தேச பக்தர்களாகவே கண்விழித்து தேச பக்தர்களாகவே தூங்கச் செல்லும் தேச பக்த வெறியர்களுக்கு இது போதாத காலம். அவர்களின் கனவுகளில் இத்தனை நாட்களாக துப்பாக்கி ஏந்தியும், பீரங்கிகளைக் கொண்டும் எதிரிகளின் உடல்களை சின்னாபின்னப்படுத்தியும், விமானத்தில் பறந்து சென்று எதிரியின் தலை மீது குறிவைத்து குண்டு போட்டும், இந்தியாவை தாடி வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டு, இந்திய மக்கள் அனைவரையும் நிம்மதியாக சாப்பிடவும், தூங்கவும், அயராது பாடுபட்ட ராணுவ வீரர்கள் இப்போதெல்லாம் தங்களுடைய வழக்கமான இராணுவ உடைகளைத் துறந்து காவி உடை தரித்து புஷ்பக விமானத்தில் பறந்து சென்று ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளில், இரவு நேரத்தில் மரங்களின் மீதும், காக்கா குருவிகள் மீதும் குண்டு போட்டு நூதன முறையில் தீவிரவாதிகளை வேட்டையாடுபவர்களாக வலம் வருகின்றார்கள். இது போன்ற கெட்ட கனவுகளை அவர்கள் ஒரு நாளும் கண்டதில்லை. அதுவும் மோடியின் ஆட்சியை இராமராஜ்ஜியமாகவே நினைத்து உள்ளூர தினம் தினம் ஆன்மீகப் பரவசமடைந்த தேச பக்தர்கள் இன்று விரக்தியின் விளிம்பில் நின்று புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

சாதாரண பொய்களுக்கு முட்டுக் கொடுப்பதே பெரும்பாடாக இருக்கும்போது இமாலயப் பொய்களுக்கு எப்படி முட்டுக் கொடுப்பது? கிழவனுக்கு மேக்கப் போட்டு குமரனாக மாற்றுவதைவிட மிகக் கடுமையானது மோடியின் பொய்களுக்கு முட்டுக் கொடுப்பது. ஆனாலும் இந்திய மக்கள் மீது சங்கிகளுக்கு உள்ள அதீத நம்பிக்கை அவர்களை தளர்வடையச் செய்வதில்லை. எதைச் சொன்னாலும் அதை நம்ப இங்கே ஒரு பெரும் கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கின்றது. பிள்ளையார் பால் குடித்த கதையை அன்று யார் எல்லாம் உறுதியாக நம்பினார்களோ, அவர்கள்தான் இன்று மோடி வெறியர்களாகவும் இருக்கின்றார்கள். அந்தக் கூட்டம் மோடி என்ன சொன்னாலும் அதை அப்படியே எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் நம்பும், ‘நேரடியாக குண்டு போட்டு ஒரு நாட்டை அழிப்பதைவிட மரங்களை எல்லாம் அழித்துவிட்டால் ஆக்சிஜன் இல்லாமல் அனைவரும் செத்துவிடுவார்கள். நாம் தான் எதிரிகளைக் கொன்றோம் என்று யாராலும் நிரூபிக்க முடியாது, மோடியின் மூளை ஒன்றும் சாதாரண மூளை இல்லை, அவரின் ஒவ்வொரு திட்டத்தின் பின்னும் மிகப்பெரிய ராஜதந்திரம் இருக்கின்றது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் மோடியாகவே வாழ வேண்டும்' என யாராவது ஒரு சங்கி சொன்னால் அதை அப்படியே ஏற்று உலகம் முழுவதும் பரப்புவதுதான் உண்மையான தேச பக்தனின், மோடி வெறியனின் கடமையாகும்.

