போகிமான் என்பது ஒரு அலைபேசி விளையாட்டு. கூகுள் வரைபடத்துணையுடன் அலைபேசியில் நிழலும், நிஜமும் கலந்து விளையாடப்பட வேண்டிய ஒன்று. நிழல் பொம்மை ஒன்று நிஜ இடங்களைக் காட்டிச் செல்ல நிஜ மனிதர்கள் அதனைப் பின் தொடர்ந்து சென்று நிஜ இடங்களில் ஒளிந்திருக்கும் நிழல் பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும். மெய்யாக இந்த விளையாட்டு நிஜமும், நிழலும் கலந்த ஒன்று. மெய்மையும், பொய்மையும் கலந்த ஒன்று. இருளும், ஒளியும் கலந்த ஒன்று. போகிமான் என்பது நிழலும் நிஜமும் கலந்த நிழலின் நிஜமாகும் அல்லது நிஜத்தின் நிழலாகும்.
நிழலும் நிஜமும் கலந்த போகிமானின் வசியக் குரலுக்கு கடந்த காலங்களில் மனிதர்கள் பலர் தமது உயிரைக் கொடுக்க வேண்டியவர்களானார்கள். இன்றைக்கு நீலத் திமிங்கிலம் எப்படி அலைபேசி மனிதர்களை வலைவீசிப் பிடித்ததோ அது போல, போகிமான் பல நிஜம் போன்ற நிழல்களுக்குள் மனிதர்களை இழுத்துப் போனான். மெய்யாக உயிர் வாழத் தகுதியற்ற இடங்களில்தான் போகிமான் தனது வலையை விரித்து வைப்பவனாக இருந்தான். மனித காலடிகளுக்குச் சவாலான இடங்களில் போகிமானின் பூச்சிகள் ஒளிந்திருந்தன. நிஜப் பூச்சிகளுக்குச் சவாலாக அவை இருந்தன. இருக்கின்றன. எந்தப் பூச்சிக் கொல்லிக்கும் அகப்படாத அந்த போகிமான் என்ற இருள் பூச்சியை மேலைநாடுகள் தடை செய்தன. ஒரு வகைப் புரட்சியைத்தான் அந்த மாயப் பூச்சிகள் செய்தன. மேட்டுக்குடிகளின் கால்கள், குடிசைகளை நோக்கியும், குடிசைகளின் கால்கள் மேட்டுக்குடிகளை நோக்கியும் நடக்கச் செய்த மாயப் புரட்சி வழித்தடத்தைத்தான் அவை உருவாக்கிக் கொடுத்தன.
வாழ்காலத்தின் வழித்தடத்தை மட்டுமல்ல போகிமான் வரலாற்றின் வழித்தடத்தையும் நிகழ்காலத் துடன் இணைக்க முடியும் என்பதைத்தான் முத்தன் பள்ளம் நாவல் பேசுகிறது. முத்தன் பள்ளம் என்ற நிகழ் வெளியை வரலாற்று வெளியுடன் போகிமான் பூச்சி இணைக்கிறது. நாவலின் மையக் கருவும் அதுதான். போகிமான் பூச்சியை நீங்கள் அடையும்போது உங்கள் விளையாட்டு முடிந்திருக்கும். ஆனால் முத்தன் பள்ளம் என்ற இருளடைந்த வெளியின் சிக்கல்கள் தொடர் வதாக இருக்கும். வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரை முடிவடையாத சிக்கல்களின் இருப்பிடத்தை போகிமான் முத்தன் பள்ளத்தில் தொடங்கி வைப்பது தான் நாவலாகியிருக்கிறது. கடந்த காலமும், நிகழ் காலமும் சந்திக்கும் இடத்தில்தான் போகிமான் பூச்சியின் வாழிடம் அதை நோக்கித்தான் முத்தன் பள்ளம் நாவலும், போகிமான் பொம்மையும் நம்மை மாறி மாறிப் பயணித்து அழைத்துச் செல்கின்றன.
