“இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத்.'' அதுவும் மோடியின் தலைமையில்.

மோடியை அப்படியே தூக்கி மன்மோகன் சிங் இருக்கும் ஆசனத்தில் வைத்துவிட்டால் (பிரதமர் பதவியில்) இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் குஜராத்தில் நடக்கும் யதார்த்தங்கள் வேறு விதமாக இருக்கின்றன. இதனை அறிந்த ஆய்வாளர்கள் சிலர் குஜராத்தின் உண்மையான பொருளாதார நிலையை ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கையைத் தந்திருக்கிறார்கள். அதனை இங்கே தருகின்றோம்.

National Council of Applied Economic Research நிகழ்முறை பொருளாதார ஆய்வுக்கான தேசிய குழுமம் (NCAER) ஓர் ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் இப்படிக் குறிப்பிடப்படுகின்றது: குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மனிதம் மடிந்து போய் விட்டது. (NCAER அறிக்கை : ஃபிரண்ட் லைன்: மே 20, 2011)

அதாவது நாட்டிலுள்ள தொழில் முதலைகள் பண முதலைகள் இவர்களை அழைத்து வந்து, ஒரு பெரும் விளம்பரத்திற்கு ஏற்பாடு செய்ததைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

இதே அறிக்கை இன்னொரு உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அது, “இந்தியாவிலேயே மிகவும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் திட்டம் “National Rural Employment Guarantee Scheme'' (தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்). இப்போது இதில் மகாத்மா காந்தியின் பெயரையும் இணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் என அழைக்கின்றார்கள். இந்தத் திட்டம் வக்கற்றோர் வகையற்றோர் தினமும் ரூபாய் 150ஐ வருமானமாகப் பெறும் திட்டம்.

இந்தத் திட்டம் வறுமையில் வாடுபவர்களுக்காகவே தொடங்கப்பட்ட திட்டம், குஜராத்தில் வறுமையில் வாடுபவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் கூட இந்தத் திட்டத்தால் பலனடைந்தவர்கள் ஐந்து விழுக்காடு களுக்கும் குறைவானவர்களே!

பட்டினியால் வதைபடுபவர் கள் பிகார் , சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகம் என்பதே எல்லோருடைய கணிப்பும், ஆனால் இந்த மாநிலங்களைப் போல, குஜராத்தும் பட்டினியால் பீடிக்கப்பட்ட ஒரு மாநிலந்தான். அல்லாமல் அங்கே வளமும் நல் வாழ்வும் கொட்டிக் கிடக்கவில்லை. ஆனால் அப்படியொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்திய மத்திய வங்கி(Reserve Bank of India)வின் அறிக்கை

பிரிதொரு மகாத்மியம் குஜராத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அது வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் குஜராத்தில் தான் அதிகமாக முதலீடு செய்கிறார்கள் என்பதே. ஆனால் அதிகமாக வெளிநாட்டு மூலதனத்தை இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கும் மாநிலம் மகாராஷ்டிராதான். குஜராத் தமிழகத்தின் அளவுக்கே வெளிநாட்டு மூலதனங்களைப் பெற்றிருக்கின்றது. அது குறித்து 2010 மார்ச்சு மாதம் நமது மத்திய வங்கியாகிய ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை இப்படி புள்ளி விவரங்களைத் தருகின்றது.

மராட்டிய மாநிலம் வெளிநாட்டு மூலதனமாகப் பெற்றது 2000-2010 - 17 லட்சம் கோடி

டெல்லி மாநிலம் - 10 லட்சம் கோடி

தமிழ்நாடு - 2.4 லட்சம் கோடி

குஜராத் - 2.8 லட்சம் கோடி

ஆந்திரம் - 2.0 லட்சம் கோடி

(S o u r c e : Reserve Bank of India : 10 Years Report)) 

மராட்டிய மாநிலம் , டெல்லி இவற்றோடு ஒப்பிட் டுப் பார்க்கும் போது குஜராத் பெற்றது எதுவுமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனால் குஜராத் மிகப் பெரியதொரு தொழிற்பேட்டை போல் காட்டப்படுகின்றது. (ஆனால் உள்நாட்டு முதலீடுகளை அதிகமாகக் கவர்ந்திட குஜராத் பயங்கர நாடகங்களை அரங்கேற்றிக் கொண் டிருக்கின்றது.) இதில் மோடியின் மோசடியைக் உணர்ந்தால் எந்த இந்திய விவசாயியும் மோடியை மன்னிக்க மாட்டான். 

