இந்தியாவின் தற்கால சமூக - அரசியல் - பொருளதார நிலைமைகளையும், அதன் எதிர்கால விளைவுகளையும் பற்றி கவலைப்படுகின்ற பல நகர்ப்புற பெற்றோர்களை நான் நன்கு அறிவேன். அவர்களது கவலைகளுக்குக் காரணம் யாதெனில், இந்தியாவோடு சேர்ந்தே அவர்களது குழந்தைகளும் வளர்கின்றார்கள். இந்தியச் சமூகத்தின் தற்கால நிலை, நாட்டின் பொருளாதாரம், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, பின்னோக்கிச் செல்லும் வாழ்க்கைத் தரம் இவை குறித்து அவர்கள் அக்கறை கொள்கிறார்கள். சுருங்கச் சொல்வது எனில், தங்கள் குழந்தைகள் எதிர்கொள்ளவிருக்கின்ற வருங்கால இந்தியாவைப் பற்றி அவர்கள் கவலைப் படுகிறார்கள். மேற்சொன்ன இந்த அம்சங்களில் இந்திய கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களின் கவலைகள் வேறுவிதமாக இருக்கின்றன என்பது தனிச் செய்தி.

secularismஎண்ணிக்கை அடிப்படையில் பார்க்குங்கால், மிகக் குறைவான இந்தியப் பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைக்கவும், அங்கேயே அவர்கள் வாழ்க்கை நடத்துவதையும் விரும்புகிறார்கள். அவர்களைத் தவிர்த்து, பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நம் இந்திய நாட்டிலேயே வளர்வதையே விரும்புகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் சந்திக்க உள்ள சிக்கல்கள் ஏராளமானவை. அரசு அவர்கள் மீது மிகக் கண்டிப்புடன் செயல்படுத்த உள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR- National Population Registers), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC-National Registers of Indian Citizen), குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA – Citizenship Amendment Act) உள்ளிட்ட பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். "எந்த வழியிலும் தப்பிக்க முடியாது" (“There is no escape”) என்று அண்மையில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் (Union law minister) ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது இந்த உண்மைகளை உறுதிப்படுத்துகின்றன. (’மத்திய அரசு’ என்று கூறுவதை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இந்தியாக் கூட்டாட்சி நாடு. பல்வேறு மாநிலங்களின் ’கூட்டரசு’ தான் நாம் ஏற்படுத்திக் கொண்டது. சர்வ வல்லமை படைத்த ‘மத்திய அரசை’ நாம் ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.)

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாட்டின் தலைசிறந்த கோட்பாடுகளான, மதச்சார்பின்மை (Secularism), மக்களரசு குடியாட்சி (Republic Democracy), முற்போக்கு இந்தியா (Progressive India) போன்றவை கடும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை மிகக் குறைந்த அரசியல் அறிவு கொண்டவர்களால் கூட எளிதில் சொல்லிவிட முடியும்; அல்லது புரிந்து கொள்ள முடியும்.

இதுபோன்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தை இந்தியா எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், நேர்மையும் மனசாட்சியும் கொண்ட இந்தியப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டியவைகள் யாவை?

உங்களுடைய சொந்த அரசே, கருத்தியல் ரீதியாக உங்களை முடமாக்கி, மயக்கி வயப்படுத்தி அவர்களுக்கு இணக்கமாக உங்களை மாற்ற முடியும் என்று கருதுகிறது. ஆனால் இந்தியாவின் மதச் சார்பின்மையையும், குடியரசு மக்களாட்சித் தன்மையையும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் எனப் பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் மதச் சார்பின்மையையும், மக்களாட்சி குடியரசையும் பாதுகாப்பதற்கு இந்தியப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் செய்ய வேண்டியவை:

1. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை போற்றி மதித்தல்:

