periyar 343அன்புள்ள தலைவர் அவர்களே! சகோதரர்களே!

இன்று திருச்சி மருத்துவகுல சங்கத்தாரால் எனக்குச் செய்த மரியாதைக்கும் வாசித்துக் கொடுத்த வரவேற்பு பத்திரத்திற்கும் நான் உண்மையிலேயே அருகநல்லவனானாலும், உங்களுக்கு என்னிடமும் எனது சிறு தொண்டினிடமும், கொள்கையினிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பும், ஆர்வமும் இம்மாதிரி செய்யும் படி செய்தது என்று கருதிக் கொண்டு அவைகளுக்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.

எனக்கு முன்பு இங்கு பேசிய எனது நண்பர்களும் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதற்கு நான் அவர்களிடம் மிக்க நன்றி காட்டுகிறேன். அன்றியும் நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும், என்னைப் பலர் நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும், நான் நாஸ்தீகன் அல்லவென்றும் எனக்காக பரிந்து பேசினார்கள்.

அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்தீகத்துக்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது.

அதிலும், சமதர்மக் கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாஸ்தீகத்தினால்தான் முடியும். நாஸ்தீகமென்பதே சம தர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்தீக ஆக்ஷி என்கிறார்கள். பௌத்தரையும் நாஸ்தீகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால் தான். நாஸ்தீகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல.

சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்தீகம் என்று தான் யதாபிரியர்கள் சொல்லித் திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்தீகம் முளைக்கின்றன.

கிறிஸ்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்தீகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும் தான் காரணமாகும். துருக்கியில் பாக்ஷாவும் ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்தீகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.

ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப் பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமே தான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள்.

ஆகவே நாம் இப்போது எதெதை மாற்ற வேண்டுமென்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததே யாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில் மேற்படி ஜாதி ஒழிய வேண்டு மென்றால் அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தேதான் ஆகவேண்டும்.

எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ அவதாரங்களாலோ கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப் படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்று சொல்லும் போது அப்படிச் சொல்லு பவன் அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றார்.

அதனால்தான் கிறிஸ்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதியரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகிறது.

அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும் போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஜாதி, உயர்வு தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும், கர்மமும் தான் காரணம் என்று சொல்லுவதானால் பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விறோதமான காரியமேயாகும்.

மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால் க்ஷவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் க்ஷவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப் பதைப் பார்த்தும் மேலும் க்ஷவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும்.

பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமே யாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது “கர்மத்திற்காக” பட்டினி போட்டி ருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது கடவுளை நம்பாத, கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மை யேயாகும்.

இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவரும் இருக்க முடியாது. ஆதலால் நம்மைப் பொருத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்த்திகமேயாகும். நாஸ்த்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால் வெள்ளைக்காரனை வைவது மாத்திரம் போராது.

நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்து கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல, உங்கள் முட்டாள்தனம் தான் காரணம். ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லக்ஷியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான் செல் வந்தர்களின் அக்கிரமங்களை பாமர மக்கள் அறியக் கூடும். அப்பொழுது கடவுள் செயலையும் அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும்.

இந்த நாட்டில் ஒருபுரம் ஏழைகள் பட்டினிகிடக்க ஒரு புரம் சிலர் கோடீஸ்வரராய்கொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திறிவது கடவுள் செயல் என்றால் இந்த நாட்டு செல்வத்தை வெள்ளைக்காரன் சுரண்டிக் கொண்டுபோவதும் அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகையால் கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும் கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியதேயாகும்.

ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந் தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப் படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் “லக்ஷிமி புத்திரர்களாய் இருக்கிறார்கள்.” இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற்கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களை பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் “சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராமணன் அதை பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம்” என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்ச காலத்திற்கு முன் இது அமுலிலும் இருந்திருக்கிறது. இனி கொஞ்ச நாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும்.

அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்லமுடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண் டேயொழிய இப்போது இருப்பது போல உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏன் சில சமயங்களில் அதற்கும் போராமலும் இருக்க பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம்.

அது போலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோவிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம்.

இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகி தலை கீழாகி மாறக் கூடும் அப்பேர்ப்பட்ட நிலைமை வரும் போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படு கின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க ஏன் கடவுளையே மறுக்க துணிந்தாக வேண்டும்.

கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன் றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக் கில்லாமல் கடவு ளுக்கும் மோக்ஷத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பதுறுதி.

ஏனெனில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவை களில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும் முட்டாள் தனமான நிலை யும் அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும் மோக்ஷ சாரணங்களாலும் சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால் தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.

குறிப்பு :- 01.09.1930 ஆம் நாள் திருச்சி மருத்துவ சங்கத்தில் திரு.டி.பி.வேதா சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ சங்கத்தாரால் அளிக்கப்பட்ட வரவேற்பு பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய சொற்பொழிவு.,

(குடி அரசு - சொற்பொழிவு - 07.09.1930)

Pin It