அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையமைச்சராக இருந்த போதே இந்துத்துவக் கோட்பாடுகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டன. நரேந்திர மோடி 2014இல் தலை மையமைச்சராக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் எல்லாத் துறைகளிலும் இந்துத்துவவாதிகள் தலைமைப் பொறுப்பு களில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். மோடி ஆட்சியில் வெளி யிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை யில் சமற்கிருத மொழியைப் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப்பட்டுப் பாரதப் பண்பாட்டைப் பேணி வளர்த்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றுள்ள அறிவியலும் உயர் தொழில் நுட்பமும் வேத காலத்திலேயே இருந்தன. இதற்கான சான்றுகள் இந்துமத இதிகாசங்களிலும் புராணங்களிலும் இருப்பதாக இந்துத்துவ வாதிகள் கூறுகின்றனர். 2015ஆம் ஆண்டு மருத்துவர்கள் மாநாட்டில் தலைமையமைச்சர் நரேந்திர மோடி பேசிய போது, “மகாபாரதத்தில் கர்ணன் பிறப்பு, அக்காலத்திலேயே சோதனைக் குழாய் முறை இருந்தது என்பதைக் காட்டுகிறது; விநாயகக் கடவுளின் யானைத் தலை பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்ப தற்குச் சான்றாகும்” என்று கூறினார். மோடியின் இந்த அடாவடிப் பேச்சுக்கு அம்மாநாட்டில் இருந்த மருத்துவர் எவரும் மறுப்புக் கூறவில்லை. இந்திய மருத்துவர் சங்கமும் இதைக் கண்டிக்கவில்லை. மதச்சார்பற்ற எந்தவொரு சனநாயக நாட்டிலும் ஆட்சித் தலைமையில் இருக்கும் எவரும் மோடியைப் போல் பேசிட அனுமதிக்கப்பட மாட்டார்.
நரேந்திர மோடி இவ்வாறு பேசிய பின் சில நாள்கள் கழித்து மும்பையில் 102ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில், “சமற்கிருதத்தின் வாயிலாகப் பண்டைய இந்திய அறிவியல்” என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடந்தது. அந்த அமர்வில், “பண்டைக் காலத்தில் விண்ணில் பறத்தல் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் கழகம் (IISc) கி.மு.7000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விண்ணில் பறக்கும் தொழல்நுட்பம் இருந்தது என்று கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் மும்பை அறிவியல் மாநாட்டில் இத்தலைப்பில் கட்டுரை படிக்க அனுமதிக்கப் பட்டதற்குக் காரணம் மோடியின் தலைமையிலான ஆட்சி இதே கருத்தைக் கொண்டிருப்பதே ஆகும்.
மும்பை அறிவியல் மாநாட்டில் “பண்டைய தாவரவியலில் பொறியியல் பயன்பாடு”, “யோகாவில் நரம்பியல் அறிவு”, “இந்திய அறுவை மருத்துவத்தின் வளர்ச்சிகள்” என்கிற தலைப்புகளில் கட்டுரைகள் படிக்கப்பட்டன. இக்கட்டுரைகளின் நோக்கம், இன்று வளர்ச்சி பெற்றுள்ள அறிவியல் அனைத்தும் பண்டைய இந்து சமூகத்தில் இருந்தன என்று பொய்யான பெருமிதத்தைக் காட்டிக் கொள்வதே ஆகும்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ‘லவ்லி புரொபசனல்’ எனப்படும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் 2019 சனவரி 3 முதல் அய்ந்து நாள்கள் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது. நேரு காலம் முதல் இந்திய அறிவியல் மாநாட்டை நாட்டின் தலைமையமைச்சரே தொடங்கி வைக்கும் மரபின் படி, ஜலந்தர் மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்றைய சூழலில் அறிவியல் வளர்ச்சி குறித்தும் எதிர்காலத் தில் அது செல்லக் கூடிய திசை குறித்தும் அறிவியல் மாநாட்டில் விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அறிவியல் மாநாடு ஆர்.எஸ்.எஸ்.இன் மேடை யாகவே மாற்றப்பட்டு வருகிறது.
அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்களுக்கென்று தனியாக ஒரு அமர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதி லிருந்தும் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகப் பல மட்டப் போட்டிகளில் பங்கேற்றுத் தேர்வான இரு நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வது வழக்கம். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் ஊக்குவித்து, எதிர்காலத் தில் சிறந்த அறிவியலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
ஜலந்தர் அறிவியல் மாநாட்டில் மாணவர் அமர்வின் நெறியாளர்களாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி. நாகேசுவரராவ், தமிழ்நாட்டில் ஆழியாற்றைத் தலைமை இடமாகக் கொண்டுள்ள உலக சமுதாய சேவா சங்கத்தைச் சேர்ந்த கண்ணன் ஜெகதளா கிருட்டிணன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். துணைவேந்தர் நாகேசுவரராவ் மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை பொங்கி வழிந்தோட உதிர்த்த முத்தான கருத்துகள் :
* மகாபாரதத்தில் கவுரவர்களின் தாய் காந்தாரி தன் நூறு குழந்தைகளைச் சோதனைக் குழாய் மூலம் பெற்றெடுத் தார். எனவே நாம் இவ்வுலகில் அறிவியல் விஞ்ஞானத் தின் முன்னோடிகள் என்று கூறுவதில் அய்யப்பட வேண்டாம்.
* இலங்கையில் இராவணனிடம் 24 வகையான வானூர் திகள் இருந்தன. பெரிய வானூர்தி நிலையம் இருந்தது.
* ஏவுகணைகளை ஏவுவதில் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே நம் நாடு முன்னோடியாகத் திகழ்ந் துள்ளது. அதனால்தான் மகாவிஷ்ணு தனது எதிரியைத் தாக்க சுதர்சன சக்கரத்தை ஏவி, அது மீண்டும் திரும்பி வரும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த ஏவுகணைகளை வைத்திருந்தார்.
* விஷ்ணுவின் தசாவதாரக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டே சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாக்கப்பட்டது.
* கங்கை நீரில் பாக்டீரியா நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வைரசான பாக்டீரியோ ஃபேஜ் இருப்பதால் தான் அந்நீர் தூய்மையாகவும் புனிதமாகவும் நீடிக்கிறது (ஆனால் மோடி அரசு கங்கை நீரைத் தூய்மைபடுத்த பல ஆயிரம் கோடிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறது).
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதளா கிருட்டிணன் அம் மாநாட்டில் நியூட்டனுக்கு ஈர்ப்பு விசை குறித்து மிகவும் குறைவான அறிவுதான் இருந்தது என்றும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகைத் திசைதிருப்பிய தவறான கோட்பாடு என்றும் கூறினார். மேலும் இதுகுறித்து 40 நாடு களில் உள்ள 400 பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வறிக்கையை அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் என் கோட்பாட்டைத் தவறு என்று மெய்ப்பிக்கட்டும் என்று சவால் விட்டுப் பேசினார். உலகம் முழுவதும் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை நியூட்டன், ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சங்பரிவார ஆட்சியில் மேடை கிடைத்துவிட்டால் எந்த அளவுக்கு அடாவடித்தன மாகப் பேசுவார்கள் என்பதற்கு ஜெகதளா கிருட்டிணன் ஒரு சான்று.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ச.க. தலைமையிலான ஆட்சி மேலும் நீடித்தால் கல்வி முழுவதும் எந்த அளவுக்குக் காவிமயமாகி விடும் என்பதையே ஜலந்தர் அறிவியல் மாநாடு உணர்த்து கிறது. மதச்சார்பற்ற - சனநாயக - அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட அனை வரும் ஓரணியில் திரண்டு கல்வியும் அறிவியலும் காவிமய மாவதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
இந்தப் பகுத்தறிவுப் போரில் மோடி ஆட்சியில் சங் பரிவாரங்களால் மருத்துவர் தபோல்கர், பொதுவுடைமை யாளர் கோவிந் பன்சாரே, செயற்பாட்டாளர் எம்.எம். கல்புர்கி, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். எனவே இந்துத்துவப் பாசிசத்தின் கொடிய முகத்திரையை மக்கள் மன்றத்தில் கிழித்தெறிந்து, சங் பரி வாரங்களை வீழ்த்துவதே நம் முன் உள்ள முதலாவது கடமையாகும்.