நேற்றில் இருந்து இந்திய ஊடகங்கள் அனைத்தும் தேச பக்தியை கொத்துக் குண்டுகள் போல இந்திய மக்கள் மீது தொடர்ந்து இடைவிடாது வீசிக் கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் –இ- முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதல் எப்படி தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதே போல இந்தத் தாக்குதல் திட்டமிட்டபடி நடக்க மோடி அரசே உதவியிருக்கின்றது என்ற உண்மை வெளியானது. பாதுகாப்பு படைகள் மீது மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிருப்பதாக பிப்ரவரி 12ம் தேதியே நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும், அந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்திருந்தும் மோடி அரசு அதைக் கண்டும் காணாமல் விட்டது.

indians celebrating air strike

(வான்வெளித் தாக்குதலைக் கொண்டாடும் வடஇந்தியர்கள்)

சரிந்து போன தன்னுடைய செல்வாக்கைத் தூக்கி நிறுத்த இதை ஒரு வாய்ப்பாக மோடி அரசு பயன்படுத்திக் கொண்டது. இன்று ஊடகங்களில் மோடி செய்த நன்மையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாத அளவுக்கு இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகின்றது. குஜராத் கலவரத்தைத் தூண்டிவிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து, இந்துக்களை காக்க வந்த ரட்சகனாக தன்னை கட்டமைத்துக் கொண்ட மோடிக்கு எதைச் செய்தால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் கவர முடியும் என்று தெரியாதா?. பார்ப்பன பனியா சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள் இருக்கும்வரை, மோடி போன்ற பதவிக்காக தன் சொந்த நாட்டு மக்களையே வேட்டையாடும், காவு கொடுக்கும் பாசிச சக்திகள் எதற்காக கவலைப்பட வேண்டும்?

மோடி நினைத்தது போலவே புல்வாமா தாக்குதலை வைத்து இந்துத்துவ சக்திகள் அதை இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையாகவும் தொடர்ந்து கட்டமைத்தன. பாகிஸ்தான் மீது போர் தொடுத்து இந்தியாவின் ராணுவ வலிமையை அவர்களுக்குக் காட்ட வேண்டும் எனத் தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்தனர். மோடி இந்தியப் பொருளாதாரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு புல்வாமா தாக்குதல் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டன. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள் புதைக்கப்படுவதற்கு முன் ‘நாட்டைக் காப்பாற்ற மோடிக்கு ஓட்டு போடுங்கள்’ என்ற பிரச்சாரத்தை பிஜேபியினர் தொடங்கினர். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கொதித்த எந்த ஒரு தேசபக்தனும் ஏன் தாக்குதல் நடக்கப் போவதாக முன்கூட்டியே வந்த தகவலை மோடி அரசு கண்டுகொள்ளாமல் விட்டது என்பதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை. அவர்களைப் பொருத்தவரை திட்டமிட்டே சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து பழி தீர்க்க வேண்டும் என்று எண்ணினர்.

பல ஆண்டுகளாக பார்ப்பன பாசிஸ்ட்டுகளாலும், அவர்களின் அடிவருடிக் கும்பலாலும் ஊதிப் பெருக்கப்பட்ட பாகிஸ்தான் எதிர்ப்பு வெறி நீக்கமற பெரும்பாலான இந்தியர்களிடம் தொழிற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதைத் தூண்டி விடுவதன் மூலம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அதற்கு மோடிக்கு வாக்களிக்க வேண்டும், அவரிடம் மட்டுமே பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் திறன் உள்ளது என்ற தோற்றத்தை மிக எளிதாக ஏற்படுத்த முடியும் என நன்கு திட்டமிட்டு, அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பாகிஸ்தானில் உள்ள பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி போன்ற இடங்களின் மீது இந்தியாவின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளைக் கொண்டு ஜெய்ஷ் –இ- முகமது முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசு யாரும் உயிரிழக்கவில்லை என்றும், ஊடுருவல் மூன்று இடங்களில் நடந்ததாகவும் அவை முறியடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றது. மேலும் ஜெய்ஷ் –இ- முகமது இயக்கத்தின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியா வெளியிட்டுள்ள புகைப்படம் மூன்று ஆண்டுகளாக யு—டியூப்பில் உள்ள புகைப்படம் என்றும், இரவு நேரத்தில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் போது எப்படி புகைப்படம் அவ்வளவு தெளிவாக உள்ளது என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றது.

