கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்குப் பிறகு பல ஆக்க பூர்வமான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கல்விப் பயிற்றுமுறையில் இணையவழிக் கல்வி என்ற அடுத்தக்கட்ட நகர்வை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இணையவழிக் கல்வி பெரிதும் பரவலாகி வரும் சூழலில் நாளொன்றிற்குச் சுமார் பத்து முதல் இருபது வரையிலான குறுகிய கால வகுப்புகளும், உரையரங்கங்கள், திறனறித் தேர்வு முறையிலான பயிற்சி வகுப்புகள் என அணிவகுத்து நிற்கின்றன. தமிழகம் முழுவதும் கல்லூரிகள் பலவும் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. இவ்வகையில், புதுச்சேரியில் பழம்பெருமை வாய்ந்த தாகூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய ‘புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்’ என்னும் இணையவழி ஏழுநாள் பயிலரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரியில் அதன் அறுபதாவது விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வியப்பூட்டும் செய்தி என்னவென்றால், நவம்பர் 1 இல் புதுச்சேரியில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது அதுவே முதல்முறையாகும். அதற்கு முன்னதாக இந்திய விடுதலைநாள் விழாவான ஆகஸ்ட் 15 ஆம் நாளை அடுத்து ஆகஸ்ட் 16 ஆம் நாள் புதுச்சேரி விடுதலைநாள் கொண்டாடப்பட்டு வந்தது. இதனால், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்து இந்தியா விடுதலை அடைந்த மறுநாள் பிரெஞ்சியர் ஆட்சியிலிருந்து புதுச்சேரி விடுதலை அடைந்ததைப் போன்றொரு எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு புதுச்சேரி பிரெஞ்சியரிடமிருந்து விடுதலையடைய 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்து. இந்த ஏழாண்டு காலக் காத்திருப்பிற்குப் பல அரசியல் காரணங்கள் இருந்தன. புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாறு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிற்குச் சற்றும் குறைந்ததல்ல. எனினும், புதுச்சேரி வாழ் மக்களுக்குக் கூட இந்த விடுதலைப் போராட்ட வரலாறும் இதன் பின்னணியும் முழுமையாகத் தெரியாது. பள்ளி கல்வியில் புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாறு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் போல் பயிற்றுவிக்கப்படாதது ஒரு முக்கியக் காரணமாகும்.

புதுச்சேரி, தாகூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய ‘புதுச்சேரியின் வரலாறும் இலக்கியங்களும்’ என்னும் தலைப்பிலான பயிலரங்கம் புதுச்சேரி வரலாறு மற்றும் இலக்கியங்கள் பற்றிய ஆழமான பார்வையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள் உரையரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள் மூலம் புதுச்சேரி, தமிழகம் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் தமிழின் பெருமையை நிலைநாட்டி வருபவர். இவருடைய உரைகளில் ஆழமான, புதுமையான சிந்தனைகள் மிகுந்திருக்கும். குறிப்பாக, புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாற்றின் நுட்பமான அரசியலை வெளிப்படுத்தி, கல்லூரிகள், பொது நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்த ஏழு நாள் உரைகளையும் அவர் ஒருவரே செய்யும் அளவிற்கு அவரிடம் நுண்மான் நுழைபுலம் இருந்தபோதும், இந்நிகழ்விற்கு மிகப்பொருத்தமான அறிஞர்களைத் தேர்வு செய்து பங்கேற்பாளர்களுக்கு நிறைவான கருத்துக்கள் சென்றடைய வழிவகுத்திருக்கிறார். நிகழ்வின் இடையிடையே, அவரது இணைப்புரை உரைகளுக்கு உரையளிக்கும் விதமாகவும், புதுச்சேரி வரலாறு பற்றிய நுட்பமான கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இவரோடு இணைந்து இப்பயிலரங்கு வெற்றியடைய வழிவகுத்த பேராசிரியர் முனைவர் வே.கருணாநிதி அவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர், இதுபோல் பல கருத்தரங்கங்களை முன்னின்று நடத்தியவர். இப்பயிலரங்கின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கியமானதாகும்.

கடந்த 2020 ஏப்ரல் 20 முதல் 26 ஆம் நாள்வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தில்லைவனம், கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வெங்கடேசன், புதுச்சேரி வரலாற்று ஆவனங்கள் பற்றிய ஆய்வாளர் முனைவர் நா. இராஜசெல்வம், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியற்புல முன்னாள் முதன்மையர் முனைவர் எஸ். ஆரோக்கியநாதன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா. சம்பத், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியற்புல பேராசிரியர் ப. இரவிக்குமார் ஆகியோர் பயிற்றுநராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