Abhinandan at Pak borderஅப்படி இல்லாமல் ‘எங்கடா நீங்க கொன்னதா சொன்ன அந்த 300 பாடியும்?’ என்று கேட்பது மோடியை சந்தேகப்படுவதற்குச் சமமாகும். மோடியை சந்தேகிப்பது என்பது நாம் யாருக்குப் பிறந்தோம் என சந்தேகிப்பது போன்றது. தாய் யாரைக் காட்டி அப்பா என்று சொல்கிறாளோ அவரை அப்பா என்று ஏற்றுக்கொண்டு அவர‌து முதல் எழுத்தை தன்னுடைய பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது போல, மோடி சொன்னதை அப்படியே நம்பி, பேசுவதும் எழுதுவதும் ஒவ்வொரு இந்தியனின் கடமை. இந்தக் கடமை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் இந்திய ஊடகங்கள் ஒன்றுகூட மோடி அரசு அடித்துவிட்ட பொய்களை ஆராய்ந்து பார்க்க விரும்பாமல், அதை முடிந்தால் இன்னும் கூடுதலான உணர்வைத் தூண்டும் பொய்களுடன் அலங்கரித்து வெளியிட்டன.

பாகிஸ்தானில் உள்ள பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி போன்ற இடங்களின் மீது இந்தியாவின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளைக் கொண்டு ஜெய்ஷ் –இ- முகமது முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக மோடி அரசு தெரிவித்தது. பாகிஸ்தானின் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக சொன்னது. மோடி அரசு அவிழ்த்துவிட்ட இந்தப் பொய்யை இந்தியாவில் உள்ள தேச பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே விங் கமாண்டர் அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக் 21 பைசன் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, அவரைக் கைது செய்தது. சிக்கிக் கொண்ட அபிநந்தனை பாகிஸ்தான் நினைத்திருந்தால் பிடித்த இடத்திலேயே சுட்டுக் கொன்றிருக்க முடியும். தங்கள் நாட்டு மக்கள் மீது குண்டு போட்டு படுகொலை செய்ய வந்த ஒருவனை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொன்றிருந்தால் நிச்சயம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

மோடி இந்தப் பிரச்சினையை தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தப் பிரச்சினையை யாரும் எதிர்பாராத வகையில், இதுவரை பாகிஸ்தான் பற்றி உலக நாடுகள் கட்டமைத்து வைத்திருந்த பிம்பத்தை உடைக்கும் விதமாகக் கையாண்டு மோடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். “தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில் பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும். நானோ, மோடியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிய இம்ரான்கான், தங்களிடம் மாட்டிய அபிநந்தனை திரும்ப இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார். சொன்னது போலவே வெள்ளிக்கிழமை இரவு இந்திய அதிகாரிகளிடம் வாகா - அட்டாரி எல்லையில் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன் கையில் காயலாங்கடைக்குக் கூட தகுதியற்ற மிக் 21 பைசன் ரக விமானத்தைக் கொடுத்தனுப்பி அவரை சிக்கவிட்ட இந்திய அரசு, அவரை மருத்துவமனையில் வைத்து அவரது உடலில் ‘சிப்’ பொருத்தப்பட்டிருக்கின்றதா என சோதனையிட்டு அவரைக் 'கெளரவப்படுத்தி' இருக்கின்றது.

பாகிஸ்தான் மீதான தாக்குதலைப் பயன்படுத்தி இந்திய மக்களிடம் ஓட்டுப் பிச்சை வாங்கத் திட்டமிட்ட மோடியின் அசிங்கமான அரசியலை உலக அரங்கில் அம்பலப்படுத்தி, நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவித்து, உலக அரங்கில் தன்னை ஒரு சிறந்த தலைவராக இம்ரான்கான் அடையாளப்படுத்திக் கொண்டதை சகிக்கி முடியாத சங்கிக் கூட்டம் , அபிநந்தனை ஜெனிவா ஒப்பந்தந்தத்தின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் விடுவித்ததாகவும், இல்லை என்றால் மோடி பாகிஸ்தானை அழிக்க நமது ராணுவத்திற்கு உத்திரவிட்டு இருந்ததாகவும் செய்திகளைப் பரப்பினர். ஆனால் ஜெனிவா ஒப்பந்தம் என்பது போர்க் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றியது. நாம் அபிநந்தனை ஓர் போர்க் கைதி என்று சொல்ல முடியாது. காரணம் இந்தியா பாகிஸ்தானுக்கு பூச்சாண்டி காட்டவே இந்தத் தாக்குதலை நடத்தியது. ஒரு சாதாரண தாக்குதலுக்கும், முப்படைகளையும் களத்தில் இறக்கி எதிரியை முற்றிலுமாக துடைத்தெறிய தொடர்ச்சியாக மாதக்கணக்கில் நடத்தப்படும் போருக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே ஜெனிவா ஒப்பந்தம் அபிநந்தன் விஷயத்தில் நிச்சயம் பொருந்தாது.