வரலாற்றில் இனக்குழுவாக வாழத் தொடங்கி அரசு, அரியணை என்று மகுடம் சூடி கோலோச்சிய ஓர் இனம் எப்படி போகிமான் பூச்சி வலைபின்னிக் கிடக்கும் இடமாக மாறியது என்பதைத்தான் நாவல்வழிக் காட்டிச்செல்கிறது. பதாகை என்பது என்ன? மனிதர் களின் தன்முனைப்பின் உருவமா? அடிமனதின் வாமன அவதாரமா? தற்புகழ்ச்சியின், தற்பெருமையின் கலை வடிவமா? ஆனால் நவீன வரலாற்றின் கல்வெட்டுக் களாகப் பதாகைகள் மாறியிருக்கின்றன என்று சொல்லலாம். ஆண்ட பரம்பரைகள், மீண்ட பரம்பரைகள் தொடங்கி பூமிக்குக் கீழே சென்ற அத்தனைக் கல்லறை மனிதர் களும் உயிர்த்தெழும் இடமாக பதாகைகள் மாறியிருப்பது என்னவே மெய்.
ஒரு வகையில் பழைய மகுடமும், புதிய ராஜாக் களும் ஆளும் இடமாக பதாகைகள் இருக்கின்றன. பதாகைகளின் ராஜாக்கள் பதாகை வழியாகவே தமது பரிபாலனத்தை செய்கிறார்கள். நவீன ராஜாக்களின் அசையும் ராஜ்ஜியம் பற்றிய செய்திகளுக்கான அசையா ஊடகமாகப் பதாகைகள் இருக்கின்றன. கல்வெட்டுக் களைப் பதித்த இனம், காணாமல் போய்க் கொண்டிருக்க, ஒரு காற்றுக்கே நிற்காத பதாகைகளில் தமது ராஜ்ஜியத்தின் சாதனைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக் கிறார்கள் நவீன ராஜாக்கள்! கல்வெட்டில் வாழ்ந்த பரம்பரை ஒன்று முத்தன் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் அரசியலை எந்தப் பதாகையும் சொல்லப் போவதில்லை. மாறாக அந்தப் பதாகையின் கீழ் மூடிவைக்கவே செய்யும். வரலாற்றின் பெருமை பதாகைகளாக இருக்க, அதுவே இருக்கும் மானத்தைக் காக்கும் ஆடையாக மாறிநிற்கும் கதையை, முத்தன் பள்ளம் நாவல், வரலாற்றில் வழியும் குருதியைக் கவிச்சி மாறாமல் முன்வைத்துச் செல்கிறது.
வரலாற்றில் வாழ்ந்த இனமான, ஆண்ட இனமான முத்தரையர், அரையர் என்றெல்லாம் அழைக்கப்படும் இனம் எப்படி இனக்குழுவாக, வேட்டைச் சமூகமாக, இருந்து ஆளும் வர்க்கமாக, ஆண்ட வர்க்கமாக மாறி பின் வரலாற்றின் துரோகத்தால் முத்தன் பள்ளத்தில் வீழ்ந்த கதையைச் சொல்லிச் செல்கிறது நாவல். புதுக்கோட்டையைக் குறிப்பாக கல்லாக்கோட்டையை நடுவமாகக் கொண்டு ஆண்ட, அவர்களில் ஒரு பிரிவான கள்ளர் இனக்குழுவிற்கும், முத்தரையர் இனக்குழுவிற்குமாக மாறி மாறி அமையும் கொண்டும், கொடுத்தும் வாழ்ந்த உறவு, அவர்களது அரசியல், சமூக பொருளாதார வாழ்வு, போர், சமாதானம் என்று வரலாற்றின் திசைகளில் ஆழப் பயணிக்கிறது நாவல்.
முத்தரையர் இனக்குழு, சமண மதத்தைச் சேர்ந்ததாக இருந்ததும், பல்லவர்களுடன் அவர்களுக்கு இயல்பான உறவு இருந்ததையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் பல்லவர்களுடன் அவ்வினக் குழுவிற்கு சகோதர உறவு முறையும் இருந்துள்ளது. வேட்டை இனமான முத்தரையர் குழுவின் ஆட்சி அதிகாரச் சின்னம் மீன் சின்னமாக இருந்துள்ளது. தஞ்சையின் திருக்காட்டுப்பள்ளியை முதன்மையாகக் கொண்டு ஆட்சி செய்த அக்குழு பின்னர் புதுக் கோட்டையை நோக்கி நகர்கிறது. ஆனால் தஞ்சை -புதுக்கோட்டையை வலமிட்ட ஆட்சிப் பகுதியாக முத்தரையர் இனக்குழு அறியப்படும் பின்னணியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்த கதை, வரலாற்றில் நமக்கு மீள ஓர் ஈழத் தமிழர் கதையைச் சொல்வதாக இருக்கிறது.
