I

01. ஓர் இனக்குழுவினர் அல்லது அவ்வினத்தின் ஒரு பிரிவினர் வாழ்வாதாரம் தேடி ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு / நிலப்பிரதேசத்திற்கு சென்று வாழ்வதனை புலப்பெயர்ச்சி எனலாம். இதற்கான காரணம் வரலாறு நெடுக இயற்கைப் பேரிடர், போர், பஞ்சம் போன்றவற்றால் அமைகின்றன. தனிமனிதரின் புலப்பெயர்ச்சிக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை போன்றவை காரணிகளாக அமைகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய புலப்பெயர்ச்சியினை தொல்லியல் சான்றுகளால் அறியலாம். வரலாற்றுக் காலத்தில், அதாவது எழுத்து தோன்றி கல்வெட்டுகளில் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டு புலப்பெயர்ச்சியினை அறியலாம்.

02. புலப்பெயர்ச்சி: தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் புலம்பெயர் புதுவன், புலம்பெயர் மாக்கள் என்பவர் வேறுதேசத்தினின்றும் வந்தவர் என்ற பொருளில் பதியப்பட்டுள்ளனர். மேற்காசியாவிலிருந்து தமிழகம் வந்தோரை சிலப்பதிகாரம் யவனர் என்று சுட்டும். இந்திர விழாவிற்கு இந்தியாவின் வடக்கிலிருந்து விஞ்சையன் என்பவன் தம் மனைவியோடு சுற்றுலா வந்தான் என்ற குறிப்பும் சிலப்பதிகாரத்தில் உண்டு.

தமிழ் மரபில் ஆண்கள் மூன்று தேவைகளுக்காக புலம்பெயர்வர் என்று இலக்கியம் பேசும். அவை: போர், கல்வி, பொருள் தேடுதல். பெண்கள் கடல் தாண்டி புலம் பெயர்வது தொல்காப்பியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழரின் புலப்பெயர்ச்சியினை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்

1.காலனிய காலத்திற்கு முன்பு

2.காலனிய காலம்

3.கி.பி.20-21 ஆம் நூற்றாண்டுகள்

03. புலம்பெயர் தேசங்கள்: தமிழர்கள் தொன்றுதொட்டு இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இவை அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளில் பெரிதும் அறியப்படுகின்றன. அந்நிலப் பிரதேசங்கள் தற்போது ஸ்ரீலங்கா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா, ஜாவா, சுமத்ரா, பினாங்கு என்று அழைக்கப்படுகின்றன. வரலாற்றுக் காலத்தில் இவை மொத்தமாக சுவர்ணபூமி என்று அழைக்கப்பட்டன. அங்குள்ள தங்க சுரங்கங்களைக் கண்டுபிடித்து பொன்னைத் தோண்டி எடுத்தவர்கள் தமிழர்கள் என்பர் அறிஞர். அங்கு சமஸ்கிருதம், தமிழ், உள்ளூர் மொழிகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

04. துறைமுகப் பட்டினங்கள்: இப்படி தமிழர்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு காவிரிபுகும் பட்டினம், நாகப்பட்டினம், புதுச்சேரி, மாமல்லபுரம் போன்றவை துறைமுகங்களாக களம் அமைத்தன. வடக்கினின்றும் செல்வோர்க்கு தாம்ரலிப்தி என்ற துறைமுகம் வாகாக அமைந்திருந்தது.

05. சான்றுகள்: காலனிய காலத்திற்கு முன்புவரை தமிழர் புலப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலேயே பதியப்பட்டுள்ளன. இந்தியக் கல்வெட்டுகள் காவிய பாணியில் எழுதப்பட்டன என்பர் அறிஞர். இந்தியாவில் வடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான செப்பேடுகள் கற்றுத் தேர்ந்த அரசவைக் கவிஞர்களால் அந்தந்த காலத்து இலக்கிய வடிவில் உருவாக்கப்பட்டன. வேள்விக்குடி செப்பேடு, அலகாபாத் தூண் கல்வெட்டு, ருத்ரதாமனின் ஜூனாகர் கல்வெட்டு, கர்நாடகத்திலுள்ள அய்யவோள் வணிகக் குழுவினரின் கல்வெட்டு, தாளகுண்டா எனுமிடத்திலுள்ள கல்வெட்டுகள் இவ்வகையினைச் சேரும். எனவே, இவற்றினை இலக்கிய வகைக்குள் வைக்கலாம். ஷெல்டன் போலாக் என்ற அறிஞர் கல்வெட்டுகளை epigraphical literature என்பார்.