இத்தனை நாட்களாக பாகிஸ்தான் மீது கட்டமைத்து வைத்திருந்த பிம்பம் உடைபடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சங்கிக் கூட்டம் மனநிலை பிறழ்ந்த நிலைக்குச் சென்றுள்ளது. போதாத குறைக்கு இந்திய விமானப்படையின் உயர் அதிகாரிகள் இலக்கு தாக்கப்பட்டது என்றும், எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை என்றும், அதை அரசுதான் கூறவேண்டும் எனவும் வெளிப்படையாகக் கூறி, தங்களால் மோடியின் பொய்களுக்கு முட்டுக் கொடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்கள். சர்வதேசிய ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, தாக்குதலினால் பாகிஸ்தானில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மோடியின் முகத்திரையை கிழித்திருக்கின்றன. உலக அரங்கில் இந்திய இராணுவத்தின் மதிப்பு சீட்டுக்கட்டாக சரிந்துள்ளது. இந்நிலையில் ஐ.நா.வில் இந்தியாவுக்கு எதிராக ''சுற்றுச்சூழல்-பயங்கரவாதம் (eco terrorism)'' என்ற ஒரு புகாரை அளிக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது என பாகிஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர் மாலிக் அமின் அஸ்லம் ராய்ட்டர்ஸ்க்கு தெரிவித்து உள்ளார். மோடியால் இந்திய இராணுவத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம் நேர்ந்திருக்கின்றது?

தங்களுடைய சுய நலத்திற்காக, ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்திய ராணுவத்தின் நன்மதிப்பையும், நம்பகத் தன்மையையும் சங்கிகள் பலி கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் கொஞ்சம் கூட வெட்க மானமோ, சூடு சுரணையோ இல்லாத மோடி, உத்தரப் பிரதேசத்தில் அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது “இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம்” என்று கூறியிருக்கின்றார். ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதாரத்துடன் மோடியை துரத்திக் கொண்டு இருக்கும் இந்தக் களேபரத்திலும் இந்தியாவின் அவமானகரமான தோல்வியைக்கூட தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார் என்றால் அவர்தான் மோடி. இழவு வீட்டில் கன்னம் போடுவதற்கு ஒரு அசாத்திய மன திடம் வேண்டும். அது சங்கிக் கூட்டத்திடம் குறிப்பாக அதன் தலைவரான மோடியிடம் நிறையவே இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள மோடியின் கால்நக்கி ஊடகங்களைத் தவிர, சர்வதேச ஊடகங்கள் மோடியின் சட்டையைப் பிடித்து உலுக்குகின்றன, இந்திய இராணுவம் கை விரித்துவிட்டது, இந்திய மக்கள் காறித் துப்புகின்றார்கள். சிபிஐ, வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தையும் தன்னுடைய சுயநலத்துக்காக சீரழித்த மோடி இன்று இராணுவத்தையும் சீரழித்திருக்கின்றார். அதனால் என்ன, மோடியின் மூளையில் இந்நேரம் புதிய திட்டம் ஒன்று உதித்திருக்கும் - பாகிஸ்தானில்தானே பிணங்கள் கிடைக்கவில்லை, கூடிய விரைவில் இந்தியாவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று. உயிரோடு இருப்பவர்களால் ஓர் ஓட்டுதான் போட முடியும், ஆனால் பிணங்கள் கோடிக்கணக்கான ஓட்டுகளை பெற்றுத் தரும் வல்லமை வாய்ந்தவை. மோடியின் ஆட்சி முடியும் வரை இனி பிணங்கள் விழுந்து கொண்டே இருக்கும்!

- செ.கார்கி

Pin It