வரலாறு எங்கும் போய் விடுவதில்லை. அவை மீண்டும், மீண்டும் திரும்பி வருகின்றன என்பதைத்தான் நாவல் நமக்குச் சொல்வதாக இருக்கிறது. 35 உட் பிரிவுகளைக் கொண்ட முத்தரையர் எனும் இனக்குழு, விரிவடைந்து ஆட்சியதிகாரக் காலத்தில் தனது உறவுமுறையின் உட்பிரிவுகளையே தாயாதிகளையே தனது ஆட்சியதிகாரத்தின் சகல நிலையிலும் நியமித்துக் கொள்கிறது. அது ஒரு வகையில் பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். கோலோச்சும் மன்னனும் அவர்களாகவே இருக்கிறார்கள், குடிமக்களும் அவர்களாகவே இருக் கிறார்கள். காலப்போக்கில் அவ்வினக்குழு பிற இடங் களுக்குப் பரவின காலத்தில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோராகவும் மாறுகிறார்கள். இதை நாம் பல்துறை வித்தகர் ந.சி.கந்தையா அவர்களின் ‘தென்னிந்திய குடிகளும், குலங்க’ளும் நூலிலும் பார்க்கலாம். வேட்டை, மற்றும் காவலில் திறமைசாலி களான அவ்வினக்குழு ஓர் அரசியல் சதியால் பிற் காலத்தில் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்ட கதை, வரலாறு எப்படி நிகழ்காலம் வரை நீண்டு கிடக்கிறது என்பதை நமக்குச் சொல்வதாக இருக்கிறது.
பகையே அறியாத முத்தரையன், சகோதரத்துவம் பூண்ட பாண்டியனின் வஞ்சகச் சொல் கேட்டு பிறிதொரு சகோதர மன்னனான பல்லவன் மீது போர் தொடுக்க வேண்டியவனாகிறான். இன்னொரு பக்கம் குறுநில மன்னனான விசயாலய சோழன் வஞ்சகமாகப் பல்லவரையும், கங்க மன்னனையும் இணைத்துக் கொண்டு பாண்டியன் - முத்தரையன் மீது போர் தொடுத்து முத்தரையனின் ஆட்சியை தஞ்சைப் பகுதியில் முடிவுக்குக் கொண்டு வருகிறான். விசயாலயச் சோழனுக்கும், முத்தரையனுக்குமான போரில் அன்றைக்கு ஆனைவிழுந்தான் பள்ளத்தில் ஆனைவிழுந்ததோ இல்லையோ, முத்தரையன் ஆட்சி விழுந்தது. அவனது இனம் விழுந்தது. ஆனைவிழுந்த பள்ளத்திலிருந்து முத்தன் பள்ளம் வரையிலாக விழுந்துவிட்ட இனக் குழுவின் வரலாறு சமூக அறிவியல் பார்வையில் நாவலில் விரிந்து செல்வதாக இருக்கிறது. நாவலாசிரியரின் வரலாற்றுப் பார்வையும், உழைப்பும் உடன் பயணிக்கிறது.
விசயாலய சோழன் காலத்திலிருந்து முத்தரையர் இனம் மெல்ல சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படுவதைத் தான் ஆனைவிழுந்தான் பள்ளத்திலிருந்து முத்தன் பள்ளம் வரை நமக்குச் சொல்கிறது. மீண்டும் ஆட்சி யதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாதென்ற வகையில்
ஓர் இனமே தண்டனைக்குள்ளாக்கப்படுவதைத்தான் நாவலுக்குள் பார்க்கிறோம். சோழருக்குப் பிறகு மராட்டியர், நாயக்கர் ஆட்சியிலும் மேலும், மேலுமென அவ்வினம் வரலாற்றில் மிகக் கவனமாக ஒடுக்கப்படுகிறது. சொந்த நிலத்திலிருந்து மெல்ல நாடுகடத்தப்படுகிறது. வரலாற்றில் ஈழத்திற்கு முன்பாக ஓர் இனக்குழு மொத்தமாக தனது நிலத்திலிருந்து அகற்றப்படுவதை வரலாறு நமக்கு முன் சென்று கற்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் போல முத்தன்பள்ளம் ஓர் வரலாற்று சாட்சி.
