கர்மத்தைப் பற்றியும் விக்கிரக ஆராதனையைப் பற்றியும் என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதா யிருந்தாலும், இந்த இரண்டும் நமது தேசத்தின் முன் னேற்றத்திற்கு முக்கியமான முட்டுக்கட்டை யாயிருந்து வந்திருக்கின்றன. கர்மம் என்பது மனி தனைத் தன் முயற்சியோடு வாழ்க்கையில் பிரவேசிப் பதையே தடுத்து விடுகின்றது. அதோடு மாத்திரமல் லாமல் மனிதன் என்ன தான் முயற்சி செய்தாலும் நடப்பது நடந்தே தான் தீரும் என்கின்ற ஒரு எண் ணத்தை உண்டாக்கி மனிதனை சோம்பேறி நிலை யிலிருந்து அசைய விடாமல் செய்து விடுகின்றது.

விக்கிரக ஆராதனை மனிதன் அக்கிரமங்கள் செய்வதற்கு முதற்காரணமாயிருக்கின்றது. அன்றியும் மக்களில் படித்தவர்களும் படிக்காதவர்களும் எல் லோரும் ஒரே மாதிரியாகவே தாங்கள் என்னதான் அக்கிரமம் செய்தாலும் விக்கிரகங்களுக்கு வேண்டிய பூஜை ஆராதனை அபிஷேகம் உற்சவம் முதலியவை களைச் செய்துவிட்டால் சகல குற்றங்களும் மன்னிக் கப்பட்டு என்றைக்கும் சவுக்கியமாக இருக்கலாம் என் கின்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருக்கின் றார்கள்.

நம்ம ஜனங்கள் தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அவர்கள் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் என்று நினைத்து அதிலிருந்து தப்புவிக்க விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அதன் மூலம் கடவுள் தயவைத்தேடி கர்மத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். தங்களுக்கு ஏதாவது வியாதி வந்தாலுங்கூட அவைகள் தாங்கள் சுகாதார முறை யைக் கவனிக்காததால் வந்தவை என்று எண்ணா மலும் இனி மேலாவது சுகாதார முறையைக் கைக் கொள்ளலாம் என்பதில் சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமலும் போன ஜன்மத்தில் தாங்கள் செய்த கர்மத்தின் பலன் என்றே நினைத்துவிடுகின்றார்கள்.

இந்த மாதிரி கர்மத்தை ஒப்புக்கொள்ளும்படியான கொடுமையான கொள்கையானது நமது அறிவையும் முயற்சியையும் கெடுப்பதோடு, அதனால் ஏற்படும் கஷ்டத்திலிருந்து விலகும் படியான மார்க்கத்தையும் அடைந்து வெறும் கடவுள் பாதத்தையே நம்பி சுக வாழ்வு முறைகளைக் கையாள முடியாமல் செய்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஊரில் காலரா ஏற்பட்டு விட்ட தாக வைத்துக் கொள்வோம். காலரா என்கின்ற விஷ பேதி வியாதி தண்ணீரிலிருந்து உண்டாகும் விஷப் பூச்சிகளால் உண்டாகின்றது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம். எங்கெங்கு தண்ணீ ரைச் சுத்தமாக வைத்திருக்கக்கூடிய முறைகள் போது மானபடி கையாளப்பட்டு வருகின்றதோ அங்கு காலரா வருவதில்லை. இதுவே சென்ற 25 வருஷ காலமாக இங்கிலாந்தின் அனுபவமாகவும் இருந்து வருகின்றது. ஆனால் நமது ஜனங்களுக்கு மாத்திரம் இந்த விஷ யங்கள் அறிவிக்கப்படுவதுமில்லை; அறிவிக்கக் கவலை எடுத்துக் கொள்வதுமில்லை.

அதுமாத்திரமல்லாமல், இந்த உண்மையான விஷ யங்களை அவர்கள் கவனத்துக்கு யாராவது கொண்டு வந்தாலும்கூட அவற்றை அவர்கள் அலட்சியமாய்க் கருதிப் பரிகாசம் செய்வதோடு கெட்ட தண்ணீர் சாப்பிடு பவர்கள் எல்லோருமா செத்துப் போகின்றார்கள். விதிமூண்டவர்கள் தானே சாகிறார்கள் என்று விதியில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பற்றி அந்த சமயம் பெருமை பேசிக்கொள்ளுகின்றார்கள். எம்.ஏ., பி.ஏ., பி.எல். பாஸ் செய்தால் அதிகமான ‘பகுத்தறி வாளிகள்’ என்று சொல்லும்படியான படித்த கூட்டத்தார் களும்கூட வியாதிகளை நீக்குவதற்கு மருந்துகளிலும் சுகாதார விதிகளிலும் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடமே நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள்.