பேராசிரியர் முனைவர் தில்லைவனம் அவர்கள் புதுச்சேரி, காரைக்கால் வரலாறு மற்றும் இலக்கியங்கள் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ளார். புதுச்சேரியின் பழங்கால வரலாற்றைப் பற்றிய இவரது உரை பெரிப்புளோஸ், தாலமி கால புதுச்சேரி, அதன்பின் யவனர்களோடு தொடர்புடைய அரிக்கமேடு அகழ்வாய்வு, அரிக்கமேட்டுக்கு அருகில் இருக்கும் வீராம்பட்டினம் என்னும் பகுதியில் வாழ்ந்த சங்ககாலப் புலவர்களான வீரைவெளியனார், வீரைவெளியன் தித்தனார், புதுச்சேரியின் பழங்காலப் பெயர்கள் பற்றிய ஆய்வுரையாக அமைந்திருந்தது. அவர் நிகழ்த்திய முதல் நாள் உரையின் முடிவில் புதுச்சேரியின் சமண – பவுத்தத் தொடர்பு பற்றிய செய்திகள் விவாதப்பொருளாய் இருந்தது.

கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வெங்கடேசன் அவர்களது நூல்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய அரிய பெட்டகங்களாக விளங்குகின்றன. காலஞ்சென்ற பாகூர் குப்புசாமி அவர்களுடன் இணைந்து பல ஆய்வுகளை வெளிப்டுத்தியிருக்கிறார். புதுச்சேரியில், பாகூர், திருவாண்டார் கோயில், மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பல்லவர்-சோழர்கால கல்வெட்டுகள், கோயில் மற்றும் சிலைகளின் அமைப்பு முறைகள், அதன் தனிச்சிறப்புகள் பற்றிய விளக்க உரை நுட்பமான பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது.

ஜுலியன் வின்சோன் அளித்த குறிப்பின்வழி பாரிசில் உள்ள நூலகத்தில் பல தமிழ்ச் சுவடிகள் இருப்பதை அறிந்த உ.வே.சா அவர்கள் ‘இனி தமிழகத்தில் உள்ள சுவடிகள் இல்லாமல் போனலும் கடல்கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு தேசத்தில் நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று எண்ணி மகிழ்ந்தேன்.’ என்றார். அதுபோல், புதுச்சேரியின் வரலாற்று ஆவனங்கள் அத்தனையும் இல்லாமல் போனாலும், முனைவர் நா. இராஜசெல்வம் அவர்களிடம் நூலகத்தில் கிடைக்காத பல அரிய செய்திகள் உள்ளன. புள்ளிவிவரங்களை ஆண்டு, மாதம், நாள், கிழமை உட்பட அனைத்தையும் கூறும் இவரது ஆற்றல் வியக்கவைக்கும்படி இருந்தது. கல்வியாளர்கள் இத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொண்டால் மாணவர்களிடம் ஆழமான கருத்துக்களை விதைக்கலாம் என்பதில் ஐயமில்லை. பிரெஞ்சியர் ஆட்சியின் தொடக்ககாலம் பற்றியதாக அவருடைய உரை அமைந்திருந்தது. போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் வருகைக்குப் பின் தான் பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதித்தது. போர்த்துகீசியர் புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் அமைத்து சில குடியிருப்புகளை ஏற்படுத்திய காலத்திலிருந்து பல அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி முனைவர் இராஜசெல்வம் அவர்களுடைய உரை அமைந்திருந்தது. பிரெஞ்சியர்கால வரலாறு பற்றிய பல வினாக்களுக்குப் பல புதிய கருத்துக்கள் அவரது விடைகளில் வழியாக அறியமுடிந்தது.

கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வெங்கடேசன், முனைவர் இராஜசெல்வம் ஆகியோருடைய உரைகள் மீண்டும் மீண்டும் விவாதப்பொருளாக இருந்ததால் நான்காம் நாளும் இவ்விருவரின் உரை தொடர்ந்தது. இருவர் உரையும் பல புதிய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட புதுச்சேரியின் நகரமைப்பு, பிரொன்சுவா மார்த்தேன் உருவாக்கிய நட்சத்திர வடிவிலான கோட்டை ஆகியவை பற்றி முனைவர் இராஜசெல்வம் அவர்கள் காட்சிப்படுத்திய, வரைபடங்கள் பங்கேற்பாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.