வீழ்ந்துபட்ட ஓர் இனத்தின் தலைமகனாக முத்தன் இருக்கிறான். முத்தரையன் வீழ்ந்த இடம் முத்தன் பள்ளத்திலிருந்து தொடங்குகிறது. வேட்டையில் தொடங்கிய இனம் மீண்டும் வேட்டையினமாக, காவல் காக்கும் இனமாகத் தொடங்குகிறது. மகுடம் இழந்த இனம் மாற்றுக்குடியாகிறது. முத்தன் பள்ளம் என்பது மகுடம் இழந்தவர் இடமாகும். மகுடம் இழக்கும் இடமெல்லாம் முத்தன் பள்ளமாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முத்தன் பள்ளம் இருக்கிறது.
வரலாறு என்பது வலிமையாளர்களின் வரலாறு என்பதைத்தான் முத்தன் பள்ளமும் நமக்குச் சுட்டுகிறது. வலிமையாளர்கள் எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவர் களாக இருக்கிறார்களோ அதுவே வரலாறாகிவிடுகிறது. அதுவே நீதியாகிவிடுகிறது. முத்தரையர் இனக்குழு வரலாற்றில் சமூக ரீதியிலும், பொருளாதார அரசியல் ரீதியிலும் தலித் சமூகத்தைப் போன்றே சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படும் ஒன்றை, பேசப்படும் ஒன்றை நாவலில் பேசப்படாத பகுதியாகப் பார்க்க முடிகிறது. விசயாலய சோழன் காலத்தில் தொடங்கும் அதுவரையி லில்லாத பார்ப்பன ஆதிக்கம், சமஸ்கிருத மொழி திணிப்பு, சைவ மத செல்வாக்கு பின்னணியில் முத்தரையன் ஆட்சியின் வீழ்ச்சியைக் கணிக்க வேண்டி யிருக்கிறது. சமண மதத்தைப் பின்பற்றும் முத்தரையன் ஆட்சி, அக்குடிமக்கள் விசயாலய சோழன் ஆட்சிக் காலத்தில் தாழ்குடியாக்கப்படுகிறார்கள். முத்தரையன் மகுடம் இழந்தபோது சமணமும் மகுடம் இழக்கிறது. பாண்டியன் வம்சமும் ஏககாலத்தில் சமண செல்வாக்குப் பெற்றதாகவே இருக்கிறது. ஆக முத்தரையன்-பாண்டியன் உறவென்பதே சமண உறவாகவே இருந்திருக்கலாம்.
விசயாலயன் வம்சம் சோழ வம்சமாக விரியும் காலத்தில் எண்திசையும் சைவ மதம் தழைக்கிறது. சமணம் - அதை ஏற்றுக் கொண்ட முத்தரையன், பாண்டியன் இனக்குழுக் குடிகள் சமூக ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் வைத்துச் சமணத் துறவிகள் கழுவேற்றப்படுகிறார்கள். சோழர் களால் செல்வாக்கும், சொல்வாக்கும், செல்வமும் பெற்ற பார்ப்பனர்கள் மதப் போருக்கு அழைத்து வாதங் களால் சமணர்களை வீழ்த்துவதுடன் அவர்களை மத நிந்தனைக்குள்ளாக்கி கழுவேற்றுகிறார்கள். சோழர்கால பார்ப்பனர் ஆதிக்கம் சமூகத்தில் மேல், கீழ் குடிகளை உருவாக்குகிறது. சமூகத்தில் உயர் பிரிவாக பார்ப்பனர் உருவாகின்றனர். சமண மதம் சமூகத்தின் விளிம்பு நிலையினர் மதமாக்கப்படுகிறது. சமணம் இழிவான போது, அதைப் பின்பற்றியவர்களும் இழிவாகினார்கள். அக்குடி இழிவாகியது. அம் மனிதர்கள் இழிவானார்கள். முத்தன் பள்ளம் இழிவானது.
