடைந்த உலகின் கோடிக்கணக்கான மக்கள் சேரிகளில் வாழாமல், காடுகள் அழிக்கப்படாமல், உயிருள்ள விலங்குகள் சந்தை இல்லாமல், வறுமையால் ஏற்படும் நோய்ப்பரவல் இல்லாமல் உலகமயமாக்கல் எப்படி இருக்கும் என்பதும் நமக்குத் தெரியாது, ஏனென்றால் இவை உண்மையில் நிலவும் முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்களாக ஆகி விட்டிருக்கின்றன.

அதனால் தான், முதலாளித்துவம் நீண்ட காலத்திற்குப் பிழைத்திருக்காது என்றும், அது “முதலாளித்துவத்திற்குப் பிந்தைய” அம்சங்களைக் கடைபிடிப்பதன் மூலமே குறுகிய காலத்திற்குப் பிழைத்திருக்க முடியும் என்றும் நான் கூறுகிறேன்.

கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்பு வரை, அது கேளாத செவிகளுக்குச் சென்று சேராத ஒன்றாக இருந்தது. இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பின் அல்லது ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் போன்ற இடதுசாரி அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்பட்ட, ஒப்பீட்டளவில் மென்மையான அரசுத் தலையீட்டுத் திட்டங்கள் கூட வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன.

எனவே, உலகின் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய முதலீட்டுக் குழு மேக்வாரி வெல்த்தின் (Macquarie Wealth) பகுப்பாய்வாளர்கள் முதலீட்டாளர்களுக்குப் பின்வருமாறு கூறியது கண்டு நான் திகைத்துப் போனேன்: “மரபுவழி முதலாளித்துவம் செத்துக் கொண்டிருக்கிறது, அல்லது குறைந்தபட்சம் ஒரு வகைக் கம்யூனிசத்துக்கு நெருக்கமான ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது”

இது, திடீரென்று நமக்கு அரசுத் தலையீடு தேவையாக இருக்கிறது என்பதால் மட்டுமல்ல, மாறாக சாதாரண மக்களின் முன்னுரிமைகள் சந்தைத் தெரிவுகளிலிருந்து நியாயமானதும் நல்வாழ்வுக்கு உகந்ததுமான கருத்தாக்கங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாலும் தான் என்று மேக்வாரி பகுப்பாய்வாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

14 ஆம் நூற்றாண்டின் மாபெரும் பிளேக் நோய் ஒரு நிலப்பிரபுத்துவத்துக்குப் பிந்தைய கற்பனையைத் தூண்டி விட்டது என்றால், இந்தக் கொரோனா முதலாளித்துவத்துக்குப் பிந்தைய கற்பனையைத் தூண்டி விடுவது சாத்தியமும் விரும்பத் தக்கதும் ஆகும்.

ஆங்கிலத்தில்: பால் மேசன்

தமிழில்: நிழல்வண்ணன்

இது அல் ஜசீராவில் (www.aljaseera.com) வந்த கட்டுரை.

Pin It