நாம் பின்நவீனத்துவ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பின்நவீனத்துவம் என்னும் பதம் அறிவுசார்ந்த மிகப்பெரும் விவாதங்களிலிருந்து சாதாரண தொலைக்காட்சி விளம்பரம் வரை விரவிக்கிடக்கிறது. ‘பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறது. உலகில் எதற்குமே அர்த்தம் இல்லை என்று சொல்லும் பின்நவீனத்துவம் அர்த்தம் குறித்த கேள்விகளை விடுத்து வெறுமனே இருக்கும் வரை இருந்துவிட்டுப் போகச் சொல்கிறது. அத்தோடு மதிப்பீடுகள் அற்ற ஓர் உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. வெறுமையும் அபத்தமும் தான் பின்நவீனத்துவம் நமக்குத் தருவது. எனவே, பின் நவீனத்துவம் நிராகரிக்கப்பட வேண்டியது’ என்று பலரும் கருதுகிறார்கள். இடதுசாரி சிந்தனையாளர்களில் ஒரு சாரார் முதலாளித்துவ உலகின் சூழ்ச்சி பின்நவீனத்துவம் என்று நிராகரிக்கிறார்கள். இன்னொரு சாரரோ அதுதான் மிக ஒடுக்கப்பட்டோருக்கும், விளிம்பு நிலையில் உள்ளோர்க்கும் விமோசனம் தரக் கூடியது என்று ஆதரிக்கிறார்கள். இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் மத்தியிலும் பின் நவீனத்துவப் போக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அபத்தம் நிறைந்த அனார்க்கிச உலகைப் போதிப்பதாகச் சொல்லப்படும் பின்நவீனத்துவ உலகில் கடவுள், மற்றும் மதத்தினுடைய பங்கு என்னவாயிருக்கும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. காரணம் உலகம் நவீனமாக மாற மாற மதம் அழிந்துவிடும் என்னும் எண்ணங்கள் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கின்றன. உலகளவிலும், தேசிய அளவிலும் முன்னெப்போதையும் விட மத அடிப்படைவாதங்கள் மேலெழும்பி மதமே அபாயகரமானதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் மதம் குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது.
அறிவியல், மற்றும் சமூக வளர்ச்சியோடு மதம் நீர்த்துப் போய்விட்டது அல்லது நீர்த்துப் போய்விடும் என்பதையெல்லாம் நாம் வேறு கோணங்களில் இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. அடிக்கடி அம்பலப்படுத்தப்படும் மத அமைப்புகளின் சீரழிவுகள் மதத் தலைமைப் பீடங்களின் ஊழல்கள் இவற்றுக்கு மத்தியிலும் ஆலயங்களையும், சாமியார்களையும் அயராது நாடும் மக்களின் உளவியலை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே. ‘பின்நவீனத்துவ உலகில் கடவுள் மற்றும் மதத்திற்கு வேலை இருக்கிறதா?’ என்ற கேள்வியை விடுத்து ‘பின் நவீனத்துவ உலகில் கடவுள் மற்றும் மதத்தின் பங்கு என்ன?’ என்ற கேள்வியையே நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.
மேற்கத்திய உலகில் பின் நவீனத்துவத்தை உள்வாங்கிய இறையியல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நிகழ்காலச் சூழலில், கடவுள், மதம் குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தேவைப்படுகின்றன என்பதை ஒத்துக் கொண்டோமானால், அத்தகு ஆக்கப்பூர்வச் சிந்தனைகளுக்கு பின்நவீனத்துவத் தத்துவங்கள் எப்படி உதவுகின்றன என்பதை நாம் நேர்மறையாக அணுக வேண்டும். அதை அறிவதற்கு நவீனத்துவக் கடவுள், மதம் பற்றிய கோட்பாடுகளை விமர்சனப்படுத்துவது அவசியம்.