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்ய வருபவர்களும் சரி, இந்தியாவிலுள்ள பெரிய நிறுவனங்களும் சரி, முதலில் கேட்பது பெரிய அளவில் நிலம். எந்த மாநிலம் பெரிய அளவில் நிலங்களைக் கொடுக்கின்றதோ அந்த மாநிலத்திலேயே அதிகமாக முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். முதலீடு செய்பவர்களுக்கு குஜராத்தில் தான் இந்த இடங்கள் தாராளமாகவும் ஏராளமாகவும் தரப்படுகின்றது. இதற்காக மோடி பல கிராமங்களை பெரிய முதலீட்டு முதலைகளுக்குத் தாரை வார்த்துத் தந்திருக்கின்றார். அதில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

விவசாயம் செய்து வயிறு பிழைத்துக் கொண்டிருந்த விவசாயிகளின் வயிற்றில் மோடி அடித்தபோது, அவர்கள் தங்கள் பூர்வீகக் குடி இருப்புகளை விட்டுத் துரத்தப்பட்டபோது, ஏற்பட்ட கொந்தளிப்புகள் முற்றாக மறைக்கப்பட்டு விட்டன. ஆனால் ‘மகுவா' வழக்கு என்ற வழக்கு மட்டும் வரலாற்றில் அப்படியே நின்று விட்டது.

‘மகுவா' என்பது பல கிராமங்களைக் கொண்ட ஒரு பகுதியின் பெயர்.

குஜராத்தின் மகுவா வழக்கு

1999-ல் குஜராத்தில் முதலமைச்சராய் இருந்தவர் கேசுபாய் பட்டேல். இவர் 40 கிலோ மீட்டர் அளவில், ‘மகுவா' கிராமத்தில் நீரைத் தேக்கி வைக்கும் நீர்த் தேக்கங்களையும் அணைகளையும் கட்டினார். இதற்கு 1999ல் ரூ.60 கோடியைச் செலவிட்டார். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பஞ்சமின்றி விவசாயத்திற்குள் வந்தன. இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கையைத் தொடங்கின. 'Gross National Product' என்ற தேசிய உற்பத்தியும் வருமானமும் பல்கிப் பெருகின.

விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக நாள்கள் நிலைக்க வில்லை. காரணம், மோடி முதலமைச்சராகி விட்டார். மோடி முதலமைச்சரானவுடன் இந்த விவசாய நிலங்களை ‘சோப்பு கம்பெனி'களுக்கும் சிமெண்ட் கம்பெனிகளுக்கும் தாரை வார்த்துத் தந்தார். சோப்பு கம்பெனிகள் இராசயனப் பொருட்கள் கலந்த கழிவு நீரை அந்தப் பகுதியில் விளையும் பூமியில் பாய்ச்சி நாசப்படுத்தின.

சிமெண்ட் கம்பெனிகள் நிலத்தை அகழ்ந்து சுண்ணாம்புக் கற்களைக் கண்டெடுத்து சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கின. நிலமெல்லாம் சிமெண்ட் துகள்கள். விவசாயம் செய்திட இயலவில்லை. ஏன், இந்தக் கம்பெனிகளைச் சுற்றி வாழ்ந்திடக் கூட இயலவில்லை. மக்கள் எதிர்த்தார்கள். மோடியின் சொந்தக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியினரே அதை எதிர்த்தார்கள். மோடி மக்களையும் தன் கட்சிக்காரர்களையும் ஒன்றுபோல் தன் எடுபிடியான காவல் துறையைக் கொண்டு விரட்டி அடித்தார். அடக்கிப் போட்டார்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பவர்களுக்கும் மோடியிடம் மண்டி இட்டார்கள். நீங்கள் அனுமதித்திருக்கும் கம்பெனிகளில் பங்கமும் பாதகமும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே இந்தக் கம்பெனிகளை அகற்றுங்கள்; பாமரர்களை விவசாயிகளை வாழ விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டபோது, அவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். யாரை விட்டு மோடி அந்த மக்களை விரட்டியடித்தார் என்பதை பிரண்ட் லைன் ஆங்கில ஏடு இப்படிக் குறிப்பிடுகின்றது.

