இதைப் படித்து கொண்டிருக்கும் வேலையில் நாடெங்கெங்கிலும் CAA-விற்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக அரசு அடக்குமுறையை அதிகப்படுத்தியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

modi 374காரணம் அந்த அளவுக்கு நாட்டில் CAA, NPR, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு, வகுப்பு வாதத்தைத் தூண்டி மேலும் மக்களை இந்துத்துவா குடைக்குள் கொண்டுவர கார்ப்பரேட் - காவி பாசிச பாஜக அரசு அனைத்து வேலைகளையும் இன்னும் அதிதீவிரமாக செய்யும். அதற்கான எச்சரிக்கையாகவே டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் "இனிமேல்தான் இந்த அரசு படுவேகமாக செயல்படும், இதற்கு முந்தியது வெறும் டிரைலர், இனிதான் மெயின் பிக்சர்" என்ற பிரதமரின் பேட்டியைக் காண வேண்டும்.

கார்ப்பரேட் - காவி பாசிச பாஜக அரசு மக்கள் மீது அரசின் அடியாட் படைகளை ஏவி வன்முறையைச் செய்கிறது. ஆனால் கார்ப்பரேட் - காவிப் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லும் நாம் இங்கு ஒரு விதமான அடையாள அரசியலையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆம்; CAA, NPR, NRC என்பவை முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் போலவும், இச்சட்டங்கள் முஸ்லிம்களைக் குறி வைப்பதாகவும், அதனை எதிர்த்து சகோதரத்துவத்துடன் திகழும் பிற மத மக்கள் அவர்களைக் காக்க தோளோடு தோள் நிற்போம் என்கிற ரீதியிலே பெரும்பாலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் இச்சட்டங்களோ ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது. குறிப்பாக இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான, உடைமையற்ற, உழைப்பை மட்டுமே உடைமையாகக் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானது.

NRC-யை அமல்படுத்தி குடியுரிமையை நிருபிக்க ஆவணங்கள் கேட்டால், இங்கிருக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதன், பார்சி என எல்லா மதத்தவனும் தான் குடியுரிமை இழப்பார்கள்.

ஆனால் இது வெறும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்றளவில் மட்டுமே இங்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

இது ஒரு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு உதவும் செயல் போன்றதுதான். திமுக போன்ற கட்சிகளோ சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக இச்சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்றும், சிறுபான்மையினருக்காக எங்கள் கட்சி உயிரையும் கொடுக்கும் என்று பேசுகிறன. ஆனால் இச்சட்டம் ஒட்டுமொத்த மக்களுக்கு எதிரானது என்பதைப் பற்றி பேசாமல் மறைக்கின்றனர்.

இப்படியே போராட்டங்கள் முஸ்லிம் அமைப்புகள் நடத்துவதும், அதன் மேடைகளில் ஜனநாயக சக்திகள் பேசுவதும் என்ற வகையில் நடப்பதாலும்; ஜமாத் ஜமாத்தாக போராட்டங்கள் நடத்துவதாலும் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டும். அதற்கு முதலில் ஓர் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்.

அதில் ஒவ்வொரு ஊரிலும் CAA, NPR, NRC-யை எதிர்க்கும் அனைத்து தனித் தனி அமைப்புகளும், இயக்கங்களும், கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், ஜமாத்களும் ஒரு குழுவாக இணைந்து, அந்தக் குழுவின் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த ஊரில் CAA-வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு ஊரிலும் CAA, NPR, NRC எதிர்ப்பு கூட்டியக்கங்களை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுக்கும் போது ஒட்டுமொத்த அரசும் ஸ்தம்பிக்கும்; அப்போதே அரசுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்படும்.

முஸ்லிம்களுக்கு எதிரானது, பாகிஸ்தானுக்கு எதிரானது என்கிற வாதம் எளிதாக இந்துத்துவா குடையின் கீழ் கார்ப்பரேட் - காவி பாசிச பாஜகவிற்கு சேவகம் செய்யவே உதவும்.

அதனை முறியடிக்க, ஓவ்வொரு ஊரிலும் கூட்டியியக்கங்கள் உருவாக்கி, அதன் மூலம் மக்களை அணிதிரட்டி ஒற்றுமையாக தொடர்ச்சியாக அஞ்சாமல் போராடுவதே நம் நாட்டைக் காக்க ஒரே வழி.

- சேரா

Pin It