வரலாறு, சைவமதச் செல்வாக்குச் சமண, புத்த மதங்களை இழிவாக்கிச் சென்றது மட்டுமல்லாது. பின் வந்த காலங்கள் எல்லாம் அக்குடிகளை இழிவாகவே வைத்திருக்கச் செய்தது. மன்னராட்சிக் காலம் தொடர்ந்து மக்கள் ஆட்சிக் காலம் வரை சைவத்தின், பார்ப்பனியத்தின் செல்வாக்கு, ஒரு தொகுதி மக்களை விளிம்பிலேயே வைத்திருக்கிறது. சமண, பவுத்த மதங்களின் விடுதலைபேசும் அறத்தின் குரலை மக்களாட்சிக் காலத்திலும் தொடர்ந்து சிறை வைத்திருப்பதைத்தான் நாவல் உள்ளார்ந்த மனசாட்சியாக ஒலிக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது போருக்குப் பிந்தைய ஒரு நாடு எதிரிநாட்டின் வசமாகப் போகும் போது ஏற்படும் துயரம் ஒரு பக்கம் என்றால் அந்நாட்டுக் குடிகள் சமூக, பொருளாதார நிலைகள் ஒரு பக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படுகின்றன. சீர்குலைக்கப்படுகின்றன. மேலாக அக்குடிகளின் சமயம், பண்பாட்டை அரச அதிகாரவர்க்கம் ஏற்றாலும், அதன் பின்னிருக்கும் ஆதிக்கவாதிகளும், மதவாதிகளும் விடுவதில்லை. அதைத்தான் முத்தன் பள்ள வரலாற்றிலும் பார்க்கிறோம். ஓர் அரசு மாறும்போது வெறும் அரசாக மட்டும் மாறுவதில்லை. மன்னன் மட்டும் மாறுவதில்லை. மகுடம் மட்டும் மாறுவதில்லை. ஓர் குடிமைச் சமூகமே மாற்றப்படுகிறது. கைப்பற்றப்பட்ட நாடு மட்டுமல்ல, மன்னன் மட்டுமல்ல அவனது குடிகளும் அடிமையாக்கப் படுகின்றன. அவர்களது மதமும் அடிமையாக்கப் படுகிறது.
சோழர்கள் காலம் சைவமதத்தின் எழுச்சி மிக்க காலம் என்பதை நமக்குத் திரும்பத்திரும்பப் பாட நூல்கள் விதந்தோதுவதைப் பார்க்கிறோம், கற்கிறோம். ஆனால் அந்த எழுச்சியின் கீழ் நசுக்கப்பட்ட மதம், அதைப் பின்பற்றிய மக்களின் நிலை பற்றி நாம் படிக்கத் தவறிவிடுகிறோம். சொல்லாமல் விடப்படும் வரலாறுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்களாகி விடுகின்றன. முத்தன்பள்ளம் இருண்ட வரலாற்றின் நவீன பக்க மாகும்.
சோழர்கள், பார்ப்பனர்களுக்கு உபரி நிலங்களைத் தானமாக வழங்குகின்றனர். அவை அகரங்களாகவும், சதூர்வேதி மங்களங்களாகவும் மாறுகின்றன. நீதி வழங்கும் இடங்களைப் பார்ப்பனர்கள் படிப்படியாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மதத்திலிருந்து நீதியை உருவாக்குபவர்களாகிறார்கள். நான்கு வர்ணங் களைச் சோழர்காலச் சமூகம் வளர்த்தெடுக்கிறது.