(Attacked by goons) குண்டர்களைக் கொண்டு அவர்களை விரட்டியடித்தார்கள்.

2140 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இரசாயனக் கம்பெனி குஜராத்தில் வருகின்றது. இந்தக் கம்பெனி செய்யும் மொத்த முதலீடு 1400 கோடி ரூபாய் இது மொத்தமாக அபகரித்துக் கொண்ட நிலம் 32,000 ஏக்கர்கள். உண்மையைச் சொன்னால், பல கிராமங்கள் இந்தக் கம்பெனிக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளன. இந்தக் கம்பெனி வருவதால் (5000) ஐந்தாயிரம் குடும்பங்களைச் சார்ந்த 30,000 (முப்பதாயிரம்) குடிமக்கள் தங்கள் பூர்வீக இடங்களை இழந்து தவிக்கின்றார்கள். நாடோடிகளாக வாழ்ந்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

‘மகுவா' என்ற பகுதியின் வாழ்வே விவசாயத்தை நம்பி நிற்பதுதான். அது இப்போது மோடியினால் பாழ்பட்டு விட்டது.

பெப்ருவரி 2010-இல் அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப் பினர் டாக்டர் கனுபாய் கல்சாரியா ஒரு பெரும் மக்கள் கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த மக்களை அடித்து நொறுக்கினார் மோடி. அவர்கள் இப்போது உயர்நீதிமன்றத்திடம் முறையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உயர்நீதி மன்றம் அனைத்திற்கும் (Stay) இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால் நிலங்களைப் பெற்ற கம்பெனிகள் மோடியின் துணையோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி எண்ணற்ற கிராமங்களை மோடி பெரும் மூலதனக்காரர்களுக்கு தாரை வார்த்துத் தந்திருக்கின்றார்கள் என்றாலும் ‘மகுவா' கிராமத்தின் வழக்கு மட்டுந்தான் நிலைத்து வரலாற்றின் பதிவைப் பெற்றுள்ளது.

சௌராஷ்டிராவில் மோடியின் உல்லாசபுரி

மோடி பல லட்சம் கோடிகளைத் தாரை வார்த்துத் தந்து ஒரு விளம்பரத்தைச் செய்து கொண்டிருக்கின்றார். அஃது (Vibrant Gujarath) ‘துடித்தெழும் குஜராத்' இந்த விற்பனையில் அவருக்குத் துணை நிற்கும் கம்பெனி ‘Orpat' நிறுவனம் என்பது. இந்த நிறுவனத்திற்கு 4000 (நான்காயிரம்) ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துத் தந்திருக்கின்றார் மோடி. இந்த 4000 ஏக்கரைப் பெற்ற அந்த நிறுவனம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. இந்த 4000 ஏக்கரில் சுற்றலாத்தளம் ஒன்றையும், மோடிக்கு ஒரு உல்லாச புரியையும் அமைத்துத் தரப் போகின்றதாம். இதனால், இந்த உல்லாசபுரியை அமைப்பதனால் பல ஆயிரம் குஜராத் பாமரர்கள் - தங்கள் இல்லங்களை இழந்து ஊர்வலங்கள், நீதிமன்றங்கள் என அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதே சௌராஷ்டிராவில் மக்கள் குடிப்பதற்கான சுத்தமான குடிநீரை கரிடா பாண்ட் என்ற குளத்திலிருந்துதான் பெற்றுக் கொண்டிருந் தார்கள். புழங்குவதற்கும் இதிலுள்ள நீர்தான். பல கால்வாய்கள் வழியாக இந்தத் தண்ணீர் ஏராளமான குஜராத் மக்களின் தாகம் தணித்துக் கொண்டிருந்தது. இந்த கரிடா குளத்தை விட்டால் வேறு நீர்ச்சுனைகள் இல்லை.

குஜராத்திலுள்ள சௌராஷ்டிரா பகுதியில் ‘வான்கிணார்' என்றொரு கிராமப்பகுதி. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் முழுக்க, முழுக்க இந்தக் கரிடா குளத்தையே நம்பி இருக்கின்றார்கள். ஆனால் இன்று இந்தக் குளம் ‘ஓர்பெட்' என்ற கம்பெனிக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுடன் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளன. இந்தக் குளத்தைச் சுற்றி ஓர்பெட் கம்பெனி சுவர் எழுப்பி மக்களை அண்ட விடாமல் ஆக்கி விட்டது. இதனால் மனமுடைந்த மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றார்கள்.

