Alagaswaran 450ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் இந்திய இராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவு நிர்வாகத் தலைமையகத்தின் அருகில் இருந்த இராணுவ முகாம் மீது 16.09.2016 அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் பலியானார்கள். 30 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர், இத்தாக்குதலையட்டி மோடி அரசு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர்ச் சூழலை ஏற்படுத்தியது.

இராணுவ முகாம்களை தீவிரவாதிகளிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை. மேலும், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிப்பது குறித்த தேசியக் கொள்கையும் உருவாக்கவில்லை.

பிரதமர் மோடி, ‘தாக்குதலுக்குக் காரணமானவர் களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்” என்று வாய்ச்சவடால் அடித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம்தேவ், ‘நாம் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது’ என்று கொக்கரித்தார். ஆனாலீல் உரி இராணுவ முகாமில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடுகள், எதிர்காலத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தவிர்ப்பதற்கான திட்டவட்டமான திட்டமிடல்  குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லை.

எல்லை தாண்டிய தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குவதற்கு, துல்லியத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ‘துல்லியத் தாக்குதல் என்பது ஒரு திட்டமிட்ட படைத்துறையின் இரகசிய அதிரடித் தாக்குதலாகும். இதன் நோக்கம் சரியான இராணுவ இலக்கிற்கு மட்டும் சேதம் விளைவிப்பது. இராணுவ வீரர்களுக்கோ, பொதுமக்கள் வாழும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கோ பெரிய சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என இந்திய இராணுவ ஆய்வாளர் மோகன் குருசாமி வரையறுத்து  உள்ளார்.

மோடி அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. ‘துல்லியத் தாக்குதல் நடத்தியதால் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க முடியவில்லை, எல்லை தாண்டிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் அறிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிப் பதற்குப் பதிலாக பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக போர்வெறியைக் கிளப்பி விடுவதையும், எல்லையோரப் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டு உள்ளது மோடி அரசு.

உரி இராணுவ முகாம் தாக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் இந்திய சினிமாவில் நடிப்பதற்கு தடை விதித்ததுடன், அவர்களை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மோடி அரசு அறிவித்தது.

மேலும், பாகிஸ்தான் நாட்டு நடிகர் ஃபவாத் கான் நடித்துள்ள ‘ஏ தில் ஹை முஷ்கில்’ என்னும் திரைப்படம் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் திரையிடுவதற்கு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது, ஆனால், இந்த திரைப்படம் இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்போதைய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, ‘கலைகளுக்கு எல்லைகள் கிடையாது என்றாலும் நாடுகளுக்கு எல்லைகள் உண்டு. இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிலர் இந்நாட்டுடன் நாடகம் நடத்திக் கொண்டிருக்க முடியாது’ என்று மறைமுகமாகத் தடையை ஆதரித்தார். அதே வேளை இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை விதிப்பது குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும், இரண்டு நாட்டைச் சேர்ந்த மக்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அறிவித்தார். அத்துடன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்காக விசா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு விசா அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய  அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மேற்கண்ட திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பதும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று அறிவிப்பதும் மோடி அரசின் இரட்டை நாக்கில் பேசும் ஏமாற்று வித்தையாகும். கலைகள் நாடுகளையும் எல்லைகளையும் கடந்தது. இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்று பறைசாற்றிக் கொண்டு, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுடையே கலாச்சார பரிவர்த்தனைகளையும்,  இரு நாட்டு மக்களின் தகவல் தொடர்புக்கும் தடைவிதிப்பது சரியான அணுகுமுறை அல்ல. இதனால் பாகிஸ்தானுடன் பகைமை அதிகரிக்கவே வழி கோலும்.