II
மேற்கத்திய மறுமலர்ச்சியைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளைப் பொதுவாக நவீனத்துவ காலகட்டம் என்கிறோம். மேற்கத்திய உலகில் மதம் ஏறத்தாழ சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி, அரசு இயந்திரங்கள் மதத்தின் கைப்பாவையாகிப் போன ஒரு சூழலில் நவீனத்துவம் நுழைந்தது. கறைபடிந்த மத அதிகாரிகளால், ஊழல்மயமாகிப் போன மத நிறுவனங்கள் வாழ்வின் எல்லா எதார்த்தங்களிலும் பிரதானமாக ஊடுருவிப் போன ஒரு சமூகத்தில், அதிலிருந்து மீள முயன்ற மனிதனின் ஒரு முயற்சியாக நவீனத்துவம் அமைந்தது. தத்துவமே இறையியல் தான் என்ற நிலை மாறத்தொடங்கி, அதற்கு எதிரான குரலாக மனிதனை மையப்படுத்திய தத்துவங்கள், கருத்தியல்கள் உருவாயின. அவையே இந்தக் காலகட்டத்தின் கலை, இலக்கியங்களிலும் பிரதிபலித்தன. ‘மதம், கடவுள் பெயரைச் சொல்லி வாழ்கிறது. அநீதிகளும், ஒடுக்குமுறைச் சித்தாந்தங்களும் கடவுளின் பெயரால் நுழைகின்றன. மதத்தால் நியாயப் படுத்துகின்றன. எனவே மதத்தை ஒழிக்கக் கடவுள்களை மறக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் சிந்தனைகள் தோன்றின. அறிவியலின் மிதமிஞ்சிய வளர்ச்சி இந்தச் சிந்தனைகளுக்குத் தூபமாய் அமைந்தது. இத்தகுச் சிந்தனைப் போக்குகளால் நவீனத்துவம் கடவுள் இருந்த இடத்தில் மனிதனையும், மதம் இருந்த இடத்தில் அறிவியலையும் வைத்துப் பார்த்தது.
நவீனத்துவ சிந்தனையாளர்களில் கடவுளை ஏற்றுக் கொண்ட சிந்தனையாளர்கள் கூட பெரும்பாலும் கடவுளை உலகோடு இயைந்த ஒரு சக்தியாகப் பார்க்கவில்லை. உலகம் தன் போக்கில் தனக்குரிய சுதந்திரத்தோடு இயங்குகிறது. கடவுள் வெளியிலிருந்து இயங்குகிற ஒரு சக்தியாக இருக்கிறார் என்றுதான் கருதினார்கள். மொத்தத்தில் ஆத்திகமோ, நாத்திகமோ, கடவுளும் மதமும், மனித வாழ்வின் இயக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதையே நவீனத்துவம் விரும்பியது. குறிப்பாக இக்காலக் கட்டத்தில் தோன்றிய மார்க்சிய புரட்சிகரச் சிந்தனைகள் மதத்தையும், கடவுள்களையும் மறுதலிப்பதில் தான் மனுக்குல விடுதலை அடங்கியிருக்கிறது என்று நம்பின. ஆனால் இருபதாம் நூற்றாண்டிலும் அதற்கடுத்த காலக்கட்டத்திலும் கூட மதம் இன்னும் மறையாததொன்றாகவே இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் ஆலயங்களுக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரப்படி குறைந்திருந்தாலும், கடவுள் மதம் குறித்த நம்பிக்கைகள் இன்னும் குறையவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது கடவுள், மதம் குறித்த சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
கடவுள் மதம் குறித்த இந்த மறுபரிசீலனைகளில் இருவித அணுகுமுறைகள் முக்கியம்.
1. மதம் குறித்த பார்வைகளை வெறுமனே அறிவியல், பகுத்தறிவுப் பாதையில் பார்ப்பதை விடுத்து சமூகவியல், உளவியல் பார்வைகளில் பார்ப்பது.
2. மதத்தை வெறுமனே கடவுள் சம்பந்தமானதாக மட்டும் பார்க்காமல், மனிதன் சம்பந்தப்பட்டதாக, குறிப்பாகச் சொல்லப்போனால் மனித இருப்பு, கலாச்சாரம், மனிதனின் கடப்புத்தன்மை பற்றியதாகவும் பார்த்தல். அதிலும் குறிப்பாகக் கடவுள் குறித்த கருத்தாக்கங்களை மனித கடப்புத் தன்மையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதற்குத் தற்கால பின் நவீனத்துவச் சிந்தனைகள் ஒரு விதத்தில் உதவுகின்றன. பின் நவீனத்துவத் தத்துவப் பின்புலத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ளும்போது, இறுகிப்போன கடவுள் குறித்த கோட்பாடுகள், மதக் கட்டமைப்புகள் அடிபட்டுப்போகின்றன.