முத்தரையர் - கள்ளர் உறவு முறையை, உயர்வு, தாழ்வாகச் சைவமே பிரிக்கிறது. வரையறுக்கிறது. விசயாலய சோழ வழி சைவம், சமணமதம் சார்ந்த முத்தரையரை சைவத்திற்குக் கீழாக்குகிறது. கடவுள் மறுப்பும், சடங்கு எதிர்ப்பும் கொண்ட முத்தரையர் இனக்குழுவை, முத்தன் பள்ளத்தில் இறுதியில் தள்ளுகிறது. சைவசமயம் பரவும் காலத்தில் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் மீது கொண்ட பாசத்தையும், சைவமதத்தின் மீதான பிடிப்பையும் எள்ளலுடன் நாவல் விவரிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “எனக்கு அப்பூதியாரை நினைக்க கோபம்தான் வந்தது. பிறகு என்னவாம்! பார்க்க, பயன்படுத்த, கூப்பிட என அனைத்திற்கும் ஒரே பெயரைச் சூட்டும் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தவன் அவன்தான் இல்லையா?Ó (பக்-103) நாவலாசிரியரின் நியாயமான கோபத்தைத்தான் இன்றைய அரசியல் கலாசாரத்திலும், ‘பிளக்ஸ்’ ‘உருப் பெருக்கிப்’ பதாகைகளிலும் பொருத்திப் பார்க்கிறோம். அப்பூதியடிகள், நவீன பிளக்ஸ் போர்டின் வரலாற்று வடிவம் என்றால் மிகையில்லை.
நாவல் தொண்டைமான் ஆட்சிக்கால நிலையை விளக்கிச் செல்கிறது. சாதியச் சமூகமாக இருக்கும் தொண்டை மண்டலத்தில் சாதியின் காரணமாக வழங்கப்படும் தண்டனையும், காதலுக்காக தன் மகுடத்தையே துறக்கும் மன்னனையும் பிறிதொன்றாகப் பார்க்கிறோம். ஒன்றுக்கொன்று வலையாகப் பின்னிச் செல்லும் நாவல், தொண்டைமானுக்கும், பாட்டனுக்கும் உள்ள உறவை ஆழ்ந்து சொல்கிறது. இரு இனங்களின் இணக்கத்தைச் சொல்கிறது. முத்தன் பள்ளம் அரசதி காரத்தின் வஞ்சகத்தில் உருவாகிறது. மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சிக் காலம் வரை முத்தன் பள்ள வரலாறு அதிகாரத் துரோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. தொண்டைமான் கொடுத்தச் செப்புப்பட்டயம் அதிகார வர்க்கத்தின் பட்டயமாவது போல முத்தன் பள்ளம் நவீன அதிகாரவர்க்கத்தின் பட்டாவாகிவிடும் சாபம் கவிழ்ந்த வரலாற்றை சேறும், சகதியுமாக முன் வைக்கிறார் நாவலாசிரியர் அண்டனூர் சுரா.
பள்ளம் என்பது மேட்டின் சதி. மேடு உயர்வதற்கு பள்ளம் அவசியம். முத்தன் பள்ளம் போன்ற பள்ளங்கள் அவசியம். மேட்டுக்குடி வரலாற்றின் பள்ளமாக முத்தன் பள்ளம் இருக்கிறது. வாழ்வில் பள்ளம் விழுந்த மக்கள் எதிர் நீச்சலிடுமிடமாக முத்தன் பள்ளத்தில் தேங்கியுள்ள நீர் இருக்கிறது. நீரும், துயரமும் சூழ்ந்த முத்தன் பள்ளத்தை நாவலாசிரியர் காட்சிப் படுத்தும்போது நவீன சமூகம் வெட்கப்பட வேண்டியுள்ளது. விண்வெளிக்கு கோள்களையும், எரிகனையும் அனுப்பும் முன்னேறிய சமூகத்தில், முத்தன் பள்ளத்தின் சமூக மதிப்புத்தான் என்ன? விழுமியம்தான் என்ன? எரிகனைகளும், கோள்களும் தேவைப்படும் அளவிற்கு முத்தன் பள்ளம் சக மனிதனுக்குத் தேவைப்படவில்லையா? ஆனால் தேவைப்படுகிறது. இந்த நாட்டில் காக்கைகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று வந்துவிட்டால் எப்படி அதற்கென்றொரு மதிப்பு வருமோ அந்தள விற்குத் தேர்தல் காலத்தில் முத்தன் பள்ளம் திடீர் மேடாகி விடுகிறது. ராமன் காலடிபட்ட அகலிகையாகி விடுகிறது. அயோத்தியாகிவிடுகிறது.
