கீற்றில் தேட...

பெகல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளை மனிதநேயம் கொண்ட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்திய ஒன்றிய இராணுவம் பாக்கிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடுமையான இராணுவத் தாக்குதலை நடத்தியது.

இந்திய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையின்படி இராணுவத் தாக்குதல் தீவிரவாதிகளின் முகாம்களின் மீது தானே ஒழிய, பாக்கிஸ்தான் இராணுவத்துடன் அல்ல என்பதைத் தெளிவாக்கியது. இதனை ஒன்றியம் முழுவதும் மக்கள் வரவேற்றார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாபெரும் மக்கள் திரளைக் கூட்டிப் பேரணி நடத்தித் தம் ஆதரவினைத் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க சில நாள்களில் இப்போர் முடிவுற்ற நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாக்கிஸ்தான் போரை நான்தான் நிறுத்தச் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்வது நிறுத்தப்படும் என்று சொன்னதால் இருநாடுகளும் சம்மதித்து போரை நிறுத்தின என்று டிரம்ப் கூறியது இங்கு ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு மறுப்பாக ''இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே வளர்ந்து வரும் இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. வர்த்தகப் பிரச்சினை எந்த விவாதத்திலும் இடம்பெறவில்லை" என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் பிரதமர் மோடியோ, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரோ இதுகுறித்து வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார்கள். அண்மையில் அரபு நாடுகளுக்குச் சென்ற டிரம்ப் தொடர்ந்து இதையே சொல்லி வருகிறார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று எதிர்கட்சிகள் சொல்லிவரும் நிலையில், இன்று இந்தியா - பாக்கிஸ்தான் போரை வைத்து மூன்றாம் நாடான அமெரிக்கா தலையிடுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது டொனால்ட் டிரம்பின் தொடர் பேச்சுகள்.

இது குறித்து விவாதம் நடத்த வேண்டும், நாடாளு மன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று மோடியிடம் கேட்கிறார், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. நாட்டு மக்களுக்கும் உண்மை தெரியவேண்டும் அல்லவா!

டொனால் பேசுகிறார், மோடி மௌனமாக இருக்கிறார்.

வழக்கம்போல 'மெளனகுரு' வாக இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், விரைவில் தன் மெளனத்தைக் கலைப்பார் என்று நம்புவோமாக!

- கருஞ்சட்டைத் தமிழர்