              பேராசிரியர் முனைவர் எஸ். ஆரோக்கியநாதன் அவர்களின் ‘புதுச்சேரி காரைக்கால் தெருப்பெயர்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூல் ஒரு புதிய முயற்சி. இவரது உரை புதுச்சேரி காரைக்கால் தெருப்பெயர்கள் பற்றிய புதிய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. பிரெஞ்சியர் கால புதுச்சேரியில் கடற்கரை ஒட்டிய நகரக் கட்மைப்பு, வெள்ளை நகரம்(White town), கருப்பு நகரம்(Black town) என்ற நிலையில் இருந்தது. இந்த அமைப்பே இன்றும் தொடர்கிறது. வெள்ளை நகரத்தின் தெருக்களும், கருப்பு நகரத்தின் தெருக்களும் கிழக்கு மேற்காக ஒரே நேர்க்கோடாக நீண்டிருந்தபோதும் கிழக்குப் பகுதியில் உள்ள தெருக்களின் பெயர்கள் பிரெஞ்சு ஆளுநர்கள், அரசு அதிகாரிகள் போன்றொரின் பெயர்களாகவும், மேற்குப் பகுதியில் உள்ள கருப்பு நகரத்தில் உள்ள தெருக்களில் பெரும்பான்மையானவை, சாதிப்பெயர்களாகவும் இருக்கின்றன. இதன் வரலாற்றுப் பின்னணியை விவாதிக்கும் வகையில் இவருடைய உரை அமைந்திருந்தது.

பேராசிரியர் முனைவர் இரா.சம்பத் அவர்கள் புதுச்சேரி இலக்கியப் படைப்பாளர்களைப் பற்றித் தொடர்ந்து பல பதிவுகளைச் செய்துவருகிறார். அண்மையில் வெளியான இவரது தொகுப்பு நூலான ‘உலகத் தமிழ்க் கவிதைகள்’ உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கவிஞர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுச்சேரியின் இலக்கியப் படைப்பாளர்களின் படைப்பைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் தம்முடைய ஆய்வு மாணாக்கர்களுக்கும் அத்தகைய தலைப்பைக்கொடுத்து புதுச்சேரி இலக்கியங்கள் பற்றிப் பரவலாக்கி வருகிறார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகில் புதிய பாதை அமைத்துக்கொடுத்த பாரதியின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் அனைத்தும் அவர் புதுச்சேரியில் தங்கியிருந்த காலத்தில்தான் வெளிவந்தன. புதுச்சேரிப் பகுதியில் பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ்ஒளி போன்ற மரபுக் கவிஞர்கள் வாழ்ந்தமையால் இன்றும் இப்பகுதியல் மரபுக் கவிதைப் பாடும் கவிஞர்கள் மிகுந்துள்ளனர். பாரதி காலத்திற்குப் பிறகு தற்காலம் வரை புதுவையில் உள்ள கவிஞர்கள் பற்றிய ஒரு பருந்துப் பார்வையாக இவரது உரை அமைந்திருந்தது.

பேராசிரியர் முனைவர் ப.இரவிக்குமார் அவர்களின் உரை அறிந்த படைப்பார்களின் படைப்புகள் பற்றி அறியாத பல தகவல்களை விளக்கும் விதமாக இருந்ததது. பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி, புதுவைச் சிவம், பிரபஞ்சன் போன்ற சிறந்த படைப்பாளர்களின் கவனப்படுத்தப்படாத படைப்புகளில் இருந்து பல அரிய கருத்துக்களை இவரது உரை வாயிலாக அறியமுடிந்தது. தமிழ் உரைநடை வரலாற்றில் புதுச்சேரியின் பங்களிப்பு மிக முக்கியமானது. பாரதியும், வ.வே.சு ஐயரும் எழுதிய சிறுகதைகளும், மங்கையர்கரசியின் காதல் என்னும் தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பும் புதுச்சேரியில் இருந்துதான் வெளிவந்திருக்கின்றன. புதுச்சேரியின் இலக்கிய வரலாறு பற்றி விரிவாக விவாதிக்க, பேராசிரியர் இரவிக்குமார் அவர்களின் உரை களமமைத்துக் கொடுத்திருந்தது.

பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டது போல புதுச்சேரி வரலாறு குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் ஒரு முழுமையான நூல் இதுவரை வெளிவரவில்லை என்பது உண்மை. அவ்வாறான நூல்கள் எழுதுவதற்கான முன் முயற்சியாக இப்பயிலரங்கம் அமைந்தது என்று கூறலாம். இதுபோல் பல பயலரங்கங்களைத் தொடர்ந்து நடத்தவேண்டும். இப்பயிரங்கில் விவாதிக்கப்பட்டவை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் இது புதுச்சேரி வரலாறாற்றர்வளர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் இருக்கும்.

இப்பயிலரங்கம் ஏழுநாட்களுக்கு மட்டுமே திட்டமிடப் பட்டிருந்ததால் பெரும்பகுதி புதுச்சேரியை மட்டுமே மையமிட்டதாக அமைந்திருந்தது. அடுத்தடுத்து இதுபோன்ற பயிலரங்கங்கள் நடைபெறுமாயின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக்கால், மாகி, ஏனம் ஆகிய பகுதிகளின் வரலாறு மற்றும் இலக்கியங்களும் இடம்பெறும் என்று இதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது போல், இதுபோன்ற பயிலரங்குகளை இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறது.

- முனைவர் ப.விவேகானந்ததாசன்,

தமிழ்ப் பேராசிரியர்

இராஜிவ் காந்தி கலை அறிவியல் கல்லூரி

புதுச்சேரி

Pin It