இந்தியப் பெற்றோர்கள்-ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் புரட்டிப் பார்க்கும் வண்ணம், உங்கள் மேசை அறையிலேயோ அல்லது சிற்றுண்டி மேடையிலேயோ எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து உங்கள் குழந்தைகளோடு பேச வேண்டும். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் உரிமைகளையும், கடமைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்ற ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த 'தேசிய ஆவணம்' இதுவென்று உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புகளை, குறிப்பாக அதன் 'முன்னுரை'யின் முக்கியத்துவத்தை விளையாட்டுப் போக்கில் எடுத்துக் கூறும் வகையில், ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லைலா சேத் (Leila Seth) அவர்கள், "இந்திய குழந்தைகளாகிய நாம்" (We, the Children of India) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணமும் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பு. இதுபோன்ற புத்தகங்களையும் உங்கள் குழந்தைகளுக்குக் படிக்க கொடுக்கலாம்; அல்லது படித்து அவர்களோடு உரையாடலாம்.

இவ்விடத்தில் நாம் ஒன்றை நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ அல்லது அது சார்ந்த கட்டுரையையோ நாம் கடைசியாக அல்லது எப்போதாவது நாம் படித்து இருக்கிறோமா என்பதை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். யாருடைய துணையும் தூண்டுதலுமின்றி, நாமாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பரிச்சயம் கொண்டிருப்பது சாலச் சிறந்தது. உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காக அதன் பிரதிகளில் ஒன்றோ இரண்டோ கூடுதலாக வைத்திருப்பதனால் ஒன்றும் மோசம் போய்விடாது. அது ஒன்றும் விலை உயர்ந்த ஒரு புத்தகமும் அன்று. 'ஹரே கிருஷ்ணா' அமைப்பைச் சேர்ந்த ISKCON பிரிவினர், வீதிகள் தோறும் போக்குவரத்து சந்திகள் தோறும் "பகவத் கீதையை" மக்களுக்குக் கொடுக்கும்போது, "இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை" விருப்பமுள்ள, ஆர்வமுள்ள நபர்களிடம் நாம் ஏன் கொடுக்கக் கூடாது?

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை கண்ணாடிச் சட்டமிட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் காட்சிப் படுத்துங்கள்; அதை வைத்திருப்பதற்காக பெருமை கொள்ளுங்கள்:

எழுதிய சொற்களை வெறுமனே காணும்போதே, அவை உங்கள் சிந்தனைக்குள் வேலை செய்ய ஆரம்பித்து விடும். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் நிச்சயம் ’முகப்புரையில்’ எழுதப்பட்டுள்ள வாசகங்களைக் கவனிப்பார்கள்; அது அவர்களுக்குள் அது குறித்த மிகப் பெரிய உரையாடலை நிகழ்த்துவதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். மக்களில் பலர் தங்களுக்குப் பிடித்த கடவுளின் உருவப் படத்தையோ அல்லது முன்னோடிகளின் உருவப் படத்தையோ அல்லது ஆன்மீகத் தொடர்புடைய இடங்களையோ, வாசகங்களையோ தங்கள் வீட்டில் படம் பிடித்து பார்வைக்கு காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால், நமது நாட்டின் மதச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசின் சிறப்பியல்புகளை எடுத்து இயம்புகின்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'முகப்புரையை', தங்கள் வீட்டில் படம் பிடித்து வைப்பதற்கு ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. அவ்வாறு தயங்குவதற்கு எந்த அடிப்படைக் காரணமும் இல்லை; இருக்க முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பினைக் காப்பதற்காக குறைந்தபட்சம் இனிமேலாவது அந்தச் செயலை நாம் தொடங்குவோம்.

3. சமய விழாக்களை மற்றவர்களோடு கொண்டாடப் பயிற்றுவிப்போம்:

நீங்கள் அடிப்படையில் சமய நம்பிக்கை உடையவராகவோ அல்லது அவ்வாறு இல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் பிறரின் சமய நம்பிக்கைக்கும் கலாச்சார பண்பாட்டிற்கும் உரிய மதிப்பினைக் கொடுக்கும் பொருட்டு, அவர்களின் சமய விழாக்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். நம் குழந்தைகளுக்கு அதனை கற்றுக் கொடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், நம் குழந்தைகளை மதவெறிச் சிந்தனைக்கு ஆட்படாமல் தடுத்து நிறுத்த முடியும்; மதவெறிக்கு எதிரான ஒரு வலிமையான செய்தியை அது அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும். அத்துடன் நம்மைச் சூழ்ந்துள்ள உலகினைப் பற்றி அவர்கள் உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்வார்கள். நீங்கள் சமயத்தின் அடிப்படையில் ஓர் இந்துவாக இருக்கிறீர்களெனில், ஓர் இசுலாமியக் குடும்பத்தோடு ரமலான் பண்டிகையைக் கொண்டாடுங்கள். கிறித்துவ, இசுலாமிய மதச் சார்புடைய ஆன்மீகத் தலங்களுக்கும் அல்லது மதச் சார்பற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் மற்ற சமயத்தினரின் குடும்பத்தோடு நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அஃதொரு புதிய அனுபவமாக இருப்பதோடு மட்டுமன்றி, சமயங்களுக்கிடையே கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் அது வழிவகுக்கும். இது பிற சமயங்களின் பண்பாட்டுப் புனிதங்களையும் இயற்கையையும் மதிப்பதற்கு அவர்களை தயார்ப்படுத்தும் ஒரு வழிமுறை எனலாம்.

4. "அனைத்து இந்தியர்களும் சமம்" என்பதற்கு நீங்களே நற்சான்றாதாரமாக நடந்து கொள்ளுங்கள்:

1970 ஆம் ஆண்டுவாக்கில், எனது தந்தை ஓர் அரசு ஊழியராகப் பணிபுரிந்தார். பின்னாட்களில் சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு முன்பு, ஒரு பழைய லம்பிரெட்டா (Lambretta) ஸ்கூட்டர் வைத்திருந்தார். அந்தக் காலங்களில் அப்பாவோடு ஸ்கூட்டரின் பின்னிருக்கையில் அமர்ந்து ஒரு சவாரி செய்வது என்பது பேரானந்தம். வேலை முடித்து அப்பா எப்பொழுது வீட்டுக்கு வருவார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருப்போம். எங்கள் இருவரையும் வண்டியின் பின்னிருக்கையில் அமர வைத்து பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு எங்களை அழைத்துச் செல்வார். அவர் எங்களை மட்டும் அவ்வாறு அழைத்துச் செல்லவில்லை. நாங்கள் தங்கியிருந்த காலனித் தெருவின் காவலாளி வீட்டுக் குழந்தைகளையும், சலவைத் தொழிலாளியின் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்.

யார் வீட்டுக் குழந்தைகள் இவர்கள் என்றெல்லாம் அவர் கருதியதேயில்லை. அவரைப் பொறுத்தவரை குழந்தைகள் அனைவரும் குழந்தைகளே. எங்களுக்கென்று தனிச் சலுகை ஏதும் வழங்காமல் எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக அவர் நடத்தினார். இளம் வயதில் அது எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் மக்கள் என்போர் மரியாதைக்குரிய மனிதர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை என்னுள் விதைத்தது. ஒருவரின் சமூகப் பொருளாதார அந்தஸ்து என்பதெல்லாம் மூன்றாம் தர விஷயங்கள் என்று நான் உணர்ந்து கொள்வதற்கு அப்பாதான் முன்னோடி. நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை நம் குழந்தைகள் கவனிக்கிறார்கள்; நம்மைத் தொடர்ந்து அவர்களும் நம்மைப் பின்பற்றுவார்கள்.

5. உங்கள் குழந்தைகளுக்கு உரையாடும் கலையை கற்றுக் கொடுங்கள்:

நேரடி உரையாடலின்போது இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒன்றாக சேர்ந்து அமர்வார்கள்; ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள்; ஒருவர் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்பார்கள்; அதன்வழி மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வார்கள். ஆனால், முகநூல் (Facebook), புலனம் (WhatsApp) கீச்சகம் (Twitter), படவரி (Instagram) போன்ற இன்றைய சமூக ஊடகங்கள் நேரடி உரையாடலின் சிறப்பியல்புகளுக்கெல்லாம் சாவுமணி அடித்து விட்டன. இது சமூக ஊடகங்களின் மிக மோசமான விளைவாகும்.