ஆனால் எந்தப் பலனுமில்லை. மோடியின் அடியாள்களாகச் செயல்படும் காவல்துறையினரிடம் அடி வாங்கியதைத் தவிர.

வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள். குஜராத் உயர்நீதி மன்றம் கரிடா குளத்துத் தண்ணீர் மக்களுக்குக் கிடைப்பதை தடுக்கக் கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் மோடியின் அபிமானத்தைப் பெற்ற ஓர்பட் கம்பெனி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

மோடியின் நிலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மோடியின் ஆதரவைப் பெற்றால்தான் செயல்படும் இல்லையேல் நீதி மன்ற உத்தரவுகள் கழிவறைக் காகிதங்கள்தாம்.

Centre for Culture and Development (கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான மையம்) நடத்திய ஆய்வு

குஜராத் முதல்வர், இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி, நடத்தும் முன்னேற்றப் பாதையில் குஜராத், துடிப்பான குஜராத் என்ற நாடகங்களுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கும் யதார்த்தங்களை, ஓர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள நிறுவனமே நாம் மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனம். இந்த நிறுவனம் இது போன்ற ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனமல்ல. ஆனால் அதனிடம் வந்து குவிந்த புகார்கள் - மக்களின் உள்ளக் குமுறல்கள் இப்படி ஓர் ஆய்வை நடத்திட இந்த நிறுவனத்தை உந்தித் தள்ளியது.

அந்த நிறுவனம் நடத்திய ஆய்வுக்கு இப்படித் தலைப்பிடுகின்றது. Development Induced Displacement - அதாவது, வளர்ச்சித் திட்டங்களால் பறிபோகும் குடியிருப்புகள்.

இந்த ஆய்வில் குஜராத்திற்குச் சொந்தமான 33,00,000 முப்பத்து மூன்று லட்சம் ஏக்கர் நிலமும் பண முதலைகளின் கைகளுக்குப் போய்விடும். இந்த நிலங்களில் வரும் உள்நாட்டுக் கம்பெனிகளை நம் இந்தியத் திருநாட்டுச் சட்டங்கள் எதுவும் கட்டுப் படுத்த மாட்டா.

இதை வேறு சொற்களால் சொன்னால் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு அந்நிய நாட்டுக் கம்பெனிகளின் முழுமையான ஆதிக்கத்திலிருக்கும். அல்லது தனியார் நிறுவனங்களின் கைகளிலிருக்கும். (Source : Fr.Lancy Lobo's Study on DEVELOPMENT AND DISPLACEMENT) 

எதிர்வாதம்  

சிலர் குஜராத்தில் ஆக்கிரமிக்கப்படும் நிலங்களுக்கு அவற்றின் சொந்தக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்படுமல்லவா? அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கப்படுமல்லவா என்றொரு வாதத்தை வைக்கலாம். இன்றளவும் குஜராத்தில் அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு விலை தரப்படவில்லை. நிலங்களைக் கம்பெனிகளுக்குத் தந்த உடனேயே அவற்றில் வாழ்ந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றனர். ஆனால் பணம் உடனேயே கிடைப்ப தில்லை. அவர்கள் முதலில் தங்கள் இடங்களை விட்டுத் தர விரும்பாததால் போராட்டம், நீதிமன்றம் என்றுதான் அலைகிறார்கள். 

நிலங்களைத் தக்க வைத்துக் கொள்ளத்தான் இந்தப் போராட்டங்களும், நீதி மன்ற அலைச்சலும், விலை பெறுவதற்கல்ல.

அவர்கள் தங்கள் பூர்வீக இடங்களை இழந்து வேறிடங்களுக்குச் செல்ல விரும்ப வில்லை.

அடுத்து, யாராவது உரிய விலையைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை வேறு இடங்களில் தொடங்கலாம் என்றால் அதற்காக அவர்கள் அலைய வேண்டி யிருக்கிறது. அலைச்சல் அவர்களைத் தளர வைத்து விடுகின்றது. பல ஆயிரம் ஏக்கர்களில் கோட்டை கட்டிக் கோலோச்சும் கம்பெனிகளைச் சுற்றிச் சுற்றி வர வேண்டிய திருக்கின்றது.