மேலும் சில இந்திய ஊடகங்கள் செப்டம்பர் 18, 2016 இல் உரி தாக்குதல் நடந்த சமயத்தில் பாகிஸ்தான் விமானப் படை போர் விமானங்கள் இஸ்லாமாபாத் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் தரை இறக்கிப் பயிற்சி எடுத்த காணொளிக் காட்சிகளை, இந்தியா விமானப்படைகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்த காணொளிக் காட்சிகள் எனத் தொடர்ச்சியாகக் காட்டின. இதைவிட பெரிய கொடுமை சில முரட்டு சங்கிகள் வீடியோ கேமை எல்லாம் போர்க் காணொளி என்று பகிர்ந்ததுதான்.

indians air strike at pakistan

(இந்திய விமானங்கள் குண்டு வீசிய இடம் என பிபிசி செய்தி நிறுவனம் பகிர்ந்த புகைப்படம்)

இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் உலகமயமாக்கலுக்குப் பின் தங்களுடைய சுய பொருளாதார மேலாண்மையை இழந்து, பன்னாட்டு பெருமூலதனத்தின் ஆட்சிக்கு ஏற்ப ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவாக இருந்தாலும், பாகிஸ்தானாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் நாடுகளின் பெயர்கள் மட்டுமே வேறு வேறாக இருக்கின்றதே ஒழிய, அந்த நாடுகளின் ஆட்சியை உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியம் போன்றவையுமே கட்டுப்படுத்துகின்றன. இன்றைய உலகில் உண்மையான போர் என்பது நிதிமூலதன வல்லாதிக்க கும்பல்களுக்கு இடையேயான போரே ஒழிய அது நாடுகளுக்கு இடையேயான போர் அல்ல. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவதற்கும், மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாறுபாட்டுக்கும் அடிப்படைக் காரணமே இந்தக் கும்பல்கள்தான். இன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்த்து முறியடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது. ஆனால் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய ஆளும்வர்க்கம் இதை தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளாமல் அவர்களை சாதி, மத தேசிய அரசியலுக்குள் இழுத்துவிட்டு மூடி மறைக்க முயல்கின்றன.

உண்மையில் இந்திய அரசும் அதன் இராணுவமும் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகத்தான் பணியாற்றுகின்றது என்பது உண்மையானால் அவர்கள் முதலில் போர் தொடுக்க வேண்டியது இந்தியா மக்களின் 50 சதவீத சொத்துக்களைக் கைப்பற்றி ஏகபோகமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் 9 குடும்பங்களுக்கு எதிராகத்தான். ஆனால் இவர்களின் கைக்கூலியாக, பெரும்பான்மை மக்களின் எதிரிகளாக செயல்படும் ஆளும் வர்க்கம், மேலும் மேலும் இந்திய மக்களை வறுமையின் பிடியில் தள்ளி கொலை செய்வதோடு, அதில் இருந்து திசை திருப்ப சாதி, மத, தேசிய வெறியை ஊட்டி தூண்டி விட்டுக் கொண்டு இருக்கின்றன. இங்கிருக்கும் கார்ப்ரேட் ஊடகங்கள் அனைத்தும் தங்களின் பிழைப்புக்காக கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இதையே 24x7 ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றன.

ஒரு வேளை மோடி நினைத்தது போலவே இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என்றால் அதனால் பெரிய அளவில் பயனடையப் போவது பன்னாட்டு ஆயுத வியாபரிகளும், அவர்களிடம் கமிஷனுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் இந்திய அரசியல்வாதிகளும்தான். சாமானிய இந்திய மக்களுக்கு அதனால் சல்லிப் பைசாவுக்குக் கூட பிரயோஜனம் கிடையாது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்திய மக்களின் பணம் சூறையாடப்படுவதால் அவர்கள் இன்னும் மோசமான நிலையை நோக்கியே தள்ளப்படுவார்கள்.

இந்து மதவெறி பாசிசக் கும்பல் திட்டமிட்டபடி போர் பதற்றத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றது. அருண் ஜெட்லி ‘என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்’ என்கின்றார். ‘பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரிக்க வேட்டையாடியதுபோல தாங்களும் தாக்குதல் நடத்துவோம்’ என்கின்றார்கள். ஏற்கெனவே நாடு முழுவதும் புல்வாமா தாக்குதலை ஒட்டி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. போர் நடைபெறுமேயானால் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான உள்நாட்டுக் கலவரத்தை தூண்டக் கூட இந்து மதவெறிப் பாசிச சக்திகள் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக நாட்டை பேரழிவை நோக்கி மோடி வழி நடத்திக் கொண்டு இருக்கின்றார். மிகப் பெரும் அபாயத்தை நாடு எதிர்கொண்டிருக்கின்றது.

- செ.கார்கி

Pin It