Detention centre என்ற வார்த்தை தற்போது இந்தியா முழுக்க பயன்படுத்தப் படுகிறது. ஆனால், உலக நாடுகள் முழுக்க இதை இரண்டு வருடங்களாக பேசி வருகிறார்கள். அதற்குக் காரணம் சீனா நடத்தி வரும் detention centre என்ற தடுப்புக் காவல் சிறை.
இப்போதும் கூட நிறைய விவாதங்களில் பங்கு பெறுவோர்கள், ஆவணங்களை ஒப்படைக்கத் தவறினால் detention centre என்ற அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவார்கள் என்று பேசுகிறார்கள். உண்மையில் அகதிகள் முகாம் வேறு; இவர்கள் சொல்லும் detention centre எனும் தடுப்பு சிறைகள் வேறு.
Detention centre-ன் கோரத்தை இந்தக் கட்டுரையின் இறுதியில் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
Detention Centre-களை இந்தியா எதற்காக உருவாக்குகிறது?
இந்த தடுப்புக் காவல் சிறையை சீனா தான் தன் உய்கூர் மாகாணத்தில் பரவலாக்கி நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற்றது. சீனா உருவாக்கிய தடுப்பு முகாமும் முஸ்லிம்களுக்காகவே உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான உய்கூர் முஸ்லிம்கள் இந்த தடுப்பு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சீனாவின் முஸ்லிம்களுக்கெதிரான இந்த முயற்சியை இந்தியாவில் பாஜக அரசு செயல்படுத்த முனைகிறது. அதற்காக, சீனாவின் detention centre முறையை இந்தியாவினுள் கொண்டு வர முனைகிறது. அதனால் சீனாவில் எப்படி இம்முகாம் நடத்தப்படுகிறது எனத் தெரிந்து கொள்வது அவசியம்.
சீனாவின் தடுப்பு சிறை ஏன் மிக மோசமானது?
இந்த தடுப்பு சிறைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தண்டனை. அந்த தண்டனைக்கான குற்றம் என்ன தெரியுமா?
தினசரி தொழுகும் இஸ்லாமியர்களுக்கு உச்சபட்ச தண்டனைப் பிரிவும், இஸ்லாமிய அடையாளங்களுடன் இருப்பவர்களுக்கு அதற்குக் கீழான தடுப்புக் காவல் சிறையும், சிறிய சிறிய தவறுகளாக இன்ஷா அல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுகிறவர்களுக்கு அதற்கு கீழான தடுப்பு சிறையும் உள்ளது.
ஆண்களுக்குத் தனி சிறை, பெண்களுக்குத் தனி சிறை, குழந்தைகளுக்குத் தனி சிறை. ஆனால் அதற்குப் பெயர் மறுவாழ்வு மையம். இவை எல்லாம் detention centre கட்டடத்திற்குள்ளேயே இருக்கும்.
சீன அரசு வெறும் மத அடையாளங்களுடன் மட்டும் நிற்கவில்லை. உய்கூர் மொழிக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்கிறது. Detention centreக்குள்ளேயே அங்கு இருக்கும் சிறுவர்களுக்கு பள்ளிகள் இருக்கிறது. அங்கே உய்கூர் மொழிக்குப் பதிலாக அனைத்தும் சீன மொழியில் மட்டும் தான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
காலையில் எழுந்ததும் கம்யூனிஸ்ட் தலைவருக்கும், கட்சிக்கும் வாழ்க சொல்லி விட்டுத் தான் தன் நாளைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பாடு போடும் போதும் கம்யூனிஸ்ட் கட்சியைப் புகழ்ந்து பாட வேண்டும்.
சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதில் "தங்கள் மதத்தின் படி வாழ்ந்ததால் வாழ்கையை இழந்து விட்டோம். கம்யூனிஸ்ட் கட்சி தான் எங்கள் வாழ்க்கையை சீர்படுத்தியது" என்று கூறினால் தடுப்பு சிறைகளிலேயே தண்டனை குறைவான சிறைக்கு மாற்றப்படுவார்கள்.