இந்தியாவில் இராணுவம் குறித்த அனைத்து தகவல்களும் இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் இராணுவ தளவாட உற்பத்தி, கொள்முதல், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடு என அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையில்லாமல், ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. பதான்கோட் தாக்குதலின் போது இந்திய இராணுவத்தினர் கையாண்ட பாதுகாப்பு உத்திகள் குறித்த செய்திகளை ஒளிபரப்பிய என்.டி.டி.வி. சேனலுக்கு தடை விதித்தது மோடி அரசு. இதேபோல் மோடி அரசை விமர்சிக்கின்ற பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், நூல்கள், இதழ்கள், திரைப்படங்கள் முதலியவற்றை தடை செய்வதும், செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், அன்றாட நிகழ்வாகிவிட்டது. இது கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத செயலாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுவதாலும், அமைதிப் பேச்சு வார்த்தைகளில் உறுதித் தன்மையும், நல்ல முன்னேற்றமும் இல்லாததாலும், பதான்கோட் இராணுவத்தளம் தாக்கப்பட்டதாலும் வர்த்தகத்தில் மிகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் இருநாட்டு வர்த்தகங்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதனால் மோடி அரசு உடனடியாக பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல்லை வழி வர்த்தகத் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

உரி இராணுவ முகாம் தாக்கப்பட்டதையட்டி பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக மோடி அறிவித்தார். இந்நூலில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உருவான வரலாறு விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சிந்து நதி நீர்ப் பிரச்சனை இருநாட்டு அமைச்சர்களும், அரசுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட வேண்டும்.

அணு ஆயுதங்கள் உற்பத்தி குறித்த பேச்சு வார்த்தையில், அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, அணு ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த பிரதிநிதிகள் மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை  நடத்தி, உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்துவதே உரிய தீர்வாகும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

இந்திய இராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்வதை மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் கமிஷனாக கைமாறுவதற்கும், ஊழல் நடப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

வெடி மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிடம் படைக்கலத் தொழிற்சாலைகளிடம் ஒப்பந்தப்புள்ளி அளிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் வெடிபொருள்கள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட நாலந்தா படைக்கலத் தொழிற்சாலையை செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் படைக்கல பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கு மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கு, இராணுவத்திற்கு தேவையான வெடி பொருள்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு முன்வராத மோடி அரசு இந்தியாவை எப்படிப் பாதுகாக்கும் என்ற கேள்வி அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே.

வெளிநாட்டு தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட மதுக்கர் குப்தா குழு, சந்தோஷ் மெஹரா குழு முதலிய குழுக்களின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாமல் மோடி அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் மோடி ஆட்சியில் வெளிநாட்டு தீவிரவாதிகளின் ஊடுருவல் களும், தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு பதவியேற்றது முதல், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், கொள்கை முடிவுகள் குறித்தும், எல்லை தாண்டிய தீவிரவாத தடுப்பு நடவடிக்கை சிக்கல்கள் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

எல்லை தாண்டிய தீவிரவாத தடுப்பு நடவடிக்கை சிக்கல்களை தீர்ப்பதற்கு நூலாசிரியரின் முன்  வைப்புகள்.

  • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமாதானம், அமைதி ஏற்பட தொடர்ச்சியான, தடங்கலற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
  • இருநாட்டு அரசியல் பிரமுகர்கள், சிவில் உரிமை அமைப்பின் பிரதிநிதிகள், சனநாயக அமைப்புகள் இடம்பெறக் கூடிய கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.
  • காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும், துயரங்களையும், துன்பங்களையும் இரு நாடுகளும் உணர்ந்து, காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.
  • இருநாட்டு அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் வெறுப்பேற்றும் விதமாக பேசி மக்களிடையே விரோத மனப்பான்மை உருவாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இருநாடுகளுக்கு மிடையேயான மக்கள் உறவுகள் இயல்பான நிலைக்கு திரும்பிடவும், விசா கட்டுப்பாடுகள் நீக்கப்படவும், இலவச சுற்றுலா விசாக்கள் வழங்கப்படவும், வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் வளர்த்தெடுக்கப் படவும், ஊடகங்கள் நடுநிலைமையுடன் செய்தி வெளியிடவும் மேற்கொள்ள வேண்டுமென மோடி அரசை சனநாயக, முற்போக்கு, இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
  • இந்திய நாட்டின் பாதுகாப்பின் மீதும், அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவை வேண்டுவோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

எல்லை தாண்டிய தீவிரவாத தடுப்பு நடவடிக்கை சிக்கல்கள்

நூலாசிரியர் : சு.அழகேஸ்வரன்.

விலை : ரூ.30/-

வெளியீடு :  Vashviya

H-242, phase -2, Anna Nagar, Trichirapalli – 26.

Cell No. 9443701812

Pin It