மேற்குலத்தார் என்று சொல்லப்படுகின்றவர்களும் கூட எந்தவிதமான வியாதிகளுக்கும் தங்களது முன் ஜன்ம கர்மத்தின் பலன் என்றே சொல்லிக் கொண்டு அவ்வியாதிகளைப் போக்குவதற்கு விருந்து, உற்சவம், மேளம், வேடிக்கை முதலானவைகள் செய்வதன் மூலம் கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து மாற்ற முடியாத கர்ம பலனை அவரால் மாற்றச் செய்து தப்பித்துக் கொள்ள முயலுகின்றார்கள். மனிதர்கள் பொதுவாகவே, தலைவிதியை மீறி எவ்வளவு வேண்டுமானாலும் தப்பிதம் செய்யலாம் என்றும் அதனால் வரும்படியான ஆபத்திற்குப் பயப்பட வேண்டியதுமில்லை என்றும் ஆனாலும் நம் முன்னோர்கள் நடந்து வந்த பழக்கப் படியும் அவர்களது வாக்கியப்படியும் கடவுளுக்கு ஏதாவது சிறு இலஞ்சம் கொடுத்துவிட்டால் போதுமானது என்றும் அதனாலேயே கடவுளின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்குக் கிடைத்து விடுமென்றும் என்ன செய் தாலும் சாவு கூட கிட்ட நெருங்காதென்றும் கருதியிருக் கிறார்கள்.

கீழ்த்தர மக்கள் என்று சொல்லப்படுபவர்களும் இது போலவே தொத்து வியாதி முதலிய நோய்களுக்குத் தங்கள் கிராமத்திலுள்ள கிராம தேவதைகளின் இரத்த வெறியினால் ஏற்பட்ட கோபம்தான் காரணமென்று கருதி அதைத் திருப்தி செய்து சாந்தப்படுத்த பலி, மாமிசம், கள்ளு, சாராயம் முதலியவைகள் கொடுத்து வியாதிகளிலிருந்து தப்ப முயற்சிக்கிறார்கள்.

இதைப் பார்க்கின்ற மேல் குலத்தார்கள் என்பவர்கள் கீழ்க்குலத்தார்களை அவர்களின் இச்செய்கைகளுக்காக முட்டாள்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதுவதில் மாத்திரம் குறைவில்லை. ஆனாலும் உண்மையிலேயே இவ் விஷயத்தில் மேல்குலத்தார் என்பவர்களுக்கும் கீழ்க்குலத்தார் என்பவர்களுக்கும் யாதொரு வித்தி யாசமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம்.

ஆகையினால் எனது அபிப்பிராயம் என்ன வென்றால், இந்தியர்களாகிய நாம் சமூக இயல், அரசியல், பொருளாதார இயல் ஆகியவைகளில் ஏதாவது முற்போக்கடைய வேண்டுமானால் மனிதத்தன்மையையே அடியோடு அழிக்கத் தக்கனதாக மேற்கண்ட இரண்டு விஷயங்களை யும் அதாவது விக்கிரகங்களை வணங்குவது என்கின்ற கொள்கையையும்; தலைவிதி கர்ம பலன், முன்ஜென்மத்தின் வரம், ஊழ்வினை என் பவைகள் போன்ற நம்பிக்கையையும் அடியோடு ஒழித்தாக வேண்டும் என்பதேயாகும். எனவே, “ரிவோல்ட்” பத்திரிகை இந்த விஷயத்தில் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமாய் எதிர்பார்க் கின்றேன். இதுவே சுயமரியாதை இயக்கத்தினுடை யவும் முக்கிய கடமை என்று கருதுகின்றேன்.

மனிதன் தன்னுடைய மனிதத் தன்மைக்கு அதாவது அற்புதமான மனித சக்திக்கு, மதிப்புக் கொடுக்கும்படியாய்க் கற்பிக்கப்பட வேண்டும். முன் நாம் செய்த கர்ம பலனை நாமே அடைய வேண்டும் என்பது உண்மையானால், அதை அழித்துக் கொள்ளும் சக்தியும் நம்மிடம் உண்டு. கர்மம் என்கின்ற உணர்ச் சியை அழிக்கும் காரியத்தை நமது முயற்சியால்தான் நாம் செய்துகொள்ள முடியுமே தவிர, நம்முடைய தல்லாத வேறு எந்த சக்தியினாலும் திருமூர்த்தி என்பவர்களினுடைய சக்தியானாலும்கூட ஒன்றுமே செய்துவிட முடியாது என்பதையும் உணர வேண்டும். “தீமைகளோடு நாமே தான் போர் புரிந்தாக வேண் டும்; நம்மாலேயே அவைகளை வெல்லவும் முடியும்” என்ற மோதி என்கின்ற ஆங்கிலக் கவி வாக்கே நமது ஞாபகக் குறிப்பு வார்த்தையாக இருக்க வேண்டும்.

(- “குடிஅரசு”, 10-02-1929)

திருநெல்வேலி பி.திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்கள் ரிவோல்ட் பத்திரிகையில் எழுதியதைத் தழுவி மொழிபெயர்த்தது.

Pin It