மதம் கடவுளின்றி இல்லை. மதமில்லாத கடவுள் இருக்கலாம். கடவுள் இல்லாத மதத்தை கற்பிதம் செய்து பார்ப்பதெல்லாம் விதண்டா வாதம். கடவுளை போதிக்காத மத நிறுவனர்கள் கூட பிற்காலத்தில் தாங்களே வழிபாட்டுப் பொருளாய்ப் போனதுதான் வரலாறு. சிந்தனை ரீதியாக வேண்டுமானால் கடவுள் இல்லாத மதத்தைக் கற்பனை செய்து கொள்ளலாம். எதார்த்தத்தில் அப்படி இல்லை. அதே சமயத்தில் சமூகத்திற்கும் மனித வாழ்வுக்கும் ஏற்ற வகையில் கடவுளைப் பிரதிபலிப்பதிலும், விளக்குவதிலும் மதமும் தத்துவமும் பெரும்பங்கு வகிக்கின்றன. பின் நவீனத்துவம் கடவுளை எப்படிப் பார்க்கத் தூண்டுகிறது? இதற்குரிய பதில் பின் நவீனத்துவம் மெய்ப் பொருளை எப்படிப் பார்க்கிறது? என்பதைப் பொருத்து இருக்கிறது.
முதலாவதாக, பின் நவீனத்துவம் மெய்ப்பொருளை நாம் முழுமையாக அறிய முடியாது என்கிறது. (எந்தப் பொருளையும் ஊடங்கள் மூலம் தான் அறிய முடியும்) கலாச்சாரம், மொழி போன்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட தன்னிலை மூலமாகத்தான் நாம் எந்த எதார்த்தத்தையும் அணுக முடியும் என்று அது நம்புகிறது. அப்படி அணுகும் போது எந்த எதார்த்தத்தைப் பற்றிய அறிதலிலும் ஓர் எச்சம் இருக்கிறது. எனவே எதார்த்தம் குறித்த அறிவு ஒத்திப் போடப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே, முழுமையான மெய்ப் பொருள் குறித்த அறிவு சாத்தியம் இல்லை என்று அது சொல்கிறது.
பின்நவீனத்துவத்தின் இந்த கூற்று இருவிதமான போக்குகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒன்று எதார்த்தத்தை முற்றிலுமாக மறுதலித்து எதார்த்தத்தில் ஒன்றுமில்லை. அதற்கு அர்த்தம் கண்டறிவதெல்லாம் வீண் வேலை. இருப்பவை எல்லாம் அபத்தம்தான். பிரபஞ்சத்தில் எஞ்சியிருப்பதெல்லாம் ஒன்றுமில்லாமையும் வெறுமையும் தான் என்று சொல்லி வெறுமை வாதத்தை முன்வைத்து பேசாமலிருப்பது. இதைத்தான் பின்நவீனத்துவம் செய்கிறது என்று பாரம்பரியச் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். இன்னொன்று ‘அப்படிப் பேசாமலிருப்பது மனித மனத்தைப் பொருத்த வரையில் சாத்தியமா?’ என்று கேள்வி எழுப்பி அடுத்த ஆராய்தலுக்கு இட்டுச்செல்வது.
மனித இருப்பு என்பது கேள்விகளோடுதான் பிறக்கிறது. தன்னிலை என்பது கேள்விகளால் தான் கட்டமைக்கப்படுகிறது. (மொழி அதற்கும் முன்பே இருக்கிறது என்றாலும்கூட) எல்லாமே வெறுமையும் சூன்யமும்தான் என்று முடிவுகட்டி விட்டு மனிதமனம் சும்மாயிருப்பதில்லை. ஏன் சூன்யம்? எப்படி சூன்யம் என்று மென்மேலும் கேள்விகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. மனிதன் இப்படிப்பட்ட கேள்விகளோடுதான் அபத்தம் நிறைந்த ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்தாக வேண்டும் என்று ஒருசாரார் சொல்கிறார்கள். இக்கருத்தை வலியுறுத்தும் சில இருத்தலியல் கோட்பாடுகளின் தொடர்ச்சியாக மட்டுமே பின்நவீனத்துவத்தைப் பார்த்தால் அது இருக்கும் வரை வாழ்ந்துவிட்டுப்போ என்று சொல்வதாகக் கருதலாம். மதம், கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு இது எளிது.
ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இதையே வேறு விதமாகப் பார்க்கிறார்கள். எந்த ஒரு பொருளிலும் மெய்மையை அறிய முடியாது. அப்படி எனில் எல்லாப் பொருளுமே ஒரு மறைபொருளாக இருக்கிறது. மனிதன் இயல்பாகவே மெய்மையை அறியும் ஆவலுள்ளவன். மனிதன் அனுபவம் கொள்கிற எல்லாப் பொருட்களுமே இந்த ஆவலைத் தூண்டுகின்றன. என்னதான் ஆவல் இருப்பினும் மனிதன் உண்மையில் பொருளின் சாரத்தை உணரமுடியாது. எதார்த்தத்தை முழுமையாக அறிய முடியாது. எனினும், பருப்பொருளோடு நாம் கொள்கிற ஒவ்வொரு உறவிலும் எதார்த்தம் குறித்த ஏதேனும் ஓர் உண்மை அதற்குரிய பரிமாணங்களோடு வெளிப்படுகிறது. சொல்லப் போனால் உண்மை என்பதே பரிமாணங்கள்தான். எதார்த்தத்தோடு நாம் கொள்ளும் பரிமாற்றம் நம்மை மென்மேலும் ஓர் உறவாடலுக்கு அழைத்துக் கொண்டேயிருக்கிறது. இந்த உறவாடல் எண்ணற்ற விதங்களில் இருக்கிறது. அதுவே, இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனின் வெளிப்பாடுகளாக அமைகிறது.