முத்தன் பள்ளம் என்பது வரலாற்றுத் துயரம் மட்டுமல்ல. வரலாற்று சாபமும் கூட. சாதியும், மதமும் ஊடாக நிலப்பிரபுத்துவக் காலம், மக்களாட்சிக் காலம் என்று மன்னராட்சி நீள்வதைத்தான் முத்தன் பள்ளம் சாட்சியாக நின்று சொல்லிக் கொண்டுள்ளது. மனிதர்கள் வசிக்க வக்கற்ற, போகிமான் பூச்சி கூட மூச்சு விடச் சிரமப்படும் முத்தன் பள்ளம் வரலாற்றில், ஒரு மக்கள் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு கூட்டுத் தண்டனையாகவே இருக்கிறது.
சமணத்தின் மீது சைவத்தின் நவீன கழுமரமாக முத்தன் பள்ளம் இருக்கிறது. நவீன மன்னர்களின், அப்பூதியடிகளின் பதாகைகளை முத்தன் பள்ளத்தின் குடிகள் கூரைகளாகக் கொண்டிருக்கிறார்கள். அரை குறை ஆடையணிந்த நடிகையின் பதாகைப் பெண் களின் குளியலறை ‘மறைப்பாக’ இருக்கிறது. முத்தன் பள்ளத்தின் நிர்வாணத்தை மறைக்கும் இடையாடை யாகப் பதாகைகளே இருக்கின்றன. நவீன வரலாற்றின் பெருமிதம், ஆணவம், அலட்சியம், அரசியல், அசிங்கம் என பதாகையின் வண்ணங்கள் அவர்களது நிர்வாணத்தின் மீது நிரந்தரமாகப் பூசப்பட்டுள்ளது.
தூர்க்கப்பட்டக் கீழடி போன்ற வரலாற்றைத் தேடிப் பிடித்துத் தோண்டுவதைப் போல, விவாதிப்பதைப் போல, வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவதைப் போலத் தூர்ந்தும், தூர்க்கப்படாத முத்தன் பள்ளத்தைப் பற்றி பேசுவது என்பதும் பின்னரான காலத்தின் கீழடியை உருவாக்காதிருக்கும். முத்தன் பள்ளம் நிகழ்காலத்தின் கீழடி மட்டுமல்ல. எதிர்காலத்தின் கீழடியும் கூட.
போகிமான் பூச்சியைத் தேடிப்போகும் வாசகன் கண்டடைவது முத்தன் பள்ளம் என்ற நரகத்தை மட்டு மல்ல. அது ஒளிந்திருக்கும் இடமும்தான். போகிமான் பூச்சி ஒளிந்திருப்பது இறுதியில், மனிதர்களின், அதிகாரத்தின், ஆணவத்தின், ஆணாதிக்கத்தின் குறி யீட்டின் மீது. ஆம் குறியின் மீது. வாழ்ந்தடங்கி விட்டக் குறியின் மீது. வரலாற்றுக் காலத்தின், நவீன காலத்தின் ஆண்டடங்கிய குறியின் மீது. சமூகத்தின் மீது, அறிவியலின் மீது, அறவியலின் மீது. போகிமான் பூச்சியா? அதிகாரத்தின் குறியா? என்ற குழப்பம் வாசகனுக்கு உண்டாகும் போது குழந்தைகள் சிரிக் கிறார்கள். ஆம், குழந்தைகளால் மட்டும்தான் அப்படி சிரிக்க முடியும். நாமும் சிரிக்க முடிந்தால்!
முத்தன் பள்ளம் - போகிமான் கண்டுபிடித்த வரலாற்றின் நவீன வடு!
முத்தன் பள்ளம்
அண்டனூர் சுரா
மேன்மை வெளியீடு
5-2, பெர்தோ தெரு, ராயப்பேட்டை,
வி.எம்.தெரு, (கில்ஆதர்ஷ் பள்ளி அருகில்)
சென்னை - 600014
தொலைபேசி எண்: 044 - 28472058
` 150/-