இலக்கியத்திற்கும் கல்வெட்டிற்கும் தொடர்பு உண்டு. காட்டாக, காளிதாசரின் சாகுந்தலத்தில் இடம்பெறும் மங்கலச் சொற்கள் சாளுக்கிய அரசன் விக்ரமாத்தியனின் ஹூளி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. பாணர் எழுதிய ஹர்ஷசரிதத்தில் பயன்படுத்திய தொடர்கள் சாளுக்கியர் கல்வெட்டுகளிலும் விஜயநகர் அரசின் கல்வெட்டுகளிலும் பதியப்பட்டுள்ளன. பல்லவரின் பள்ளன்கோயில் செப்பேட்டுப் பாடத்தினை வடித்தவர் மேதாவி என்றழைக்கப்பட்ட புலவர். வேள்விக்குடிச் செப்பேட்டினை வரைந்தவர் சேனாதிபதி ஏனாதி சாத்தன் என்பவர். அலகாபாத் தூண் கல்வெட்டு ஹரிசேனர் என்ற சமஸ்கிருதப் பண்டிதரால் காவிய வடிவில் எழுதப்பட்டது என்பர். இதே காலகட்டத்தில்தான் சாகுந்தலம் என்ற நாடகக் காவியம் இயற்றப்பட்டது. தமிழ் கல்வெட்டுகளில், செப்பேடுகளில் அரசர்களின் வீரம், புகழ், போர், வெற்றி போன்றன மெய்கீர்த்திகள் என்ற பகுதியில் காவிய வடிவில் எழுதப்பட்டுள்ளன. மெய்கீர்த்திகள் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளுக்கு முதலில் புலம்பெயர்ந்தவர்கள் பிராமண குருமார்கள் என்றும், அவர்கள் அங்கு வழக்கொழிந்த சடங்குகளை அறிமுகப் படுத்தினர் என்றும் பேரா ந.சுப்ரமண்யன் சொல்வார். அப்படியென்றால், சடங்கு உச்சாடனங்கள் இலக்கிய வகையாகக் கொள்ளப்பட வேண்டும். சடங்குகளை நிகழ்த்திய பிராமணர்களுக்கு போர்னியோவின் அரசர் பொன்னும், பொருளும் தானமாக வழங்கியதனை அதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

முதலாம் இராஜராஜனின் இலங்கையின் மீதான வெற்றியினை இலங்கையின் மீதான இராமனின் வெற்றியோடு ஒப்பிடுகிறது திருவாலங்கட்டுச் செப்பேடு. தமிழில் பல கல்வெட்டுகள் பாவடிவிலும் கவிதை வடிவிலும் பொறிக்கப்பட்டுள்ளன என்பதால் அவற்றையும் இலக்கிய வகைக்குள் வைக்க வேண்டும்.

06. கல்வெட்டுகளும் வரலாறும்: தென்கிழக்காசிய நாடுகளில் கிடைத்துள்ள பெரும்பாலான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் தென்னிந்திய பிராமி வடிவிலும், பல்லவகிரந்த வடிவிலும் அமைந்துள்ளன என்றும் அவை பெரும்பாலும் மாலினி, உபஜாதி, உஷ்டப் என்ற பாவகைகளில் எழுதப்பட்டன என்றும் சொல்வார் கல்வெட்டறிஞர் கே.வி.இரமேஷ். அக்கல்வெட்டுகளை உருவாக்குதற்கு கற்றோரே அங்கு சென்றிருப்பர். என்றாலும், ஒரு கல்வெட்டினை உருவாக்குவதற்கு அதனை ஓலையில் எழுதுவோரும், வாய்விட்டுப் படிப்போரும், அதனைக் கேட்டு வண்ணக்கட்டி கொண்டு கற்பரப்பின்மேல் எழுதுவோரும் பிறகு அதனை உளி கொண்டு பொறிப்போரும் என்று ஒரு குழு தேவைப்பட்டிருக்கும். எனவே, பிராமணக் குருமார்களுடன் தொழில் வினைஞரும் சென்றிருப்பர். அக்கல்வெட்டுகள் பல்லவர் கிரந்த பாணியில் அமைந்திருந்ததால் அக்கைவினைஞர் தமிழராயிருத்தல் வேண்டும். ஏனெனில், கிரந்தவகை எழுத்து சமஸ்கிருதத்தினை எழுதுவதற்கு தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வரிவடிவம். எனவே, இக்கல்வெட்டுகளை புலம்பெயர் தமிழிலக்கியங்கள் என்று கொண்டால் தவறில்லை.

07. தமிழ் கல்வெட்டுகள்: இவற்றிலுள்ள பெரும்பாலான செய்திகள் அரசியல், கடவுள், சமயம், வணிகம் பற்றிப் பேசுவன. கல்வெட்டுகளிலுள்ள தமிழ்ப் பெயர்கள் கடவுள் பெயர்கள், தனியார் பெயர்கள், இதிகாசப் பெயர்கள் என்று இருப்பதால் இப்பண்பாட்டினைப் புலம்பெயர் தமிழர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். தென்கிழக்காசிய நாடுகளில் காலத்தால் முந்திய கல்வெட்டு கி.பி.350 ஆம் ஆண்டினைச் சார்ந்த தென்பிராமியிலிருந்து தமிழ் வட்டெழுத்தாக உருமாறி வரும் வரிவடிவில் எழுதப்பட்ட பெரும்பதன்கல் என்ற பொன்னினைத் தரம் பார்க்கும் உரைகல்லாகும். இது, பொன்வணிகரின் புலப்பெயர்ச்சிக்கான சான்றாகலாம். அடுத்து கி.பி.850 வாக்கிலேயே ஒரு தமிழ் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் நாங்கூர் உடையான் என்ற அவனிநாராயணன் ஒரு நீர்ப்பாசனக் குளத்தினை வெட்டிவித்துள்ளான் என்ற குறிப்பு உள்ளது. அதனைப் பராமரிக்க மணிகிராமத்தாரும், சேனாமுகத்தாரும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கி.பி.400 முதல் 800 வரையில் பெரும்பாலும் சமஸ்கிருத மொழி கல்வெட்டுகளே கிடைத்துள்ளன. இவையும் முன்பே சொன்னபடி, தென்னிந்திய பிராமி வடிவத்தின் தொடர்ச்சியாகவும், பல்லவ கிரந்த வடிவத்திலும் அமைந்துள்ளன. ஆனால், அவை பேசும் பண்பாட்டுச் செய்திகள் முக்கியமானவை. ஜாவாவில் தினஜா எனுமிடத்திலுள்ள கல்வெட்டு (கி.பி.760) கம்பளச் செட்டி என்ற வணிகர் பெயரினைச் சுட்டுகிறது. இச்சொல் மணிமேகலையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழரின் புலப்பெயர்ச்சிக்கு பிராமணச் சடங்குகளும், வணிகமும் காரணிகள் எனலாம். அரசியலும் காரணம் என்பதற்கு சான்றுகள் உண்டு. கம்போடிய அரசர் வமிசத்தினை உருவாக்கியது ஒரு கவ்ண்டின்ய பிராமணர் என்று நம்பப்படுகிறது.