பெண்கள் மொட்டை அடிக்கப்படுவார்கள், பெண்கள் கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ஆண் பாதுகாவலர்களுக்கு முன்னால் செல்ல வேண்டியிருக்கும். கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கப்படுவார்கள், கட்டாயப்படுத்தி பன்றிக்கறி சாப்பிட வைக்கப்படும். சமீபத்தில் கூட இந்த முகாமில் இருந்து தப்பித்து ஓடி வந்த பெண், கொடுமை தாங்க முடியாமல் அவர்களிடமே என்னைக் கொன்று விடுங்கள் என்று கெஞ்சியதாக ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சீனாவில் நடக்கும் கொடுமைகளை தெரிந்து கொள்ள விரும்பினால் வைகறை வெளிச்சம் மே மாத இதழில் விரிவாகப் பார்க்கலாம்.
சரி இந்தியாவில் அமையும் detenten centre எனும் தடுப்பு சிறை எப்படி அமையும்?
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்கள், அதன் வழி நடந்தவர்களின் ஆட்சி தான் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிப்பதற்கு முன்னராக அதை உருவாக்கியவர்கள் ஹிட்லரின், முசோலியின் கொடுமையான சித்ரவதை முகாம்களை நேரடியாகப் பார்வையிட்டு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இப்படியொரு திட்டமிடல் வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கினார்கள்.
அதனால் இந்துத்துவ தலைவர்கள் சீனாவில் தற்போது நடந்து வரும் கொடுஞ்சதிகார முறையை இந்தியாவிற்கு கொண்டு வர நினைப்பதில் எந்த ஆச்சர்யமும் கொள்ளத் தேவையில்லை.
இந்தியாவிற்கு கொண்டு வருமானால் இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப அவர்கள் நடத்தப்படுவார்கள். சீனாவில் கம்யூனிசம் என்றால் இங்கே இந்துத்துவம். சீனாவில் சீன மொழி என்றால் இங்கே இந்தியும், சமஸ்கிருதமும். சீனாவில் தற்போதைய கம்யூனிச தலைவரின் புகழ் பாட வேண்டும் என்றால், இங்கே மோடி, சவார்க்கர், கோட்சே என வரிசை அமையலாம்.
யூகத்தினால் மட்டும் வரும் முடிவா இது?
கண்டிப்பாக இல்லை. சமீபத்தில் இந்தியா டுடே செய்தி நிறுவனம் அஸ்ஸாமில் கட்டப்படும் தடுப்பு சிறை முகாமுக்குச் சென்று நேரடி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் சீனாவின் தடுப்பு சிறைகளைப் போலவே, ஆண்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என தனித் தனி சிறை, சிறுவர்களுக்குப் பள்ளிக்கூடம் என எல்லாம் தடுப்பு சிறைக்குள்ளே உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதோடு பாஜகவின் கடந்த கால வரலாறுகள், இத்தகைய கொடுமைகளைக் கொண்டு வருவதற்கு தயங்காது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அகதிகள் முகாமிற்கும், தடுப்பு சிறைகளுக்கும் உள்ள வித்தியாசம்
தடுப்பு சிறைகள் என்றால் எவ்வளவு கொடுமைகள் நிகழ்த்தப்படும் என்பதை நாம் பார்த்தோம். ஆனால் அகதிகள் முகாமில் இத்தகைய கொடுமைகள் இருக்காது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் ஈழ அகதிகள் வாழும் மண்டபத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றோம்.
அங்கே தனித்தனி வீடுகள் இருக்கிறது. அங்கே குடும்பமாக வாழ்ந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வெளியே வேலைகளுக்குச் சென்று வரலாம்.
வாக்குரிமை அதிகாரம் கிடையாது. அரசு வேலை வாங்க முடியாது. சொந்தமாக நிலம் வாங்க முடியாது. ஆனால் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.
இது detention centre எனப்படும் தடுப்பு சிறைகளில் கிடையாது. இங்கே மனிதர்கள் மூன்றாம் தர குடிமக்களுக்கும் கீழாக நடத்தப்படுவார்கள். குடும்பமாக இருக்க முடியாது. வெளி உலகைப் பார்க்க முடியாது. சிறைக்குள் நடப்பதே வாழ்க்கை. அங்கே எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் வெளியில் தெரியாது.
அதனால் இனி ஆவணங்களை இழந்தோர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்று சொல்வதைத் தவிர்த்து விட்டு, இத்தகைய கொடுமையான சிறை வாழ்க்கைக்குள் தள்ளப் போகிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல வேண்டும்.
- அபூ சித்திக்