இதுநாள் வரை பாகிஸ்தான் முழுக்க ராணுவத்தின் கையில் தான் இருக்கிறது என்று தான் நம்பி வந்தோம். ஏன், கடந்த கால பாகிஸ்தான் வரலாறு கூட அதையே தான் சொல்கிறது. ஆனால் இம்ரான் கான் பதவியேற்ற பிறகு பல மாற்றங்களை கண்கூடாகக் காண முடிகிறது.

குறிப்பாக, புல்வாமா தாக்குதல் நடந்த காலகட்டத்தில் இருந்து சிறந்த தலைவராகத் திகழ்கிறார் இம்ரான். அண்டை நாடுகளின் மீது புகார் கூறி அரசியல் செய்யாமல், அதே நேரத்தில் தன் நாட்டு மக்களுக்கு இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பொய் சொல்லாமல் நிதானமாக சொல்லத் தவறவில்லை.

modi and imranராணுவ வீரர் கைது செய்யப்பட்ட பிறகு இங்கே இந்திய ஊடகங்கள் தொடக்கத்தில் வெளிவந்த வீடியோவை வைத்து ஹை பிட்ச்சில் கத்திக் கொண்டிருக்க, அடுத்த சில மணித்துளிகளில் இந்திய வீரரையே சகஜ நிலையில் பேச வைத்தார். இதுவே போர் என்று குதித்துக் கொண்டிருந்த பலரின் மனதைப் புரட்டி போட்டது.

இன்று வரை இந்தியா அறிக்கை வெளியிடும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தான் வீர வசனம் பேசியதே ஒழிய, போரை நோக்கியே மோடி அரசின் போக்கு இருந்தது.

பாகிஸ்தான் தன் கைதிகளை நடத்தும் விதம் புதிதல்ல. மேலும் சில உதாரணங்கள் இருக்கிறது,

ஜனவரி 8, 2012ல் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 183 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. இதில் 179 பேர் குஜராத்திகள். விடுதலையான மீனவர்களைப் பேட்டியெடுக்க Sunday Times Of India ஆங்கில நாளிதழ் செல்கிறது, பேட்டியின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் முன் இப்படி எழுதினார்கள், “நாங்கள் பயங்கரமான சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் கூறிய ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது”. விடுதலையான மீனவர்களில் ஒருவரான பாரத் சூதா சோமா, “நாங்கள்(பாகிஸ்தானிய கைதிகளும் இந்திய கைதிகளும்) சிறையிலிருந்து வெளிவரும் நாளில் ஒரு பெரிய குடும்பமாகவே மாறிப் போனோம்" என்றார்.

விடுதலையான இன்னொரு மீனவர் கூறும் போது, "எங்களை எந்தவித கொடுமைகளுக்கோ சித்ரவதைகளுக்கோ யாரும் ஆட்படுத்தவில்லை. எங்களுக்குத் தேவைப்படும் துண்டு, சோப் போன்ற அடிப்படைத் பொருட்களையும் எங்களுக்கு சிறையிலிருந்த பாகிஸ்தானியர்கள் தான் கொடுத்து உதவினார்கள். சிறையிலிருந்த ஜெயிலர்கள் உட்பட மிக நெருக்கமாக பழகினார்கள். நீங்கள் வேகமாக வீடு திரும்புவீர்கள் என அடிக்கடி சொல்வார்கள். பாகிஸ்தான் நீதிபதி நசீர் அஸ்லம் ஜாஹீத் அவர்களும் அவரது அலுவலகத்திலுள்ளவர்களும் தினமும் இந்திய சிறைவாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துச் செல்ல வருவார்கள். எங்களுடன் சிறையில் 18 வயதுக்கு குறைந்த மூன்று இந்திய சிறுவர்கள் இருந்தார்கள். நீதிபதி நசீர் அவர்களின் போனிலேயே மூன்று பேர் பெற்றோருக்கும் போன் செய்து வாரத்திற்கு மூன்று நாட்கள் பேச விடுவார்கள்." ( Sunday Times Of India,Madurai 14/01/12)

பாகிஸ்தானில் இந்தியர்கள் இருந்த சிறைகளைப் பார்வையிட்டு இந்தியா வந்த பாகிஸ்தான்-இந்தியா அமைதி மற்றும் ஜனநாயக மன்றத்தின் பொதுச்செயளாலர் தபான் போஸ் அவர்களிடம், சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் நிலை பற்றி கேட்ட போது, “இந்திய சிறைக்கைதிகள் யாரும் மோசமாக நடத்தப்படுவதில்லை. மற்ற கைதிகளைப் போல் தான் இந்தியர்களும் சகஜமாக நடத்தப்படுகிறார்கள். ஜெயிலர்கள் முதற்கொண்டு சிறையில் இருக்கும் இந்தியர்களிடம் மிக இயல்பாக பழகுகிறார்கள். அடையாளமில்லாமல் இருக்கும் கைதிகளின் அடையாளத்தை கண்டுபிடிக்கக் கூட ஜெயிலர்களே உதவுகின்றனர். "( Times Of India, Madurai 01/07/12)

டிசம்பர் 25ம் தேதி பாகிஸ்தான் அரசு சிறையிலிருந்து 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 5, 2017ல் 218 இந்திய மீனவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான்-இந்திய எல்லைப் பகுதியான வாகா பகுதியில் இறக்கிவிட்டு அவர்களுக்கு 500 ரூபாய் பணமும் பரிசுகளும் வழங்கி அனுப்பியது. இதை விட மிகச் சிறப்பானது விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் பாகிஸ்தான் இராணுவத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையில் இருந்த நெருக்கத்தினை உணர முடிகிறது. (The Hindu 06/01.17)

இதெல்லாம் பாகிஸ்தான் இந்தியக் கைதிகளிடம் நடந்து கொண்ட விதம். இன்னும் இதுபோன்ற செய்திகள் நிறைய இருக்கிறது. இந்த செய்தியைப் படித்த பின்பு பாகிஸ்தான் ஆதரவாளர் என சிலர் கண்டிப்பாகத் தூற்றுவார்கள். இது பாகிஸ்தான் நாட்டிற்கான ஆதரவு அல்ல. ஓர் அரசியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளை நட்பு சக்திகளாக்க இந்திய அரசு மறந்து விடுகிறது. மத்திய அரசும், கட்சிகளும் செய்கிறார்கள் என்பதற்காக இதே நீரோட்டத்தில் இந்திய ஊடகங்களும் கலந்து கொண்டு ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் இடங்களில் எல்லாம் அதே "பாகிஸ்தான்" அரசியலுக்குள் மூழ்கி விடுகிறார்கள்.

போர் என்பது இரு நாட்டின் பலத்தை நிரூபிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. போர் மூண்டிருந்தால், இந்தியா போர் நடைபெற்று வென்றிருந்தால் கூட 100 ராணுவ வீரர்களை இழந்து 200 ராணுவ வீரர்களை கொன்று வென்றிருக்கும். ஆனால் இம்ரான், இந்தியா - பாகிஸ்தான் அமைதி நடவடிக்கையில் 300 உயிர்களையும் காப்பாற்றியிருக்கிறார்.

அரசியல் நடவடிக்கைகள் பின்புறம் இருந்தாலும் இம்ரானுக்கு நன்றி. பாகிஸ்தான் அமைதியின் பக்கம் திரும்பட்டும்.

- அபூ சித்திக்

Pin It