அரசியலும் போரும்கூட காரணம் எனலாம். இலங்கை, போர்வீரர்கள் பயிற்சி பெறும் களமாகவும், வணிகர்கள் செல்வத்தினை வெளிப்படுத்தும் தளமாகவும் அமைந்தன என்பர். இதனைப் பின்னாட்களில் நிகழ்ந்த கடற்சமரில் உணரலாம்.

08. இலக்கியப் பெயர்ச்சி: இது ஒருபுறமிருக்க, தமிழில் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம் தென்கிழக்காசிய காவிய இலக்கியங்களை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளது என்பதனை அறியலாம். தென்கிழக்காசிய மொழிகளில் காலத்தால் முந்திய இராமாயணம் பற்றிய குறிப்பு சம்பா எனுமிடத்தில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் வால்மீகி இராமாயணம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அதில் கூடுதலாக சம்பா, ஆன்னம் என்ற இருவேறிடங்களின் அரசர்கள் போரிட்டுக் கொள்வது இராமன், இராவணன் இடையிலான சண்டையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் எனுமிடத்தில் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த ஒரு கல்வெட்டின் சமஸ்கிருதப் பகுதியில் சுட்டப்படும் நீதிக்குத் தலைவணங்கும் கனக பாண்டியன் சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற பொற்கை பாண்டியனைக் குறிக்கும் என்பர். என்றால், இக்கல்வெட்டினை வடித்தவர் சிலப்பதிகார இலக்கியத்தினைக் கற்றவர் எனலாம். இதனடிப்படையில் சிலப்பதிகாரத்தின் காலத்தினையும் நிர்ணயிக்கலாம்.

புலம்பெயர் இலக்கியங்கள் இயற்றப்படுவதற்கு போர் ஒரு காரணம். இதற்கு காட்டாக ஜாவன் மொழியில் எழுதப்பட்ட இராமாயணகாகவின் என்ற இலக்கியத்தினைச் சொல்லலாம். ராகைபிகடன் என்ற அரசன் பாலபுத்ர என்ற இன்னொரு அரசனை போரில் வென்றது பற்றி இந்நூல் வருணிக்கிறது. பிகடன் வெற்றி சிவபெருமான் திரிபுரத்தினை எரித்ததோடு ஒப்பிடப்படுகிறது. இந்த ஒப்பீடு முதலாம் இராஜராஜனின் வெற்றி இராமனின் வெற்றியோடு ஒப்பிடப்பட்டதனை நினவூட்டும். கம்ப ராமாயணத்தை தென்கிழக்காசியப் பகுதியில் பரப்பியவர்கள் பற்றி கி.பி.14 ஆம் நூற்றண்டு கன்னட மொழிக் கல்வெட்டு குறிப்பதாக அறிஞர் ஷெல்டான் போலாக் கூறுவார். இது தமிழர் உட்பட்ட தென்னிந்தியர் புலப்பெயர்ச்சியினை உறுதிப்படுத்துகிறது.

தென்கிழக்காசிய மொழிகளில் இராமாயணம் எழுதப்படுவதற்கு கம்ப இராமாயணமே மூலநூலாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது. இக்கூற்றினை பரம்பரன் கோயிலில் உள்ள இராமாயணக் காட்சியின் சிற்பங்களின் அடிப்படையில் உறுதி செய்யலாம். அதே போன்ற சிற்பக் காட்சிகளை தமிழகத்தின் புன்செய், கும்பகோணம் போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் காணலாம். வால்மீகி இராமாயணத்தில் வடிக்கப்பட்டுள்ள சபரி என்ற பாத்திரம் கம்ப இராமாயணத்திலும், தென்கிழக்காசிய இராமாயணங்களிலும் சற்று வேறுபடுத்தி படைக்கப்பட்டது என்பார் அ.அ.மணவாளன். இவ்வேறுபாட்டிற்குக் காரணம் கம்ப இராமாயணம் என்று சொல்வதற்கு வாய்ப்பளிக்கிறது. எனவே, தென்கிழக்காசிய இராமாயணங்கள் இயற்றப்படுதலில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் உண்டு எனலாம். இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்படுவதற்கு இவர்களே உழைத்திருக்கலாம். தாய்லாந்து இராமாயணத்தின் நிகழ்த்துகலையில் கம்ப இராமாயணத்து வரிகள் ஒலிப்பது யாவரும் அறிந்த ஒன்று.