அப்படித் தரப்படும் விலையும் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. குஜராத்தில் மட்டு மல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் கம்பெனி களை ஆரம்பித்தவர்கள், ஏழை பாழைகளின் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், உரிய விலையை அந்த மக்களுக்குத் தந்ததில்லை. ஆகவே, விலையைத் தருகின்றார்கள் என்பதும் உரிய விலையைத் தருகின்றார்கள் என்பதும் பொய்யான வாதங்கள்தான்.

வேலை வாய்ப்புகள் இந்தப் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளம் (கிடைக்கும் வேலைகளில்) நிரம்பப் படித்தவர் களுக்கே கிடைக்கின்றன. நிச்சயமாக விவசாயத்தை நம்பி ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த விவசாயிகளுக்கு இந்த வேலைகள் கிடைப்பதில்லை. இவர்கள் அங்கே அடிமட்ட வேலைகளைத்தான் செய்ய வேண்டும். குஜராத்தின் பொதுவான கல்வி நிலை மிகவும் கீழானதாகவே இருக்கின்றது. அதனால் அவர்கள் பெரிதாகப் பலனடைவதில்லை.

மோடியை வெல்ல முடியுமா?

இதனைப் படிக்கின்ற வாசகர்கள் மனதில் ஒரு வினா எழும்: மோடியின் குஜராத்தில் இத்தனைக் கபளீகரங்கள் நடப்பது உண்மையானால் மோடியை ஏன் அரசியல் அரங்கில் வீழ்த்த இயலாது? இந்தத் திசையிலும் ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். மோடியை வீழ்த்த காங்கிரஸ் பலம் பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் உள்கட்சிப் பூசலால் சின்னா பின்னமாகச் சிதறிக் கிடக்கிறது.

அடுத்து, குஜராத்தைப் பொருத்த வரை காங்கிரஸ் தன்னை ஒரு மதச் சார்பற்ற கட்சியாகக் காட்ட வில்லை. மாறாக, தன்னை ஒரு நவீன இந்துத்துவக் கட்சியாகக் காட்டிக் கொள்கின்றது. அரசியல் நோக்கர்கள் காங்கிரசின் இந்துத்துவாவை Soft Pedalling Hindutva (‘மெல்ல மிதிக்கும் இந்துத்துவா') என்றே குறிப்பிடுகிறார்கள்.

அடுத்து, மோடி செய்யும் எந்தத் தகிடுதத்தங்களையும் காங்கிரஸ் நிர்வாக ரீதியாக கண்டிக்கவோ தண்டிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2002-ல் நடந்த இனப்படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை. இனப்படுகொலைகளுக்கு நீதி என வந்தபோதெல்லாம் காங்கிரஸ் காலைத்தான் வாரியிருக்கிறது. உலக நீதி மன்றத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றபோதெல்லாம் காங்கிரஸ் அதை வழிமறித்தது. தடுத்து நிறுத்தியது.

‘ஷேராப்தீன் என்கவுண்டர்' என்பது பரவலாக இன்று பேசப்படுகின்றது. இந்த ஷேராப்தீன் ஹைதராபாத்திலிருந்து இராஜஸ்தான் செல்லும் போது வழிமறிக்கப்பட்டு குஜராத் கொண்டு செல்லப் பட்டு கொலை செய்யப்பட்டார். அது போலவே அவருடைய மனைவியும் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள். இதற்கு முழுமையாக உதவி செய்தது ஹைதராபாத் காவல்துறையினர்தான். அப்போது ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது.

இத்தனைக்கும் மேலாக காங்கிரஸ் மோடிக்கு எதிராகக் காட்டும் முதலமைச்சர் வேட்பாளர் கேசுபாய் பட்டேல்தான். இவர் அடிப்படையில் பாரதீய ஜனதா கட்சிக்காரர்தான். 1999-ல் பாரதீய ஜனதா கட்சியின் குஜராத் முதல்வராக இருந்தவர் இந்த கேசுபாய் பட்டேல். இவரைப் போல் இப்போது குஜராத் காங்கிரசில் இருக்கும் பலர் பாரதீய ஜனதா கட்சியில் பதவி கிடைக்காமல் காங்கிரசுக்கு வந்தவர்கள்தாம். இதனால் காங்கிரஸ் குஜராத்தில் தனக்கென தொண்டர்கள் இல்லாத கட்சியாகி விட்டது.

இதனால்தான் மோடி ஏகபோக ஆட்சியாளராக இருக்கின்றார்.