முதலில் காவிக் கொடிகள் இந்துக்களின் வீடுகளுக்கு அடையாளமாக கட்டப்படுகின்றது. கலவரக்காரர்கள் ஒன்றுகூட்டப் படுகிறார்கள். தங்கு தடையின்றி அவர்களுக்கான ஆயுதங்களும், பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்படுகின்றது. காவல் துறையின் ஒத்துழைப்போடு மஸ்ஜித்களின் மீதும், அடையாளமிடப்பட்ட நபர்களைத் தவிர்த்த ஏனையோர்களின் வீடுகளும், கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்படுகின்றன.
ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புமாறு இஸ்லாமியர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அதை மறுத்தவர் அடித்தே கொலை செய்யப்படுகிறார். மறுபுறம் துப்பாக்கி ஏந்திய கயவன் காவல் துறையினரை ஓரம்போ எனச் சொல்லிவிட்டு பொதுமக்களை நோக்கி சுடுகிறான். இவையெல்லாம் குடி உரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் இரண்டு மாதங்களாகப் போராடிய மக்களைத் தாக்க, முன்னாள் பாஜக எம்எல்ஏ-வான கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பதிவில் "ஜபராபாத் மற்றும் சாம்பாக் சாலையை சரி செய்ய போலீசாருக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதன் பின்னரும் அவர்கள் செய்யாவிட்டால் எங்களை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்க வேண்டாம். நாங்கள் உங்களின் பேச்சைக் கேட்க மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தற்குப் பின் அவரின் அழைப்பின் பேரில் திரண்ட CAAக்கு ஆதரவான பாஜக சங் பரிவாரத்தினரால் நடத்தப்பட்ட வன்முறைகள்.
இத்தாக்குதலுக்கு முன்பு, இவை எல்லாம் வலதுசாரிய சித்தாந்தத்தில் நம்பிக்கை உடைய அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வலதுசாரி சித்தாந்தங்களோடு வளர்ந்த பிரதமர் மோடியும் சந்திக்கும் பொழுது நிகழ்ந்தது. ஜனநாயகத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையுடைய இந்தியாவின் தலைநகரத்திலேயே இது நடந்திருக்கிறது. உலகம் முழுவதற்கும் அகிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில்தான் இந்த வன்முறை.
இப்படிப்பட்ட தாக்குதல் நடப்பது இது முதன் முறை அல்ல. ஏற்கனவே டெல்லி ஜாமியாவில் போராடிய மானவர்களை அவர்களின் விடுதிகளிலும், கல்லூரியின் வளாகத்திலும் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டதை மறந்திடல் கூடாது. பொது மக்களை நோக்கி ஆயுதப் பிரயோகத்தினை சங் பரிவாரங்கள் திட்டமிட்டே நிகழ்த்திய கொடூரங்கள் நீட்சி அடைந்து கொண்டே இருக்கின்றன.
அசோக் டோக்ரா பூண்டி என்ற ஆர்எஸ்எஸ் ஊழியன் போலீஸ் வேடமிட்டு வன்முறையில் ஈடுபட்டதையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா டெல்லியின் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வென்றவுடன் போராட்டக்காரர்களை மூட்டை கட்டி அனுப்பிட வேண்டும், எஞ்சி இருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்ய வேண்டும் என்று பேசிய பொழுது அமைதியாக மோடியும், அமித்ஷாவும் இருந்ததினால்தான் நேற்று முன்தினம் (24, பிப்ரவரி 2020) இத்தாக்குதலை நடத்த பாஜகவினருக்கு தைரியம் பிறந்திருக்கின்றது.
இத்தாக்குதல் குறித்து தற்போது வரை உள்துறை அமைச்சரோ, பிரதமர் மோடியோ எவ்விதமான கண்டனங்களையும், அறிக்கைகளையும் தெரிவிக்காமல் இருப்பதும், மீடியாக்களும் தங்களது பங்கிற்கு செய்திகளை வெளியிடாமல் அமைதியாகக் கடப்பதும், ரோம் தேசத்தில் பற்றி எரியும் நெருப்பைக் கண்டு நீரோ மன்னன் மட்டுமல்ல அவனது சகாக்களும் பிடில் வாசித்து, தப்புத்தாளங்கள் போட்டால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது.
- நவாஸ்