இக்காவியம் கி.பி.10ஆம் நூற்றாண்டில் ஜப்பான் மொழியில் சம்பா கோடோபா என்ற தலைப்பில் மினமோ டோனா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. 10-11 ஆம் நூற்றாண்டுகளில் யோகேஸ்வர் என்பவரால் இராமாயணகவிகன் என்ற பெயரில் பழைய ஜாவனிய மொழியில் வடிக்கப்பட்டது.

புலப்பெயர்ச்சியில் பவுத்தம் பெரும்பங்கு வகித்துள்ளது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்ற பவுத்த துறவி எழுதிய நூல்கள் பற்றி கிபி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்தவம்ச என்ற பர்மிய மொழி நூலில் குறிப்பு உள்ளது. ஆச்சார்ய வஜ்ரபோதி என்ற பவுத்த குரு காஞ்சிபுரத்திலிருந்து மகாபிரணபரமித என்ற பவுத்த நூலின் சமஸ்கிருதப் படிவத்தினை சீனாவிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர், ஸ்ரீவிஜயா, இலங்கை வழியே சீனாவின் காண்டன் நகரினை கி.பி.720 இல் அடைந்தார். அங்கு பவுத்தத்தின் வஜ்ராயணப் பிரிவின் குருவானார். மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தினால் மணிபல்லவத் தீவிற்கு தூக்கிச் சென்றது என்ற இலக்கியச் சம்பவம் புலப்பெயர்ச்சியினையே நினைவூட்டும். இலங்கையின் பவுத்த துறவி மாகநாகசோனே என்பவர் மகாநாககுல சந்தேச என்ற நூலினை எழுதியவர். இவர், இடைக்காலத்தில் மியான்மர் சென்றுள்ளார். இவர் தமிழ்ப் பவுத்தராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏனெனில், இடைக்காலத்தில் இலங்கையிலிருந்து நாகப்பட்டினம் வழியேதான் மியான்மர் செல்ல வேண்டும். அப்போது நாகப்பட்டினம் ஒரு சிறந்த புத்த தலமாகும். எனவே, அப்பவுத்த துறவி தமிழ் அறிந்திருக்க வேண்டும் அல்லது தமிழராய் இருத்தல் வேண்டும்.

II

09. காலனியமும் கம்பெனியும்: தமிழரின் இரண்டாம் கட்டப் புலப்பெயர்ச்சி 1757 இல் இந்தியா காலனிய கட்டத்தில் நுழைவதுடன் துவங்கியது. 1500-1700 காலகட்டங்களில் உலக அளவிலான பொருளியல் நிலை (world economy) உருவானது. இந்த வட்டத்திற்குள் தமிழரும் பங்குபெறும் வரலாற்றுச் சூழல் உருவானது. 1799 இல் தென்னகத்தில் பாளையக்காரர்கள் ஒடுக்கப்பட்டவுடன் நிரந்தர நிலவுரிமைச் சட்டத்தினை (permanent land settlement) கம்பெனி அரசு அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் வரிகளை வேளாண்குடிகள் மேல் உயர்த்தி மேலதிக வருவாயினைப் பெறுவது. 1807 இல் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராம குத்தகை முறை (village lease system) கிராமங்களில் இருக்கும் வேளாண்குடிகளையும் உழுகுடிகளையும் சேர்த்தே விற்றது. கம்பெனி, பிறநாடுகளுடன் வணிகப் போட்டிக்காகவும், அரசியல் காரணங்களுக்காவும் சண்டையிடுவதில் போர்ச் செலவினை சமாளிப்பதற்கு home charges என்ற வரியினை வேளாண்குடிகள்மேல் திணித்தது. கூடுதலான வரியினை செலுத்த வேண்டியிருந்ததால் நிலவுடைமையாளர்கள் அதிக விலைக்கு தானியங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். இதனால், விவசாயக் கூலிகள் பாதிப்படைந்தனர். தமிழகத்தில் உணவுத் தட்டுப்பாடும் பஞ்சமும் நிலவியது.

நிலவுடமையாளர்கள் தானியங்களைப் பதுக்கியதால் கூலி விவசாயிகள் உணவின்றி தவித்தனர். அரசின் வரிவிதிப்பினின்றும் தப்புவதற்காக சிறு விவசாயிகள் வேறு வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து ஓடினர். அவர்கள் கம்பெனி அரசால் பிடிக்கப்பட்டு தண்டிக்கபபட்டனர். 1802 இல் விளையா நிலங்களும் ஜமீன்முறைக்கு கொண்டு வரப்பட்டு அந்நிலங்களின்மேல் மூன்றில் இரண்டு பங்கு விளைச்சலில் வரியாக விதித்தனர். இதனால், இவ்வரிச்சுமை கூலிகளின்மேல் விழுந்தது. இதனால், ஒப்பந்தக் கூலிமுறை நடைமுறைக்கு வந்தது. இதனால், காலனிய நாடுகளில் உருவாக்கப்பட்ட பணப்பயிர்த் தோட்டங்களில் அடிமை வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் அனுப்பப்பட்டனர்.