உரையாடல் என்பது உடல் சார்ந்த இருப்பை வேண்டுவதாகும். நேரடி உரையாடலின் போது, பேசுகின்றவரின் உடல்மொழி, பேச்சில் ஏற்ற இறக்கம் இவற்றின் வழி ஏராளமான செய்திகளை நாம் எளிமையாகக் கடத்த முடியும். ஆனால் ஆகச் சிறந்த உரையாடல்கள் என்று சொல்லப்படுகின்ற இன்றைய சமூக ஊடக உரையாடல்களில் இவற்றுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை. நேரடி உரையாடலின் சிறப்பம்சங்கள் யாவும் சமூக ஊடக உரையாடல்களில் தேய்ந்து கொண்டே வருகின்றன.

பயன்மிக்க ஓர் உரையாடலில், நயமிக்கப் பேச்சு, விகடப் பேச்சு, சமயோசித சிந்தனை மிக்க பேச்சு போன்றவற்றால் கருத்துக்களை நறுக்காகச் சொல்ல முடியும். பிறரின் கருத்துக்களை கூர்ந்து கேட்டுப் புரிந்து கொள்ளவும் உதவும். நாம் நமது குழந்தைகளுக்கு நேரடி உரையாடல் கலையைக் கற்றுக் கொடுத்தோமேயானால், அது நாம் அவர்களுக்கு செய்த மிகப் பெரிய தொண்டாகும். 'தொண்டு' என ஏன் சொல்கிறோமெனில், நய நாகரீகமாக, ஆழமாக, நம்பகத் தன்மையோடு பேசுவதன் மதிப்பை அடுத்து வரும் நம் இளையத் தலைமுறையினருக்கு நாம் கற்றுத் தருகிறோம் என்றால் அது தொண்டுதானே!

6. விவாதிக்கும் கலையை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்:

நேர்மையான விவாதத்தில் பிறரின் கருத்தை மறுப்பதோ, எதிர் விவாதம் செய்வது அல்லது கேள்வி எழுப்புவது இந்தியாவிற்குப் புதிதல்ல; அது மூவாயிரம் ஆண்டு கால இந்திய மரபின் தொடர்ச்சி என்பதை நாம் நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்குச் சான்றாக, கௌதம புத்தர் முதல் துளசிதாசர் வரை, அமீர் குசுராவ் (Amir Khusro) முதல் ராஜாராம் மோகன்ராய் வரை, சாவித்திரிபாய் பூலே (Savitribai Phule) முதல் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர் அம்பேத்கார் வரை, இன்னும் எத்தனையோ சான்றோர் பெருமக்கள் இந்திய வரலாற்றில் நிரம்பக் காணப்படுகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக அநீதிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, சமூக வாழ்வியலுக்குத் தேவையான புரட்சிகரமான புதிய சிந்தனைகளையும் வழங்கி இருக்கிறார்கள்.

மன்னராட்சியானது மெலிந்தவர்களையும் ஒடுக்கப்பட்டோர்களையும் பழங்குடியினரையும் இளையோர்களையும் ஆட்சிக்கு எதிராக கேள்வி எழுப்பாமல் பணிந்து நடக்கச் சொன்னது. ஆனால் மக்களாட்சியானது ஒவ்வொரு குடிமகனுக்கும் பேசுவதற்கும் கேள்வி எழுப்புவதற்குமான உரிமையை வழங்குகிறது. கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் மிகச் சிறந்த பண்பு என்று, ஒரு பெற்றோராக நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க கடமைப் பட்டிருக்கின்றோம். விவாதம் என்ற பெயரில், பல தொலைக்காட்சி விவாதங்களில், ஒருவருக்கொருவர் காட்டுக் கூச்சல் போடுகிறார்களே, அது "உண்மையான, நேர்மையான விவாதத்தின் பண்பு ஆகாது" என்பதையும் நாம் நம் குழந்தைகளுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

உள்ளதை உள்ளவாறு, நேர்மையோடும் கண்ணியத்தோடும் நம் கருத்துக்களை பிறரிடம் எடுத்துரைக்கும் பாங்கினை நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். வேறுபட்ட கருத்துக்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை குழந்தைகள் நம்மைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் மிகச் சிறப்பாக கற்றுக் கொள்ள முடியும் என்பதால் நாமே அதற்கு நற்சான்றாக இருக்க வேண்டும்.