பின்நவீனத்துவம் கோடிட்டுக் காட்டும் இந்தப் புரிதல்களால், எதார்த்தம் குறித்த தீர்க்கமான முடிவுகளோ, இறைவன் குறித்த இறுகிப்போன கோட்பாடுகளோ அடிபட்டுப் போகின்றன. இதுதான் உண்மை, ‘இதுதான் உண்மையான மதம்’ என்றெல்லாம் சொல்லி அடிப்படைவாதங்களை இனி கட்டி எழுப்ப முடியாது. ராமராஜ்யமோ, பரலோக ராஜ்யமோ, இனி அடிப்படைக் கேள்விகளுக்கான பதிலைச் சந்தித்தேயாக வேண்டும். உண்மை எப்போதும் பரிமாணங்களோடுதான் வெளிப்படுகிறது. பரிமாணங்களே ஒருவிதத்தில் உண்மை என்பதை நாம் புரியும்போது மதங்களின் பெருங்கதையாடல்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
அதே சமயத்தில் உண்மை என்பதே பரிமாணங்கள்தான் என்பதைக் கொண்டு ‘எல்லாமே மாயை’ என்றும் இவ்வுலகம் பொய் என்றும், பரலோகம் அல்லது மறுவுலகம் மட்டுமே நிரந்தரம் என்றும் போதித்துவிட முடியாது. வரலாற்றில் மதங்கள் இதுகாறும் அதைத்தான் செய்து வந்திருக்கின்றன. மெய்ப்பொருளை முற்றிலும் அறிய முடியாத காரணத்தைக் காட்டியே மனிதனை உலகிலிருந்து அந்நியப்படுத்த முயன்றுள்ளன. ஆனால் இனி அது முடியாது. காரணம் எதார்த்தம் குறித்த தமது உறவாடலில் எதார்த்தம் குறித்த ஏதேனும் ஒரு கூற்று வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது இறுதி அல்ல. எனினும் ஏதேனும் ஒரு புரிதல் நமக்குக் கிடைத்துக் கொண்டேதானேயிருக்கிறது. கிடைக்கின்ற புரிதல் மாயை அல்ல. அது மென்மேலும் நம்மை இந்த உலகோடு கொள்ளும் ஈடுபாட்டுக்கு அழைக்கிறது. மனிதனின் கடப்பாற்றலுக்கு அதுவே சான்றாக அமைகிறது. மனிதனின் கடப்பாற்றலை வலியுறுத்தும் மதங்களின் செயல்பாடுகள் இவ்வுலகின் செயல்பாடுகளாக அமைகிறது.
கடவுள் பற்றிய கோட்பாடுகள் மற்றும் இறையியலாக்கங்களில் பின்நவீனத்துவச் சிந்தனைகள் உள்வாங்கப்பட்டால், மதம் குறித்த சிந்தனைகள், மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அடிப்படைவாதத்திலிருந்து விடுபட்டு ஆக்கப்பூர்வமாக மாற வழி இருக்கிறது. விக்டர் டர்னர் போன்ற மதமானுடவியலாளர்களின் கருத்துப்படி மதங்கள், வழிபாடுகள் மனிதனுக்குத் தேவையானதொன்றாக இருக்கிறது. சமூகத்தின் மாற்றங்களுக்கு அவை துணை போகின்றன. எனவே மதத்தை நாம் காலவதியாகி விட வேண்டியதாக மட்டுமே கருத முடியாது. எனவே, பன்முகப்படுத்தப்பட்ட மதப்பார்வைகளையும் கடவுள் பார்வைகளையும் கற்பிக்கிற பின் நவீனத்துவம் மானுடத்தை நேசிக்கின்ற மதவியலாளர்களால் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் சமூகம் பயன்பெறும். இது குறித்த விவாதங்கள் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்படுவது அவசியம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நிகழ் உலகில் கடவுள் மதம்: ஒரு மறுபரிசீலனை
- விவரங்கள்
- அ.தாசன்
- பிரிவு: கட்டுரைகள்