புதிதாக உருவாகிய நிலவுடைமையாளர்களும், ஜமீன்களும் கூடுதலான வரியினை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்ததால் வேளாண்குடிகளிடம் அதிக வரியினை வசூலித்தனர். வேளாண்குடிகள்மேல் எவ்வளவு வரி விதிக்கலாம் என்ற வரையறை இல்லாமலிருந்தது. இதனால் சிறுவிவசாயிகளும் சேர்த்து பாதிக்கப்பட்டனர். நிலவரிக் கொடுமையினைத் தாங்கவியலாமல் 1802 இல் சிறுவிவசாயிகள் கலகம் செய்தனர். 1807 இல் அவ்வாறு கலகம் செய்த ஒரு விவசாயி அரசினால் அடித்துக் கொல்லப்பட்டார். 1815 இல் வரிக்கொடுமையினால் வல்லநாடு, சேரன்மாதேவி பகுதி விவசாயிகள் திருவாங்கூர் அரசிற்குட்பட்ட நிலப்பகுதிகளுக்கு ஓடினர். இவ்வாறு மாவட்ட புலப்பெயர்ச்சியும், மாநிலப் புலப்பெயர்ச்சியும் நடந்தது.

1837 இல் மயிலாடுதுறை தாலுகாவில் விளைந்த பயிர்களை அறுவடை செய்யாமல் வரிகொடா இயக்கத்தினை விவசாயிகள் நடத்தினர். அரசே அலுவலர்களை வைத்து அறுவடை செய்யத் துவங்கியதால் கைகலப்பு உண்டானது. கம்பெனி அரசு 1857 இல் கைத்தொழிலிற்கும் வரிவித்தது. அதனால், கைவினைஞர்களும் கலகம் செய்தனர். 1833 இலேயே பிரிடிஷ் பாராளுமன்றத்தில் காலனியாக்கப்பட்ட நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் காலம் தாழ்த்தியது. இது ஒப்பந்தக் கூலிமுறைக்கு ஏது செய்தது. 1828 இல் முதன்முதலில் 120 கூலிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். 1862 இல் பர்மாவிற்கு இதுபோன்று கூலிகள் அனுப்பப் பட்டனர்.

1876-1877 தாதுவருடப் பஞ்சத்தின் காரணமாகவும், வேளாண்குடிகள் மீதான வரி அதிகரிப்பினாலும், பணப் பயிர் விளைச்சலை அதிகரித்து உணவுப் பயிர் விளைச்சலினை குறைத்ததாலும் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை தோன்றின. இதனால் கூலி விவசாயிகள், ஒப்பந்தக் கூலிகளாக, அடிமைகளாக காலனிய நாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய சூழல் உருவானது. இதற்கு அப்போது ஏற்பட்ட பொருளாதார மந்தமும் ஒரு காரணமாகும். ஸ்பெயின் நாடு, நீக்ரோ அடிமைகளை விற்று அமெரிக்காவிலிருந்தும், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்தும் கிடைத்த பொன், வெள்ளி போன்ற செல்வத்தினைக் கொண்டு இந்தியாவில் நெய்யப்பட்ட கம்பளி ஆடைகளை வாங்கியது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போரினால் இவ்வணிகம் இந்தியாவுடன் தடைபட்டது. இதனால், கைவினைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு, தென்னாற்காடு மாவட்டங்களில் உணவுப் பயிர்களுக்குப் பதில் பணப் பயிரான நிலக்கடலை பெருமளவில் பயிரிடப்பட்டது. இதனால், உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் கடலூர் பகுதியில் இருந்து பெரும்பாலோர் உணவின்றி பிற மாவட்டங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இக்காலக் கட்டத்தில்தான் இராமலிங்கர் வாடிய பயிரினைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்றார். கருணையில்லா ஆட்சி கடிது ஒழிக! என்றார். இதே காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் நிலச்சுவாந்தார்கள் மொரீசியஸ், இலங்கை போன்ற நாடுகளுக்கு கூடுதல் விலைக்கு நெல், அரிசி தனியங்களை விற்றனர். இதனால் பஞ்சம் உருவானது. மேற்சொல்லப்பட்ட காரணங்களால் தமிழர்கள் கூலிகளாக, அடிமைகளாக பிற காலனிய நாடுகளுக்குப் புலம்பெயரும் சூழல் உருவானது.

10. அடிமைகள்: இந்த அடிமை வணிகத்தினை கம்பெனிகளே சிரமேற்கொண்டு செய்தது. இவ்வணிகம் பற்றிய தரவுகளை ஆங்கிலம், போர்ச்சுக்கல், டச்சு மொழி ஆவணங்களில் இருந்து பெற முடியும். நிலவுடைமைச் சமூகம் சிதைவுற்று பதினாறாம் நூற்றாண்டில் இடைக்காலத்தில் முதலாளிய அமைப்பு முறை அய்ரோப்பாவில் உருவாகியபோது அய்ரோப்பிய வணிகக் கம்பெனிகள் தமிழகத்தில் இருந்து அடிமை ஏற்றுமதியினை மேற்கொண்டனர்.