7. ரிச்சர்டு அட்டன்பரோவின் (Richard Attenborough) "காந்தி" திரைப்படத்தை குடும்பத்தோடு அமர்ந்து காணுங்கள்:

இந்திய வரலாற்றில் காந்தியின் பங்களிப்பை முற்றிலும் புறக்கணிக்கும், காந்தியை இந்திய வரலாற்றிலிருந்து முற்றிலும் வெளியேற்றும் செயல்திட்டத்தில், சங்பரிவார அமைப்புகள் தற்பொழுது உச்சநிலையை எட்டியிருக்கின்றன. ஆனால், அந்த வயது முதிர்ந்தப் ’பழையன்’ இந்திய வரலாற்றிலிருந்து வெளியேற மறுக்கிறார். தேசிய குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் (NPR/NRC/CAA) போன்ற திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு வந்த நிலையிலும் நடைமுறைப்படுத்தியே தீர்வோம் என்று விடாப்பிடியாக கடுமை காட்டுகிறது ஆளும் வலதுசாரி ஒன்றிய அரசு. ஆனால் இவற்றிற்கெதிராக நாடு முழுவதும் மிகப் பரவலாக கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் மக்களாட்சி முறையில், வன்முறையற்ற வழியில் நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகின்றன. இந்தப் போராட்டங்கள், வன்முறைக்கு எதிரான காந்தியின் கருத்தியல்கள் அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றும் என்றும் வலிமையோடு இருக்கின்றன என்பதற்கான நேரடி சாட்சியங்களாக உள்ளன.

காந்தி தனது வாழ்க்கையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு சொல்ல நினைத்த கருத்துக்களை (“My life is my message” – “எனது வாழ்க்கையே எனது அறிவுரை”) "காந்தி" திரைப்படத்தை காண்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். வன்முறைக்கு எதிராக நாம் ஒரு வலிமையான, உயர்ந்த பண்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம் என்பதனை நம் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற காந்தியின் திரைப்படத்தைக் காண்பிக்க வேண்டும். நம் அண்டை வீட்டுக் குடும்பத்தாரோடும் குழந்தைகளோடும் அமர்ந்து காண்பதற்கு ஏற்ற மிகச் சிறந்த திரைப்படம் இது. நம் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் கூட இத்திரைப்படத்தை காண்பிப்பது குறித்துப் பேசலாம்.

இந்தியாவின் மதச் சார்பின்மையை, மக்களாட்சிக் குடியரசை உயிர்ப்புடன் நிலைநிறுத்த இந்தியப் பெற்றோர்களும் ஆசிரியர்களுமாகிய நாம் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகக் கண்டறிந்து நாம் செயல்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் என்பது நாம் நினைப்பது போன்று அவ்வளவு சிறிய விசயம் அன்று. உண்மையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் நடத்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

எனவே, நாம் நம் குழந்தைகளிடம் எதிர்நோக்கியுள்ள நடத்தை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பல காரியங்களை செய்தாக வேண்டும். இவ்விடத்தில் காந்தி சொன்ன ஒரு பொருத்தமான கூற்று என் நினைவுக்கு வருகிறது. "உங்கள் செயல்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிய முடியாது; ஆனால் எதுவுமே செய்யாது இருக்கும்பொழுது எந்த விளைவுகளும் ஏற்படாது". நாட்டின் நலனிற்காக நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. செய்வோம்!!

மூலம்: https://thewire.in/education/seven-things-indian-parents-can-do-to-keep-secular-democracy-alive

கட்டுரையாளர்: ரோகித்குமார் - நேர்மறை உளவியல் (positive psychology) மற்றும் உளவியல் முறைகளை முன்வைத்து இயங்கும் கல்வியாளர். உணர்வு மேலாண்மை (emotional intelligence) குறித்தும் வயது வந்தோர் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே பேசி வருபவர், பணியாற்றுபவர்.

தமிழில்: ப.பிரபாகரன்

Pin It