1565 இல் தென்னகத்தில் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர் அரசு தோற்றபின்னும் போர்ச்சுக்கலில் 1578 இல் அரசர் தோம்செபாஸ்டியன் இறப்பின் பின்னும் அரசியல் சூழல் மாறியது. 1580 இல் பொறுப்பேற்ற இரண்டாம் பால் சர்வதேச வணிகக் கொள்கையினை வகுத்தார். 1521 இல் அய்ரோப்பா மணிலாவுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அங்கு கப்பல் கட்டுவதற்கு ஏற்றமரங்களான தேக்கு, கருங்காலி, தோதாத்தி மரங்கள் போன்றவை பற்றி தெரிய வந்ததும் பிலிப்பையர்களின் கப்பல் கட்டும் திறன் தெரிய வந்ததும் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்களின் தேவை உணரப்பட்டது. அங்கு கப்பல் கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் உழைப்பாளர்கள் தேவைப்பட்டனர். தமிழக கடற்கரையின் நாகப்பட்டினத்திலிருந்து திறமையான ஆண் அடிமைகள், பெண் அடிமைகள், தையலர்கள், சமையலர்கள் மணிலாவிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1616 இல் ஒரு போர்ச்சுகீஸ் அடிமை வணிகர் நாகப் பட்டினம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து கிறித்தவராக மாறிய நான்கு அடிமைகளை அனுப்பி வைத்தார். 1616 இல் ஒரு சமயத் தலைவர் ஒருவரை அடிமை என்று முத்திரை குத்தினால் அவர் அடிமையாவார். 1620 இல் மணி என்பவர் பசி, வாழ்வின் தேவை காரணமாக தன்னை விற்றுக் கொண்டார். 1625 இல் நாகப்பட்டினத்திலிருந்து மலாக்கா செல்லும் இரு கப்பல்களில் 300 அடிமைகள் இருந்தனர்.

அடிமை வணிகர்களினால் கடத்தப்பட்ட / பிடிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் கைமாறி கைமாறி விற்கப்பட்டனர். 1662 இல் நாகப்பட்டினத்திலிருந்த மணி என்பவரின் மனைவியினையும் குழந்தையினையும் அவர் அனுமதியின்றி தரங்கம்பாடியில் உள்ள போர்ச்சுகீசியருக்கு விற்றுள்ளனர். சீர்காழியில் மீர்ஜங் என்பவர் அடிமை வணிகம் செய்துள்ளார். 1662 இல் அரிசி கொடுத்து அடிமைகள் வாங்கப்பட்டனர். 1681 இல் 1993 தமிழ் அடிமைகள் கொழும்பு நகரில் இருந்துள்ளனர். டச்சுக் கம்பெனி தம் அடிமைகளுக்கு சீருடை வழங்கியது. காலனிய நாடுகளின் அய்ரோப்பிய குடியிருப்புகளில் இனவிருத்திக்காகவும், பாலியலுக்காகவும், பெண்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. இது, அடிமைகளின் எண்ணிக்கையினை அதிகரித்தது. அடிமைகள் கம்பெனி அடிமை, தனியார் அடிமை, வீட்டு அடிமை, பண்ணை அடிமை என்று வகைப்படுத்தப்பட்டனர்.

1640 இல் 150 அடிமைகளுடன் 5 கப்பல்கள் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமத்ரா சென்றன. 1641 இல் 37 அடிமைகளுடன் ஒரு கப்பல் புறப்பட்டது. 1689 இல் தூத்துக்குடி முதல் நாகப்பட்டினம் வரை அடிமைகளை வாங்கிய போர்ச்சுக்கீசிய வியாபாரிகள் அவர்களை போர்க்காலத்தில் பிடிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நியாயப்படுத்தினர். சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டு அவர்கள் அம்பேனியா, பாண்டா போன்ற இடங்களில் உள்ள சாதிக்காய் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். மியான்மரிலும், இந்தோநேசியாவிலும் இருந்த டச்சு ஆலைகளில் வேலை செய்வதற்கு அடிமைகள் பழவேற்காடு துறைமுகம் வழியே அனுப்பப்பட்டனர். 1644 இல் நான்கு கப்பல்களில் 7100 அடிமைகள் அனுப்பப்பட்டனர். 1646 வரை தமிழகத்தில் பஞ்சம் தொடர்ந்ததால் கூடுதலாக அடிமைகளை அனுப்ப முடிந்தது. மரம் வெட்டுவதில் பயிற்சி பெற்ற அடிமைகளும் இதில் அடங்குவர். சிலர் வெடிமருந்து ஆலைகளில் வேலை செய்தனர். மியான்மருக்கும், இந்தோநேசியாவிற்கும் சீனாவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் உழைப்பாளிகள், நெல் பயிரிடுவோர், மரம் வெட்டுவோர், ஆடு-மாடு மேய்ப்போர் வாழைத் தோட்டங்களில் வேலை செய்வோர் அடிமைகளாகக் கிடைத்ததால் 1658-1689 இல் பழவேற்காட்டிலிருந்து அடிமை வணிகம் நிறுத்தப்பட்டது.

III

11. இலங்கையரின் புலப்பெயர்ச்சி: தமிழர்களின் மூன்றாம்கட்ட புலப்பெயர்ச்சியினை பெருமளவில் மேற்கொண்டவர் ஈழத் தமிழராவர். அரசியல் பிரச்சனைகளால் 1950-களில் இருந்தே ஈழத் தமிழர்கள் அய்ரோப்பிய நாடுகளுக்கு வேலைதேடி புலம்பெயர்ந்தாலும் 1970-களுக்குப் பிறகு போர்ச்சூழலில் பெரும் அளவில் மேற்கு அய்ரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வாழ்க்கை தேடி புலம்பெயர்ந்தனர். இவர்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: உயர்கல்வி கற்றதனால் புலம்பெயர் நாடுகளின் அரசு வேலையில் சேர்ந்தோர்; அடித்தட்டு நிலையிலிருந்து வந்து விற்பனை நிலையங்கள், உணவு இல்லங்கள் போன்றவற்றில் வேலை செய்வோர்; சிறுவணிகப் பொருள்கள் ஏற்றுமதியில் ஈடுபடுவோர்.

12. இலங்கையரும் இந்தியரும்: இவர்களுடன் இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தவர்களையும் சேர்க்க வேண்டும். இவர்களில் சிலர் இந்தியாவில் இயங்கும் இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள். பிரமிள், செ.யோகநாதன் போன்றவர்களை இந்த வகைக்குள் அடக்கலாம். பிரமிள் ஒரு கிளாசிக் இலக்கிய படைப்பாளி எனலாம். செ.யோகநாதனின் 'நேற்றிந்தோம் அந்த வீட்டினிலே' என்ற நாவல்தான் இலங்கை புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளில் முதன்முதலில் புலம்பெயர்தலுக்கான அவலநிலை பற்றிப் பேசும். தாய்நாட்டினை விட்டுத் தவிக்கின்ற ஒரு குழந்தையின் கம்பலையான அழுகுரலினை அதில் காணலாம். டேனியலின் நாவல்கள் அங்குள்ள சாதியக் கூறுகளை வெளிப்படுத்தினாலும் புலம் பெயர்தலுக்கான காரணிகளைப் பதிக்கவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு கல்வியின் பொருட்டு தமிழகம் வந்த விபுலானந்தர் யாழ்நூல் என்ற தலைப்பில் இசை பற்றிய ஆய்வு நூலினை வெளியிட்டார். அதே பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்காக வந்திருந்த பேரா.எம்.ஏ.நுஹ்மான் ஒரு கவிஞரும்கூட. இவர்களுக்கெல்லாம் முன்பே சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகளில் ஒருவரான சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களைப் பதிப்பித்தார். இந்நூல்களுக்கான முன்னுரைகளை ஏன் புலம்பெயர் இலக்கியமாகக் கருதக் கூடாது. இலங்கைக்காரரான வி.கனகசபைபிள்ளை செம்மொழி இலக்கியங்கள் வாயிலாக 1904 இல் ஒரு ஆய்வு நூலினை வெளியிட்டார். இவர்களுக்கெல்லாம் முன்பே ஆறுமுக நாவலர் எளிய இலக்கண நூல்களையும், தமிழ்ப் பாடநூல்களையும் தமிழகத்தில் தங்கியிருந்து தயாரித்து வெளியிட்டார். அவருடைய மருட்பாவினை புலம்பெயர் இலக்கிய வகைக்குள் வைக்கலாமா என்பதனை இந்த அவைதான் முடிவு செய்ய வேண்டும்.

13. தென்கிழக்காசியாவில் நாளிதழ்கள்: காலனிய காலத்திலிருந்து புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும், மலேயா, சிங்கப்பூர், பினாங்கு ஆகிய இடங்களில் இருந்து நாளிதழ்களை வெளியிட்டனர். எனவே, இவற்றையும் புலம்பெயர் இலக்கியத்தில் சேர்க்க வேண்டும். அவற்றை இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய விடுதலைக்குப் பின்பு என்று இருகாலகட்டங்களில் மதிப்பிடலாம். சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கைநேசன், சிங்கை வர்த்தமாணி, இரண்டும் 1875 இல் தொடங்கப்பட்டவை. 1877இல் உலகநேசன் என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. 1900க்குப் பிறகு விஜயன், ஜனோபகாரி, சத்தியவான், என்ற பத்திரிக்கைகள் புகழ்பெற்றன. 1920களில் தமிழகம், பொதுஜனமித்திரன், சிந்தாமணி, கலியுக நண்பன், முன்னேற்றம் என்ற இதழ்களும், 1930களில் தமிழன், மலயாமித்திரன், இன்பநிலையம், திராவிடகேசரி, தமிழ்ச்செல்வன், பாரதநேசன், புதுயுகம், தமிழ்முரசு, ஜென்மபூமி, தமிழ்க்கொடி, தேசநேசன், மலாயதூதன் போன்றவை தொடங்கப்பட்டன. 1940களில் தமிழ்ப்பண்ணை, சுதந்திர பாரதம், சுதந்திர இந்தியா, ஆசாத் ஹிந்துஸ்தான் போன்ற பத்திரிக்கைகள் உதயமாயின. யுவபாரதம், சுதந்திரோதயம் போன்ற வார இதழ்கள் முக்கியமானவை.

ஜப்பான் ஆக்கிரமிப்பு காலகட்டத்தின்போது ஜெயபாரதம், ஜிந்தாபாத், புது உலகம், இளங்கதிர், இளம்பிறை, முழக்கம், உதயசூரியன், இஸ்லாமிய இளைஞன் போன்ற இதழ்கள் தொடங்கப்பட்டன. 1950களில் களஞ்சியம், சங்கமணி, தேசபக்தன், தேசபந்து, ஜோதி, எழுச்சி, மலைநாடு என்ற பத்திரிக்கைகள் வரத் தொடங்கின. இத்தலைப்புகள் வழியே அவ்விதழ்களின் கருத்தியல் பின்னணியினையும் வாசகர் வட்டத்தினையும் அறியலாம். இதனால் உண்டான சமூக இயக்கச் செயற்பாடுகள் பற்றி மேலாய்வுகளே முடிவு செய்ய வேண்டும்.

14. இருப்பு: தொடக்கத்தில் வணிகத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் பண்பாட்டுக் கூறுகள், சடங்குகள், கலைவடிவங்கள், இலக்கியங்கள், பவுத்த சமய நூல்கள், இதிகாசங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். இந்திய இலக்கியங்கள் அங்குள்ள வட்டார மொழிகளில் பெயர்க்கப்பட்டன. இடைக்காலத்தில் வணிகம் தடைபடாமல் இருக்க தமிழ் அரசர்கள் போரில் ஈடுபட்டனர். அங்கு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. காலனிய காலத்தில் வாழ்வு தேடி தமிழர்கள் கூலிகளாகவும், அடிமைகளாகவும் அதே நிலப் பிரதேசத்திற்கு புலம்பெயரும் நிலை உருவானது. அந்த அவலநிலைக்கு அக, புற காரணிகள் உண்டு. அண்மையில் அகக்காரணிகளால் பெரிதும் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைத் தமிழராவர். தற்போது இவர்களே காத்திரமான பதிவுகளை இலக்கியங்கள் வாயிலாக ஆவணமாக்குகின்றனர். அவர்கள் தங்கள் இருப்பினை உலகிற்கு தெரிவிக்க வேண்டியுள்ளது. IBC போன்ற மின்னூடகங்கள் உலக அளவில் செய்தி வலைபரப்பினை அவர்களுக்கு விரித்துள்ளது. சுருக்கமாக, தாங்கள் உயிர்ப்புடன் இருப்பதனை உலகிற்கு வெளிப்படுத்தவும் தம் துயரங்களுக்கு பேசாமொழியில் மருந்திடவும் தாய் - தந்தையர் மண்ணினை நினைவு கூரவும் புலம்பெயர் இலக்கியம் அவர்களுக்கு ஒரு (safety volve) ஒதுங்கு பாதையாக ஆக அமைகிறது.

Bibliography

01.காளிமுத்து,ஏ.கே.2012. தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும்: ஒரு சமூகப் பொருளியல் பார்வை (1801-1947), பாரதி புத்தகாலயம்.சென்னை.

02.சாமிநாதையர், உ.வே, 2008. இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும். டாக்டர்.உ.வே.சா. நூல் நிலையம், சென்னை.

03.மணவாளன்,அ.அ.2012.இராம காதையும் இராமாயணங்களும் (முதல் தொகுதி),தென்னக ஆய்வு மைய்யம், சென்னை.

04.ராஜன்,கா.2012.கல்வெட்டியல், மனோ பதிப்பகம், தஞ்சாவூர்.

05.ஸ்டீபன்,ஜெயசீல,எஸ். (மொர் : ரகு அந்தோணி), 2017. சோழமண்டல கடற்கரையும் அதன் உள்நாடும்: பொருளாதார சமய, அரசியல் அமைப்பு (கி.பி.1500-1600).என்.சி.பி.எச்., சென்னை.

06.Karashima, Noboru (ed), 2002. Ancient and Medieval Commercial Activities in the Indian Ocean: Testimony of Inscriptions and Cramic-sherds (Report of the Taisho University Research Project 1997-2000),Taisho University.Tokyo.

07.Kulke,Herman (et aL), 2009. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia,Institute of Southeast Asian Studies,Singapore.

08.Pollock,Sheldon, 2011. The Language of the Gods in the World of Men: Sanscrit, Culture, and Power in Premodern India.Permanent Black.Ranikhet Cantrr.

09.Ramesh,K.V, 1984. Indian Epigraphy (Vol.I), Sandeep Prakashan, Delhi.

10.Sircar,D.C.1996. Indian Epigraphy (reprint), Motilal Banarsidas, Delhi.

11.Thapar, Romila, 2003.The Penguin History of Early India from the Origins to AD 1300. Penguin Books, New Delhi.

12.………………1978. Exile and Kingdom: Some Thoughts on theRamayana, The Mythical Society,Bangalore.

13.Trautmann R.Thomas, 2015. Elephants and Kings: An Environmental History,Permanent Black in Association with Ashoka University, Ranikhet Cantt.

………………..

(சாகித்திய அகாதெமியும் ஏ.வி.சி.கல்லூரியும் இணைந்து தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்வு என்ற தலைப்பில் திசம்பர், 6-7, 2019 தேதிகளில் நடத்திய கருத்தரங்கின் ஒரு அமர்வில் நிகழ்த்திய தலைமையுரை.)

- முனைவர் கி.இரா.சங்கரன், இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல்-609305